தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தெரியாத அரசு, நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, ஜெயலலிதா அரசால் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா கண்டு வருகிறது. அம்மா உணவகம், அம்மா சிமென்ட், அம்மா குடிநீர், அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் திட்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
'டவுட்' தனபாலு: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும்; எனவே, திட்டங்களுக்கு அம்மா பெயரை வைக்கக் கூடாது என, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் யோசிக்க மறந்து விட்டீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. அம்மா என வைத்ததற்கு பதில், முதல்வர் என பொத்தாம் பொதுவாக வைத்திருந்தால், மாற்றி இருக்க மாட்டார்களே!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற போவதாக பிரதமர் அறிவித்து உள்ளதை வரவேற்கிறேன். அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வேளாண் விரோத சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும், மக்கள் நீதி மய்ய தலைவர்கள் டில்லி சென்று போராடியதும், பெருமை கொள்ளத்தக்க வரலாற்று தருணங்கள்.
'டவுட்' தனபாலு: தமிழக ஆளும் கூட்டணி கட்சிகளைப் போலவே, உங்கள் கட்சியும் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதை வரவேற்றுள்ளது. இதில் எந்த வினோதமும், சிறப்பம்சமும் இல்லை. இப்படி, பிற கட்சிகளையே எல்லா விதங்களிலும் பின்பற்றினால், தமிழகத்தில் உங்கள் கட்சியை எப்படித் தான் வளர்க்கப் போகிறீர்களோ. 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: நாடு முழுதும், 109 வழித்தடங்களில், 151 ரயில்களை தனியார் மயமாக்க, மத்திய அரசு தீர்மானித்தது. ஆனால், தனியார் மயமாக்கப்பட இருந்த ரயில்களில், 95 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை ஏலம் எடுக்க, எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இது, ரயில்களை நம்பியிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இந்த முயற்சி தோல்வி அடைந்திருந்தாலும், அது தற்காலிகமானதே; முழுமையாக விலகவில்லை.
'டவுட்' தனபாலு: விமான நிறுவனமான, 'ஏர் இந்தியா'வை ஏலம் எடுப்பதற்கு போட்டி இருந்தது. ரயில்களை ஏலம் எடுக்க அப்படியில்லை. அதற்கு காரணம், ரயில்களில் பொதுவாகவே கட்டணம் குறைவு. அதனால் தான் ஏலம் போகவில்லையோ என்ற, 'டவுட்' வருகிறது!
வெற்றி பெற்ற குழந்தைக்கு ஊர் முழுதும் பெற்றவர்கள், தோற்றவர் வீட்டிலேயே அநாதை வேளாண் சட்டம் வாபஸ் என்றதும் எல்லாரும் அட்டெண்டன்ஸ் கொடுக்க வருகிறார்கள்