''கடந்த வாரம், 'அதிகாரிகள் ஆய்வு நடத்துனதை ஏனுங்க மறைக்கோணும்...' என ஒரு தகவல் சொன்னேன்ல... ஞாபகம் இருக்காங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''ம்... நல்ல ஞாபகம் இருக்கறது... மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை செயலர் சுனில் குமார், இணை செயலர் சேத்தி ஆகியோர் ஆய்வு நடத்திய விஷயம் தானே ஓய்...''என்றார் குப்பண்ணா.
''ஆமாங்க... அவங்க இருவரும், கோவை மாவட்டம் ஓடந்துறை ஊராட்சியில ஆய்வு செஞ்சதையும், கலெக்டர் அலுவலகத்துல ஆய்வுக்கூட்டம் நடத்துனதையும் அதிகாரிகள் மறைச்சுட்டாங்கன்னு சொன்னேனுங்க...
''இதனால அதிகாரிகள் அவசர, அவசரமாக பஞ்சாயத்து ராஜ் செயலர் ஆய்வு நடத்தினதை பத்தி அறிக்கை வெளியிட்டு இருக்காங்க...''அதாவது, நவம்பர் 7ல் நடந்த ஆய்வை பத்தி அதிகாரிகள், 16ல் அறிக்கை வெளியிட்டு இருக்காங்க... 'ஆறின கஞ்சி பழங்கஞ்சி'ன்னு யாராவது, அந்த அதிகாரிகளுக்கு சொன்னால் நல்லாயிருக்குமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''செம வருமானம் பாக்குறாவ வே...'' என்ற அண்ணாச்சியே அடுத்த தகவலை சொல்ல ஆரம்பித்தார்...
''நீலகிரி மாவட்டம் பந்தலுார், கூடலுார் பகுதியில நடக்கும் கட்டுமான பணிக்கு தேவையான, 'எம் - சாண்ட்' என்ற பாறை துகள்கள், கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில இருந்து வருது வே...
''டிப்பர் லாரிகள்ல நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையுடன் எம் - சாண்ட் வருது... அதை கண்காணிக்க, எல்லை பகுதியான நாடுகாணியில வட்டார போக்குவரத்து துறை மற்றும் போலீசார் ஆய்வு பணியில ஈடுபடுறாவ...
''கூடுதல் எடையுடன் எம் - சாண்ட் எடுத்து வரும் லாரிகளை ஆய்வு செய்யாம இருக்க, தலா 2-,000 ரூபாய் வீதம், 'கவனிப்பு' கொடுக்குறவாவ... தினமும் 100 டிப்பர் லாரிக வருது... நீரே கணக்கு போட்டு பாத்துக்கும்...
''இந்த வருமானத்தால, சில அதிகாரிக கோடீஸ்வரர்களாக மாறிட்டாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சேலம் போலீசார் பீதியில இருக்காங்களாம் பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''போலீசாரே பீதியில இருக்காளா... விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னையில் விபசார கும்பலுக்கு துணை போனதோடு, வசூல் வேட்டை நடத்திய குற்றச்சாட்டுல, சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் சமீபத்துல சிக்கினார் பா...
''இதையடுத்து, தமிழகம் முழுதும் விபசாரத்துக்கு துணை போன போலீசாரின் பட்டியலை தயாரிச்சு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவு போட்டுருக்காங்களாம் பா...
''அந்த பட்டியல்ல, சேலம் மாநகரம் தான் முதலிடத்துல இருக்காம்... ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை விபசாரத்தை குறி வைத்து சேலத்துல நடத்திய, 'ரெய்டுல' 145 பேர் கைதாகி இருக்காங்க பா...''அவங்களிடம் நடத்துன விசாரணையில, போலீசாருக்கு மாதந்தோறும் தங்க காசு, பணம் கொடுத்தது தெரிய வந்துருக்காம் பா...
''இதனால உயர் போலீஸ் அதிகாரிகள், சேலத்துல விபசாரத்துக்கு துணை போன போலீசார் குறித்து விசாரணை நடத்துவதற்கான உத்தரவை, சேலம் டி.எஸ்.பி.,க்கு அனுப்பாமல், கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு டி.எஸ்.பி.,க்கு அனுப்பியிருக்காங்க பா...
''இது, சேலம் மாநகர போலீசார் மத்தியில பீதியை கிளப்பியிருக்குது பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
மருதமலை படத்தில் வடிவேலு அர்ஜுன் கிட்ட சொல்வாரு. " ஏற்கனவே போலீஸ்காரர்களை மாமான்னு ஜனங்க கூப்பிட்டாங்க" என்று.