Load Image
dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க.,வுக்கு அசைக்க முடியாத கோட்டை: ஆளும்கட்சிக்கு நடக்கவில்லை வசூல் வேட்டை!

நீண்ட நாட்களுக்குப் பின், சித்ராவும், மித்ராவும் டூ வீலரில் நகர்வலம் கிளம்பினர். வேளாண் பல்கலைக்குப் போக வேண்டுமென்று சித்ரா சொன்னதால், தடாகம் ரோட்டில் வண்டியை ஓட்டிக்கொண்டே பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா...''அக்கா! நம்ம ஊருக்கு அடையாளமே அக்ரி யுனிவர்சிட்டிதான்.

இங்கதான் ஏதோ விவசாயம் கொஞ்சம் உயிரோட இருக்கு...ஆனா இங்க 40 வருஷமா இருந்த விதைச்சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை அலுவலகத்தை அவசியமே இல்லாம சென்னைக்கு மாத்திருக்காங்க. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டது இதுக்குதான் போல''''இங்க இருந்து யாருமே ஒரு பெட்டிஷனும் தரலை...அப்புறம் எதுக்கு மாத்துனாங்கன்னே தெரியலை. எதிர்க்கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.,இருந்தும் ஒருத்தரும் இதைப் பத்தி வாயே திறக்கலை''

''அவுங்களுக்கெல்லாம் அரசியல் பண்றதுக்கே நேரம் சரியா இருக்கு...நம்ம ஊர்ல பிரைவேட் ஸ்கூல் பொண்ணு தற்கொலை பண்ணுன விவகாரத்துல, எல்லாருமாச் சேர்ந்து, ஸ்கூல்களுக்கும், ஸ்டூடண்ட்ஸ்க்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்கு முயற்சி பண்ணாம, 'ஹிந்து ஸ்கூல், கிறிஸ்டின் டீச்சர்'னு தேவையில்லாத விஷயங்களைத்தான் பேசிட்டு இருக்காங்க''''நான் அந்த வாத்தியாரைப் பத்தி விசாரிச்சேன் மித்து...அவர் பி.எட்.,கூட முடிக்கலை. படிச்ச படிப்புக்கும் வகுப்பு எடுக்கலை...அவரோட ஒய்பும் அங்கதான் வேலை பாக்குறாங்களாம். அவுங்களும் கம்ப்யூட்டர் படிச்சிட்டு இங்கிலீஷ் எடுக்குறாங்களாம். ரெண்டு பேரும் கேரளாவாம். அந்த பிரின்ஸிபால் மேடம் வட மாநிலமாம்...அவரோட கணவர் ஜாக்சன் கேரளாவாம். அங்கயிருந்து வந்த ரெக்கமண்டேஷன்லதான், இவுங்க ரெண்டு பேருக்கும் வேலை கொடுத்திருக்கிறது மாதிரித் தெரியுது'' என்றாள் சித்ரா.

''கோயம்புத்துார்ல இருக்குற பெரும்பாலான பிரைவேட் ஸ்கூல்கள்ல, இப்பிடித்தான் கிராஸ் மேஜர்கள்ல டீச்சர்களை நியமிச்சிருக்காங்க. லட்சக்கணக்குல பீஸ் வாங்குனாலும், டீச்சர்களுக்கு 15 ஆயிரத்துக்குள்ளதான் சம்பளம் கொடுக்குறாங்க. அப்பிடின்னா அந்தத் தரத்துலதான ஆள் கிடைப்பாங்க'' என்று கொதித்தாள் மித்ரா.

தொடர்ந்தாள் சித்ரா...''பிரைவேட் ஸ்கூல்களைப் பத்திச் சொல்றீங்க...ஆனா கவர்மென்ட் ஸ்கூல்கள், காலேஜ்கள்லயும் இது நடக்காமலா இருக்கு...நம்ம ஊரு கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல ஒரு புரபசர் பல பொண்ணுங்கள்ட்ட இப்பிடித்தான் அத்துமீறியிருக்காரு. விவகாரம் வெளிய தெரிஞ்சதும், அதை அப்பிடியே அமுக்கிட்டு, அவரை மேட்டுப்பாளையம் காலேஜ்க்கு மாத்திருக்காங்க''''அடக்கொடுமையே...அப்புறம்?''

''அங்க முக்கியமான பொறுப்புல அவரைப் போட்டதால, அங்க டீச்சர்ஸ், ஸ்டூடண்ட்ஸ்ன்னு எல்லார்ட்டயும் இதே வேலையச் செஞ்சிட்டு இருக்காராம்...எப்போ அது பெருசா வெடிக்கும்னு தெரியலை''

''போலீஸ் ஒழுங்கா விசாரிக்கிறாங்களா...தற்கொலை பண்ணுன பொண்ணு லெட்டர்ல சொன்ன இன்னும் ரெண்டு பேரை, ஏன் அரெஸ்ட் பண்ணலையாம்?''

''மத்த ரெண்டு பேர் சம்பந்தப்பட்டது'ஒர்த்' இல்லாத விஷயம்கிறாங்க. முதல்ல போலீசும் அசால்ட்டாதான் டீல் பண்ணிருக்காங்க. சிஎம் லெவலுக்குப் போன பிறகுதான், பிரின்ஸிபாலை பெங்களூர்ல அரெஸ்ட் பண்ணிருக்காங்க''

''எஜூகேஷன் டிபார்ட்மென்ட் பத்தி நல்ல தகவலே இல்லையா மித்து?''''அப்பிடிச் சொல்ல முடியாதுக்கா...நம்ம ஊர்ல ஸ்கூல் எஜூகேஷன் டிபார்ட்மென்ட்ல இருக்குற லேடி ஆபீசர் பத்தி பல நல்ல தகவல்கள் கேள்விப்பட்டேன். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல, அவுங்க ஆபீஸ் வண்டிகளை பயன்படுத்துறதே இல்லையாம். டிரைவரையும் கரெக்ட் டயத்துக்கு அனுப்பிட்டு, வீட்டுக்கு பஸ்சுல அல்லது ஆட்டோவுலதான் திரும்புறாங்களாம்''

''சபாஷ்...கேக்கவே சந்தோஷமா இருக்கு மித்து''''ஆமாக்கா...அதே மாதிரி எந்த ஸ்கூலுக்கு அவுங்க இன்ஸ்பெக்சன் போறாங்கன்னு யாருக்குமே தெரியுறது இல்லையாம். காலையில 9 மணிக்குதான், சம்பந்தப்பட்ட ஸ்கூல் எச்.எம்.,களுக்குத் தகவல் சொல்றாங்களாம். டீச்சர்களைக் கூப்பிட்டு, கிளாஸ் எடுக்க வச்சுப் பாக்குறாங்களாம். எல்லா கவர்மென்ட் ஸ்கூலுமே ஒரு சிஸ்டத்துக்குள்ள வந்துட்டு இருக்குறது மாதிரித் தெரியுது''

இளநீர் குடிப்பதற்காக வண்டியை ரோட்டோரம் நிறுத்தினாள் மித்ரா. பாரதியார் பல்கலை பஸ் கடந்து சென்றதைப் பார்த்ததும் சித்ரா ஆரம்பித்தாள்...

''பாரதியார் யுனிவர்சிட்டியில சிண்டிகேட் எலக்சன் வேலைக சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சு மித்து... தேர்தலுக்கு முன்னாடியே குளறுபடி கும்மியடிக்குதாம். நவம்பர் 8 தான், நாமினேஷனுக்கு கடைசி நாளாம். தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு, ஓட்டுப்போடுறதுக்குத் தகுதியான செனட் உறுப்பினர்களுக்கான பட்டியல்ல புதுசா பேரு சேர்க்கக்கூடாதுங்கிறது பல்கலை விதி''

''அதுதான் எல்லோருக்கும் தெரியுமே''

''ஆனா, தேர்தல் அறிவிச்சபிறகுதான், எல்லா கல்லுாரிகளுக்கும் செனட் உறுப்பினர் பட்டியலை அனுப்பச் சொல்லி உத்தரவு போட்ருக்காங்க. தேவையான ஆளுகளைச் சேர்க்கிறதுக்குதான் இந்த வேலை பண்றாங்க. நவம்பர் எட்டுக்கு அப்புறம் நிறைய்யப் பேரைச் சேர்த்திருக்காங்க. வேணும்னே இப்படிப் பண்ணுனா, யாராவது கேஸ் போடுவாங்க. தேர்தலை நிறுத்திடலாம்கிறது யுனிவர்சிட்டி தலையோட பிளானாம்''

''தலைன்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சுக்கா...நம்ம ஊருக்கு சி.எம்.,வர்றாரு...வார்டு வார்டா மக்கள் சபை கூட்டம் நடத்துனதுக்கு, நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததால தி.மு.க.,தெம்பாயிருக்கு. விண்ணப்பங்களைச் சரி பார்த்து, சீக்கிரமே நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கப்போறாங்களாம். நம்ம ஊரு தொழில்துறை அழைப்புல சி.எம்.,நவம்பர் 23ம் தேதி வர்றப்போ, இதுக்கு தனியா விழா நடத்தப்போறாங்க''

''எங்க நடத்துறாங்களாம்?''

''தொழில்துறை மாநாடு கொடிசியாவுல நடக்கப்போகுது...இவுங்க நிகழ்ச்சியை வ.உ.சி.,சியில நடத்த ஏற்பாடு பண்றாங்க. செம்மொழி மாநாடு முடிஞ்சு, இங்கதான் ஜெயலலிதா முதல்முறையா பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க. அப்போதுல இருந்து பத்து வருஷமா அவுங்க ஆட்சிதான். கோவை இப்பவும் அவுங்க கோட்டைதான். இப்போ தி.மு.க.,வும் அங்கயே நிகழ்ச்சி நடத்தி கோவையை திசை திருப்பணும்னு, பிளான் பண்ணிருக்காங்களாம்''''அது சரி... சி.எம்., வர்றதை வச்சு, வழக்கமா ஒரு வசூல் நடத்துவாங்களே?''என்று கேட்டாள் சித்ரா.

''ஓ...ஜோரா நடக்குது.. பொறுப்பு மினிஸ்டருக்குக் கீழதான், சரக்குக்கடைகள் வர்றதால, கரூர்ல இருந்து ஆளை இறக்கி வசூல் பண்றாங்களாம். ஆனா போன அ.தி.மு.க., ஆட்சியில, டாஸ்மாக் கலெக்சன் பார்த்த எம்.எல்.ஏ.,வுக்கு வலது கரமா இருந்த ஒருத்தர், சமீபத்துல தி.மு.க.,வுல ஐக்கியமானாரே. அவரு சாய்பாபா காலனியில ஒரு மண்டபத்துல பார் காரங்களை அவசரமாக் கூட்டி, கரூர்க்காரங்களுக்கு காசு கொடுத்தா நாம இங்க தொழில் பண்ண முடியாதுன்னு தடுத்துட்டாராம்''என்றாள் மித்ரா.

''இப்பவும் நம்ம ஊர்ல அ.தி.மு.க.,காரங்க சொன்னால்தான் வேலை நடக்குது...துடியலுார், பெ.நா.பாளையம், வீரபாண்டி ஏரியாவுல பட்டா மாறுதல் முகாம் நடத்துனப்போ, அங்க வந்த ரெவின்யூ ஆபீசர்களுக்கு அ.தி.மு.க.,காரங்க தடபுடலா விருந்து வச்சிருக்காங்க.அதுக்காக, அவுங்க கொடுத்த மனுக்களுக்கு எல்லாம் உடனே உத்தரவு போட்டுட்டாங்களாம். தி.மு.க.,காரங்க கொடுத்ததை அப்பிடியே கிடப்புல போட்டுட்டாங்களாம். உங்களை என்ன செய்யப்போறோம்னு பாருங்கன்னு உடன்பிறப்புகள் உறுமிட்டு இருக்காங்க'' என்றாள் சித்ரா.

இருவரும் இளநீர் குடித்து விட்டு வண்டியை எடுத்துக் கிளம்பினார்கள். வேகமாகக் கடந்து சென்ற போலீஸ் வேனைப் பார்த்ததும் மித்ரா தொடர்ந்தாள்...''அக்கா! நம்ம ஊருல பெண் போலீசாருக்கு ஆண் ஆபீசர்களால கூட பெருசா பிரச்னையில்லையாம். லேடி ஆபீசர்கள் ரொம்பவே மோசமாப் பேசுறாங்களாம்''

''ஆமா மித்து...எனக்குமே நிறைய தகவல் வருது...நம்ம மாவட்டத்துல, குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவுல ஏட்டா இருக்குற ஒரு லேடி போலீஸ், தன்னோட மகனை யு.பி.எஸ்.சி., எக்ஸாம்க்கு கேரளாவுக்குக் கூப்பிட்டுப் போகணும்னு லீவு கேட்ருக்காங்க. அதுக்கு அந்த லேடி ஆபீசர், லீவு கொடுத்திருக்கலாம் அல்லது இல்லைன்னு சொல்லிருக்கலாம்...ஆனா...!''''ஆனா...?''

''அந்தம்மா, 'ஏ.ஆர்., வேலை பாக்குற உன் புருஷன் கூட்டிட்டுப் போக மாட்டானா'ன்னு கேட்டு, ரொம்பவே மோசமாப் பேசிருக்காங்க. கடுப்பான அந்த லேடி போலீஸ், எஸ்.பி., கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறதா கொந்தளிச்சிட்டு இருக்காங்களாம். அந்த லேடி ஆபீசர் எல்லாரையும் இப்பிடியே பேசுறதால, எல்லாருமே கடும் அதிருப்தியில இருக்காங்களாம்!''

''இதே மாதிரித்தான் மதுக்கரையில யூனியன் ஆபீஸ்ல இருக்குற ஒரு லேடி அதிகாரிய பத்தியும் ஏகப்பட்ட புகார் வருது...தேர்தலுக்கு முன்னால, ஸ்டாலின் இங்க பிரசாரத்துக்கு வந்தப்போ, கையில பொருளைக் காமிச்சு, ஒவ்வொரு பொருளுக்கும் என்ன விலை, எவ்வளவுக்கு வாங்கிருக்காங்கன்னு வேலுமணி மேல ஊழல் புகார் சொன்னாரே...ஞாபகமிருக்கா?''

''ஓ...நல்லா ஞாபகமிருக்கே....மலுமிச்சம்பட்டியிலயும், சீராப்பாளையத்துலயும் வாங்குன பொருட்கள்தானே...1500 ரூபாய் 1/2 எச்.பி., மோட்டாருக்கு 29 ஆயிரம் ரூபா பில் போட்ருந்தாங்களே''

''அதேதான்...இவுங்க ஆட்சிக்கு வந்து இத்தனை மாசம் ஆகியும், அந்த ஊழல் சம்பந்தமான ஊராட்சி செயலர்கள் யார் மேலயும் நடவடிக்கை எடுக்கலையாம். கொடுமை என்னன்னா, அந்தப் பொருட்களை இப்பவும் அதே விலைக்குதான் வாங்கிட்டு இருக்காங்களாம். அத்தனைக்கும் இந்த லேடி ஆபீசர்தான் காரணமாம். காசை வாங்கிட்டு என்கொயரி இல்லாம அமுக்கீட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.

''மித்து...சமீபத்துல நம்ம ஊரு போலீஸ் ஆபீசரும், ஒரு முக்கியமான நீதிபதியும் சந்திச்சுப் பேசிருக்காங்க. கமல் சொன்னது மாதிரி, கோவையில போதைப் பழக்கம் அதிகமா இருக்கு. சின்னப்பசங்க பகிரங்கமா பயன்படுத்துறதை நானே பாக்குறேன். இதெல்லாம் தடுக்குறதுக்கு ஏதாவது பண்ணுங்க'ன்னு ரொம்பவே வருத்தப்பட்டாராம்''

''அப்புறம்...''

''அப்புறம்தான் போலீஸ் கொஞ்சம் சீரியசா இறங்கி விசாரிச்சதுல, நம்ம ஊருக்கு வர்ற காய்கறி மூட்டைகளோட சேர்த்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்திட்டு வர்றதா போலீசுக்குத் தகவல் கிடைச்சிருக்காம். அதனால, மார்க்கெட் ஏரியாக்களை தீவிரமா கண்காணிச்சிட்டு இருக்காங்களாம்'' என்று சித்ரா சொல்லி முடிக்கும்போதே, வண்டி பல்கலைக்குள் நுழைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement