Load Image
dinamalar telegram
Advertisement

கட்டப்பஞ்சாயத்தா, கூப்பிடுங்க...! 'டாலர் சிட்டி'யில், உ.பி.,க்களின் 'லாபி'

பல்லடத்தில், தோழியின் வீடு கிரஹப்பிரவேசத்துக்கு சென்று, திரும்பி கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். அவ்வழியில், சாலையோரம் இருந்த நீர்நிலையருகே, ஆக்கிரமிப்பை அளவெடுத்துக் கொண்டிருந்தனர் அதிகாரிகள்.

''நீர்நிலை ஆக்கிரமிப்பையெல்லாம் எடுக்கோணும்னு அரசு கண்டிப்பான உத்தரவு போட்டுருக்கு. ஆனா, ஆக்கிரமிப்பு இடத்துல குடியிருக்கற மக்களுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு தர்ற வேலையில, நகராட்சி நிர்வாகம் 'பிஸி'யா இருக்கு. இதை எங்க போய் சொல்ல...'' என சலித்துக் கொண்ட சித்ரா,''எலக்ஷனுக்கு முன்னாடியே, முனிசிபாலிடி கன்ட்ரோல் முழுக்க ஆளுங்கட்சி நிர்வாகிங்க கைக்குள்ள வந்துடுச்சாம்,'' என்றாள்.


''அப்படின்னா இதெல்லாம் கண்கட்டு வித்தையா?'' என்று கேட்ட மித்ரா,

''அக்கா... கரைப்புதுார் வரைக்கும் போய்ட்டு கிளம்பிடலாமா? அங்க இருக்கற என் உறவுக்காரர் ஒருத்தரை பார்க்கணும்,'' எனக்கூறவும், வண்டியை திருப்பினாள் சித்ரா.

''இந்த ஊர்ல, 'செப்டிக் டேங்க்' கழிவுநீரை திறந்தவெளியில விடறதால, துர்நாற்றம் தாங்க முடியலைன்னு, மக்கள் புகார் தெரிவிச்சும், ஊராட்சி நிர்வாகம் கண்டுக்கவே இல்லையாம். 'மாஜி' வி.ஐ.பி.,யோட மகளா இருக்கிறதால, பேச பலரும் தயங்கறாங்களாம். பஞ்சாயத்து தலைவியும் அதே கட்சிங்கிறதால, கண்டுக்கறதில்லையாம்,'' என்றாள் மித்ரா.''அரசியல் வி.ஐ.பி.,யோடு வாரிசுகளே இப்படி தப்பு பண்ணா எப்படி?'' என, சலித்து கொண்டாள் சித்ரா.

காணாமல் போன அச்சம்அதே கிராமத்திலுள்ள தன் உறவுக்கார பெண் மிருதுளாவை பார்த்து விட்டு, இருவரும் விடை பெற்றனர். திரும்பும் வழியில், எதிரே மொபைல் வாகனம் மூலம், சுகாதார பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

''கொரோனாவால பாதிக்கப்படறவங்க அதிகமாகிட்டே வர்றாங்க; ரொம்ப கவனமா இருக்கணும்,'' என, 'அலர்ட்' செய்தாள் சித்ரா.

''மக்கள்கிட்ட பயம் இல்லாம துளி கூட இல்லக்கா. இப்படித்தான், சேவூர் போலீஸ் ஸ்டேஷன்ல வேல பார்க்குற ஒரு அதிகாரிக்கும், அவரோடு குடும்பத்தை சேர்ந்தவங்களும் கொரோனாவால பாதிக்கப்பட்டு, சிகிச்சைல இருக்காங்க. ஆனா, அங்க வேல செய்ற மத்த போலீஸ்காரங்க டெஸ்ட் பண்ணவே இல்லையாம். எப்போதும் போல வேல பார்த்துட்டு தான் இருக்காங்களாம்,'' என விளக்கினாள் மித்ரா.

சிட்டி எல்லைக்குள் நுழைய, மேகம் கருத்து, மழை மேகம் சூழந்தது. வழியிலிருந்த பேக்கரிக்கு சென்ற இருவரும் காபி 'ஆர்டர்' செய்தனர்.

