dinamalar telegram
Advertisement

மாபெரும் வீரர் தளபதி பிபின் ராவத்

Share

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியின் உரி நகரிலுள்ள ராணுவ முகாமில் ஜைஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் இந்தியா ராணுவத்தின் 12வது பிரிகேட்டின் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் 20 வீரர்கள் படுகாயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதல்களில் உரி தாக்குதல் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது.இத் தாக்குதலை தொடர்ந்து நடந்த விசாரணையில் பயங்கரவாதிகள் அதிகாலை 5:30 மணியளவில் ராணுவ முகாமிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. மேலும் அவர்கள் பயன்படுத்திய ஜிபிஎஸ் கருவியின் மூலம் பாகிஸ்தானிற்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்புடையதும் தெரியவந்தது.இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'என்ற ஒன்றை திட்டமிட்டது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்பது எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து நடத்தும் அதிவேக தாக்குதல் நடவடிக்கையாகும். அத்துடன் இந்த தாக்குதலில், தாக்குதல் நடத்தும் தரப்பிற்கு மிக குறைந்த பொருள் மற்று வீரர்கள் சேதம் இருக்கும். சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவதற்கு தகுந்த திட்டமிடல் மற்றும் சிறந்த செயலாக்கம் முறை வேண்டும்.
இந்தியா தரப்பில் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைப் பகுதியை கடந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்று அதிரடி தாக்குதல் நடத்தினர். அதாவது பிம்பர் ,ஹாட்ஸிபிரிங் , கேள் மற்றும் லிபா ஆகிய பாக்.செக்டார்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது.
சரியாக நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் ஏவுகணை செலுத்தும் 7 இடங்கள் தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 38 பயங்கரவாதிகள் மற்றும் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா தரப்பில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.
அதுவரை தடுப்பாட்டம் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த இந்தியா முதல் முறையாக எதிரிகளின் களத்திற்குள் சென்று துவம்சம் செய்தது,எதிரிகளுக்கு வாழ்க்கையில் மறக்கமுடியாத மரண அடி கொடுத்தது, இதை பாக்.மட்டுமல்ல உலக நாடுகளே எதிர்பார்க்கவில்லை.
உலக அரங்கில் இந்திய ராணுவத்தின் மதிப்பும் மரியாதையும் கூடியது, சபாஷ் இந்தியா என்று பாராட்டி மகிழ்ந்தது. இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற நுட்பமான தாக்குதலை முழுமையாக வடிவமைத்தவர்தான் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போன நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
பாக்.கிற்கு மட்டுமல்ல சீனாவிற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிவந்தவர்தான் பிபின் ராவத்.இவரது இயர் பெயர் பிபின் லக்ஷ்மண் சிங் ராவத் ராஜபுத்திர வம்சத்தைச் சார்ந்தவர். இவர் குடும்பத்தில் பல தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளனர். உத்திரகண்ட் மாநிலம் பவுரி கஹ்வால் மாவட்டம், சின்ஜ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
இளமைக் காலத்திலேயே தந்தையின் ராணுவ பிரிவில் சேர்ந்தவர் அமெரிக்கா சென்று ராணுவத்திற்கான கூடுதல் படிப்பை படித்தார் இந்த படிப்பில் டாக்டர் பட்டமும் பெற்றார் ராணுவமே தனது வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டு படிப்படியாக உயர்ந்து ராணுவத்தையும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றார்.
முப்படைகளுக்கும் தனித்தனி தளபதிகள் இருந்ததால் அவசரகால முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படலாம் என்பதால் முப்படைகளுக்கும் தலைமை தாங்கக்கூடிய தலைமை தளபதியாக பிபின் ராவத் பிரதமர் மோடியால் கடந்த 2019 ம் ஆண்டுதான் நியமனம் பெற்றார்.
63 வயதானாலும் ஒரு இளைஞரின் சுறுசுறுப்புடன் நாடு முழுவதும் வலம் வந்தவர், உடம்பில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் நாட்டுக்கே என்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர், ஊட்டி குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த அலுவலக ரீதியிலான விழாவில் கலந்து கொள்ள பறந்து வந்தவர், பத்து நிமிடத்தில் தரை இறங்கவேண்டியவர், எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி தன் இன்னுயிரை இழந்துள்ளார்.
பிரதமர் துவங்கி ஜனாதிபதி வரை அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அந்த இரங்கல் செய்தியோடு நமது ஆத்மார்த்தமான அஞ்சலியும் சென்று சேரட்டும் அந்த மாவீரரை போற்றுவோம் இன்றும்..என்றும்...
-எல்.முருகராஜ்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement