Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக, தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், 'உள்ளூர் மொழிகளை பயன்படுத்த வேண்டும்' என்ற, தலைமை நீதிபதியின் பேச்சு நம்பிக்கை அளிக்கிறது.
'டவுட்' தனபாலு: சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படாதது, 'டவுட்'டே இல்லாமல் வேதனைக்குரிய விஷயம் தான். தமிழில் பேச, வாதாட, தீர்ப்புகள் கூறப்படத் தான் வேண்டும். பிற மாநில நீதிபதிகளுக்கு உடனடியாக ஆங்கிலத்தில் அல்லது மொழிமாற்றம் செய்யலாம். இந்த சின்ன விஷயத்தில் கூட இன்னும் மாற்றம் வராத நிலையில், தமிழகத்தில் தேனாறும், பாலாறும் எப்போது ஓடப் போகிறது?

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, '500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும்' என அறிவித்துள்ளார். இது, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. இது குறித்து, அ.தி.மு.க.,வின் பன்னீர்செல்வம் அறிக்கை விடுவது வேடிக்கையாக இருக்கிறது. 'அம்மா' உணவகத்தை இருட்டடிப்பு செய்வதற்காக, இத்திட்டம் அறிவிக்கப்படுவதாக சொல்வது அர்த்தமற்றது.
'டவுட்' தனபாலு: தேர்தல் அறிக்கையில் சொல்லிய எல்லாவற்றையும், தி.மு.க., அரசு நிறைவேற்றி விட்டதா... 'அம்மா' உணவகம் விவகாரத்தில், அதன் பெயரை மாற்றாமல் முதல்வர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாலும், அமைச்சர், அமைப்புச் செயலரிடம் அது இல்லையோ என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு வருகிறது!
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: சென்னை ஐ.ஐ.டி.,யில் சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததை அறிந்து மன வருத்தம் அடைந்தேன். தமிழகத்தில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் மத்திய அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம். எனவே, வருங்காலத்தில் ஐ.ஐ.டி.,யில் நடக்கும் அனைத்து விழாக்களிலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
'டவுட்' தனபாலு: தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது தவறு தான் என நாகரிகமாக எடுத்து கூறியுள்ளீர்கள்; நல்லது. அந்த வாழ்த்துப் பாடலை வெறுமனே பாடுவதால், எந்த பயனும் இல்லையே... 'சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்' என்ற வரியின் அர்த்தத்தை, உங்கள் கட்சியில் பலர் மறந்தது போல, சென்னை ஐ.ஐ.டி.,யும் மறந்து விட்டதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அம்மாவோ, ஐயாவோ கைக்காசைப்போட்டு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அவர்கள் பெயரைப் போட்டுக்கொள்ளட்டும் மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு செய்வதில் விளம்பரம் தேடலாம், ‘மக்கள் திட்டம்’ என்றோ, ‘தமிழக அரசுத் திட்டம் என்றோ’ போட்டு, அரசின் சின்னத்துடன் திறக்கட்டும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement