Load Image
dinamalar telegram
Advertisement

ஆபத்தாகும் 'ஆன்லைன் அடிக் ஷன்'

சர்வதேச தொற்றுநோய் பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் ஆன்லைன் வகுப்புகள் வழியே பாடங்கள் பயிலும் முறை ஏற்பட்டுள்ளது. பெற்றோர், அவர்களது குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், மொபைல் போன், கம்ப்யூட்டர் என்று அவரவர் வசதிக்கேற்ப வாங்கி கொடுத்தனர்.
குழந்தைகள் பலரும், பல நாட்களாக வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பொழுதை போக்கிக் கொள்கின்றனர். ஆன்லைன் கல்வி சில நேரம், விளையாட்டு பல மணி நேரம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.சாதாரண 6, 7 8 வயது குழந்தைகள் கூட 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யு டியூப்' என பல செயலிகளில் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் பொழுதை கழிக்கின்றனர்.

பரவசம்இந்த ஆன்லைன் விளையாட்டு ஒரு போதை - அடிக் ஷன். ஒரு விளையாட்டை ஆட ஆரம்பித்தவுடன் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு அல்லது வெறி ஏற்படுகிறது. இதில் நிறைய விளையாட்டுகள் உங்களை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு சென்று, பின் தோல்வி அடையச் செய்யும். அதனால், மீண்டும் மீண்டும் விளையாட ஆசையைத் துாண்டும். இதை ஆடும்போது அதனுள்ளே கண்ணை கவரும் விஷுவல் எபெக்ட்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ் ஒருவிதமான தற்காலிக உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

இதை 'டோபமைன்- எபெக்ட்' என்றும் சொல்லலாம். இது ஒரு பரவசப்படுத்தும் 'பீல்குட் ஹார்மோன்'. இது மகிழ்ச்சியான நேரத்தில் வெளிப்படும். இந்த உணர்ச்சியை மீண்டும் மீண்டும் அனுபவிக்க, மாணவ - மாணவியர் இந்த விளையாட்டுகளில் மூழ்கி விடுகின்றனர். இதனால் நேரம் வீணாவதுடன், படிப்பது மட்டுமல்லாமல், நிம்மதியான உறக்கம், நேரத்திற்கு உணவு உண்ணுதல் என்று தொடராக பாதிப்பு ஏற்படுகிறது.
மொபைல் போனில் இருந்து வரும் நீல ஒளி துாக்கத்திற்குத் தேவையான மெலடோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன. அதனால் இரவில் துாக்கம் வராமல் காலையில் நேரம் கழித்து எழுகின்றனர். ஆன்லைன் வகுப்பிற்கு நேரத்திற்கு செல்லாமலும், உணவு உண்ணும் வேளையிலும், விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக, சாப்பாடு நன்றாக இல்லை, பிடிக்கவில்லை எனக் கூறி கேம்-சில் பெரும் பொழுதை வீணாக்குகின்றனர்.
பள்ளிகள் திறந்தபோதும், விளையாடநேரமின்மையால், ஆர்வம் குறையத் துவங்கும். இந்த நிலைமைக்கு சுற்றுச்சூழல் காரணமாக இருந்தாலும், இதிலிருந்து மாணவ - மாணவியரை வழிப்படுத்த, பெற்றோரின் பராமரிப்பும், பங்களிப்பும் மிக மிக அவசியம்.தங்களுக்கு 'ஒர்க் பிரம் ஹோம்' எனும் அலுவலக அல்லது மற்ற வேலைகள் இருப்பதால், தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என அவர்கள் போக்கில் விட்டு விடுகின்றனர். வீட்டிற்கு வெளியே வேலைக்கு செல்லும் பெற்றோரென்றால், கேட்கவே வேண்டாம், குழந்தைகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டு விடுகிறது.

மாறுதல்கள்இதன் பின்விளைவுகளை பெற்றோர் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த ஆன்லைன் அடிக் ஷன், பள்ளிக்கு செல்ல மறுத்தல், பொய் சொல்லுதல், எதிர்த்து பேசுதல் என பல பரிணா மங்களில் வெளிப்படுகிறது. நாம், பத்திரிகைகளில் அதிர வைக்கும் செய்திகளை தினமும் படிக்கிறோம். பணம், நகைகளை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு, ஊரை விட்டு செல்ல முயற்சி செய்யும் குழந்தைகளைப் பற்றி படிக்கிறோம்.
பெற்றோர் ஆகிய நாம், சொல்வது, செய்வது, கண்டிப்பு அவர்களுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது.சமுதாயத்தை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை குறை கூறாமல், பெற்றோர் தான் குழந்தைகளுக்கு முதல் வழிகாட்டி. குழந்தைகளின் மனமாற்றங்களை, அவர்களின் பேச்சு, செயல், உணவு முறைகளில் ஏற்படும் மாறுதல்களைக் கவனிக்க வேண்டும்.
இதில் பெற்றோர் காலம் கடத்தல் கூடாது. குழந்தைகளுடன் ஆரோக்கியமான விஷயங்களை பேசுதல், விளையாடுதல், புத்தகம் படித்தல், வெளியே செல்லுதல் என அவர்களுக்காக நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆன்லைன் அடிக் ஷன் நல்லதல்ல என்ற புரிதல் வேண்டும். அவர்களிடம் ஏன் மாற்றம் ஏற்படுகிறது என சிந்தித்து, அதற்கேற்ப அன்பாக அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
அவர்கள் முனைப்பு, உற்சாகம் காட்டும் எந்த நல்ல விஷயத்தையும் பாராட்டி ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இரவு துாங்கப் போகும் முன், அவர்களிடம் பேசி அன்று நடந்தது என்ன என்று தெரிந்து கொள்வது முக்கியம்.
சிறு வயது குழந்தைகள் என்றால், நல்ல கருத்துள்ள கதைகள், சிந்தனைகளை கூறினால் அவர்கள் மனதில் ஆழமாக பதியும். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். வாரம் ஒருமுறை நுாலகம் அழைத்துச் செல்லுங்கள். தினமும் சிறிது நேரம் சேர்ந்து செய்யும் அனைத்தும், ஒரு நல்ல பழக்கமாக மாறி, பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அவர்களின் வயதிற்கேற்ப வீட்டிற்கு உள்ளேயே மட்டுமின்றி, வெளியே சென்றும் விளையாடலாம்.
பெற்றோர், உறவினர்கள், எல்லோரும் கவனம் செலுத்தி நிலைமையை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். உடம்பில் நோய் இருந்தால் மருத்துவரை அணுகுவதை போல், மனதில், செயல்முறையில் ஆரோக்கியம் இல்லாத மாற்றம் ஏற்பட்டால், ஒரு நல்ல மனநல ஆலோசகர், உளவியல் மருத்துவரை அணுகி, பிரச்னைகளை பகிர்ந்து கொண்டு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். இதில் அலட்சியமாக இல்லாமல் காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுக்கக் கூடாது. சிந்தியுங்கள் பெற்றோரே!! செயல்படுங்கள்!!!சுஜாதா சேதுராமன்.
சென்னை.
இ-மெயில்: sujatha.counsellor@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா

    கலியுகம் முடியும் நேரத்தில் “கல்கி” அவதாரம் எடுத்து, அழிப்பேன்..னு கண்ணனவன் சொன்னபடி.... மனித குலத்தை அழிக்க வந்த “கல்கி” அவதாரம்தான்... இந்த மொபைல், கம்ப்யூட்டர் எனும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்...? இது மதுவைவிட..... பிரவுன் சுகரைவிட... அபின்,கஞ்சா..வைவிட “அடிமைப்படுத்தும்” போதைகள்...? இதைச் சொன்னா.. என்னை “கிறுக்கன்”...ங்குறாங்க...

  • மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து

    நல்ல பதிவு.. ஊதுகிற சங்கை ஊதியாகி விட்டது.. செவிகளில் ஏற்க வேண்டும்..

  • Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ

    இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை குழந்தைகளை கம்ப்யூட்டர் இல் இருந்து வெளி கொண்டு வருவது பெரும் பாடாக உள்ளது வெளியே சத்தம் கேட்கிறது என்று கதவை வேறு மூடி விடுகிறார்கள் நான் இன்று பள்ளியில் பொய் சீக்கிரம் முழு நேரம் பள்ளி திறக்கும் படி சொல்லி இருக்கிறேன் FEES மட்டும் நூறு சதவிகிதம் வாங்கிக்கொள்கிறார்கள், கிளாஸ் என்னமோ மூன்று நாள் கூட இல்லை குழந்தைகள் பைத்தியம் பிடித்த மாதிரி திரிகிறார்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement