dinamalar telegram
Advertisement

வஞ்சமின்றி பரவிக்கிடக்கும் 'பார்':லஞ்ச பேய்களை விரட்டுவது யார்?

Share

''ஊரு ரெண்டுபட்டா, கட்சிக்காரங்களுக்கு கொண்டாட்டம்'' என்றபடியே பேச்சை துவக்கினாள் சித்ரா.''என்னக்கா…இது, புதுமொழியா இருக்கு'' என சிரித்தபடியே மித்ரா கேட்க,''ஆமா மித்து. பல்லடம் ஆளுங்கட்சியில, கோஷ்டி அரசியல், குடுமிப்பிடி சண்டை கணக்கா இருக்காம். ஒன்றியத்தை ரெண்டா பிரிச்ச மாதிரி, நகரத்தையும் ரெண்டா பிரிச்சு, நிர்வாகிகளை நியமிக்கணும்னு, தலைமைக்கு பெட்டிஷன் போட்டிருக்காங்களாம்...'' சித்ரா.''போகிற போக்கை பார்த்தா, வீதிக்கொரு ஒரு நிர்வாகியை நியமிங்கன்னு கேப்பாங்க போல...' என, சிரித்த மித்ரா, ''பல்லடத்துக்கு நாளைக்கு போய், சேகரையும், ராஜேந்திரகுமாரையும் பார்க்கோணும்னு, அப்பா சொன்னார். அவரை கூட்டிட்டு போகோணும்,'' என்றாள்.''அதே ஊர்ல நடந்த இன்னொரு மேட்டரையும் கேளு'' என்ற சித்ரா,''அங்க இருக்கற ஜி.எச்.,ல 'வெயிட்டிங் ரூம்' கட்றதுக்காக ரெண்டு மரத்த வேரோட வெட்டினாங்க. ஆனா, ஒரு மரத்த வெட்ட தான் 'பர்மிஷன்' இருக்காம். இந்த விஷயம் வெளியே வர, 'ரெண்டு மரத்தையும் வெட்ட, நாங்க தான் 'பர்மிஷன்' கொடுத்தோம்'னு, 'ரெவின்யூ டிபார்ட்மென்ட்' காரங்க பல்டி அடிச்சுட்டாங்களாம்.இதுல என்ன கூத்துன்னா, 'வெயிட்டிங் ரூமை' கட்டிக்கொடுத்த ரோட்டரி நிர்வாகிகளுக்கே, அதை இடிச்சு, வேற கட்டடம் கட்டப்போற விஷயம் தெரியாதாம்,'' என்றாள்.அதிகாரிகளின் அசட்டை...''அடக்கொடுமையே...'' என அங்கலாய்த்த, மித்ரா, '' பல இடங்கள்ல இப்படி தான், அதிகாரிங்க 'பல்டி' அடிச்சிடறாங்க. அவிநாசியில, ரேஷன் அரிசியை, கிலோ அஞ்சு ரூபாய்ன்னு வாங்கி, அரிசி ஆலைகளுக்கு விக்கிறதையே தொழிலா வைச்சிருந்த ஒருத்தர அவிநாசி போலீஸ்காரங்க பிடிச்சு, உணவு கலப்படம் மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ்காரங்க கிட்ட ஒப்படைச்சாங்க...''''அவரு மேல கேஸ் போட்ட போலீஸ்காரங்க, அந்த ஆசாமியை கைது பண்ணாங்க. ஆனா, அன்னைக்கு சாயந்திரமே, ஜாமின்ல வந்த அந்த ஆசாமி, வழக்கம் போல, ரேஷன் அரிசி கடத்த ஆரம்பிச்சிட்டாரு... அதுவும், ரேஷன் கடைக்கு பக்கத்துலயே நின்னு, வாங்கறார்ன்னா பாத்துக்கோயேன்...'' என்றாள்.''அதே மாதிரி தான்டி மித்து. அவிநாசியில அனுமதியில்லாம செயல்படற 'டாஸ்மாக்' கடைக்கு பக்கத்துல இருக்கற 'பார்'க்காரங்க மேல, தொடர்ச்சியாக 'கேஸ்' போடறாங்க. ஏழு பார்ல, இல்லீகலா சரக்கு விக்கிறாங்களாம். இதனை கண்டுக்க வேண்டிய மதுவிலக்கு போலீஸ்காரங்க, எதுவுமே தெரியாத மாதிரி இருக்காங்களாம்,'' என்றாள்.''கவனிப்பு' பலமா இருக்குமோ என்னமோ?'' என, சூசகமாக உண்மையை சொன்ன மித்ரா,''ரூரல்ல மட்டுமில்ல மித்து, சிட்டிக்குள்ளேயும் தான்; அனுமதியே இல்லாம நிறைய 'பார்' இயங்குது. மதுவிலக்கு போலீஸ்காரங்க, ஒவ்வொரு 'பார்'ல இருந்தும் வசூல் அள்ளி குவிக்கிறாங்களாம். கையூட்டை, லோக்கல் போலீசுக்கு தர்றதா, மதுவிலக்கு போலீஸ்காரங்களை கவனிக்கிறதா, இல்ல, கட்சிக்காரங்களை திருப்திபடுத்தறதான்னு தெரியாம, 'பார்'க்காரங்க குழம்பிப்போய் இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.உயிரை பறித்த 'மெத்தனம்'''சம்மந்தப்பட்ட துறை அதிகாரிங்க மவுனமா இருக்கிறதால தான், சில பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமலேயே போய்டுது; அதனால ஒரு உயிரே போச்சு'' என்ற சித்ரா, தொடர்ந்தாள்.''அவிநாசிக்கு பக்கத்துல உள்ள கிராமத்தில ஒரு பெண், ரியல் எஸ்டேட் நடத்தற ஒருத்தரு, தன்னோட நிலத்தை வித்த வகையில, 60 லட்சம் ரூபாய் தராம ஏமாத்திட்டாருன்னு, சேவூர் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாங்க. அத, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாத்திவிட்டிருக்காங்க. திரும்பவும், அங்க இருந்து அவிநாசி ஸ்டேஷனுக்கு அந்த புகார் மனுவை 'டைவர்ட்' பண்ணி விட்டிருக்காங்க. அந்தம்மாவை கூப்பிட்டு விசாரித்த போலீஸ் அதிகாரி, திரும்பவும் அந்த மனுவை பொருளாதார குற்றப்பிரிவுக்கே மாத்தி விட்டிருக்காங்க,''''இப்படி மனசாட்சியே இல்லாம அந்த லேடியை அலைகழிச்சாதால, நொந்துபோன பெண், 'எனக்கு பணம் கெடைக்கலன்னா, குடும்பத்தோட தற்கொலை செஞ்சுக்குவோம்...' கலெக்டர்கிட்டயும் மனுவும் கொடுத்தாங்க. ப்ச்... எந்த நடவடிக்கையும் இல்லாததால், விஷம் குடிச்சு தற்கொலையும் பண்ணிக்கிட்டாங்க,'' என, ஆதங்கப்பட்டாள் சித்ரா.''ச்சே... என்ன கொடுமை. சரியான நேரத்துல விசாரணை பண்ணியிருந்தா, அநியாயமா ஒரு உயிர் போயிருக்காதே…'' என, சஞ்சலப்பட்டாள் மித்ரா.செஞ்சது சரியா ஆபீசர்!''இதே மாதிரிதான், இடுவாய்ல இருக்கற ஒரு அரசு பள்ளி எச்.எம்., சில மாணவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டிட்டாங்கன்னு புகார் வந்துச்சு. இந்த விஷயமா சி.இ.ஓ., முன்னாடியே, அந்தம்மாவை நிக்க வச்சு விசாரிச்சிருக்காரு ஒரு 'டிவி' ரிப்போர்ட்டர்,''''அதை வீடியோவும் எடுத்து, வைரலாக்கி விட்டிருக்காங்க. அநியாயம் நடந்தா, அதை 'வெளிச்சம்' போட்டு காட்டணும்ங்கறது உண்மை தான். அதுக்காக, ஒரு அதிகாரி செய்ய வேண்டிய வேலையை ஒரு ரிப்போர்ட்டரை வைச்சு செய்திருக்க கூடாதுன்னு, சி.இ.ஓ., மேல, டீச்சர்ஸ் செம கடுப்புல இருக்காங்களாம். தங்களோட அதிருப்தியை சோஷியல் மீடியாவிலும் பரப்பி விட்டுட்டாங்க...'' என்றாள் சித்ரா.''சோஷியல் மீடியான்னால தான், பல இடங்கள்ல பிரச்னை பெரிசாகுது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட்டுறவு துறை இணை பதிவாளர், ஆய்வு கூட்டம் நடத்தினப்போ, கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு செம டோஸ் விட்டிருக்காரு. அவரு தன்னோட பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிற வரைக்கும், அடுத்த ஆய்வு கூட்டங்கள்ல கலந்துக்க மாட்டோம்ன்னு, கூட்டுறவு பணியாளர் சங்கம் போர்க்கொடி பிடிச்சிருக்காங்க,''''பிரச்னைய பேசி தீர்த்துக்கலாம்ன்னு, அந்த ஆபீசர் இறங்கி வந்திருக்காரு. அதுக்குள்ள, அந்த அதிகாரியை விமர்சனம் பண்ணி, அவரை பத்தி செய்தி வரவைச்சுட்டாங்க. இதனால, டென்ஷனான அந்த ஆபீசர், தன்னோட முடிவை மாத்திட்டு, பேச்சு வார்த்தையை கேன்சல் பண்ணிட்டாராம். அடடே... 'வட போச்சே'ங்கற கதையா, சங்கத்துக்காரங்க புலம்பி தள்றாங்களாம்'' என்றாள் மித்ரா.''ஆமாங்க்கா…நானும் கேள்விப்பட்டேன்; பக்கத்து வீட்ல இருக்க, சீனிவாசன் அண்ணன் கூட சொன்னார்,'' என்றார்.பெரிய ஆபீசர்... பெரிய மனசு!''மாவட்டத்துல, 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிங்க இருக்காங்க. அவங்களுக்கு, சென்ட்ரல் கவர்மென்ட் மூலம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்கிறாங்க. அதை தபால் மூலம், மாற்றுத்திறனாளிங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கறப்போ, பலரின் அட்ரஸ் தப்பா இருக்கிறதால திரும்பி வந்துடுதாம்,''''அதுமட்டுமில்லாம தபால் செலவுக்குன்னு, அரசாங்கத்துல இருந்த நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லையாம். இதற்கிடையில சிலரு, எங்களுக்கு இனி, கார்டு வந்து சேரலைன்னு, கலெக்டர்கிட்ட புகார் செய்ய, தபால் செலவுக்கு, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்து, அடையாள அட்டையை அனுப்பி வைங்கன்னு, சம்மந்தப்பட்ட துறையை கவனிக்கிற ஆபீசர்ங்க கிட்ட சொல்லியிருக்காரு கலெக்டரு,'' என்றாள் சித்ரா.''சபாஷ்... என்ன ஒரு பெரிய மனசு பாரு'' என்ற மித்ரா, ''கலெக்டர் ஆபீஸ்ன்னு சொல்லவும் தான் நினைவுக்கு வருது; சிட்டியில இருக்க நார்த் தாலுகா ஆபீஸ்ல, ஐகோர்ட் வக்கீல்ன்னு சொல்லிட்டு, வெள்ளை பேன்ட், சர்ட் சகிதமா, ஒருத்தரு புரோக்கர் வேல பார்க்குறாராம்,''''அவருக்கு ஆபீசருங்க 'சப்போர்ட்' பண்ணலைன்னா உடனே, அவங்க மேல பெட்டிஷன் எழுதிடுவாராம். அவரோட தொல்லை தாங்கமாக ஒரு ஆபீசர் கொடுத்த புகாரின் பேரில், 15 நாள் ஜெயில்ல இருந்துட்டும் வந்திருக்காரு,''''ஆனாலும், திருந்தவே இல்லையாம். இப்போ கலெக்டர் ஆபீஸ் பக்கம் வந்து, புரோக்கர் வேல பார்க்க ஆரம்பிச்சுட்டாராம்,'' என்றாள்.''முருகா... முருகா... என புலம்பிய சித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்கள, தாமரை கட்சிக்காரங்க, 'பாலோ' பண்றதை கேள்விப்பட்டீயா...'' என்றாள்.''இல்லக்கா... ''வசூல் ராஜாக்கள்...''ஸ்மார்ட் சிட்டி திட்ட பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்துல கடை வாங்கித்தர்றோம்ன்னு சொல்லி, ஆளுங்கட்சிக்காரங்க, வசூல் வேட்டை நடத்தறாங்களாம்...''''இத தெரிஞ்சுகிட்ட, தாமரைக் கட்சி நிர்வாகிகள் சிலர், கட்சி தலைமையோட கவனத்துக்கும் விஷயத்தை கொண்டு போயிட்டாங்க. அதனால, முழுமையா 'பாலோ அப்' செய்யுங்கன்னு, மேலிடம் 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காம்,'' என்ற, மித்ரா ''போன பிப்., மாசம், குடிபோதையில டூவீலர் ஓட்டினதா ஒருத்தருக்கு, 'பைன்' போட்டிருக்காங்க. அந்த பைன் ரசீதுல, 10 ஆயிரம் ரூபாய்ன்னு இருந்துச்சாம். ஆனா, 100 ரூபாய் தான் கட்டியிருக்காங்களாம். இந்த விவகாரம், இப்ப வெளியே வர என்கொயரிக்கு உத்தரவு போட்டிருக்காரம், டிராபிக் 'குளுகுளு' ஆபீசர்,'' என்றாள். ''பணம் பத்தும் செய்யும்ன்னு சும்மாவா சொல்லி யிருக்காங்க,'' என ஆதங்கப்பட்ட சித்ரா, ''சரி மித்து நான் கிளம்பறேன்; குளிர் அதிகமாகறதுக்குள்ள வீட்டுக்கு போறேன்'' எனக்கூறி, வண்டியை கிளப்பினாள்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement