dinamalar telegram
Advertisement

பெயர் மாற்றத்துடன் தொடரும் 'பேக்கேஜ் டெண்டர்!'

Share

பெயர் மாற்றத்துடன் தொடரும் 'பேக்கேஜ் டெண்டர்!'



''ஜாதி, ஊர் பாகுபாடு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''எந்த துறையில இந்த அநியாயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பூர் சிட்டி போலீஸ்ல தான், சமீபகாலமா இந்த கலாசாரம் தலைதுாக்கியிருக்குது... உயர் அதிகாரிகள் துவங்கி இன்ஸ்பெக்டர்கள் பலரும், சொந்த சமுதாயம், சொந்த ஊர்னு பாகுபாடு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க பா...

''டியூட்டி ஒதுக்குறது, தப்பு செய்த போலீசார் மேல நடவடிக்கை எடுக்கிறதுல கூட, சமுதாய பாசத்தை காட்டுறாங்க... சில அதிகாரிகள், தங்களது சமுதாயத்தை அல்லது தங்களது ஊரைச் சேர்ந்தவங்களையே, டிரைவர்களா நியமிச்சிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''இதெல்லாம் நல்லதுக்கு இல்ல...'' என்ற அண்ணாச்சி, ''காசு, பணம், துட்டு, மணின்னு தான் வேலை செய்தாருவே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''கோவை மாவட்டம், வால்பாறையில இருக்கிற கல்வி அதிகாரி ஒருத்தர் வசூல் மன்னனாகவே வலம் வர்றாரு... தன் கண்காணிப்புல இருக்கிற பள்ளிகள்ல தீவிரமா வசூல் வேட்டை
ஆடுதாரு வே...


''ஆய்வுங்கிற பேர்ல, தினமும் ஏதாவது பள்ளிக்கு போய், ஆசிரியர்களிடம் பணம் வாங்கிடுதாரு... தினமும் பணம் இல்லாம வீட்டுக்கு போறது இல்லைன்னு, கங்கணம் கட்டி செயல் படுதாரு வே...

''இவரைப் பத்தி உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் போயும், எந்த நடவடிக்கையும் இல்லை... நாளுக்கு நாள் இவரது ஆட்டம் ஜாஸ்தியாகிட்டே போவுது வே...'' என்றார் அண்ணாச்சி.

''காளிமுத்து, உம்ம தம்பிக்கு விசா கிடைச்சிடுத்தா ஓய்...'' என, நண்பரிடம் குப்பண்ணா கேட்க, அவர் உதட்டை பிதுக்கியபடி சென்றார்.

''தி.மு.க., ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்குறாங்க...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.

''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''தி.மு.க., ஆட்சிக்கு வந்தா, 'பேக்கேஜ் டெண்டர் முறையை ஒழித்து வெளிப்படையான டெண்டர் நடைமுறைப்படுத்தப்படும்'னு தேர்தல் பிரசாரத்துல முழங்குனாங்க...


''சட்டசபை கூட்டத் தொடர்லயும், 'பேக்கேஜ் டெண்டர் முறை ஒழிக்கப்படும்'னு அறிவிச்சாங்க... ஆனா, புதிய மொந்தையில பழைய கள்ளுங்கிற மாதிரி, நெடுஞ்சாலை துறையில பேக்கேஜ் என்ற பெயரை மட்டும் மாற்றி, 'ஒர்க்ஸ்' என்ற புது பெயர்ல, பழையபடியே டெண்டர்களை ஒரே நபருக்கு கிடைக்குற மாதிரி செயல்படுறாங்க...

''இந்த முறையை செயல்படுத்த சொன்னதே 'மாஜி' அதிகாரி ஒருத்தர் தான்... அவரது ஆலோசனையில, அ.தி.மு.க.,வினருக்கு டெண்டர் கிடைக்கிற மாதிரி செயல்படுறாராம்... 'இவரை மாதிரி ஆட்களால தான், அரசுக்கு கெட்ட பெயர்'னு சக அதிகாரிகள் புலம்புறாங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.

''சந்திரசேகர்னு நேத்து ஒருத்தர் உங்களை தேடி வந்தார்...'' என, குப்பண்ணாவிடம் நாயர் வந்து கூற, பெரியவர்கள் பேச்சு திசை திரும்பியது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement