நாடு முழுதும் சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா வைரஸ் பரவல், சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அத்துடன் உருமாறிய 'ஒமைக்ரான்' பரவலும், மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மேலை நாடுகள் பல, கொரோனா நான்காவது அலை அல்லது ஐந்தாவது அலைகளை சந்தித்து வரும் நிலையில், எளிதில் பரவக்கூடிய ஒமைக்ரான் வைரசால், நம் நாட்டில் கொரோனா மூன்றாவது அலை நிச்சயம் உருவாகும்.
அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 2020ல் பல மாதங்களாக நீடித்த, கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பெரும்பாலான வர்த்தகமும், சேவைகளும் மாமூல் நிலைமைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது டில்லி, கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உட்பட, பல கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தும் அளவிற்கு தொற்று பரவல் மோசமாகியுள்ளது.
இதனால், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியையும், குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணியையும், மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என, பெரும்பாலான விஞ்ஞானிகளும், உலக சுகாதார அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, ஜனவரி 3ம் தேதியான இன்று துவங்கும்;
அதேபோல, இணை நோய்கள் உள்ள 60வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு விடுவோமோ என அஞ்சிக் கொண்டிருந்த முதியவர்களுக்கும், சிறுவர்களுக்கும், பிரதமரின் அறிவிப்பு புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது.
தொற்றை ஒழிக்க இந்த தடுப்பூசி பெரும் கவசமாக அமையும் என நம்பப்படுகிறது. வளர்ந்த நாடுகள் பல ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி விட்டாலும், பிரதமரின் அறிவிப்பு, தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
நம் நாட்டில்12வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அலுவலகம் அனுமதி கொடுத்திருந்த நிலையில், பிரதமரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16ல் துவங்கியது. அதன்பின் இதுவரை, முதல் டோஸ் தடுப்பூசியை 90 சதவீதம் பேரும், இரண்டு டோஸ் தடுப்பூசிகளை, 60 சதவீதம் பேரும் போட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இன்று முதல், கோவாக்சின் தடுப்பூசி போடப்பட உள்ளது. தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு கடந்த ௧ம் தேதியே துவங்கி விட்டது. இந்தியாவில் ௧௮ வயதிற்கும் குறைவானவர்கள் 44 கோடி பேர் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 10கோடி பேர் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் என்பதால், அவர்களுக்கு கல்வி நிலையங்களிலேயே தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவது சிறப்பானது.
மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதால், பள்ளிகள் தடையின்றி இயங்க முடியும் என்பதோடு, குழந்தைகளை தொற்று பாதிக்குமோ என பெற்றோர் மத்தியில் உருவாகியுள்ள கவலையும் தீரும். அவர்கள் தைரியமாக பிள்ளைகளை பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்பி வைப்பர். 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுவதும் முடிவுக்கு வரும். மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு தைரியமாக செல்வர்.
இந்த விஷயத்தில், 'குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால், நாட்டின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்' என்ற மத்திய சுகாதார அமைச்சரின்கருத்தையும் மறுப்பதற்கு இல்லை. அதேநேரத்தில், ௧௮ வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி போடாத அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மற்ற வயதினருக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை மத்திய அரசு விரைவு படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதை பார்க்கும் போது, இன்னும் கொஞ்ச காலத்திற்கு நாம் தொற்று நோய் பரவல் பீதியுடன் தான் வாழ வேண்டும்.அதனால், மூக்கு வழியாக செலுத்துவது உட்பட வேறு பல தடுப்பு மருந்துகளையும் விரைவில்அறிமுகப்படுத்த வேண்டும். அதுவேகொரோனாவை ஒழிக்க சிறந்த வழி.
15 - 18 வயதினருக்கு தடுப்பூசி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!