இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக நம் தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது என்றால், அதற்கு இதுவரை இந்த மாநிலத்தை ஆட்சி புரிந்த தலைசிறந்த முதல்வர்களின் நிர்வாகத் திறமையே காரணம். அதிலும் குறிப்பாக, எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி சாதனைகளும் முக்கிய காரணம் என்பதை, அவரது நினைவு நாளில் பட்டியலிட்டுக் காட்ட விரும்புகிறேன். எம்.ஜி.ஆர்., காலம் வரையிலான முதல்வர்களை மட்டுமே இங்கே ஒப்பீடு செய்திருக்கிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், தமிழக முதல்வராக பதவி வகித்தவர் ஓமந்துாரார் எனப்படும் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார். ஆலயப் பிரவேச சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்பு திட்டம், தேவதாசி முறை ஒழிப்பு சட்டம், மது விலக்கு போன்ற பல அதிரடி சாதனைகளை நிகழ்த்தினார்.என்றாலும், சொந்தக் கட்சியினரின் அதிருப்தி காரணமாக, குறுகிய காலத்திலேயே பதவியில் இருந்து விலகி, ஆன்மிகப் பாதைக்கு மாறிவிட்டார்.அடுத்து பதவிக்கு வந்த பி.எஸ்.குமாரசுவாமி ராஜா, மூதறிஞர் ராஜாஜி ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்த குழப்பம் காரணமாக, குறுகிய காலம் மட்டுமே தமிழக முதல்வராக பதவி வகிக்க முடிந்தது.
அதனால், அவர்களால் தமிழர்களின் வாழ்க்கையை திசை திருப்பும் அளவுக்கு மாபெரும் திட்டங்களை தீட்டவோ, அவற்றை நிறைவேற்றவோ இயலவில்லை.அதன் பின் தமிழக முதல்வராக பதவியேற்ற, 'பெருந்தலைவர்' காமராஜர், கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் அசைக்க முடியாத தலைவராகத் திகழ்ந்தார்.தமிழகத்தில் இவர் காலத்தில் ஏராளமான அணைகள் கட்டப்பட்டன; புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. தமிழகமெங்கும் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்து, மாணவர்களை வரவழைப்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை துவங்கி, கல்விப் புரட்சி நிகழ்த்தினார். அதேநேரம் அவர், இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, நன்மைக்காக அதிகம் உழைத்தார்.
அவருக்குப் பின் முதல்வர் பதவிக்கு வந்த எம்.பக்தவத்சலம், குறைந்த காலமே பதவி வகித்தார். அவருடைய காலத்தில் மக்கள் ஆதரவை இழந்த காங்கிரஸ் கட்சி, தி.மு.க.,விடம் ஆட்சியை பறிகொடுத்து அதலபாதாளத்தில் விழுந்தது.இந்திய சுதந்திரத்திற்குப் பின், 20 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்து, திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய அண்ணாதுரையை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார், எம்.ஜி.ஆர்.,
தமிழக அரசியல் வரலாற்றில், முதன்முதலாக, துடிப்பான இளைஞர்களைக் கொண்ட அமைச்சரவையை அமைத்து, சுயமரியாதை திருமணத்துக்கு அங்கீகாரம் கொடுத்தார் அண்ணாதுரை.
ஆங்கிலம் மற்றும் தமிழ் என்ற இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார். சென்னை மாகாணத்தை, 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றினார். ஏராளமான சாதனைகளை உருவாக்கும் லட்சியத்தை நோக்கி, அண்ணாதுரை ஆட்சி நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தைத் தழுவினார்.அடுத்த முதல்வர் யார் என்று பெரும் குழப்பம் நீடித்த நேரத்தில், கருணாநிதியை முதல்வர் பதவியில் அமரச் செய்தார் எம்.ஜி.ஆர்., அடுத்து நடந்த சட்டசபை தேர்தலிலும், தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கருணாநிதியை மீண்டும் முதல்வராக அமர வைத்தார்.கருணாநிதி ஆட்சிக் காலத்தில், மாநில சுயாட்சிக்கு உரக்க குரல் எழுப்பப்பட்டது. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, பேருந்துகள் நாட்டுடைமை, நில உச்சவரம்பு, கை ரிக் ஷா ஒழிப்பு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆட்சியை விட கட்சியில் அதிக ஈடுபாடு காட்டினார் கருணாநிதி. கட்சிக்குள் தன் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு வரவும், எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து ஓரங்கட்டவும் திட்டங்களை வகுத்து செயல்பட்டார்.இந்த நிலையில் கணக்கு கேட்ட காரணத்தால், தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்டார். அதன்பின், தி.மு.க.,வில் இருந்து யாரும் எம்.ஜி.ஆர்., பின் சென்றுவிடாமல் பாதுகாப்பதற்குத் தான் அதிக அக்கறை காட்டினார்.'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய இயக்கத்தை மக்களின் தன்னெழுச்சி காரணமாக, 1972ல் உருவாக்கினார் எம்.ஜி.ஆர்., மக்களின் பேராதரவுடன், 1977ல் அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.,வையும், வலிமையான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசையும் தோற்கடித்து, தமிழக முதல்வராக அரியணை ஏறினார் எம்.ஜி.ஆர்.,பொதுமக்கள் முன்னிலையில் பதவியேற்பு வைபவம் நடத்தி, தன்னை மக்களின் முதல்வராக பிரகடனம் செய்தார் எம்.ஜி.ஆர்.,
தான் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று திரைப்படங்களில் சொன்னதை எல்லாம், நிஜமாகவே நிறைவேற்றிக் காட்டினார். புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியில், தமிழகத்தை தலைநிமிரச் செய்த ஒரு சில திட்டங்களை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறேன்.தமிழக மக்களின் ஏழ்மையை ஒழிப்பதற்கும், மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அதிக முன்னுரிமை கொடுத்தார். அதுவரை தனியார் கடைகளில் பகுதிநேரமாக இயங்கி வந்த ரேஷன் கடைகளில் ஏராளமான தில்லுமுல்லுகளும், முறைகேடுகளும் நடந்து வந்தன. எனவே, நேரடியாக அரசு சார்பில் 22 ஆயிரம் முழுநேர ரேஷன் கடைகளைத் திறந்தார். தமிழகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான ரேஷன் அட்டை வழங்கப்பட்டு, அனைவருக்கும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில், கோதுமை, ரவை, மைதா போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டன. எனவே, ஒவ்வொரு அட்டைதாரரும் அன்றைய பண மதிப்பில் மார்க்கெட் விலையை விட, 200 முதல் 300 ரூபாய் வரை குறைவாக பொருட்கள் வாங்கி பயனடைய முடிந்தது.
கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் தன்னிறைவுத் திட்டத்தைக் கொண்டு வந்து சாதனை படைத்தார் புரட்சித் தலைவர். சாலை, குடிநீர் வசதி, சிறு பாலங்கள், பள்ளி கட்டடங்கள், ஊரக மருந்தகங்கள், தாய் - சேய் நல விடுதிகள், மயானத்துக்குப் பாதை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், கிராமப்புற பொருளாதாரம் கிடுகிடுவென வளர்ச்சி அடைந்தது.
அனைத்து மக்களுக்கும் நல்ல குடிநீர் கிடைக்கச் செய்வதே நல்ல ஆட்சிக்கு அழகு. எனவே, தெலுங்கு - கங்கை திட்டத்தை உருவாக்கி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியிலிருந்து, தமிழக எல்லை வரை நீண்ட கால்வாய் வெட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தார். என்.டி.ராமா ராவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த நட்பு காரணமாகவே இது சாத்தியமானது. அதுபோல, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், செயற்கை மழை திட்டம், சிறுவாணி குடிநீர் திட்டம், சாயர்புரம் குடிநீர் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்து நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்தினார்.கல்வி தான் ஏழ்மையில் இருந்து மக்களை விடுவிக்கும் என்பதை முழுமையாக நம்பினார் எம்.ஜி.ஆர்., எனவே, மாணவர்கள் உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், எத்தனை பெரிய புரட்சியைக் கொண்டு வந்தது என்பதை இந்த உலகமே அறியும்.
சிறுவர்கள் முதல் முதியோர் வரையிலும் லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்தனர். விதவைகள், ஏழைப் பெண்களுக்கு சத்துணவுக் கூடத்தில் வேலை கிடைத்தது. அத்துடன், மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பாடநுால், இலவச காலணி, இலவச பற்பொடி போன்றவையும் வழங்கப்பட்டன. எனவே, மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்தது.பணக்காரர்கள் மட்டுமே படித்து வந்த பொறியியல் படிப்பை, கீழ்த்தட்டு மக்கள் வரையிலும் கொண்டு போய் சேர்த்தவர் எம்.ஜி.ஆர்., அன்றைய காலகட்டத்தில் பொறியியல் கல்லுாரிகள் துவங்க அரசிடம் போதிய நிதி வசதி இல்லாததால், எதிர்கால வளர்ச்சியை கருதி, தனியாருக்கும் அனுமதி தந்தார். அதனாலே தமிழகம் முழுக்க ஏராளமான பொறியியல் கல்லுாரிகள் துவக்கப்பட்டன. இன்று கம்ப்யூட்டர் உலகத்தில் தமிழர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர் என்றால், அதற்கு காரணம் எம்.ஜி.ஆர்., தான்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இன்ஜினியர் உருவான காரணத்தால், தமிழக மக்களின் பொருளாதாரம் கிடுகிடுவென வளர்ச்சி அடைந்துள்ளது. தகுதியானவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தார். படித்து முடித்து வேலை இல்லாத பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், கைத்தொழில் ஆசிரியர்கள், தொழிற்பயிற்சி ஆசிரியர்கள், பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி, இளைஞர்களை ஊக்குவித்தார்.
தமிழ் சீர்திருத்த எழுத்தை அறிமுகம் செய்த பெருமையும் எம்.ஜி.ஆருக்குத் தான் உண்டு. அதேபோல், எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் மட்டும் ஏழு பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் இது போன்ற சாதனை படைத்தது இல்லை.அதேபோன்று கல்வி, வேலைவாய்ப்பில் அதுவரை எந்த அரசும் கொடுக்காத அளவுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீதம் என, 68 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் எம்.ஜி.ஆர்., தான்.
ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால், கீழ்மட்ட நிர்வாகம் செம்மையாக நடைபெற வேண்டும் என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர்., எனவே, பரம்பரை பரம்பரையாக அதுவரை இருந்து வந்த மணியக்காரர் என்ற கிராம அதிகாரி பதவியை அவசர சட்டம் மூலம் ரத்து செய்து, வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்தார்.
அதுவரை ஒரு ஜாதியினர் மட்டுமே வகித்து வந்த பதவியை, அனைத்து ஜாதியினரும் பெற முடிந்தது. மேலும், அரசு திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய இந்த பதவி மிகவும் உபயோகமாக இருந்தது.எம்.ஜி.ஆர்., சட்டங்களில் புரட்சிகரமானது, 1979ல் அவர் கொண்டு வந்த மது விலக்கு சட்டம் தான். மது விலக்கை கடுமையாக கடைப்பிடிக்க நினைத்த எம்.ஜி.ஆர்., மிகுந்த துணிச்சலுடன் புதுமையான அவசர சட்டங்கள் பிறப்பித்தார்.
அதன்படி, முதல் முறை மது விலக்கு சட்டத்தில் பிடிபட்டால், மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை; இரண்டாவது முறை பிடிபட்டால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை; மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவர் என்று அவசர சட்டம் கொண்டு வந்தார்.
இந்த புரட்சிகரமான திட்டத்துக்கு பெண்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை ஒருசேர கடுமையாக எதிர்த்தன. அப்போது நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் ஓட்டளித்தனர்.'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற எண்ணத்துடன் உடனே இந்த அதிரடி சட்டங்களை ரத்து செய்தார். அன்று இந்த திட்டத்துக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு கொடுத்திருந்தால், இன்று ஒரு குடிகார சமூகம் உருவாகியிருக்காது. அதன்பின், தன் ஆட்சிக் காலத்திலேயே மீண்டும் மது விலக்கு சட்டத்தைக் கொண்டு வந்து காட்டினார்
புரட்சித் தலைவர்.காவல் துறைக்கும், மற்ற அரசு அதிகாரிகள் செயல்படுவதற்கும் முழு சுதந்திரம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்., எனவே, அவரது ஆட்சிக் காலத்தில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் நல்லாட்சி நடந்தது. திரைப்படங்கள் மூலம் தனிமனித ஒழுக்கம் குறித்தும், நல்லாட்சி குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய புரட்சித் தலைவர், முதல்வர் பதவிக்கு வந்த பின்னரும் அப்படியே வாழ்ந்து காட்டி, வழி காட்டினார்.அவரது திரைப்படங்கள் இன்றும் மக்களுக்கான வாழ்க்கைப் பாடமாகத் திகழ்கின்றன என்றால் மிகையில்லை.
தான் உழைத்து சம்பாதித்த பணத்தை வாரி வாரி வழங்கும் கலியுக வள்ளலாக எம்.ஜி.ஆர்., திகழ்ந்தார். வறுமையின் பிடியில் நாடகங்களில் நடித்த காலம் துவங்கி, முதல்வராக மரணம் அடையும் வரையிலும் கொடுத்துக் கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரராக இருந்தார். அதேநேரம் முதல்வராக பதவிக்கு வந்த பின், எம்.ஜி.ஆர்., ஒரு சொத்துகூட வாங்கியதில்லை; சேர்த்து வைக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலத்தில் அரசு சலுகைகளான சட்டசபை சம்பளப் படி, பெட்ரோல் செலவு, வீட்டு வாடகைப்படி, இதர மருத்துவச் செலவுகள் என எதையுமே அவர் பெற்றுக் கொண்டதில்லை.அரசு வழங்கிய மேஜை, நாற்காலிகள் கூட தன் வீட்டுக்கு வரக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். தான் உழைத்து சம்பாதித்த சொத்தையும் தன் இறப்புக்குப் பின், காது கேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதி வைத்தார்.
வாழும் காலம் முழுவதும் பிறர் நன்மைக்காகவே வாழ்ந்தவர் அவர். அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஆதரவு அதிகரித்துக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலை ஜெயித்த வரலாற்றுத் தலைவர் எம்.ஜி.ஆர்., மட்டும் தான். அவரது பொற்கால ஆட்சியில் போடப்பட்ட மகத்தான திட்டங்களின் காரணமாகவே, அவர் மக்கள் மனதில், முதல்வர்களில் முதல்வராக வாழ்ந்து வருகிறார். இந்த மண்ணுலகில் கடைசி மனிதன் இருக்கும் வரை எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும்!
-- சைதை துரைசாமி சென்னை முன்னாள் மேயர்
சைதை துரைசாமி போட்டிருக்கும் லிஸ்டில் 30% - 40% தான் சரியானது என்பது ஒரு கசப்பான உண்மை... அதுமட்டுமில்லாமல், MGR காமராஜைவிட சிறந்த முதல்வர் என்பது நகைப்புக்குரியது.. காரணங்கள் 1) MGR ஊழல் செய்யாமல் இருந்திருக்கலாம்.. ஆனால் அவருடன் உடன் இருந்தவர்களும், சுற்றியிருந்தவர்களும் ஊழல் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.. காமராஜரின் மதிய உணவு திட்டத்தை MGRரின் சத்துணவு திட்டம் என்று sticker ஒட்டியவர்கள் அந்த காலத்து அதிமுகவினர்.. தனியாரால் தொடங்க அனுமதிக்கப்பட்ட பொறியியல்/மருத்துவ கல்லூரிகளின் உரிமம் (ராமசந்திரா, சத்யபாமா போன்றவை) முதலில் யார் யாருக்கு கொடுக்கப்பட்டது என்று ஆராய்ந்தால் உண்மை புலப்படும். அவரது அமைச்சரவையில் கல்வியமைச்சராக இருந்த அரங்கநாயகம் தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்க என்ன காரணம் MGRக்கு கொடுத்தார் என்பதை அவரே விளக்கியிருக்கிறார்.. இந்த புகழ்ச்சி கட்டுரை ஈ வே ராமசாமிக்கு UNESCO விருது தரப்பட்ட கதையை போலிருக்கிறது.