பட்டுக்கோட்டை என்றாலே, எம்.ஜி.ஆருக்கு மூன்று பேரின் பெயர்கள் தான் நினைவுக்கு வரும். தன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, தன்னை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்த, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும், திராவிட இயக்க கொள்கைகளை, தன் பேச்சாற்றல் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பரப்பிய பட்டுக்கோட்டை அழகிரியையும், தனக்கும், தன் ஆட்சிக்கும் சட்ட சிக்கல் ஏற்படும் போதெல்லாம், சட்ட மூளையாலும், தன் வாத திறமையாலும் காப்பாற்றிய வழக்கறிஞர் பட்டுக்கோட்டை கே.சுப்ரமணியனை, எம்.ஜி.ஆர்., என்றுமே நன்றி மறந்ததில்லை.
ஆகவே, தான் முதன் முதலாக 1977ல் முதல்வராக எம்.ஜி.ஆர்., பதவி ஏற்றவுடன் அண்ணா சதுக்கத்தில் பேசியபோது, 'நான் உட்காரப் போகும் முதல்வர் நாற்காலிக்கு நான்கு கால்கள்; அந்த நான்குகால்களில் ஒன்று தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்...' என்று குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு என்ன சட்ட சிக்கல் ஏற்பட்டது?கடந்த 1972ல் கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்கள் மீது, எம்.ஜி.ஆர்., பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியதன் படி, 'சர்க்காரியா' கமிஷன் அமைக்கப்பட்டு, பின் ஆட்சியும் கலைக்கப்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மீது கமிஷன் அமைத்து பழி வாங்க தக்க தருணத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார்; அதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு வாய்த்தது.
அன்று எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக பேசப்பட்டவர், சாராய தொழில் அதிபரான என்.பி.வி.ராமசாமி உடையார். இவருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர்., சட்டத்தை மீறி பல சலுகைகளை வாரி வழங்கியதால், தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, எதிர்க்கட்சி தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்த நேரம் அது. அப்போது நடந்த அந்த சம்பவம் தான், எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது, ராமசாமி உடையாருக்கு சொந்தமான, 'ஓரியன் கெமிக்கல்ஸ்' தயாரித்த மது பானத்தை அருந்தியதின் விளைவாக, 25க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். இதனால், தமிழக - கேரள எல்லையில் உள்ள பான்டாளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாராய ஏஜன்ட் அகமது கான் என்பவர் கைது செய்யப்பட்டார். இச்செய்தி பரபரப்பாக அன்றைய கேரள நாளிதழ்களில் வெளியானது. இதை மோப்பம் பிடித்த கருணாநிதி, சட்டத்தை மீறி பல சலுகைகளை, உடையாரின் சாராய தொழிற்சாலைகளுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர்., வழங்கி உள்ளார் என்றும், மேலும், எம்.ஜி.ஆரின் 'பினாமி'யாகச் செயல்படுபவர் தான், ஓரியன் கெமிக்கல்ஸ் அதிபர் என்.பி.வி.ராமசாமி உடையார் என்ற குற்றச்சாட்டுகளுடன், தி.மு.க.,வின் 25 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு, 'எம்.ஜி.ஆர்., மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்...' என்று, அப்போதைய பிரதமர் இந்திராவிடம் கருணாநிதி வலியுறுத்தினார்.
அன்றைய தி.மு.க.,வின் ஆதரவு நாளேடான ஆற்காடு வீராசாமியின், 'எதிரொலி' நாளிதழ், எரிசாராய ஊழல் விசாரணை பற்றி பல தகவல்களை தொடர் கட்டுரையாக வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது. கருணாநிதியுடன் கூட்டணியில் இருந்த காரணத்தால், வேறு வழியின்றி விசாரணை கமிஷன் அமைக்க சம்மதித்தார் இந்திரா.
இதை உடனடியாக தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பட்டுக்கோட்டை கே.சுப்ரமணியன், எம்.ஜி.ஆரிடம் ஆட்சிக்குவரப்போகும் ஆபத்தை விளக்கினார். அதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., வழக்கறிஞர் சுப்ரமணியனின் ஆலோசனையின்படி, மிக ரகசியமாக அப்போதைய எம்.எல்.ஏ.,வான சட்டநாத கரையாளரை வைத்து,ஆட்டத்தை துவக்கினார்.
முதலில், நீதிபதி கைலாசம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார் எம்.ஜி.ஆர்., அதை கருணாநிதி எதிர்க்கவே, பின், நீதிபதி சதாசிவம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிடப்பட்டது. இது, இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், கேரள முதல்வர் இ.கே.நாயனாரிடம், எம்.ஜி.ஆர்., பேசி, அவரையும் அந்த மாநிலத்தில் விசாரணை கமிஷன் அமைக்க கோரினார். இந்த சட்ட சிக்கலை தீர்க்க, எம்.ஜி.ஆரின் துாதராக வழக்கறிஞர் பட்டுக்கோட்டை சுப்ரமணியனும், அவருக்கு உறுதுணையாக நாவலர் நெடுஞ்செழியனின் சகோதரர் இரா.செழியனும், கேரள முதல்வர் இ.கே.நாயனாரை சந்தித்து, தகுந்த சட்ட ஆலோசனைகளை வழங்கினர். நீதிபதி சதாசிவம் தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்க கேரள முதல்வர் இ.கே.நாயனாரும் உத்தரவிட்டார்.
இந்த இரு மாநில அரசுகளும் விசாரணை கமிஷன் அமைத்த பின், மத்திய அரசு சார்பில் நீதிபதி ரே என்பவர் தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்க இந்திராவும் உத்தரவிட்டார்.ரே கமிஷன் டில்லி கான் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள லோக்நாயக் பவனில் செயல்பட துவங்கியது. ரே கமிஷன் என்று அழைக்கப்பட்ட இந்த எரிசாராய ஊழல் விசாரணை கமிஷன், அன்று இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த கமிஷன் எப்படியும் எம்.ஜி.ஆர்., ஆட்சியை காவு வாங்கிவிடும் என கணக்கிட்டார் கருணாநிதி.தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை ஒரு திங்கட்கிழமை அன்று ஆஜராகுமாறு, ரே கமிஷனால் 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதை எதிர்பார்த்து காத்திருந்த வழக்கறிஞர் சுப்ரமணியன் துரிதமாகச் செயல்பட்டு, இது சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் தனித்தனியாக ஏற்கனவே விசாரணை கமிஷன் அமைத்துவிட்ட காரணங்களால், மூன்றாவதாக ஒரு கமிஷன் அமைக்க விசாரணை கமிஷன் சட்டத்தில் இடமில்லை என்பதை விளக்கி, ரே கமிஷனுக்கு தடை உத்தரவு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்,சட்டநாத கரையாளர் சார்பில், 'ரிட்' மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, ரே கமிஷன் விசாரணைக்கு இரு தினங்களுக்கு முன் வெள்ளிக் கிழமையன்று, நீதிபதிகள் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் மற்றும் வேணுகோபால் அமர்வில் வந்தது. மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கறிஞர் சுப்ரமணியனின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், உடனடியாக ரே கமிஷனுக்கு தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த தீர்ப்பை உடனடியாக தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அன்று மாலையே ராமாவரம் தோட்டத்தில், வழக்கறிஞர் சுப்ரமணியனை உணர்ச்சி பெருக்கோடு தழுவி பாராட்டினார். அதன் பின், இந்திய அரசியல் வானில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்த இந்திராவின் மகன் சஞ்சய், திடீரென நிகழ்ந்த வான் விபத்தில் அகால மரணம் அடைந்ததால், காங்கிரஸ் - தி.மு.க., உறவில் பெரிய இடைவெளி ஏற்பட்டது.பின், எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் நெருக்கமானார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு அப்படியே நீடித்தது. இரண்டு ஆண்டு காலத்திற்கு பின், ரே கமிஷனின் ஆயுளை நீட்டிப்பு செய்யாமல், நீர்த்துப் போக செய்து விட்டார் இந்திரா. அதன் பின், ரே கமிஷன் எக்காலத்திலும், எம்.ஜி.ஆரை விசாரணை செய்யவே இல்லை. அதோடு, ரே கமிஷன், 'நோ கமிஷனாகி' விட்டது.கமிஷன் அமைத்து, எம்.ஜி.ஆரை பழிவாங்க நினைத்த கருணாநிதியின் கனவும், கானல் நீராகவே போனது என்பது தான் வரலாறு.
ஆனால், எம்.ஜி.ஆரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் அமைக்கப்பட்ட சர்க்காரியா விசாரணை கமிஷன், முழு விசாரணையும் நடைபெற செய்து, தீர்ப்பும் வெளியானது. தீர்ப்பின் முடிவில் கருணாநிதி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக கூறியது. ஆனால், படிக்காத மேதை எம்.ஜி.ஆரை இறுதி வரை எந்த நீதிமன்றமோ அல்லது விசாரணை கமிஷனோ, ஊழல் புரிந்தார் என்று கூற முடியவில்லை. அவரது சட்ட போராட்டத்தில் போர் வாள்களாக திகழ்ந்த வழக்கறிஞர்களை என்றுமே மறக்க முடியாது.'நம் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்... இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று எழுதிய புலவர் வேதாவின் பாடல் வரிகளின் உள்ள தீர்க்க தரிசனத்தை, இன்று நினைவு கொள்ள வைக்கிறது.
இதே வழக்கறிஞர் சுப்ரமணியன் தான், எம்.ஜி.ஆரின் இறப்புக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டிருந்த போது, ஜெயலலிதா சார்பில் வாதிட்டு, இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க., தலைமை கழகம் ஆகியவற்றை மீட்டு தந்தார். இதனால், 'அ.தி.மு.க.,வின் சட்ட மூளை கே.எஸ்.,' என்று ஜெயலலிதாவால் பலமுறை புகழப்பட்டுள்ளார். இதனால் தான் பிரசித்தி பெற்ற, 'இந்தியா டுடே' போன்ற பத்திரிகைகள், 'இவர் இல்லாவிட்டால் முதல்வராக அம்மா வந்திருக்க முடியாது...' என்று எழுதின.
கடந்த 1991ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவி ஏற்றவுடன், தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக சுப்ரமணியன் நியமிக்கப்பட்டு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில், 69 சதவீத இடஒதுக்கீட்டை அரசியல் சட்ட பாதுகாப்போடு பெற்றுத் தந்தார். அது மட்டுமல்லாமல், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கான காவிரி நதிநீர் பங்கீட்டில் இடைக்கால நிவாரணமாக, 205 டி.எம்.சி., நீரை தன் வாத திறமையால் வென்றெடுத்து, சட்டத்தில் சாதனை புரிந்தார் என்பதை, யாராலும் வரலாற்றில் மறைக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. இவரது சட்ட புலமையை மெச்சிய ஜெயலலிதா, தன் அமைச்சர்களிடம், 'ஹி இஸ் மோர் தேன் எ மினிஸ்டர்...' என்று அடிக்கடி கூறுவார்.
ஆனால், அ.தி.மு.க.,வில் அது போன்ற சட்ட மூளைகள் இன்று இல்லாத காரணத்தால், ஆறுமுகசாமி விசாரணை கமிஷனையும், சட்ட போராட்டங்களையும் சமாளிக்க முடியாமல் தத்தளித்து, தடுமாறி தடம் புரண்டு கொண்டிருக்கிறது, அ.தி.மு.க., என்பது தான் இன்றைய நிலை!
ஆர்.பாலசுப்ரமணியன்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
தொடர்புக்கு:
இ - மெயில்: baluadvmadrs@gmail.com
மத்திய அரசு, இது குறித்து விசாரிக்க நீதிபதி ரே என்பவரின் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது. அந்த ரே கமிஷனும் பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு பாட்டிலிங், பிளான்ட்டிங் தொழிற்சாலைகளிலிருந்து சென்ற லஞ்சப் பணம் 5 கோடி ரூபாய் என்று அறிக்கையில் குறிப்பிட்டதாகச் சொல்லப்பட்டது. உண்மை இப்படியிருக்க ஏன் எம்ஜிஆருக்கு ஆதரவாக உண்மைக்கு மாறாக சொல்லவேண்டிய அவசியம் என்ன