ஆளுங்கட்சி 'அட்ராசிட்டி'''எலக்ஷன் நேரத்துல ஆளுங்கட்சிக்காரங்க பேரை கெடுத்துக்குவாங்க போலயே'' என, அரசியல் மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''சிட்டிக்குள்ள, ஆளுங்கட்சி ஆபீஸ்ல, கேரள மாநிலத்தோட மூணு நம்பர் லாட்டரி சூதாட்டம் நடத்தினது தொடர்பா, நாலு பேரை பிடிச்சாங்க தெரியுமா?அதுல, நாலாவதா இருந்த ஒருத்தர், 'சவுத்' சிட்டிக்குள்ள முக்கிய பொறுப்புல உள்ளவரோட உடன்பிறப்பாம்,''

''லாட்டரி விற்றதை பக்கத்துல இருக்கற பொது இடத்துல நடந்த மாதிரி காண்பிச்சு, 'கேஸ்' எழுதிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''இதவிட இன்னொரு அக்கப்போரை சொல்றேன் கேளுங்க. சிட்டிக்குள்ள, வடக்கால ஸ்டேஷனுக்கு, நில விவகாரம், கட்டப்பஞ்சாயத்து பண்ற மாதிரி எந்தவொரு 'கேஸ்' வந்தாலும், தன்னோடு கவனத்துக்கு கொண்டு வரணும்ன்னு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யோட வலது கையா இருக்க ஒருத்தரு உத்தரவு போட்டிருக்கிறாராம். இதய பக்கத்து வீட்ல இருக்க கணேஷ் மாமா தான் சொன்னார்டி,'' என்றாள் சித்ரா.

எல்லாம் 'செட்டப்' தான்...


''இப்பதானே கட்டப்பஞ்சாயத்துல தானே நல்லா காசு பார்க்க முடியும்'' என, சொன்ன மித்ரா,''ரெண்டு நாளைக்கு முன்னாடி, அவிநாசி - அன்னுார் ரோட்ல, நரியம்பள்ளிபுதுார்ல, பைக்ல வந்த மூனு பேரு, ரோட்ல நடந்து போய்ட்டு இருந்த பனியன் கம்பெனி தொழிலாளிகிட்ட இருந்து, மொபைல் போனை தட்டிப்பறிக்க முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனா, முடியாததால தப்பிச்சு போய்ட்டாங்க...''


''இந்த விஷயம், 'செக்போஸ்ட்'ல இருந்த போலீஸ் மூலமா ஆட்டையாம்பாளையம் பகுதியில இருக்க பொது மக்களுக்கும், போலீசுக்கும் தகவல் வர, அந்த மூனு பேரையும் ஆட்டையாம்பாளையத்துல பொதுமக்கள் மடக்கி பிடிச்சுட்டாங்க...''

''பைக்கை ஓட்டிட்டு வந்தவன் தப்பிச்சு ஓடிட்டானாம். ஜீவகுமார், ராஜ்குமார்ன்னு மத்த ரெண்டு பேரரை பிடிச்ச போலீஸ்காரங்க, ஆகஸ்ட் மாசம், பெண் வக்கீல்கிட்ட இருந்து நகையை வழிப்பறி பண்ண முயற்சி நடந்ததாக பதிவு பண்ண வழக்கோட அக்யூஸ்ட்டா, 'அரெஸ்ட்' பண்ணிட்டாங்களாம்,'' என்றாள்.

''எப்படியோ ஒரு கேஸை முடிச்சிட்டாங்க...'' என சித்ரா சொல்லி முடிக்கவும், சூடாக காபி வந்தது ''மசாஜ் சென்டர், சீட்டாட்ட கிளப், இந்த மாதிரி இல்லீகல் சமாச்சாரங்களை பிடிக்க, போலீஸ், டிபார்ட்மென்ட்ல 'ஸ்பெஷல் டீம்' போட்டிருக்காங்க. இதுக்காக பிரைவேட் பைனான்ஸில், 'சீஸ்' பண்ணி வச்சிருக்க வண்டிகள தான் போலீஸ்காரங்க பயன்படுத்தறாங்களாம்,'' என, கூடுதல் தகவல் சொன்னாள் சித்ரா.

'கவனிப்பால்' கள ஆய்வு''போன வாரம், தேசிய துாய்மை பணியாளர் ஆணையக்குழு தலைவர் ஆய்வு நடத்தினார். அவர் வர்றதுக்கு முதல் நாளே, சிட்டிக்கு வந்த ஒரு முக்கியப்புள்ளி, தலைவர் ஆய்வு செய்யப்போற இடங்கள சுத்தி பார்த்துட்டு, முக்கிய துறையோட ஆபீசர்களை சந்திச்சு, 'கவனிப்பு' வாங்கிட்டு போயிட்டார்ன்னு பேசிக்கிறாங்க. ஆனா, இந்த விஷயம், ஆணைய குழு தலைவருக்கு தெரியுமான்னு தான் தெரியல,''

''கடந்த முறை காங்., ஆட்சியிலேயும் இந்த ஆணையக் குழுவின் அதிகார வர்க்கமா இவருதான் இருந்தாராம். இப்பவும், இவரே தானாம். ஆனா, அவருக்கு என்ன பொறுப்புன்னு யாருக்குமே தெரியலையாம்,'' என்றாள் மித்ரா.அப்போது சித்ராவின் போன் சிணுங்க, ''ஹலோ…இது, ஒசூருங்களா? பிச்சாண்டி இருக்காரா? என, எதிர்முனையில் பேசியவர் கேட்க, 'ராங் நம்பர்' எனக்கூறி இணைப்பை துண்டித்தாள் சித்ரா

.'தர்ம' சங்கடத்தில் கூட்டணிவெளியில் மழை கொட்ட துவங்கியது. ''என்னக்கா, இப்போதைக்கு எலக்ஷன் வராது போலயே'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''ஆமா மித்து. கார்ப்ரேஷன் லிமிட்ல, அடிப்படை வசதி செஞ்சு கொடுக்கணும்ன்னு, அப்பப்போ, தோழர்கள் போராட்டம் நடத்திட்டு இருக்காங்க. போன வாரம், கட்டுமான தொழிலாளர்களுக்கான கோரிக்கையை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க மறியல் செஞ்சாங்க,''

''அதுல பேசினவங்க மத்திய அரசையும், பிரதமரை மட்டுமே குற்றம் சுமத்தி பேசினாங்க. ஆனா, மாநில அரசு தர வேண்டிய குடியிருப்பு வசதி, கட்டுமான பொருள் விலை உயர்வுன்னு எதை பத்தியும் வாய் திறக்கலையாம்,'' என்றாள் சித்ரா.''பாம்பும் சாகோணும்; தடியும் உடையக்கூடாதுங்ற நிலைமைல தான் தோழர்கள் இருக்காங்க. அவங்கள மாதிரியே, இப்ப, தாமரை கட்சிக்காரங்களும் இப்ப மக்கள் பிரச்னையை முன்வைச்சு, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திட்டு இருக்காங்க. அவங்க சொல்ற பிரச்னைக்கு, முன்னாடி இருந்த அ.தி.மு.க., அரசு ஏன் நடவடிக்கை எடுக்கலைன்னு திரும்ப கேட்டா, 'சைல்ன்ட்' ஆகிடறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''கூட்டணி 'தர்மம்' கடைபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் தான் போல'' எனக்கூறி சிரித்தாள் சித்ரா.

'துருப்புச்சீட்டாக' மனு...''லோக்கல் மினிஸ்டர்கள், மாவட்டம் முழுக்க போயி, மக்களை சந்திச்சு மனு வாங்கினாங்க தெரியுமா? இந்த மனுக்கள் எல்லாத்தையும் கட்சி ஆபிஸ்ல குவிச்சு வச்சிட்டாங்களாம். எலக்ஷன்ல போட்டி போடப்போற கட்சிக்காரங்க தான், அந்த மனுவை பிரிச்சு படிச்சு, பிரச்னையை தெரிஞ்சுகிட்டு, சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்ப போறாங்களாம்,''''எந்ததெந்த வார்டுல என்னனென்ன பிரச்னைன்னு தெரிஞ்சுகிட்டா, எலக்ஷன் நேரத்துல, அந்த பிரச்னையை மையமா வைச்சு, பிரசாரம் பண்ணி, ஓட்டு வாங்கத்தான் இந்த ஐடியாவாம்,'' என்றாள் மித்ரா.

''ஆளுங்கட்சி அப்டின்னா, அதிலுள்ள கூட்டணி கட்சிக்காரங்களோட நோட்டீஸ் மிரட்டல் விடுத்து, கல்லா கட்டின கட்சிக்காரங்கள பத்தி சொல்றேன் கேளுங்க,'' என்ற சித்ரா, ''அவிநாசியில புதுசா ஒரு டாஸ்மாக் கடை திறந்தாங்க. அந்த கடை நெடுஞ்சாலை ஓரமா இருக்கிறதால, கடையை திறக்கக்கூடாது; மீறி திறந்தா போராட்டம் நடத்துவோம்ன்னு, 'மதுக்கடைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்' என்ற பேர்ல போஸ்டர் ஒட்டினாங்க,''

''அடடே... பரவாயில்லயே. 'டாஸ்மாக்'கிற்கு எதிரா, மக்கள் தான் பொங்கி யெழுந்துட்டாங்களோன்னு நினைச்சு, போலீஸ்காரங்க விசாரிச்சப்ப, 'சீறிப்பாயும்' கட்சிக்காரங்க தான் போஸ்டர் ஒட்டியது தெரிஞ்சுது. அதே டைமில, சம்பந்தப்பட்ட 'டாஸ்மாக் பார்'காரங்க கிட்ட, 'வரி' போடறதுக்கு தான், இந்த போஸ்டர் மேட்டராம்...'' விளக்கினாள் சித்ரா.

''என்னா ஒரு புத்திசாலித்தனம்...'' என நடிகர் வடிவேல் போல பேசிய மித்ராவிடம்,''மழை விட்டுருச்சு. மறுபடியும் வர்றதுக்குள்ள போயிடலாம்'' என்ற சொன்னாவறே, வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement