ரமணா என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி: ஊழல் செய்யும் அதிகாரிகளை தொடர் கொலைகள் செய்வான், கதாநாயகன். ஊழல்வாதிகளை அடையாளம் காட்டுவதற்காக, தனக்கு வேண்டப்பட்ட படித்த, நேர்மையான இளைஞர்களை ஒவ்வொரு அரசு துறை அலுவலகங்களிலும் வேலையில் அமர்த்தி, உளவு சொல்ல ஏற்பாடு செய்திருப்பான், கதாநாயகன்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க காவல் துறை அதிகாரிகள் நட்சத்திர ஓட்டலில் கூட்டம் போட்டு, வகை வகையான அசைவ உணவு மற்றும் வெளிநாட்டு சரக்கு சகிதம், உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை அவ்வப்போது நடத்தி காலம் கடத்துவர். அதற்குள் இன்னும் நான்கு கொலைகள் விழும். ஆட்சியாளர்களிடம் பதில் சொல்ல அப்பாவிகளை பிடித்து உலுக்கி எடுப்பர்.-இப்படி கதை செல்லும்...
அதுபோலத் தான் இருக்கிறது, பொதுப்பணித் துறையினரின் செயல்பாடுகள். சமீபத்தில் அவர்கள் கூறிய அதிமேதாவித்தனமான யோசனை தான், ரமணா திரைப்படத்தை நினைவுபடுத்தியது. அதாவது, 'ஏரி, குளங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு பல வழிகளில் வருமானம் வருகிறது; நிறைய ஆட்களும் இருக்கின்றனர். இது குறித்து, முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று திருவாய் மலர்ந்துள்ளனர் பொதுப்பணித் துறை உயரதிகாரிகள்.
சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதி, சென்னை நதிகளின் சீரமைப்பு அறக்கட்டளை, பிரதமர் நீர் பாசன திட்டம், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் நிதி என பலமுனைகளில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்தி ஏரிகளை மேம்படுத்தலாம். அதற்கு ஏரிகளை மாநகராட்சியின் சொத்தாக மாற்ற வேண்டும் என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது. இதையும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.
வெள்ள பாதிப்புக்கு அதிக மழை தான் காரணம் என்று ஒரு, 'ஸ்டேட்மென்ட்' விடுத்து, ஆரம்ப புள்ளியிலேயே தான் இன்னமும் நின்று கொண்டுள்ளனர்.திரைப்படத்தில் குற்றவாளிகளை தேடி கண்டுபிடிப்பர். ஆனால் இங்கு, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற ரீதியில், தானே வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நீர்நிலைகளை பாதுகாக்காதது, ஆக்கிரமிப்பு மற்றும் முறையான பராமரிப்பும் இல்லாததும் தான் வெள்ள பாதிப்புக்கு மூல காரணம் என்று, ஏரிகளை இத்தனை காலமும் தங்கள் பொறுப்பில் வைத்திருந்த பொதுப்பணி துறையினருக்கு தெரியாதா?தங்களது அதிகார துஷ்பிரயோகத்தை மறைக்கவும், பொறுப்பை தட்டிக்கழிக்கவும் தான் மேற்கூறிய யோசனையை தெரிவித்துள்ளனர்.
இதை, 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போதே செய்திருக்க வேண்டியது தானே. ஆறு ஆண்டுகள், பொறுப்பை யார் தலையில் சுமத்தலாம் என்று சிந்தித்தனரோ?ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் வருகிறது; மழை, வெள்ளத்தால் பல பகுதிகள் மூழ்கவே செய்கின்றன. அப்போதெல்லாம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வரிந்து கட்டி, பாதுகாப்புடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு 'விசிட்' அடித்து, புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுத்து, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரண உதவிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன...' என்று எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து, ஒப்பித்து விட்டு சென்று விடுகின்றனர்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில், கணுக்கால் அளவுக்கு தேங்கியுள்ள தண்ணீரில் படகில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறிய கூத்தும் நடைபெற்றது; ஆனால், நிரந்தர தீர்வு தான் ஏற்படுவதில்லை.பல தொலைக்காட்சி சேனல்களும், தங்கள் பங்குக்கு அடாத மழையிலும் கொடாகண்டர்களாக, மழை நிலவரத்தை சுட்டிக்காட்டுவதாக பம்மாத்து செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பி, தங்கள் 'ரேட்டிங்கை' ஏற்றிக் கொண்டது தான் மிச்சம்.
தற்போதைய சென்னை மாநகராட்சி விரிவாக்கத்துக்கு முன், 400 ஏரி, குளங்கள் இருந்ததாக 1909 - -1970 வரையிலான அரசு ஆவண வரைபடம் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது. ஆனால், இப்போதோ சென்னை மாநகராட்சியில் வெறும் 30 ஏரிகள் மட்டுமே உள்ளன; அதுவும் சுருங்கியுள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இதை, 'கூகுள்' மேப்பும் சுட்டிக்காட்டியது நினைவிருக்கலாம்.மற்ற ஏரி, குளங்கள் என்னவாயிற்று?
பொதுப்பணித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட இதர அரசு துறைகள் பராமரிப்பில் இருந்த, 368 நீர் நிலைகள் இருந்த தடம் கூட தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டன.ஏரிகள், குளங்கள் மீது பெரிய கட்டடங்கள் கட்ட அனுமதி அளித்து, ஆக்கிரமிப்புக்கு துணை போனது யார்? மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து, பிரச்னை ஏற்பட்டதும், ஏரிகளை பராமரிக்கும் பொறுப்பை மாநகராட்சியிடம் விட வேண்டும் என்று கூறுவது, இவர்களது நரித்தனத்தையே காட்டுகிறது.
'நல்லாயிருக்கய்யா உங்க ஞாயம்...' என்று, நடிகர் வடிவேலு 'ஸ்டைலில்' கூறி, சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்' போட்டு ஆறுதல்பட்டு கொள்ள வேண்டியது தான்.இனியாவது பதவியில் உள்ளவர்கள் விழித்து, நம் முன்னோர்களின் நீர் மேலாண்மையை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.
இன்னொன்றையும் இங்கே கூற விரும்புகிறேன்...ஏரியும், குளங்களும், மலைகளும் சூழ்ந்த அழகிய சிற்றுார் தான் என் பூர்வீகம். பல ஏக்கர் பரப்பளவு கொண்டதும், 18 பட்டிகளுக்கு நீர் வளத்தை வாரி வழங்கிய ஏரியின் இன்றைய நிலை பரிதாபமானது.பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல், ஆக்கிரமிப்புகளால் சுருங்கியதோடு, கோடை காலத்தில் வறண்டும், பொலிவு இழந்தும் காணப்பட்ட அந்த ஏரியை, மக்களின் பங்களிப்புடன் துார் வாரி, கரைகளை உயர்த்தி கட்டி, சீராக பராமரிக்க நல்லெண்ணம் கொண்ட ஒரு சமூக சேவை நிறுவனம் அரசிடம் அனுமதி கோரியது.
ஆனால், 'கமிஷன் பார்ட்டிகள்' கல்லா கட்ட முடியாதே என்று, தனியார் அமைப்புக்கு வழி விடாமலும், அரசு இயந்திரத்தை செயல்பட விடாமலும், சூழ்ச்சி செய்து முட்டுக்கட்டை போட்டு விட்டது.விளைவு, சமீபத்தில் பெய்த மழை நீர், ஏரியில் தங்க முடியாமல் ஊருக்குள் பாய்ந்து, சின்னாபின்னமாக்கி விட்டது. எம் முன்னோர்களும், என் தந்தையும், தாயும் குலாவி மகிழ்ந்த, சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்த்த ஊர் என்று தினம் எண்ணி மகிழ்ந்த என் ஊரின் இன்றைய நிலையை பார்த்து கண்கள் கலங்குகின்றன.
வருங்காலத்திலாவது இது போன்ற துயரங்கள் ஏற்படாமல் இருக்க, அரசு முனைப்புடன் செயல்படுமா? மக்களும், அரசுடன் ஒத்துழைத்து தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லணும் வல்லது அமைச்சு
இந்த திருக்குறள் செய்யுளின் பொருள்: செய்யத்தக்க செயலை ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவான கருத்தை சொல்லுதலும் வல்லவனே அமைச்சன்.எல்லா வளங்களும் பெற்றிருந்தும், தண்ணீரை சேமித்து வைக்க, வகை செய்ய தவறி, கோடை காலத்தில் அண்டை மாநிலத்திடம் கையேந்தி பிச்சை எடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.இதற்கு முடிவு கட்டினால், வருங்கால சந்ததியினர் வாழ்த்துவர். செய்வரா?
சித்திரைச்செல்வி
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ - மெயில்: sel.dharam@gmail.com
என்ன பண்ண போறீங்க, Simply say celebrate பண்ணுங்க, இந்திய சட்டத்துல பெரிய ஓட்டை இருக்குமா, போக்சலே வெளில வர்ணாம். அப்புறம் என்ன........