Load Image
dinamalar telegram
Advertisement

கழகங்களுக்கு கோவை மீது 'கண்!'

மழைக்கு குடை பிடித்தபடியே கடைக்கு வந்த நண்பர்களை, இஞ்சி டீ கொடுத்து வரவேற்றார், நாயர்.

''முதல்வர் ஸ்டாலின், ரெண்டு நாள் பயணமா கோவைக்கு போயிட்டு வந்தாரே... ஏதாச்சும் விசேஷம் இருக்கா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

அதற்கு அந்தோணிசாமி, ''முதல்வரை வரவேற்க ஒரு ஓட்டுச்சாவடிக்கு 40 பேர் வீதம், 2,500 ஓட்டுச்சாவடிக்கு ஒரு லட்சம் பேரை திரட்டணுமுன்னு, ஆளுங்கட்சியினர் திட்டம் போட்டுருந்தாங்க...

''ஆனால் எதிர்பார்த்த கூட்டம் வராததால, ஆளுங்கட்சியின் கோவை பொறுப்பாளர்கள் 'அப்செட்' ஆகிட்டாங்களாம்...


இதனால உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாடி, சில நிர்வாகிகளை களையெடுப்பாங்கன்னு, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க...

''அதே நேரம் கோவையில தி.மு.க., வேரூன்ற கூடாதுன்னு, அ.தி.மு.க., தரப்பும் தீவிரமாக வேலை பார்க்க ஆரம்பிச்சுருக்குங்க...

''வார்டு வாரியாக, கட்சியின் பொன் விழா நடத்தி, மக்களுக்கு பொங்கல் பானை கொடுக்குறாங்க...நிகழ்ச்சிக்கு வராதவங்களுக்கு வீடு வீடா போயி, 'டோக்கன்' கொடுக்குறாங்க... ''இந்த முறை, இரு திராவிட கட்சிகளுக்கும் கோவை மீது கண் இருக்குங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''இனி அப்படி தான் நடக்கும் வே...'' என்றபடி அடுத்த தகவலை சொல்ல ஆரம்பித்தார், அண்ணாச்சி.

''ஜாதி இயக்குனர், சர்ச்சை நடிகரின் தம்பியை வைத்து, இன்னொரு படம் எடுக்குறார் வே...' 'மதுரை மாட்டுத்தாவணியில சமீபத்துல சினிமா சூட்டிங் நடந்த போ, ஆளுங்கட்சியைச் சேர்ந்த தொண்டரணி செயலர், 'குழந்தை பிள்ளையார்' தன் ஆதரவாளர்களோடு அங்கே போயிருக்கார் வே...

''எங்க ஏரியாவுல 'சூட்டிங்' நடத்திட்டு, எங்களை 'கவனிக்காம' இருக்கீங்க... 15 லட்சம் ரூபாயை கொடுத்துட்டு படம் எடுங்கன்னு தடாலடியாக கேட்டாராம் வே...


''அதற்கு இயக்குனர் தரப்புல, 'சூட்டிங் நடத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியிடம் அனுமதி வாங்கிட்டோம்... நடிகர் குடும்பத்த பற்றி தெரியுமுல்ல... அவருக்கும் அண்ணனுக்கும் இருக்கும் செல்வாக்கு தெரியுமுல்ல...' என சொல்லியிருக்காவ வே..

.''கோபமான ஆளுங்கட்சி பிரமுகர், 'இப்ப போறேன்... நீங்களே வந்து பணத்தை கொடுப்பீங்க பாருங்க'ன்னு சவால் விட்டுருக்காராம் வே...'' என முடித்தார் அண்ணாச்சி.

''அவன் இவன் படம் மாதிரி இருக்குங்க...'' என கடைசி தகவலுக்கு மாறிய, அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்துல இருக்கிற தளி போலீஸ் எல்லையில, 15ம் தேதி மஞ்சுநாத் என்பவரையும், மாரச்சந்திரத்தில், ரவுடி சுரேஷ் என்பவரையும் கொலை செஞ்சிட்டாங்க...


''நொகனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துல, 'லாக்கரை' உடைச்சு கொள்ளையடிக்க முயற்சி பண்ணியிருக்காங்க...''இது தவிர தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்துல வழிப்பறி, ஆள் கடத்தல், திருட்டு, அடிதடி போன்ற குற்றங்கள் அதிகமா நடக்குதுங்க...

''குற்றங்கள் குறையணுமுன்னு வேண்டிக்கிட்டு, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் சமீபத்துல கிடா வெட்டி பூஜை செஞ்சுருக்காங்க...''பக்கத்துல இருக்குற வனத்துறை விருந்தினர் விடுதியில், 'கமகம' அசைவ விருந்து பரிமாறியிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.


''அந்த கிடாவை, போலீசார் பணம் கொடுத்து வாங்கி இருப்பாங்களா பா...'' என குசும்பாக அன்வர்பாய் கேட்க, நண்பர்கள் சிரித்தபடியே நடையை கட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆடு திருடியவர்களைப் பிடிக்கும்போது நாலு ஆட்டை ‘ஆட்டையப்போட்டு’ வைத்தால் மணக்கும், மணக்கும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement