Load Image
dinamalar telegram
Advertisement

தியாக தீபங்களின் நினைவுச் சின்னம் ரோசாங் லா

உலக வரலாற்றில் நடந்த பத்து முக்கிய போர்களில் இந்திய-சீனப் போரும் ஒன்று.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15 ஆயிரம் அடி உயர பனி மலையான லே லடாக்கின் கிழக்கு பகுதியில் ரோசாங் லா பள்ளத்தாக்கில் எலும்பையும் உருக்கும் குளிரில் இந்திய படை வீரர்கள் போரிட்டு வென்ற வீர வரலாறு அது.

கடைசி குண்டு இருக்கும் வரை மட்டுமல்ல கடைசி வீரன் உயிருடன் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை விட்டுத்தர மாட்டோம் என்று வீரமுழக்கமிட்டு போரிட்டவர்கள் நம் வீரர்கள்.1962 ம் ஆண்டு சுமார் ஒரு மாத காலம் நடந்த அந்தப் போர் பற்றி இன்றயை இளைய தலைமுறை அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும் அதற்கு முன் இந்தப் போர் மூண்ட சூழலை சுருக்கமாக தெரிந்து கொள்வது நல்லது. மங்கோலியா, ரஷ்யாவிற்கு அடுத்து சீனா இந்தியாவுடன் தான் நீண்ட எல்லையை கொண்டுள்ளது. இந்திய சீன எல்லையில் பூடானும் ,நேபாளமும் வருவதால் இந்திய-சீன எல்லை மூன்று துண்டுகளாக உள்ளது. பூடானுக்கும் மியான்மாருக்கும் இடையே உள்ள பகுதி இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசமாகும், இதை சீனா தனது திபெத்தின் தென்பகுதி என்று சொல்லி அவ்வப்போது தனது வாலை நீட்டுவதும் இந்தியப்படைகளால் அந்த வால் திருகி எறிவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது.திபெத்தை தனது நாட்டின் பகுதி என கூறி அதை 1950ல் சீன படைகள் ஆக்கரமித்தது. 1959ல் ஏற்பட்ட திபெத் கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததால் அப்போதைய தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். தலாய்லாமா மற்றும் திபெத்தில் இருந்து வந்தவர்களை இந்தியா ஆதரித்தது சீனாவிற்கு கோபத்தை உண்டாக்கியது.
அது தன் கோபத்தை இந்தியாவின் மீது எல்லை கடந்து வந்து தாக்குதல் நடத்துவதன் மூலம் காட்டியது.இதற்காக பதினைந்தாயிரம் பேர் கொண்ட ராணுவத்தை களமிறக்கியது, மெக்மோகன் கோட்டுக்கு அருகே தாக்குதலை துவங்கியது ,மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றியது. மேற்கு பகுதியில் சுசுல் பள்ளத்தாக்கிலுள்ள ரோசாங் லா கணவாயை கைப்பற்றினர், மேலும் கிழக்கு பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் பிடித்தனர்.
இந்த நிலையில் அன்றைய பிரதமர் நேரு சீனாவின் நெருக்கடிக்கு தீர்வு காண உதவுமாறு கேட்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கு கடிதம் எழுதிக் கொண்டு இருந்தார்,எதிரிகளை எதிர்த்து ஒழித்து துவம்சம் செய்யுங்கள் என்ற உத்திரவு வர மேலிடத்தில் இருந்து தாமதமாகியது தற்காப்பு போரில் ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் பக்கம் உயிர்ச்சேதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
ஒரு வழியாக எதிர்த்து போராட சிக்னல் கிடைத்ததும் வீரம் என்பது என்ன? பதிலடிதருவது இப்படித்தான்? என்பதை நம் வீரர்கள் சீன வீரர்களுக்கு உணர்த்தினர்.வான் வெளித்தாக்குதல் கிடையாது எல்லாமே தரை வழித்தான் தாக்குதல்தான் அதிலும் பனி மூடிய மலையில் நடுநடுங்கும் குளிரில் போரிட்டனர்.
பொதுவாக முன்னேறும் எதிரிப்படையைக் கண்டு தற்காப்புக்காக எந்த நாட்டு படையாக இருந்தாலும் பின்வாங்குவது சகஜம்தான் ஆனால் அங்கேதான் இந்திய வீரர்களின் புத்திசாலித்தனத்தையும் மன வலிமையையும் துணிவையும் பாராட்டவேண்டும்.
ஆங்காங்கே இருந்த இந்திய வீரர்கள் சீனா படைக்கு சமமாக திரண்டனர் வெறுமனே திரளாமல் நீண்ட போருக்கு தயராக தளவாடங்களையும் போர்க்கருவிகளையும் உணவுகளையும் கூடாரங்களுடன் பனி மலையின் உச்சத்தை தொட்டனர்.எல்லாம் சரியாக நடந்ததும் திடுமென ஒரு நாளில் ஆக்ரோசமாக இந்திய வீரர்கள் களத்தில் இறங்கினர் போர்த்தளவாடங்களை இயக்கினர்,சீனா தரப்பில் நிறைய உயிர்ச்சேதம் மற்றும் போர்க்கருவிகள் சேதம் ஏற்பட்டது.இதைச் சீனா சற்றும் எதிர்பார்க்கவில்லை பின் வாங்குவர் என நினைத்து சீண்டிப்பார்த்தவர்கள் சிங்கம் போல இந்தியப் படையினர் சீறி எழுந்து போரிடுவதைப் பார்த்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுவிட்டு விலகினர் ஆனாலும் இந்தியப்படை விடாமல் போரிட்டது அவர்களை அவர்களது எல்லை வரை விரட்டியது.இந்த நிலையில் சீனா போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து போர் முடிவிற்கு வந்தது.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடந்த அந்த போரில் கடும் குளிரால் இறந்த நம் வீரர்களின் எண்ணிக்கையும் கணிசமாகும்.இறந்து போவோம் என்பது தெரிந்தே எல்லை காக்க பனியில் மெழுகாய் தங்களை உருக்கிக் கொண்ட தியாக தீபங்கள் அவர்கள்.
1956-57 காலகட்டத்தில் சீனா பிரச்னைக்குரிய அக்சய் சீன் பகுதி வழியாக ஜின்ஜியாங்கையும் திபெத்தையும் இணைக்கும் சாலையை கட்டியது. இந்த சாலை சீன வரைபடத்தில் 1957ம் ஆண்டு வரும் வரை இந்தியாவிற்கு அப்பகுதியில் சீனா கட்டியிருக்கும் சாலை பற்றி தெரியாது.தெரிந்தாலும் இந்தியா என்ன செய்துவிடப் போகிறது என்ற அகந்தை கொண்டிருந்தது.
லடாக் போருக்கு பின்தான் இந்தியாவின் வலிமையை புரிந்து கொண்டது, போடும் ஒப்பந்தங்களுக்கு பணிந்தது, பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது. இப்படி சீனாவை பணியவைத்த இந்திய-சீனப் போர் பற்றி அதிகம் பேசப்படுவதோ பகிரப்படுவதோ இல்லை.ஜாலியன்வாலா பாக் போல சுதந்திரத்தின் பெருமையை ஆயிரம் மடங்கு வெளிப்படுத்தியதுதான் இந்த இந்திய-சீனா போர் ஆனால் துரதிருஷ்டவசமாக இது இந்த தலைமுறைக்கு சென்று சேரவில்லை.
அந்தக்குறை இந்த வருடம் தீர்க்கப்பட்டு உள்ளது.பல லட்சம் செலவில் லடாக்கில் போர் நினைவுச் சின்னம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. போரில் இறந்தவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.இந்த நினைவகத்தை திறந்து வைத்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் எவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ரேசாங் லா நினைவுச்சின்னம் அடையாளப்படுத்துகிறது " நமது வீரம் மிக்க ஆயுதப் படைகளுக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமல்ல, தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்பதன் அடையாளமே இந்த மறு சீரமைப்பு " என்று கூறினார்.
இந்த நினைவுச்சின்னம் 1963 ஆம் ஆண்டு சுஷுல் சமவெளியில் 15,000 அடி உயரத்தில் கட்டப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட வளாகத்தில் இரட்டை அடுக்கு அருங்காட்சியகம், போர் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை திரையிட ஒரு மினி தியேட்டர், ஒரு பெரிய ஹெலிபேட் மற்றும் பல்வேறு சுற்றுலா வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.நவம்பர் 18, ரெசாங் லா போரின் 59 வது ஆண்டாகும். லடாக் யூனியன் பிரதேசத்தின் சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் உள்ள பகுதிக்கு முன்பு தடையிருந்தது இப்போது சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்,நமது மண்ணின் மாண்பை விளக்கும், வீரர்களின் தியாகத்தை பெருமைப்படுத்தும், வீரத்தின் விளைநிலமான ரோசாங்லா பனி மலைக்கு இந்தியனாகிய நாம் ஒவ்வாருவரும் சென்று வருவோம்.
-எல்.முருகராஜ்

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement