உதயநிதி பிறந்த நாளை கொண்டாடிய காங்., புள்ளி!
''தொடர் போராட்டங்களை நடத்த முடிவு பண்ணியிருக்காங்க பா...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பெட்ரோல், டீசல் விலைகளை சமீபத்துல மத்திய அரசு குறைச்சதே... இதுக்கு ஏற்ப, 20க்கும் மேற்பட்ட மாநில அரசுகளும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைச்சது பா... ஆனா, தமிழக அரசு மட்டும் விலையை குறைக்காம இருக்குது பா...
''இந்தப் பிரச்னையில, தமிழக அரசை கண்டிச்சு, மாநில பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துனாங்க... மதுரை மாவட்ட பா.ஜ.,வினர் மாட்டு வண்டிகள், குதிரை மேல ஏறி வந்து வித்தியாசமா போராடி மக்களை கவர்ந்தாங்க பா...
''அடுத்த கட்டமா, மாநில அரசு அலுவலகங்கள்ல முதல்வர் ஸ்டாலின் படத்தை வச்சிருக்கிறது போல, பிரதமர் மோடி படத்தையும் வைக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்துல போராட்டம் நடத்த தயாராகிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டியவர், கட்டப்பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காரு வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.
''யாரு ஓய் அது...'' என விசாரித்தார் குப்பண்ணா.
''ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஸ்டேஷன்ல இருக்கிற தனிப்பிரிவு போலீஸ் ஒருத்தர், அந்த ஏரியாவுல நடக்கிற லாட்டரி, கள்ளச்சாராயம், கஞ்சா, மது விற்பனை, திருட்டு மணல் எடுக்கிறது மாதிரியான சட்டவிரோத செயல்களை கண்காணிச்சு, எஸ்.பி.,க்கு தகவல் தரணும் வே...
''ஆனா, அதை விட்டுட்டு கட்டப்பஞ்சாயத்து பண்ணி காசு சேர்த்துட்டு இருக்காரு... மூணு வருஷத்துக்கும் மேலா ஒரே இடத்துல இருக்கிறவர், ரவுடிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் கைப்பாவையாகவே மாறிட்டாரு வே...
''புகார்ல சிக்குனவங்க மேல வழக்கு போடாம இருக்கவும், குண்டர் சட்டத்துல நடவடிக்கை எடுக்காம இருக்கவும் கட்டப்பஞ்சாயத்து பேசி பணம் கறந்துட்டு இருக்காரு... இவரைப் பத்தி டி.ஜி.பி., ஆபீஸ் வரைக்கும் புகார் போயிருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.
''ராஜ்குமார், ஊருக்கு போயிட்டு எப்ப வந்தேள்...'' என நண்பரை வரவேற்ற குப்பண்ணாவே, ''தி.மு.க., நிர்வாகி பிறந்த நாளை, கூட்டணி கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடியிருக்கா ஓய்...'' என்றார்.
''இந்த மாதிரி காமெடி எல்லாம், கண்டிப்பா காங்கிரஸ் கட்சியில தான் நடக்கும்... மேல சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் உதயநிதி, சமீபத்துல தன் பிறந்த நாளை கொண்டாடினாரோல்லியோ... மழை, வெள்ளம் பாதிப்பால, அந்தக் கட்சி நிர்வாகிகள், பெரிய தடபுடல் இல்லாம கொண்டாட்டத்தை முடிச்சுண்டா ஓய்...
''அதே நேரம், தமிழக காங்கிரஸ் பொதுச் செயலர் பாலசந்தர் சார்புல, காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்துல இருக்கறவாளுக்கு அறுசுவை உணவு பரிமாறியிருக்கா... அதோட, கேக் வெட்டியும் உதயநிதி பிறந்த நாளை கொண்டாடியிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''அது சரி... ஆளுங்கட்சி வாரிசு பிரமுகருக்கு ஐஸ் வச்சாதானுங்கோ நாலு காரியம் சாதிக்க முடியும்...'' என, முணுமுணுத்தபடியே அந்தோணிசாமி எழ, அனைவரும் கிளம்பினர்.
ஈரோடு, பவானிசாகர் தனிப்பிரிவு போலீஸ் அந்த ஏரியாவுல கல்லா கட்டுவது மூணுவருஷமா மாறிவரும் SP களுக்கு தெரியாமலா நடக்கும் ??