Load Image
dinamalar telegram
Advertisement

தி.மு.க., கூட்டத்துல காவிக்கொடி: போராட்டம் நடத்தப்போறாரு மாஜி!

பேட்டரி ஸ்கூட்டருடன் வீட்டிற்கு முன் வந்து நின்ற மித்ராவிடம், ''சி.எம்., வந்திருக்கிறதால, பயங்கர கெடுபிடியா இருக்கப்போகுதுடி... கண்டிப்பா ரவுண்ட்ஸ் போய்த்தான் ஆகணுமா?'' என்று கேட்டுக்கொண்டே வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் சித்ரா. தி.மு.க.,கொடிகட்டி ஏராளமான வாகனங்கள், கடந்து சென்றன.

சித்ரா தொடர்ந்தாள்...''எல்லா ரோட்டுலயும் செம்ம டிராபிக் ஆயிருக்கு... போத்தனுார் வழியா போன வண்டிகள், கிரவுண்ட்டுக்குப் போறதுக்குள்ள மீட்டிங்கே முடிஞ்சிருச்சாம். இப்போ யார் யாரு எவ்வளவு பேரைக் கூப்பிட்டு வந்தாங்கன்னு லிஸ்ட் கேட்ருக்காராம். ஒரு தெருவுல ஒரு நிர்வாகி, யார் யாரை வண்டியில கூப்பிட்டு வந்தார்னு பேரு, போன் நம்பரோட லிஸ்ட் கொடுக்கணுமாம்!''

''செம...!''

''இதுல ரேண்டமா அவுங்க செக் பண்ணுவாங்களாம். யாரும் கூப்பிடலை, பணம் கொடுக்கலைன்னு தெரிஞ்சா சம்பந்தப்பட்ட நிர்வாகிக்கு டின்னுதான்...நேத்து கூட்டம் காட்ட முடியாதவுங்க தவிக்கிறாங்க!'' என்றாள் மித்ரா.

பா.ஜ.,கொடி கட்டிய கார் கடந்து சென்றதைப் பார்த்த சித்ரா கேட்டாள்...

''மித்து......சி.எம்.,கூட மேடையில வானதி சீனிவாசன் இருக்கிற போட்டோ பார்த்தியா... வ.உ.சி., மைதானத்துல நடந்த நிகழ்ச்சியில, மத்த 9 எம்.எல்.ஏ.,க்களுக்கும் முன் வரிசையில பேரை ஒட்டி சீட் போட்டு வச்சிருக்காங்க. ஆனா அவங்க கலந்துக்கல. தொகுதி எம்.எல்.ஏ.,ங்கிறதால வானதிக்கு மட்டும் மேடையில சீட் போட்ருந்தாங்க. அவுங்க வந்ததும் மேடைக்கு வரச்சொல்லி, அவுங்க பேசவும் டைம் ஒதுக்கச் சொன்னதே சி.எம்.,தான்!''

''பரவாயில்லை...அவுங்களும் 'மாறுபட்ட சிந்தனை இருந்தாலும் மக்களுக்கு ஒண்ணா சேர்ந்து நல்லது பண்ணலாம்'னு ரொம்ப டீசன்டா பேசுனாங்க...

தி.மு.க.,அமைச்சர்களுக்கு மத்தியில பி.ஜே.பி., எம், எல்.ஏ., கருப்பு சிவப்பு கொடிகளுக்கு மத்தியில காவிக்கொடி பிடிச்சிட்டுப் போன தொண்டர்களைப் பார்த்தப்போ, என்னடா இது தமிழ்நாட்டுல அரசியல் புயல் திசை மாறுதோன்னு தோணுச்சு!'' என்று சிரித்தாள் மித்ரா.

''நேத்து நம்ம எதிர்பார்த்தது மாதிரியே, செம்மொழிப் பூங்காவுக்கு 200 கோடி ரூபா நிதி ஒதுக்குறதா அறிவிச்சிட்டார் முதல்வர். ஆனா இந்த மெட்ரோ ரயிலைப் பத்தி யாருமே பேசவே மாட்டேங்கிறாங்களே...அது அவ்ளோதானா?'' என்று கேட்டாள் சித்ரா.

''எனக்கும் அப்பிடித்தான் தோணுது...கமிஷனுக்காக கடனை உடனை வாங்கி, எல்லா ரோட்டுலயும் அவசர அவசரமா பாலத்தைக் கட்டி, மெட்ரோ ரயிலுக்கு சமாதியே கட்டிட்டாங்க...இப்போ ஒரு ரோடு போடுறதுக்குக் கூட பணமில்லாம, ஊரெல்லாம் ரோடுகள் கந்தலாக் கிடக்கு!'' என்றாள் மித்ரா.

''மித்து! நீ சொன்னதைத்தான் வேலுமணியும் வெள்ளலுார்ல மீட்டிங்ல பேசிருக்காரு. கார்ப்பரேஷன்ல 300 வேலைகளை நிறுத்தி வச்சிருக்காங்க. சீக்கிரமே அந்த வேலைகளைத் தொடங்கலைன்னா, மக்களைத் திரட்டி பெரிய போராட்டம் நடத்துவோம்னு சொல்லி இருக்காரு. கோவையே குலுங்குற மாதிரி சீக்கிரமே ஒரு போராட்டம் நடக்கும்னு அ.தி.மு.க.,காரங்க பேசிக்கிறாங்க!'' என்றாள் சித்ரா.


கலெக்டர் அலுவலகத்தைக் கடக்கும்போது, மித்ரா அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...''அக்கா! போன வாரம் சர்வதேச ஆண்கள் தினத்துக்கு, நம்ம கலெக்டராபீஸ்ல வேலை பாக்குற லேடீஸ் ஸ்டாப் எல்லாம் சேர்ந்து, ஆண் ஊழியர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, கேக் வெட்டிக் கொண்டாடுனாங்களாம். கலெக்டர் கேட்டுட்டு, 'அடடா நம்மளை யாரும் கூப்பிடலையே...கேக் போச்சே'ன்னு சிரிச்சாராம்!''

''கலெக்டர்ன்னு சொன்னதும்தான் ஞாபகம் வந்துச்சு...நம்ம ஊருல பில்டிங் இண்டஸ்ட்ரி எவ்ளோ பிஸியாப் போயிட்டு இருக்குன்னு தெரியும். ஆனா, கலெக்டர் சேர்மனா இருக்குற எல்.பி.ஏ.,வுல மாசாமாசம் நடத்த வேண்டிய கூட்டத்தையே, சரியா நடத்தாம இழுத்தடிக்கிறாங்களாம்!''

''அது சரி...எல்.பி.ஏ., ஆபீசரை மாத்திட்டாங்க தெரியுமா...?''

''தெரியுமே...ஆனா நீ சொல்றது மாதிரி அவரை மாத்தலை...மெடிக்கல் லீவுல போகச்சொல்லிருக்கிறதா ஒரு தகவல். பர்சனல் ரீசனா அவர் லீவு போட்டதாச் சொன்னாலும், கட்டாயமா அவருக்கு லீவு கொடுத்து அனுப்பிட்டதாத்தான் பேச்சு ஓடுது...!''

''அவர் வந்த பிறகுதான் பைல் எல்லாம் வேகமா மூவ் ஆகுதுன்னு புரமோட்டர்களே கொண்டாடிட்டு இருந்தாங்க...இடையில என்ன ஆச்சு?''

''கோயம்புத்துார் லாட்டரி அதிபர் சம்பந்தப்பட்ட கோப்புகளை உடனே அனுப்பாம 'கொரிஸ்' போட்டு நிறுத்தி வச்சிருந்தாராம். உடனே அவுங்க ஆளும்கட்சியில மேலிடத்துல சொல்லித்தான் அவரை மாத்திட்டதா சொல்றாங்க. இப்போ போட்ருக்குற 'இன்சார்ஜ்' ஆபீசர், ஏற்கனவே இங்க இருந்தவருதான். ஆனா போன கவர்மென்ட்ல ஓ.பி.எஸ்.,கூட ரொம்பவே நெருக்கமா இருந்தவராம்!''

''ஓ...நீங்க சொல்றது யாருன்னு தெரியும்க்கா...இவர்தான் 10 பர்சன்டேஜ் ஓ.எஸ்.ஆர்., இடத்துக்குப் பதிலா பணத்தை வாங்கிக்கலாம்னு, அப்போ ஐடியா கொடுத்தவர்னு சொல்லுவாங்களே!''

''அவரேதான்...ஆனா அவரையும் நிரந்தரமாப் போட மாட்டாங்க போலிருக்கு...நம்ம ஊருல இந்த போஸ்ட்டிங்குக்கு வர்றதுக்கு கோடிக்கணக்குல அள்ளிக் கொடுக்குறதுக்கு பல பேரு தயாரா இருக்காங்களாம். யாருக்கு 'லக்' அடிக்கப்போகுதுன்னு தெரியலை!'' என்றாள் சித்ரா.

ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த காக்கிச்சட்டைகளைப் பார்த்ததும் மித்ரா கேட்டாள்...''ஏன்க்கா...போலீஸ் கமிஷனரை ஏன் இவ்ளோ சீக்கிரமா துாக்கிட்டாங்க...?''

''நேர்மையான அதிகாரிதான்...ஆனா பெருசா ஆக்டிவா எதுவும் பண்ணலை. நிர்வாகரீதியா அவரோட தேவையின் பொருட்டுதான், இந்த டிரான்ஸ்பர்னு உளவுத்துறையில சொல்றாங்க. இங்க இருந்து அவரை விஜிலென்ஸ்க்கு மாத்துனதுல, ஏதோ விஷயம் இருக்கு போலிருக்கு. கோவையில இதுவரைக்கும் அவர் ஏதோ ரகசிய அசைன்மென்ட் பார்த்ததாவும் அதோட தொடர்ச்சிதான் இந்த மாற்றம்னும் பேச்சிருக்கு!''

''இதுல அரசியல் இருக்கான்னு தெரியலை...ஆனா நம்ம ஊர்ல இப்பதான் அரசியல் கொஞ்சம் சூடு பிடிக்குது. போன வருஷம் நம்ம மாவட்டத்துல சில யூனியன்கள்ல கவுன்சிலர் எண்ணிக்கை கம்மியா இருந்த இடத்துலயும் ஏடிஎம்கேகாரங்க ஏதோ 'ஜிக்ஜாக்' வேலை பண்ணி ஜெயிச்சாங்க. இப்போ ஆட்சி மாறுன பிறகு, அந்தப் பதவிகளை கைப்பத்த ஆளும்கட்சியில திட்டம் போடுறாங்க!''''வாய்ப்பிருக்கா மித்து?''

''சூலுார் யூனியன்ல நாலு பேரு கட்சி மாறுனாங்கள்ல...அதே மாதிரி ஒவ்வொரு யூனியன்லயும் ஆள்களை துாக்கப் போறாங்க. அன்னுார், மதுக்கரை, சுல்தான்பேட்டையில் கட்சி மாறுறதுக்கு கவுன்சிலர்கள் பல பேரு தயாரா இருக்குறதா தகவல்!''

''கவர்மென்ட் மாறுனப்போ, கொஞ்சம் அடக்கி வாசிச்ச வடவள்ளிக்காரரு, வடக்கு தொகுதிக்காரரு எல்லாம் இப்போ வேகமா தொகுதிக்குள்ள வலம் வர்றாங்களே...என்ன விசேஷம்?''

''ஆமாக்கா...நானும் பார்த்தேன்...வடவள்ளிக்காரரு தனக்கு எந்த சிக்கலும் வராதபடிக்கு, ஆளும்கட்சியில எங்கேயோ யாரையோ பார்த்து 'கரெக்ட்' பண்ணீட்டாராம். அதனால ஏற்கனவே பேசுனபடி, தன்னோட மனைவியை வார்டுல நிறுத்தி, மேயருக்குப் போட்டி போட வைக்கப் போறதா தகவல். அதுக்குதான் எம்.எல்.ஏ.,வைக் கூப்பிட்டு வந்து ஏழு மாசம் கழிச்சு தொகுதிக்குள்ள நன்றி சொல்ல வைக்கிறாராம்!''

''அந்த எம்.எல்.ஏ.,வைப் பத்திப் பேசுனதும் டாஸ்மாக் ஞாபகம் வந்துருச்சு. அவர்தான் டாஸ்மாக் வசூல் ராஜாவாச்சே...பார்கள்ல வசூல் பண்ணி மாவட்டத்துல இருந்து கீழ வரைக்கும் கரெக்டா பங்கு பிரிச்சுக் கொடுத்துட்டு இருந்தாரு. இப்போ ஆளும்கட்சியில ஆளுக்கு ஆளு 'பார்'கள்ல போயி, காசு கேட்டு டார்ச்சர் பண்றாங்களாம். பார்களை எடுத்தவுங்க, ஒண்ணும் சொல்ல முடியாம மென்னு முழுங்குறாங்க!''சித்ரா சொல்லும்போதே, மழை துாறல் துவங்கியது; பேக்கரி ஓரமாக வண்டியை ஓரம் கட்டினாள் மித்ரா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement