Load Image
dinamalar telegram
Advertisement

தங்கக் கை சேஷாத்ரி சுவாமிகள்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் பிரகாசிக்கும் ஞான ஜோதியில் கலந்துள்ள எண்ணற்ற மகான்களில் முக்கியமானவர் சேஷாத்ரி சுவாமிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள வழுர் தான் அவர் பிறந்த ஊர் அவர் பிறந்த ஊரில் அவருக்கான மணிமண்டபம் கட்டப்பட்டு வருகின்ற ஜனவரி மாதம் 23 ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.பல ஆன்மீக அற்புதங்கள் புரிந்த சேஷாத்ரி சுவாமிகள் வழூர் கிராமத்தில் 1870 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ம்தேதி வரதராஜர்-மரகதம்மாள் தம்பதிக்கு பிறந்தார்.மரகதம்மாள் புகுந்த வீடு காஞ்சிபுரத்தில் உள்ளது.அங்கு அவருக்கு நான்கு வயது இருக்கும் போது அவரது தாயார் உள்ளூர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கடை வாசலில் இருந்த சாமி சிலைகள் விற்கும் கடையில் இருந்த கிருஷ்ணர் பொம்மை மீது ஆசைப்பட்டு சேஷாத்ரி எடுத்தார், சேஷாத்ரியின் அருள் வடியும் முகத்தைப் பார்த்த கடைக்காரர், என்ன நினைத்தாரோ கிருஷ்ணர் பொம்மையை குழந்தைக்கு பணம் வாங்காமலே கொடுத்தார்,அதிசயமாக பல நாள் விற்க வேண்டிய சாமி சிலைகள் அனைத்தும் அன்று ஒரே நாள் மாலைக்குள் விற்றுத் தீர்ந்தன

மறுநாள் கோவிலுக்கு போகும் போது உங்கள் மகனின் ராசியால் எனக்கு ஒரே நாளில் வியாபாரம் பிரமாதமாக நடந்தது, உங்கள் மகன் சாதாரண சேஷாத்ரி இல்லை ‛தங்கக் கை சேஷாத்ரி' என்றார். அது முதல் அவர் ‛தங்கங் கை சேஷாத்ரி' என்றும் வழங்கப்பட்டார். இன்றும் திருவண்ணாமலையில் உள்ள எந்தக்கடையானாலும் அந்தக் கடையில் சேஷாத்ரி சுவாமிகள் படம் இருப்பதைக் காணலாம்.
தந்தை இறந்த பிறகு மீண்டும் வழூருக்கு தாயுடன் வந்த சேஷாத்ரி இளம் வயதிலேயே தனது தாத்தா காமகோடி சாஸ்திரியிடம் பல வேத ஞான விஷயங்களை கற்றுத் தேர்ந்தார், பதினான்கு வயதிலேயே ராமாயணம் போன்ற இதிகாசங்களில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
சேஷாத்ரி பெரும்பாலும் கோவில்களில்தான் இருந்தார் கோவில்களைத்தான் வலம் வந்தார் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி ஜோசியரை அணுகியபோது அவர் திருமணம் செய்யமாட்டார் சன்னியாசியாகிவிடுவார் அவர் ஒரு ஞானப்பிறவி என்றும் கூறிவிட்டார்.
தாய் இறக்கும் போது தனயன் சேஷாத்ரியின் மடியில் சாய்ந்து ‛அருணாசலா' என்று மூன்று முறை கூறி உயிரைவிட்டார்.சேஷாத்ரி அதுவரை திருவண்ணாமலையை பார்த்தும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை இருந்தும் திருவண்ணாமலையின் படத்தை உயிரோட்டமாக வரைந்து அனுதினமும் அந்தப்படத்தை வணங்கி வந்தார்.
பசி துாக்கம் பாராது எந்நேரமும் தியானத்திலேயே இருந்தார், தீட்சை பெற்று சுவாமிகள் என்றானபின் வீட்டிற்கு செல்வதை தவிர்த்தார், மயானம் கோவில் என்று வேறுபாடு இல்லாமல் பித்தன் போல சுற்றிவந்தார்.
தந்தையின் நினைவு நாளுக்கு அழைத்த போது,‛ நான் சன்னியாசி இது போன்ற பந்தமெல்லாம் கிடையாது' என வரமறுத்தார், கோபம் கொண்ட குடும்பத்தார் அவரை வீட்டின் ஒரு அறையில் பூட்டிவைத்தனர், சிறிது நேரம் கழித்து அறையைத் திறந்த போது அங்கு சேஷாத்ரி சுவாமிகள் இல்லை மாறாக அறை எங்கும் ஜவ்வாது சந்தன விபூதி வாசனை, அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது சேஷாத்ரி சாதாரண மனிதன் அல்ல ஒரு மகான் என்று.
பிறகு அவரை அந்தக் கோவிலில் பார்த்தேன் இந்தக் கோவிலில் பார்த்தேன் என்று பலரும் சொல்லலாயினர் அவரும் பாதயாத்திரையாகவே பல்வேறு ஊர்களுக்கும் சென்று அங்குள்ள இறைவனை தரிசித்தவர் கடைசியாக தான் அடைய நினைத்த திருவண்ணாமலையை வந்தடைந்தார்.
திருவண்ணாமலையில் இவர் சாப்பிடுவதையோ துாங்குவதையோ யாரும் பார்த்தது இல்லை எப்போது பார்த்தாலும் கிரிவலப் பாதையில் வலம் வந்து கொண்டிருப்பார்
பாதாள லிங்க அறையில் கரையான் அரிப்பதைக்கூட அறியாதவராக கடுமையான தியானத்தில் இருந்த பகவான் ரமணரை ,சேஷாத்ரி சுவாமிகள்தான் பாதாள லிங்க அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தார். நான் அம்பாள் நீ என் மகன் முருகப்பெருமான் உனக்கு எதுவும் நடக்கலாகாது என்றார், பக்தர்கள் இன்றும் அப்படித்தான் இருவரையும் எண்ணி வணங்கி வருகின்றனர்.
அழைக்காத திருமணம் ஒன்றுக்கு சென்றவர் நேராக அங்குள்ள சமையல் கூடத்திற்கு சென்று அண்டாவில் இருந்த சாம்பாரை கொட்டிவிட்டார் திருமணவீட்டார் கோபத்துடன் அவரை நெருங்கிய போது, கொட்டிக்கிடந்த சாம்பாரில் செத்த பாம்பு இருந்ததைக் காட்டினார், கோபத்துடன் வந்தவர்கள் சாந்தமாகி அவரது காலில் விழுந்து எங்களது து உயிரையும் காப்பாறிய தெய்வமே என்று வணங்கினர்.
குளத்தில் குளிக்கும் போது உடன் குளிப்பவர்கள் யார் மீதாவது தண்ணீரை தெளிப்பார், அவரால் தண்ணீர் தெளிக்கப்பட்டவர் அதுவரை சுமந்திருந்த உடல்,மனக்காயங்கள் ஆறப்பெற்று இவரது தொண்டராகிவிடுவர்.
நீருக்கடியில் நீண்ட நேரம் இருப்பார் கேட்டால் தண்ணீருக்குள் கிருஷ்ணனுடன் விளையாடினேன் என்பார்,ஒரு முறை இவர் தியானத்தில் இருந்த போது பெரிய நாகப்பாம்பு ஒன்று வர, பக்கத்தி்ல் இருந்தவர்கள் இவரது தியானத்தை கலைத்து அவரை எச்சரித்து அழைத்துச் செல்லக்கூட தோன்றாமல் அலறியடித்து ஒடினர்,வந்த பாம்போ சேஷாத்ரியின் தலையில் ஏறி சிறிது நேரம் படமெடுத்து ஆடிவிட்டு பிறகு திரும்பச் சென்றுவிட்டது, பார்த்த பக்தர்கள் திகைத்தனர் வியந்தனர் ஆனால் இது எதுவுமே தெரியாத சேஷாத்திரி சுவாமிகள் புன்னகையுடன் தியானம் கலைந்து எழுந்தார்.
தன்னை மறந்து ஒரு கோவிலில் தியானம் செய்து கொண்டிருந்த போது இவர் இருப்பது தெரியாமல் கோவிலை மூடிவிட்டனர், மறுநாள் காலை கோவில் கதவைத்திறந்த போது சன்னதியில் சேஷாத்திரியாகவும் சிவானகவும் மாறி மாறி அவர் அருள் காட்சி தந்தார்.
1929 ம் ஆண்டு ஜனவரி 4 ம்தேதி தனது 59 வது வயதில் சித்தி அடைந்தார், அவரது பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சேஷாத்ரி சுவாமிகளுக்கு ஆஸ்ரமம் அமைத்து அவரை சித்தராகவும்,காமாட்சி அம்மனின் அவதாரமாகவும் வணங்கி வருகின்றனர்.
மகா பெரியரின் ஆலோசனைப்படி காஞ்சியில் சேஷாத்ரி சுவாமிகள் வாழ்ந்த வீட்டை அவரது பக்தர்கள் வாங்கி‛ ஸ்ரீ சேஷாத்ரி நிவாஸம்' என்று பெயரிட்டு அங்கு வழிபாடு செய்து வருகின்றனர்.
அந்த வீட்டில் வைப்பதற்கான சேஷாத்ரி சுவாமிகளின் படத்தை மகா பெரியவரிடம் காண்பித்து ஆசிர்வாதம் செய்யக் கேட்ட போது, இந்த மாதிரிதானே இந்த மகான் உட்கார்ந்து இருக்கிறார் என்று சேஷாத்ரி சுவாமிகள் உட்கார்ந்து இருந்தது போல உட்கார்ந்து காட்டியவர், நானெல்லாம் இந்த மகானைப் போல வருவேனா? என்று மனமுருக சேஷாத்ரி சுவாமிகளை பற்றி பேசினார்.
இப்படி மகா பெரியவரே குறிப்பிட்டு பேசிய மகானான சேஷாத்ரி சுவாமிகள் வாழ்ந்த காஞ்சிபுரத்தில் அவருக்கு நினைவு சின்னம் இருக்கிறது, அவர் சித்தி அடைந்த திருவண்ணாமலையில் ஆஸ்ரமம் இருக்கிறது ஆனால் அவர் பிறந்த ‛வழூர்' கிராமத்தில் எதுவும் இல்லையே என்று நினைத்த அவரது பக்தர்களின் ஏக்கம்தான் இன்று மணிமண்டபமாக எழுந்துள்ளது.
சேஷாத்ரி சுவாமிகளுக்கு மணிமண்டபம் கட்ட முடிவானது முதல் இன்று வரை பல வித அற்புதங்கள் அந்த மண்ணில் நடந்து வருகின்றன.சேஷாத்ரி சுவாமிகள் பற்றி முன்பின் அறியாத அமெரிக்கா வாழ் தமிழர் ஒருவர் கனவில் வழூர் சேஷாத்ரி சுவாமிகள் எழுந்தருளியது,மண்ணைத் தோண்டும் போது சுவாமிகளின் தாயார் வழிபட்ட பல தலைமுறைக்கு முந்திய துளசி மாடம் வெளிப்பட்டது,வற்றாத ஊற்று தென்பட்டது,நாகங்கள் சாதாரணமாக வந்து சென்றது போன்ற பல விஷயங்கள் நடந்தன நடந்து கொண்டிருக்கின்றன.
ராஜ கோபுரத்துடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் பிம்பம் பிரதிஷ்டை செய்ய வேண்டியுள்ளது அதுவும் சில நாளில் முடிந்துவிடும்.வருகின்ற ஜனவரி 23ம் தேதி காஞ்சி பெரியவர் விஜயேந்திர சுவாமிகள் முன்னிலையில் மணிமண்ட கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.
மணிமண்டபம் காஞ்சிபுரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் துாரத்திலும்,மேல்மருவத்துாரில் இருந்து 25 கிலோமீட்டர் துாரத்திலும்,வந்தவாசியில் இருந்து 12 கிலோ மீட்டர் துாரத்திலும் உள்ளது.மேல்மருவத்துாரில் இருந்து வந்தவாசி செல்லும் பஸ் மார்க்கத்தில் மருதநாடு என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் துாரத்தில் வழூர் கிராமம் உள்ளது.
இது குறித்து கூடுதல் விவரமறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் வழூர் டிரஸ்ட் தலைவர் மகாலட்சுமி சுப்பிரமணியன்: 98400 53289.
-எல்.முருகராஜ்வாசகர் கருத்து (4)

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    அருணாச்சலமே சேஷாத்திரி. ஓம் நமோ நமஹ..

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    மிக சிறப்பு .ஸ்வாமிகள் இன்னும் சிறப்பாக ஆசிர்வாதம் மக்களுக்கு செய்யட்டும் .

  • G Kannan - Chennai,இந்தியா

    ஓம் ஸ்ரீ சத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement