dinamalar telegram
Advertisement

வலிமையான கட்டுமானத்திற்கு பி.ஐ.எஸ்., தரச்சான்று சிமென்ட் தேர்வு செய்யுங்கள்

Share

வீடு என்ற ஒரு கட்டுமானத்திற்கு சிமென்ட், இரும்புக்கம்பிகள், ஜல்லி, மணல், செங்கல் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. இவை எந்த அளவிற்கு தரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பல ஆண்டுகள் அந்த வீடு நிலைத்து நிற்கும். கட்டட அமைப்புகளுக்கு வலிமையும், தரமும் தருவதில் முக்கிய இடத்தில் இருப்பது சிமென்ட் தான். தரமான சிமென்ட் இல்லாமல் பெரிய கட்டடங்கள் கட்ட முடியாது.

மூன்று கிரேடுகள் சிமென்ட்

வீடுகளை வடிவமைக்கும் பொறியாளர்கள், நிறுவனங்கள் பயன்படுத்தும் சிமென்ட் எப்படிப்பட்டது என்பதை பொறுத்து தான் கட்டுமான தரம் அமையும். கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் சிமென்டடில் 10க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வீடுகள், அடுக்குமாடிகள் கட்ட சாதாரண 'போர்ட்லேண்ட்' வகை சிமென்ட் பயன்படுத்துகிறார்கள். சிமென்ட் வகைகளின் தரக்குறியீட்டை வைத்து தான் அதன் வலிமை, இறுகும் , நீடித்து உழைக்கும் தன்மை எந்த அளவுக்கு உள்ளது உள்ளிட்ட விஷயங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் 33, 43, 53 என 3 வகை கிரேடு சிமென்ட் வகைகள் வீடு கட்ட பயன்படுகின்றன.

இந்திய தர நிர்ணய அமைப்பின் வழி எல்லா சிமென்ட் வகைகளும் பரிசோதனை செய்யப்படும். நல்ல கட்டமைக்கும் திறன் 33 கிரேடு போர்ட்லேன்ட் சிமென்ட் என்பது சிறு பணிகள், சாதாரண பூச்சுக்கும் பயன்படுத்தப்படும் அது கொஞ்சம் குறைவாக பயன்பாட்டில் உள்ளது. அதன் விலையும் பிற வகை சிமென்ட்டுகளை விட குறைவு. 43 கிரேடு சிமென்ட் அனைத்து வகை வீடுகள், கட்டடங்களுக்கும் பொருந்த கூடியது. நம் ஊரில் பெரும்பாலும் அந்த வகை சிமென்ட் தான் பயன்பாட்டில் உள்ளது.

இந்த வகை சிமெண்டு மூலம் வீடுகள், கட்டடங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டிற்கான அடித்தளங்கள், வெளிப்பூச்சுக்கள், உள்பூச்சுக்கள், டைல்ஸ், மார்பிள், கிரானைட் ஒட்டுதல், தரைப்பூச்சு போன்ற பணிசெய்வது தற்போது நடைமுறையில் உள்ளது. 53 கிரேடு சிமென்ட் நல்ல கட்டமைக்கும் திறன் உள்ளது. இந்த சிமென்ட் அடுக்குமாடிகள், உயர்ந்த கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட பெரிய வகை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பி.ஐ.எஸ்., தரச் சான்று

சிமென்ட்டை தேர்வு செய்யும் போது பி.ஐ.எஸ்., தரச்சான்று பெற்ற நிறுவனத்தின் சிமென்ட்டை தேர்வு செய்ய வேண்டும். மூடை மீது நிறுவன பெயர் முறையாக உள்ளதா, மூடையின் திறப்பு பகுதி இயந்திரத்தால் தைக்கப்பட்டுள்ளதா, தையல் பிரியாமல் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி மூடையில் அச்சிட்டிருக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து 2 மாதங்களுக்குள் உள்ள சிமென்ட்டை வாங்குவது நல்லது. சிமென்ட் மூடைக்குள் கைவிட்டு சிமென்ட்டை தொடும் போது குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு கையில் சிமென்ட்டை அள்ளி நீருக்குள் கலக்கும் போது சில நிமிடங்கள் மிதந்த பின் நீரில் கரைய வேண்டும். உடனே நீரில் கரையும் சிமென்ட் நல்லதல்ல.

எளிதில் கரைய கூடாது

சிமென்ட்டை கொஞ்சம் பேஸ்ட் போல் கலந்து அட்டை, பிளேட்டில் சதுரவடிவத்தில் அமைக்க வேண்டும். அதை மெல்ல நீரில் அமிழ்த்தும் போது அந்த வடிவம் அவ்வளவு எளிதில் கரைய கூடாது. ஒரு நாளுக்கு பின்பே இறுகி கடினமாகும். சிமென்ட்டை விரலில் தேய்க்கும் போது கல்துகள்களை தேய்ப்பது போல இருக்க கூடாது. சிமென்ட்டை வாங்கிய பின் காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அடுக்கி வைத்து பாதுகாக்க வேண்டும். மழை காலங்களில் சிமென்ட் மூடைகளை பாலிதீன் பைகளில் வைத்து மூடி வைக்க வேண்டும் என்கிறார்கள் கட்டுமன வல்லுனர்கள்.

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement