dinamalar telegram
Advertisement

24 x 7 சரக்கு வியாபாரம்...

Share

ஒ ன்றுக்கு இரண்டு 'மாஸ்க்' போட்டு, அதற்கு மேலும் துப்பட்டாவைச் சுற்றிக்கொண்டு, கூலிங் கிளாஸ் போட்டபடி மிரட்டலாக சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.ஒரு நிமிடம் அடையாளம் காண முடியாமல் தடுமாறிய சித்ரா, ''மித்து! இனிமே கொஞ்ச நாளைக்கு இதே 'கெட்டப்'புலதான் நாம வெளிய போகணும்'' என்றாள்.தலையாட்டி அதை ஆமோதித்த மித்ரா, ''பேரூர் கோவில் போயிட்டு, அப்புறமா நீங்க சொல்ற இடத்துக்குப் போகலாம்!'' என்று வண்டியைக் கிளப்பினாள்.சித்ரா தொடர்ந்தாள்...''மித்து! நம்ம கொங்கு மண்டலத்துலயே பழமையான ஆதீனம்னா அது பேரூராதீனம்தான். கொங்கு மண்ணோட ஆன்மிக அடையாளம். ஆனா ஒரு அங்கீகாரமே இல்லாம இருந்துச்சு. இப்போ சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு, இந்து சமய அறநிலையத்துறையில் உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி கொடுத்து தமிழக அரசு கவுரவிச்சிருக்கு''''ஆமாக்கா...நல்ல விஷயம்தான்...ஆனா அதையும் அரசியலாக்க முயற்சி பண்றதுதான் சரியில்லை. அவருக்கு பதவி கொடுத்ததும், தி.மு.க.,காரங்க கூட்டமாப் போயி, அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிச்சிருக்காங்க. அடுத்து அ.தி.மு.க.,காரங்க அன்போட போய் பொன்னாடை போர்த்திருக்காங்க. கடைசியா பி.ஜே.பி.,காரங்களும் போய் மரியாதை பண்ணிருக்காங்க!''''என்ன பதவி கொடுத்தாலும், இந்துக்களுக்கு உண்மையா யார் ஆதரவோட இருக்காங்கன்னு அவருக்குத் தெரியாதா...?''''ஆதரவுன்னதும் எலக்சன் ஞாபகம் வந்துருச்சு. ஆளும்கட்சியில 100 வார்டுலயும் விருப்ப மனு வாங்குனதுல இருந்த, சீட் கேட்டவங்களுக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் போட்டுத் தாக்குற வேலைதான் அதிகமா நடக்குதாமே...!''''உண்மைதான்...டி.வி.எஸ்.நகர் வார்டுல மாவட்ட செயலாளர் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம் நடத்திருக்காங்க. எப்பிடி எலக்சன் வேலை பாக்கணும்னு 'மாவட்டம்' பேசிருக்காரு.ஆனா, கூட்டத்துக்கு வந்த அந்த வார்டு பழைய கவுன்சிலரும், அவர் புள்ளையும் கூட்டத்துல எல்லாரையும் மெரட்டுற மாதிரி பேசிருக்காங்க. அதுல சீட்டு கேட்ட மத்த எட்டுப் பேரும் கொந்தளிச்சிட்டாங்களாம்!''''அப்புறம்...!'''''கடைசியில மாவட்டமே பொறுமையிழந்து அவுங்களை சத்தம் போட்ருக்காரு. இப்பவும், 'வேற யாருக்காவது சீட் கொடுத்தா, வார்டுல நடக்குறதே வேற'ன்னு ரெண்டு பேரும் ஊரெல்லாம் பேசிட்டு இருக்காங்களாம்'' என்று சித்ரா சொல்லும்போதே குறுக்கிட்டாள் மித்ரா.''கொரோனா போற போக்கைப் பார்த்தா, ஜல்லிக்கட்டே நடக்குமான்னு தெரியலை...அதுக்குள்ள எலக்சன் வரைக்கும் இவுங்க போயிட்டாங்க...!''''அலங்காநல்லுார்லயே ஜல்லிக்கட்டு நடக்குமான்னு சந்தேகமா இருக்கு. ஆனா நம்மூர் ஜல்லிக்கட்டுக்கு டோக்கன் கேட்டு, ஒரு குரூப் மறியல் பண்ணுது...இன்னொரு குரூப் போய் சமாதானம் பண்ணுது,''மித்ரா சொல்லிக்கொண்டிருக்கும்போது, டவுன்ஹாலைக் கடந்து கொண்டிருந்தது வண்டி. மாநகராட்சி அலுவலகத்தைப் பார்த்ததும் சித்ரா ஆரம்பித்தாள்....''மித்து! போன வாரம் 'மாஸ்' செகரட்டரி ஷிவ்தாஸ் மீனாவும், சி.எம். ஏ., பொன்னையாவும் வந்து நம்ம ஊர்ல ரெண்டு மூணு நாள் 'கேம்ப்' போட்டு ஏகப்பட்ட மீட்டிங் நடத்தி, இன்ஸ்பெக்சன் பண்ணுனாங்களே...ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் இருக்கா?''''ஆமாக்கா! வெள்ளிக்கிழமை நைட் வந்தவுடனே ராத்திரி 10 மணிக்கே சரவணம்பட்டி ஏரியாவுல, புதுசா ரோடு போட்ட இடங்களுக்கு போயி, தோண்டிப் பார்த்திருக்காங்க. அதுல இன்ஜினியர்கள் ஆடிப்போயிட்டாங்க.!''''சரி...வெள்ளலுார் போனாரா இல்லையா?''''மறுநாள் போயிருக்காரு. அங்க இருந்த நாத்தத்துல பயங்கர 'அப்செட்' ஆயிட்டாராம் செகரட்டரி. கார்ப்பரேஷன் ஆபீசர்களைக் கூப்பிட்டு, 'ஒரு வருஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள ஒரு துளி ஸ்மெல் இல்லாமப் பண்ணனும்'னு சொல்லிருக்காரு!''''குப்பையில கோடிகளை அள்ளுனவுங்களும், 'பயோமைனிங்' பேருல படம் காமிச்சவுங்களும் ஆடிப் போயிருப்பாங்களே...!''''ஆமா...அதை விட மெயின் ஆபீஸ்ல நடந்த 'ரிவியூ மீட்டிங்' பத்திதான், சிட்டியே பேசுது. அந்த மீட்டிங்ல, கமிஷனர் ராஜகோபால், மொத்தம் 350 ஸ்லைடுல ஒரு 'பிபிடி' ரெடி பண்ணிப் போட்ருந்தாராம்.அதுல கார்ப்பரேஷனோட கஜானா நிலைமை, இதுக்கு முன்னாடி எப்பிடி காசு எடுத்து விளையாடிருக்காங்க, ஆடிட் அப்ஜெக்சன், அதிகாரிங்க, ஊழியர்கள் பற்றாக்குறைன்னு அத்தனையையும் புட்டுப்புட்டு வச்சுட்டாராம்!'' என்ற மித்ரா, தன் வண்டியைக் கடந்து சென்ற தாசில்தார் வண்டியைப் பார்த்து அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...''அக்கா! போன கவர்மென்ட்ல கோலோச்சுன தாசில்தார்களை எல்லாம், இந்த கவர்மென்ட் வந்ததும் மாத்துனாங்க தெரியுமா... மெதுவா எல்லா தாசில்தார்களும் ஆளுக்கு அஞ்சு, பத்துன்னு கொடுத்து, மறுபடியும் இங்கயே வந்துட்டாங்க. பேரூர்ல இருந்தவரு, நம்மூரு 'மாஜி'க்கு ரொம்ப நெருக்கமா இருந்து, ஏகப்பட்ட வேலை செஞ்சவரு...!''''ஓ! அவரா...கலெக்டர் பங்களா இருக்குற ரேஸ்கோர்ஸ் ஏரியாவுலயே, கவர்மென்ட் இடத்தை ஆக்கிரமிச்சு, கடை கட்டி வாடகைக்கு விட்ருக்காரே...அவர்தான?''''அவரேதான்...அவரை வால்பாறைக்கு மாத்துனாங்க. சத்தமில்லாம திரும்ப இங்கயே வந்துட்டாரு. அவருக்கு அப்புறம் பேரூர்ல இருந்தவரை மேட்டுப்பாளையத்துக்கும், அங்க இருந்த லேடி தாசில்தாரை பேரூருக்கும் மாத்திட்டாங்க. அப்போ ஆளும்கட்சிக்கு நெருக்கமா இருந்த ஒருத்தரை, மேட்டுப்பாளையம் மாத்துனாங்க. அவரும் இப்போ 'பறக்கும் படை'க்கு திரும்ப வந்துட்டாரு!''''மத்தவுங்களைப் பத்தி எனக்குத் தெரியலை மித்து...ஆனா மேட்டுப்பாளையத்துல இருந்த லேடி தாசில்தாரை மாத்துனதுக்குக் காரணம், துட்டு இல்லை...மேட்டுப்பாளையம் ஆளும்கட்சிக்காரங்க!''''என்னக்கா சொல்றீங்க...!''''ஆமா மித்து! சிறுமுகை -- அன்னூர் ரோட்டுல பெள்ளேபாளையம் ஏரியாவுல இருந்து மண் கடத்திட்டு வந்த மூணு லாரியை அந்தம்மா பிடிச்சு, சிறுமுகை போலீஸ்ல ஒப்படைச்சிட்டாங்க. அந்த லாரிகளை விடணும்னு ஆளும்கட்சிக்காரங்க கேட்ருக்காங்க. ஆனா முடியாதுன்னு சொல்லி, மூணு லாரி மேலயும் கேஸ் போட்டுட்டாங்க. ஆளும்கட்சிக்காரங்க ஏற்பாட்டுலதான் ஆறே மாசத்துல அவரை மாத்திருக்காங்க!''''நம்ம மாவட்டத்துல இப்போ கவர்மென்ட்டுக்கு ரொம்ப மோசமா பேரைக் கெடுக்குறது, இந்த ரெவின்யூ டிபார்ட்மென்ட் ஆளுங்கதான். மேல இருந்து கீழ வரைக்கும் வசூல்தான். கொரோனா மறுபடியும் பரவுதுன்னு கொடிசியாவுல ரெண்டு ஹால்கள்ல 800 கட்டில்களைப் போட்டுட்டாங்க. அதுக்கு மெத்தை, தலையணை, போர்வை வாங்குறதுக்கு சிட்டியில இருக்குற ரெண்டு தாசில்தாரும் வசூல் நடத்திட்டு இருக்காங்க!''''ஏன் கவர்மென்ட்ல நிதி ஒதுக்க மாட்டாங்களா?''''அது தெரியலை...ஆனா இவுங்க நம்மூர்ல இருக்குற முக்கியமான இண்டஸ்ட்ரிகாரங்களைப் பார்த்து 'ஸ்பான்சர்' பண்ணுங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க. பல பேரு, 'என்னங்க எப்பப் பார்த்தாலும் ஸ்பான்சர் கேக்குறீங்க. ஒரு வேலைன்னு வந்தா அதுக்கும் துட்டு கேக்குறீங்க. இந்த கவர்மென்ட்டால எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை'ன்னு புலம்பிட்டு, கேட்டதுல பாதிதான் கொடுத்திருக்காங்க!''''நீ சொன்னது மாதிரி, ரெவின்யூ டிபார்ட்மென்ட் ரொம்ப மோசமாத்தான் இருக்கு. பெரியநாயக்கன்பாளையத்துல இருக்குற ஏழு வி.ஏ.ஓ., ஆபீஸ்ல மூணு ஆபீஸ்ல, லஞ்சத்தையே 'கூகுள் பே'ல வாங்குறாங்களாம். ஸ்கிரீன் ஷாட் பாத்துதான் கையெழுத்து போடுறாங்களாம். சிட்டிக்குள்ள பல ஆர்.ஐ., ஆபீஸ்கள், எப்பப்பார்த்தாலும் பூட்டியேதான் கெடக்குது'' என்றாள் சித்ரா.செல்வபுரத்தில் போலீஸ் வண்டியைப் பார்த்ததும் மித்ரா குறுக்கிட்டுப் பேசினாள்...''அக்கா! சிட்டி போலீஸ் பேரு ரொம்பவே ரிப்பேர் ஆகிட்டு இருக்கு!''''உண்மைதான்...நீ எதைச் சொல்றேன்னு தெரியலை...சிட்டியில ஒரு லேடி இன்ஸ்பெக்டர் விவகாரத்துல, அந்த இன்ஸ்க்கு டிரைவரா இருந்த போலீசோட மனைவி, பெரிய ஆபீசரைப் பார்த்து கதறித் தீர்த்துட்டாங்களாம். இப்போ அந்த லேடி இன்ஸ்பெக்டரை வேற ஊருக்கு மாத்திட்டாங்க!''''அதையாவது பெர்சனல் மேட்டர்னு சொல்லலாம்....ஆனா, சிட்டி, ரூரல் ரெண்டு ஏரியாவுலயும் இப்போ போதைப் பொருளுக்கு இணையா சூதாட்டத்துலயும், பான் மசாலா வியாபாரத்துலயும் போலீஸ் துட்டு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. புலியகுளம் அந்தோணியார் ஸ்கூல் பின்னாடி சண்டைச் சேவல் வளர்க்குற சில பசங்க, பண்ற ரவுடித்தனத்துல அந்த ஏரியா மக்கள் மெரண்டு போயிருக்காங்க!''''பக்கத்துலயே போலீஸ் ஸ்டேஷனும் இருக்கே!''''இருந்து என்ன பிரயோஜனம்...அந்த ஸ்டேஷன்ல இருக்குற போலீஸ்களுக்கு வாரத்துக்கு ஒரு 'கோச்சை' சேவலை கறிக்குக் கொடுத்துர்றாங்களாம். அதனால அவுங்க கண்டுக்கிறதே இல்லையாம்!''''இதே கதைதான் வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல நடக்குது. அங்க பான் அயிட்டம் அத்தனையும் ஜோரா விக்கிறாங்க. வடவள்ளி போலீஸ்காரங்க பல பேரே கஸ்டமரா இருக்குறதால, அவுங்க கண்டுக்கிறதே இல்லை.தடாகம் ரோட்டுல ஒரு கிளப்ல சூதாட்டம் ஜோரா நடக்குதாம். கந்து வட்டிக்கு அங்கயே பணம் தர்றாங்களாம். அதுலயும் சில போலீஸ்காரங்க வாடிக்கையாளரா இருக்காங்களாம். நைட் சரக்கு விக்கிறவுங்களும் ஸ்டேஷன்களுக்கு வாரி வழங்குறாங்க!''''அக்கா! நம்ம ஊர்ல 24 X 7 திட்டத்துல தண்ணி கொடுக்குறாங்களோ இல்லையோ, 24 X 7 சரக்கு கிடைக்க ஏற்பாடு பண்ணீட்டாங்க. கரூர்க்காரங்க எடுத்த அத்தனை 'பார்'களையும் உள் குத்தகைக்கு விடுறாங்க. ஒரு பாருக்கு 50 லட்சத்துல இருந்து ஒரு கோடி வரைக்கும் பேரம் நடக்குது. அதுல ஆபீசர்களும் சில 'பார்'களை தங்களுக்குன்னு எடுத்து வச்சுக்கிட்டாங்களாம்!''''நானும் கேள்விப்பட்டேன் மித்து...டாஸ்மாக் மண்டல ஆபீசர், மாவட்ட ஆபீசர் ரெண்டு பேரோட ஆபீஸ்கள்லயும் வேலை பார்க்குற ரெண்டு ஜூனியர் அசிஸ்டெண்ட்கதான் பேரம் பேசுற வேலையைப் பாக்குறாங்களாமே!'' என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் சித்ரா.''உண்மைதான்...ஒரு 'பார்'ல தினமும் 5 கேஸ் அதாவது 240 குவாட்டர் பாட்டில்களை ராத்திரி வித்தா, பாட்டிலுக்கு 80 ரூபா வீதமா ஒரு நாளுக்கு 20 ஆயிரம் கிடைக்குமாம். இதை வருஷத்துக்குக் கணக்குப் பண்ணுனா 70 லட்ச ரூபா. ஒரு சில பார்கள்ல 10 கேஸ், 12 கேஸ் கூட விக்குமாம். அதை கணக்குப் பண்ணித்தான் ஒரு கோடின்னு பேரம் பேசுறாங்களாம்!'' மேட்டரை முடிக்கும் முன்னே, பேரூர் தமிழ்க் கல்லுாரி அருகே இளநீர்க் கடையைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தி வண்டியை ஓரம் கட்டினாள் மித்ரா.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement