dinamalar telegram
Advertisement

'வண்டி கட்டுதலில்' மாமூலை வாரி குவிக்கும் போலீசார்!

Share

'வண்டி கட்டுதலில்' மாமூலை வாரி குவிக்கும் போலீசார்!''கோடிகள்ல கொழிக்குறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''அரசியல்வாதிகள் தகவலாங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.


''இல்லை பா... தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்கள்ல, 62 மலை கிராமங்கள் இருக்குது... இதுல வசிக்குற மலைவாழ் மற்றும் பழங்குடியின இளைஞர்களை, செம்மர புரோக்கர்கள் ஆசை வார்த்தை காட்டி, ஆந்திராவுக்கு அழைச்சிட்டு போறாங்க பா...

''அங்கே செம்மரம் வெட்ட, இந்த இளைஞர்களை பயன்படுத்திக்கிறாங்க... இதுக்காக, அவங்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கூலி மட்டும் தர்றாங்க பா... ஆனா, புரோக்கர்கள் கோடிக்கணக்குல சம்பாதிக்குறாங்க...

''சமீபத்துல ஒரு புரோக்கர், அரூர்ல ௧ கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியிருக்காரு... அப்பாவி இளைஞர்களை பிடிக்கிற போலீசார், இந்த புரோக்கர்களை கண்டுக்க மாட்டேங்கிறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''மின் திருட்டுக்கு எல்லாம் உதவ முடியாதுன்னு கை விரிச்சுட்டாரு வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''சென்னை அடுத்துள்ள குன்றத்துார் பிரதான சாலை, பெரிய பணிச்சேரியில, தனியார் குடியிருப்புக்கு கடந்த ஆட்சியில, ஆலந்துார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாவும், இப்போ அமைச்சராவும் இருக்கிற தா.மோ.அன்பரசன், 'போர்வெல்' போட்டுக் கொடுத்திருக்காரு வே...

''போன ரெண்டு வருஷமா மின் கம்பத்துல இருந்து மின்சாரத்தை திருடி, போர்வெல்லுக்கு பயன்படுத்தியிருக்காவ... இதை சமீபத்துல, மின்வாரிய அதிகாரிகள் கண்டுபிடிச்சு, குடியிருப்பு நலச்சங்கத்திற்கு, 65 ஆயிரம் ரூபாய் அபராதம் தீட்டிட்டாவ...

''குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், 'தெரிஞ்சு இந்த தப்பை நாங்க பண்ணலை'ன்னு அன்பரசன் உதவியை நாடியிருக்காவ... அவரோ, 'மின் திருட்டுக்கு எல்லாம் நான் உதவ முடியாது... சட்டப்படி பிரச்னையை தீர்த்துக்கங்க'ன்னு ஒதுங்கிட்டாரு வே...

''அப்புறமா, உள்ளூர் உள்ளாட்சி பிரதிநிதிகளை வச்சு மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி, அபராதத்தை 30 ஆயிரம் ரூபாயா குறைச்சிருக்காவ... 'இதையும் கட்டலைன்னா, போலீஸ்ல புகார் குடுத்துடுவோம்'னு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''வண்டி கட்டுதல்னு வாரி குவிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு நகர்ந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''சென்னை, மாதவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்ல நிறைய தனியார் நிறுவனங்களின் குடோன்கள் இருக்கோல்யோ... பெரும்பாலும், வட மாநிலங்கள்ல இருந்து லாரிகள்ல வரும் பொருட்களை இங்கே 'ஸ்டாக்' வைக்கறா ஓய்...

''இப்படி வர லாரி டிரைவர்கள் சிலர், பெரும்பாலும் போதையில தான் இருப்பா... ஊருக்கு வெளியில இவாளை மடக்கி பிடிக்கற மாதவரம் போக்குவரத்து போலீசார், லாரிகளை மறைவான இடத்துல ஓரங்கட்டி நிறுத்தி, சாவியை பிடுங்கிடறா ஓய்...

''வழக்கு போட்டா, கோர்ட்டுக்கு போய் 10, 15 ஆயிரம் அபராதம் கட்டணும்கறதால, டிரைவர்கள் 5,000 ரூபாயை அழுத்திட்டு, லாரிகளை விடுவிச்சுண்டு போயிடறா... இந்த மாமூல் வசூலுக்கு, 'வண்டி கட்டுதல்'னு சங்கேத பெயர் வேற வச்சிருக்கா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement