Load Image
dinamalar telegram
Advertisement

ஆதி இசை பறையிசையே

பராம்பரியத்தையும் பழமையையும் தன்னகத்தே கொண்டுள்ள ''பறை'' இசைக் கருவி நமது மூத்த தமிழ் குடிகளின் பொக்கிஷம்,உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்,இதில் இருந்து பிறந்ததுதான் பிற இசைக்கருவிகள் இதுவே தமிழர்களின் ஆதி இசை என முழங்கிவருபவர்தான் பறையிசை ஆய்வாளர் ஜே.கே.ஜெயக்குமார்.
தற்போது சென்னையில் வசிப்பவரான இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையமாகும். கடந்த 26 ஆண்டுகளாக பறை இசைக்கலைஞராக இருக்கிறார்,ஆயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் பறை இசையை தனி இசையாக வழங்கியவர்.இந்த இசையை இசைப்பவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பார்கள் என்ற வாதத்தை உடைப்பதற்காகவே முதுகலையில் பல்வேறு பட்டங்கள் பெற்றவர்,‛பேசு' (people's education for social unity) என்ற அமைப்பின் நிறுவனராக இருந்து ஆர்வமுள்ளவர்களுக்கு பறயைிசையை கற்றுத்தருபவர்,இது பற்றிய நீண்ட ஆராய்ச்சியில் இருப்பவர்.பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து பறை இசை இவரது ரத்தத்தோடு கலந்திருக்கிறது.இன்றைக்கும் இந்த இசையைத் தவிர வேறு எதுவுமே தெரியாமல் வாழும் உறவுகளை கொண்டிருப்பவர்.கன்னி பறை,கொட்டு பறை,சட்டி பறை,பலகை பறை,கண்டிகை பறை, என்று நுாற்றுக்கும் மேலான பறை இசைக்கருவிகள் இருந்துள்ளன.இது பஞ்ச பூதங்களையும் தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற இசைக்கருவி.

ஐந்திணை நிலத்தின் அடையாளமாகவும், அம் மக்களின் இசைக் கருவியாகவும் பறை இசையே இருந்துள்ளது.குறிஞ்சியில், தொண்டகச் சிறுபறை, முல்லையில் ஏறுங்கோட்பறை, மருதத்தில் தண்ணும்மை, நெய்தலில் மீன் கோட்பறை, பாலையில் ஆறெறி பறை என்ற பறையின் பெருமை குறிக்கப்பட்டுள்ளது.போரில் அடைந்த வெற்றியை பறையால் சாற்றியதை ''இசைப் பறையொடு வென்றி நுவல''என்று புறநானூறு கூறுகிறது.
திட்டைப் பறை, தொண்டகச் சிறுபறை, தொண்டகப் பறை, அரிப்பறை, மண்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர் பறை, ஆடுகளப் பறை என சங்க இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில் ''பறை'' குறிப்பிடப்படுகிறது.
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ''அறைபறை யன்னர் கயவர்'' என்றும், ''எம்போல் அறைபறை கண்ணாரகத்து'' என்றும், ''அறைபறை நின்று மோதிட'' என்றும் பறை ஓங்கி ஒலிக்கிறது.
நமது ராஜாக்கள் காலத்தில் அரசரின் அறிவிப்புகளை பறை அடித்து மக்களுக்கு சொல்வது வழக்கமாக இருந்தது. பெருகி வரும் தண்ணீரை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போருக்கு எழுமாறு வீரர்களை அழைக்க, உழவு செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைப்பதற்கு, அறுவடை செய்வதற்கு, விலங்குகளை விரட்டுவதற்கு, நாட்டின் செய்தியினை மக்களுக்கு தெரிவிக்க, இயற்கையை வழிபட,விழாக்கள் நடத்த என அரசர்களை மட்டுமல்ல மக்களின் மனதையும் பறை ஆண்டே வந்திருக்கிறது.பறையின் பல முகங்களில் ஒரு முகம்தான் முரசு அந்த முரசு மூலம் செய்தி அறிவிக்கும் முரசு மண்டபம் இருந்துள்ளதை இப்போது தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது சில இடங்களில் காணலாம்.
மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை பறை இசை கலந்திருக்கிறது ஆனால் காலப்போக்கில் அனைத்தும் மறைந்து போய் இறப்பில் மட்டும் வாசிக்கப்படும் இசைக்கருவியாக பறை அறியப்பட்டது மிகப்பெரிய சோகம்.இப்பறையின் மூலம் வளர்ச்சிப் பெற்ற பிற தாள இசைக் கருவிகளின் வளர்ச்சியில் வேரான பறை இசை வெளியே தெரியாமல் போனது.வயிறு பசித்தவன் மட்டுமே இந்த இசையை வாசித்ததினால் வறுமையைப் பார்த்த மக்களுக்கு இசையின் வளமையை உணரமுடியாமல் போனது.
இப்படி இந்த பறை இசை பற்றி படித்து கேட்டு வாசித்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் புதுமையான முறையில் இந்த பழமையான இசையை ‛பேசு' அமைப்பின் மூலமாக வழங்கி வருகிறேன்.இந்த இசை ஒன்றுதான் நீர்,நிலம்,காற்று,வானம்,பூமி என பஞ்சபூதங்களை உள்ளடக்கிய ஓர் அற்புத வாத்தியம் இதுவாகும்.
எனது மேடையில் இந்த பறை இசை மூன்று மணி நேரத்திற்கும் மேல் இசைக்கப்படுவதை கேட்ட பலர் பறையில் இவ்வளவு ரகங்களா? இவ்வளவு சுவராசியங்களா? என வியந்து போகின்றனர்.‛மார்கழி மக்கள் இசை விழா' நடத்தி அதன் மூலம் பறை இசையை பல ஆயிரம் பேரிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளேன்.திரைத்துறையினரின் உதவியோடு பறை இசை புதிய பரிணாமம் பெற்று வருகிறது.
எனது பறை இசைக்குழு பல வெளிநாடுகளுக்கு போயுள்ளது இப்போது ஒடிடி போன்ற வலைத்தளங்களில் பறை இசைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு புது வெளிச்சம் பாய்ச்சப்படுகிறதுசாதி மதங்களை கடந்து என்னிடம் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் பறை இசையைக் கற்க இப்போது நிறைய பேர் வருகின்றனர்.இசை கற்றவர்கள் திருமணம் உள்ளீட்ட எல்லா விழாக்களிலும் இசைத்து புகழும் பொருளும் பெற்றுவருகின்றனர்இந்த இசையை கற்றுக் கொண்டால் எந்த இசையும் உங்களுக்கு வசமாகும்
பேசுவதை இசைக்கவல்ல தாளக்கருவி பறையே,இந்தக் கருவி ஒன்றைத்தான் இசைப்பவரே தயாரிக்க முடியும். இதனால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒடும் உணர்வுகளோடு பறை இசைக்கப்படும் போது அதன் ஜீவன் நம்மை உற்சாகம் பெறவைக்கும் இசைப்பவரை திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது இசைத்து முடியும் வரை அந்த இடத்தை விட்டு நகர முடியாது.
இனி வருங்காலம் பறை இசைக்காலமே என்பதை என்னால் உறுதியிட்டுச் சொல்லமுடியும் என்று உரமான வார்த்தைகளால் சொன்ன ஜெயக்குமாருட்ன தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்:95008 56140.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Karthik - chennai,இந்தியா

    என்னுடைய இளைய வயதில் எங்கள் ஊரில் எல்லா நிகழ்வுகளுக்கும் பறை இசையே ஒலித்தது வாசிக்கும் முறையில் வித்தியாசம் இருக்கும் கோவில்களில் , கல்யாணத்தில் , மற்றும் எல்லா சடங்குகளிலும் ஒலிப்பது பறை இசையே

  • sankar - Nellai,இந்தியா

    எல்லாமே இசைதானப்பா - அதில் என்ன ஆதி இசை பாதி இசை -

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement