dinamalar telegram
Advertisement

ஒமைக்ரான்... இதுவும் கடந்து போகும்

Share

கொரோனா பெருந்தொற்று தோன்றி இரண்டு வருடம் ஓடிவிட்டது.
இதோ வந்துவிட்டது, அதோ முடிந்துவிட்டது என்று இழுத்துக்கொண்டேஇருந்த நிலையில், 'ஒமைக்ரான் ' என்ற புதிய பூதம் கிளம்பி இருக்கிறது.கொரோனா வைரஸ் விடுவதாக இல்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், பலரைக் கவ்விக் கொள்ளவும்,
தன்னுடைய மரபணுவில் சில மாற்றங்களைச் செய்துகொண்டு ஆல்பா, பீட்டா, காமா, கப்பா, டெல்டா என்ற பெயரில் மிக வேகமாகவும், வீரியமாகவும் பரவி, இரண்டாம் அலையை உருவாக்கியது. இது சற்று ஓய்ந்து வந்த வேளையில், மூன்றாம் அலை ஒன்று வரும் என்று பலர் எச்சரித்தனர்.அக்டோபர்-- நவம்பரில் மூன்றாம் அலை உச்சத்திற்கு வரும் என்றும், தினமும் 3 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.ஐ.டி நிபுணர்கள் உட்பட பலர் எச்சரித்து வந்தனர்.
( ஐ.ஐ.டி நிபுணர்களுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவே இல்லை). ஆனால் அப்படி எதுவும் ஏடாகூடமாக நடக்கவில்லை!ஆனால் மரபணு மாற்றங்களோடு வைரஸ் வந்து விட்டது. புயல்களுக்கு வைக்கப்படும் பெயர்கள் போல், இந்த வைரசுக்கு 'ஒமைக்ரான்' என்று பேன்சியாக உலக சுகாதார மையம் நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள்.

ஒமைக்ரானின் குணம் என்னஆல்பாவை விட டெல்டா மிக வேகமாக பரவியது. ஆனால் வீரியம் குறைவாகவே இருந்தது. தற்போது 32 மரபணு மாற்றங்களோடு வந்திருக்கும் ஒமைக்ரான் இதைவிட வேகமாகப் பரவும். ஆனால் வீரியம் மிகவும் குறைவாகவே இருக்கும். இதுதான் இயற்கையின் நியதி. மேலும் மேலும் உருவாகும் வைரசுகள் வீரியம் குறைந்து கொண்டே போகும்.
அவை போரில் தோற்று மாறு வேஷத்தோடு ஓடும் படைகளுக்கு ஒப்பானவை.ஒமைக்ரான் வைரஸ் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான தகவல். இது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்ற அனைத்து வைரஸ்களின் கலவை என்பதே. இதுவே அதன் பலகீனத்திற்கு காரணம். கொரோனா பெருந்தொற்றின் இறுதிக் கட்டத்திற்கு நாம் வந்து விட்டதின் அறிகுறியே இது.
சூர சம்ஹாரத்தில், யானைமுகம், சிங்கமுகம் என்று அடுத்தடுத்து உருமாறிவரும் சூரனை முருகன் வதம்செய்தது போல், இந்தக் கொரோனா அவதாரங்களும் இறுதியில் தோற்றுப் போகும். அதற்குச் சற்று காலம் பிடிக்கும். அதுவரை இந்த வைரசுடன் நாம் காலந்தள்ள வேண்டும்.
இன்புளுயன்சா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற வைரஸ்கள்போல், இதுவும் ஏதோ ஓர் உருவில் நம்மோடு இருக்கத்தான் போகிறது. அதனால்தான் இந்த வைரசோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று நிபுணர்கள் பலரும் முதலில் இருந்தே சொல்லி வருகிறார்கள்.

தடுப்பு ஊசிகளின் நிலை என்னபொதுவாக இந்த மாதிரிப் பெருந் தொற்றுகளுக்கு தடுப்பூசி தான் சிறந்த ஆயுதம். தடுப்பூசி மூலம் கிடைக்கும் எதிர்ப்புசக்தி, 6மாதம் முதல் 1வருடம் நீடிக்கும்.
அப்படியானால் வருஷம் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டே இருக்க நேரிடும். மரபணு மாற்றங்கள் ஏற்பட, ஏற்பட புது ரக வைரசுக்கு இந்த தடுப்பூசி பயனற்றுப் போய்விடுகிறது. எனவே வலிமைமிக்க தடுப்பூசிகள் இன்னும் வரவேண்டும்.முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளி கடைபிடிப்பதும் மிகமிக அவசியம்.இந்த இரண்டையும் தவறாமல் கடைபிடித்தால், கொரோனாவை தடுத்துவிடலாம்.

மாற்று மருத்துவம்ஆங்கில மருத்துவம் தோன்றியது -300 ஆண்டுகளுக்கு முன்தான். ஆனால் உலகம் தோன்றியது எத்தனையோ ஆயிரம் கோடி வருஷங்களுக்கு முன். இத்தனை வருடங்களாக மனித இனம் எத்தனையோ நோய்களை சந்தித்து வந்திருக்கிறது.
ஆங்காங்கே தோன்றிய மருத்துவ முறைகள் அவ்வப்போது மக்களைக் காப்பாற்றி வந்திருக்கின்றன. நம் நாட்டிலும் ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவ முறைகளும், இவற்றுக்கெல்லாம் மூத்த சிந்தாமணி மருத்துவமும் (ராவணனால் உருவாக்கப்பட்ட தமிழ் மருத்துவ முறை) நம் மக்களை காத்து வந்திருக்கின்றன.
ஆங்கில மருத்துவம் தீர்க்க முடியாத பல நோய்கள் இருக்கின்றன. இதுபோன்ற நேரங்களிலாவது நாம் பண்டைய மருத்துவ முறைகளைச் சற்று நினைத்துப் பார்ப்பது நல்லது.முதல் அலையின் போது, ஆங்கில மருந்துகளோடு இணைத்துக் கொடுக்கப்பட்ட நிலவேம்பு, கபசுரக் குடிநீர் போன்றவை நம்மைப் பெருமளவு காப்பாற்றின.
இரண்டாம் அலையிலும், நாம் தற்போது எதிர் நோக்கும் மூன்றாம் அலையிலும் இவற்றின் தேவையை மறந்தே விட்டோம். சற்று மாற்று மருத்துவ முறைகளிலும் கவனம் செலுத்தினால் நல்லது.ஒமைக்ரான் வைரஸ் உயிர்க் கொல்லி நோய் அல்ல. 60 நாடுகளில் சில ஆயிரம் பேரை மட்டுமே பாதித்திருக்கிறது.
அது தோன்றிய தென் ஆப்ரிக்காவில் அந்நாட்டு அதிபர் உட்பட 15 ஆயிரம் பேரை பாதித்து இருக்கிறது. ஆனால் யாரும் இறக்கவில்லை. பிரிட்டனில் ஒருவர் இறந்துள்ளார். இந்தியாவில் 50 பேர் பாதிக்கப்பட்டும் யாருக்கும் உயிர் ஆபத்து இல்லை.

பீதி வேண்டாம் .முதல் அலையையும் இரண்டாம் அலையையும் எளிதில் வெற்றிகொண்ட நம்மை இந்த ஒமைக்ரான் ஒன்றும் செய்துவிடாது. எனவே பீதி அடையாமல் அதே நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுவும் கடந்து போகும்.

-டாக்டர்.ப.சௌந்தரபாண்டியன்
மதுரை. 94433 82830.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement