dinamalar telegram
Advertisement

பார்லிமென்ட் கவுரவம் சீர்குலைப்பது சரியல்ல!

Share

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது. ஆகஸ்ட் 11ல், ராஜ்யசபாவில் பெரும் அமளி ஏற்பட்டது. பொது காப்பீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முற்பட்ட போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவின் நகல்களை கிழித்து எறிந்தனர். அவர்களை கட்டுப்படுத்த சபையின் காவலர்கள் வரவழைக்கப்பட்ட போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், பெண் காவலர் தாக்கப்பட்டார்.

இது குறித்து ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடும் வருத்தம் தெரிவித்தார்.எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆளும் கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அது பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதன்படி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ௨௯ம் தேதி, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆறு பேர் உட்பட ௧௨ எம்.பி.,க்களை, குளிர்கால கூட்டத்தொடர் முழுதும் 'சஸ்பெண்ட்' செய்வதாக தெரிவிக்கப்பட்டது. 'அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் யாரும், தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிக்காததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தவறு செய்த எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்டால் தான், சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ் பெறப்படும் என, அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபடுவதும், கூச்சல், குழப்பம் செய்வதும், வெளிநடப்பு செய்வதும், இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், அப்படி அமளியில் ஈடுபடுவோர் எல்லை மீறி செல்லும் போது தான், இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, 'ராஜ்யசபா தலைவரின் சஸ்பெண்ட் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. மழைக்கால கூட்டதொடரில் நடந்த சம்பவத்திற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சரியல்ல' என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சபையில் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டது சரியானதல்ல என்று சொல்வதற்கு அவர் முன்வரவில்லை. மாறாக, அவர்களின் செயல்களை நியாயப்படுத்துவதாகவே அவரின் பேச்சு உள்ளது.

பார்லிமென்ட் ஜனநாயகத்தில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும், விவாதங்களுமே, மக்களின் பிரச்னைகளை தீர்க்க உதவும். அதற்கு மாறாக, ஆளும் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, வன்முறையில் ஈடுபடுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அழகல்ல. மதிப்புமிக்க பார்லிமென்டின் நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காக, அரசியல் கட்சிகளுக்கும், எம்.பி.,க்களுக்கும், மக்கள் தங்கள் ஆதரவை தரவில்லை என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

பார்லிமென்டின் இரு சபைகளின் நடவடிக்கைகளும், சுமூகமாக நடைபெறும் வகையில், ஆளும் கட்சி தரப்பினரும், எதிர்க்கட்சி தரப்பினரும் ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட வேண்டும். ஒரு தரப்பினரின் கருத்துக்கு மற்றொரு தரப்பினர் மதிப்புக் கொடுப்பதோடு, விட்டுக் கொடுத்தும் செல்ல வேண்டும். பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, ஒவ்வொரு நிமிட நடவடிக்கைகளுக்கும், 2.5 லட்சம் ரூபாய்க்கு மேலாக செலவிடப்படுகிறது. மக்களின் இந்த வரிப்பணம் எந்த வகையிலும், வீணடிக்கப்படக் கூடாது. வறட்டு பிடிவாதங்களை ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தவிர்த்து, முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்த முன்வர வேண்டும்.

விரிவான விவாதங்களுக்கு பிறகே முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில், சபை நடவடிக்கைகளின் போது, அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என, இளம் எம்.பி.,க்களுக்கு மூத்த எம்.பி.,க்கள் அறிவுரை கூற வேண்டும். பார்லிமென்டில் நடைபெறும் விவாதங்களை, நேரத்தை வீணடிக்கும் செயலாக யாரும் கருதக்கூடாது. மாறாக, மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுக்கள் மக்களின் மனநிலையை, அவர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக கருத வேண்டும்.

எனவே, இந்த விஷயத்தில் ஆளும் தரப்பினரும், எதிர்தரப்பினரும், மக்கள் பிரதிநிதிகளும் இனியாவது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement