Load Image
dinamalar telegram
Advertisement

கொழுந்து விட்டெரியுது, 'மேயர்' ஆசை! கட்சி பிரமுகர்களின் 'கனவு' பலிக்குமா?

திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில், குருப்பெயர்ச்சி வழிபாடு முடிந்து, சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில், திரும்பிக்கொண்டிருந்தனர்.''ஈஸ்வரன் கோவில் ஆபீஸ்ல, வேல பார்க்குறவங்க, ஆபீசுக்குள்ள ஓரமா செருப்பை கழட்டி வச்சா பரவால்ல... பக்தர்கள், சூடம் ஏத்துற எடத்துக்கு பக்கத்துலயே கழட்டி வைக்கிறதால பக்தர்கள் சங்கடப்படறாங்க... பக்தர்களின் எண்ணத்துக்கு ஏத்த மாதிரி, ஊழியர்கள் இனி நடந்துக்குவாங்கன்னு நம்புறேன்'' என்ற சித்ரா கூறியதும், மித்ராவும் ஆமோதித்தாள்.

''சேவூர்ல இருக்கற கோவில்ல, குருப்பெயர்ச்சி விழா நடத்தறது தொடர்பா, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளோட அனுமதியில்லாம, கோவில் குருக்களே, 'நோட்டீஸ்' அச்சடிச்சு, ஊர் முழுக்க வினியோகம் பண்ணிட்டாராம். இதை தெரிஞ்சு, கோவில் செயல் அலுவலர் 'அப்செட்' ஆகிட்டாராம். கோவிலுக்குள்ளயே சிலரு 'அதிகார' சண்டையும் போட்டுக்கிட்டாங்களாம். இதை ஒருத்தரு மொபைல் போன்ல, 'வீடியோ' எடுத்து, செயல்அலுவலருக்கு அனுப்பியிருக்காரு. சிலரோட 'அரசியலை' சமாளிக்க முடியாம, அந்த ஆபீசரும் குழம்பிப்போய் இருக்காராம்.மொபைல் போன் 'கேலரி'லஅந்த நோட்டீசும், 'வீடியோ'வும் இருக்கு அப்புறம் காட்றேன்கா' என்று ஆர்வம் பொங்க சொன்னாள் மித்ரா.

போலி கையெழுத்துமழைத்துளி விழ துவங்கியது.''பல இடங்கள்ல நில விவகாரம், வில்லங்கமா மாறிட்டு இருக்கு. பல்லடம் தாசில்தார் ஆபீஸ்ல, புரோக்கருங்க ஆதிக்கம் ரொம்ப அதிகமாம். அவங்க நீட்ற காகிதத்துல பெரிய ஆபீசர் கையெழுத்து போடலைன்னா, அந்த ஆபீசர் மாதிரியே கையெழுத்து போட்டு, 'சர்டிபிகேட்' தயார் பண்ணிடறாங்களாம். கலெக்டருக்கு புகார் போனதுக்கு அப்புறம் தான், புரோக்கர்களுக்கு 'செக்' வைச்சிருக்காங்க.

''இதே மாதிரி, காங்கயம் பக்கமும் கலெக்டரோட கவனம் திரும்பினா பரவாயில்லை. அங்க இருக்கிற, ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல ஒரு அதிகாரி, புரோக்கருங்க மூலமா வசூல் அள்றாராம். புதுசா வாங்கற வண்டியை பதிவு பண்ண வர்றவங்க, தகுதிச்சான்று வாங்க வர்றவங்க, லைசென்ஸ் வாங்க வர்றவங்கன்னு எல்லார்கிட்ட இருந்தும் ஆயிரக்கணக்குல கமிஷன் வாங்கிடறாராம். அங்க இருக்கிற என் சொந்தக்காரர் 'மூர்த்தி' தான் சொன்னார்.

''வடக்கு தொகுதி வி.ஐ.பி.,யும், அவரது சகோதரரும் நெருப்பெரிச்சல்ல, வேற ஒருத்தருக்கு சொந்தமானதா சொல்லப்படற நிலத்தை சொந்தம் கொண்டாடிட்டு இருந்தாங்களாம். இந்த பிரச்னை தொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி, கோர்ட்ல போய் பிரச்னையை முடிச்சுக்கோங்கன்னு சொல்லியிருக்காரு. அந்த நில உரிமையாளரு, 'இ.பி., கனெக்ஷன்' வாங்கிட்டாராம். இதனால 'ஷாக்' ஆன, வி.ஐ.பி., சகோதரர்கள், மின்வாரிய அதிகாரிகள கூப்பிட்டு, 'ஆட்சேபனைல இருக்கிற நிலத்துக்கு எப்படி இ.பி., கனெக்ஷன் கொடுப்பீங்க'ன்னு கேட்க, 'அந்த நிலம் தொடர்பா உங்க பேர்ல இருக்கிற ஆவணங்களை எடுத்துட்டு வாங்க'ன்னு, ஆபீசர் சொல்லிட்டாராம்,'' என்று சித்ரா அடுத்தடுத்து சரவெடியாய் தகவல்களைப் பகிர்ந்தாள்.

'கெத்து' காட்டுவார்களா?மழை வெளுத்து வாங்க, ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுக்க, கடை பக்கமாக, ஸ்கூட்டரை ஒதுக்கி, சித்ராவும், மித்ராவும் நின்றனர்.''இந்த மாதிரி வெள்ளப்பெருக்கு ஏற்படறதுக்கு, நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புங்கதான் காரணம்ன்னு தெரிய வந்திருக்கு. அதனால, ஒவ்வொரு இடத்துல இருக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், ரோட்டோரமா இருக்கிற ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திட்டு வர்றாங்க. இதுல, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், அவிநாசி - சேவூர் ரோடுன்னு நிறைய ஆக்கிரமிப்பு இருக்காம். அடுத்த வாரம், ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' தர்றதா, அதிகாரிங்க முடிவு பண்ணியிருக்காங்க.

''ஆனா அந்த ஊர்லதான். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவா அரசியல் கட்சிக்காரங்க, சில அமைப்பைச் சேர்ந்தவங்க இருக்காங்க... அவங்களை மீறி, ஆக்கிரமிப்பை எடுப்பாங்களான்னு தெரியல. அப்படி எடுத்தாங்கன்னா, அதிகாரிங்களுக்கு உண்மையிலேயே 'கெத்து' இருக்குன்னு அர்த்தம்'' என்று, 'கெத்து'டன் பேசினாள் மித்ரா.

'கொல குத்தமாய்யா'''பல்லடத்துல இருக்கிற ஒரு அரசு பள்ளிக்கூட கட்டடம், ரொம்ப மோசமா இருக்குன்னு ஒருத்தரு 'போட்டோ' எடுத்து கலெக்டருக்கு அனுப்ப, 'உடனே கவனிங்க'ன்னு, மாவட்ட கல்வி அதிகாரிகிட்ட சொல்லியிருக்காரு கலெக்டரு. டென்ஷனான கல்வி அதிகாரி, அந்த ஸ்கூல்ெஹச்.எம்.,ஐ கூப்பிட்டு, 'எதுக்கு அனுமதியில்லாம பள்ளிக்கூடத்தை 'போட்டோ' எடுக்க விட்டீங்கன்னு, 'டோஸ்' விட, தலைமையாசிரியரு, புகார் பண்ணுனவரை கூப்பிட்டு, 'எதுக்காக 'போட்டோ'வெல்லாம் எடுத்தீங்க. உங்களால எனக்கு பிரச்னை வருதுன்னு, கோவிச்சுக்கிட்டாங்களாம்.'நான் என்ன, கொல குத்தமாய்யா பண்ணிட்டேன். பள்ளிக்கூட கட்டடத்தை பராமரிக்கணும்னு சொன்னது ஒரு தப்பா…' என, நொந்துகொண்டாராம் அந்த புகார்தாரர்'' என்று சுவாரசியமாக விளக்கினாள் மித்ரா.

''நல்லதுக்கு காலம் இல்ல. பல்லடத்துல இருக்கற அண்ணா நகர்ல எங்க சொந்தக்காரரு ஒருத்தர பாக்க போக வேண்டியிருக்கு'' என்றாள் சித்ரா, ஞாபகம் வந்தவளாய்.

'கல்லா' கட்ட முடியல...''டாலர் சிட்டிக்கு 'பெரிய' கனவோடு வந்த போலீஸ்ல இருக்கிற சில அதிகாரிங்க, கனவு கண்ட அளவுக்கு 'கல்லா' கட்ட முடியலைன்னு, ஊரை விட்டு கிளம்ப முடிவு பண்ணிட்டாங்களாம். ரெண்டு பெரிய அதிகாரிகளும், தலைநகருக்கே போயிடலாம்ன்னு, காய் நகர்த்திட்டு இருக்காங்களாம்.''சிட்டி டிராபிக் போலீஸ்காரங்க கிட்ட, ஒரு ஸ்டேஷன் அதிகாரி குறை கேட்டிருக்காரு. அதுல ஒரு போலீஸ்காரரு, தன்னோட கஷ்டத்தையெல்லாம் சொன்னது மட்டுமில்லாம, மாசாமாசம் நீங்க வசூல் பண்ற தொகையில, எங்களுக்கும் கொஞ்சம் பங்கு தரலாமேன்னு கேட்டிருக்காரு. இதைக்கேட்ட ஸ்டேஷன் அதிகாரி, வாயடைச்சு போயிட்டாராம்'' என்ற மித்ராவிடம், கலகலப்பு.

ஓட்டு அள்ள திட்டம்மழை தணிய, மீண்டும் ஸ்கூட்டர் பயணிக்க துவங்கியது.''ஜெயிக்கிற இடமா பார்த்து நிக்க போறாங்களாம்''என, அரசியல் மேட்டருக்கு தாவினாள் மித்ரா. ''தெற்கு தொகுதியில, 40 ஏ.டி., காலனி இருக்கு. போன சட்டசபை தேர்தல்ல, காலனி ஓட்டு கை நழுவி போனதால தான், தோற்க வேண்டியதாகிடுச்சுன்னு அ.தி.மு.க.,காரங்க கணக்கு போட்டு வைச்சிருக்காங்க. இந்த முறை, எப்படியாச்சும் அவங்க ஓட்டுகளை அள்ளிடணும்ன்னு, நிர்வாகிகளுக்கு 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காங்களாம்.

''அதனாலதான் கட்சியோட பொன் விழாங்கற பேர்ல, காலனி மக்களுக்கு, சேர், டேபிள்ன்னு நல உதவிகளை அள்ளி கொடுத்திருக்காங்க. தேர்தல் சமயத்துல அண்டா, குண்டான்னு, பார்வைக்கு பெரிசா தெரியற பொருட்களை கொடுத்தாவது, ஓட்டுகளை அள்ளிடணும்ன்னு, திட்டம் போட்டு வச்சிருக்காங்க.

''சட்டசபை தேர்தல்ல கோட்டை விட்டாலும், மாநகராட்சி தேர்தல்லயாவது, 'சைரன்' வச்ச கார்ல போகணும்னு 'குணமான' 'மாஜி' வி.ஐ.பி., கங்கணம் கட்டி வேல பாக்குறாராரு... மேயர் ஆகணும்ங்கற ஆசை யாரை விட்டது' என அரசியல் கணக்கை துல்லியமாய் சொன்னாள் சித்ரா.

''கலெக்டர் ஆபீஸ்ல நடக்கிற எந்தவொரு கூட்டத்துக்கும், நம்ம ஊரு எம்.பி.,யை கூப்பிடறது இல்லைன்னு, சி.எம்., காதுக்கு, தகவல் போனதால 'எந்த நிகழ்ச்சியா இருந்தாலும்,எம்.பி.,யை கூப்பிடணும்னு, மாவட்ட அமைச்சருக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்காம், மேலிடம். இதனால, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க குஷியாகிட்டாங்க. வர்ற தேர்தல்ல, மேயர் 'சீட்' வாங்கியே ஆகணும்னு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்காரங்க சொல்லிட்டு இருக்காங்களாம்... மேயர் ஆசை தி.மு.க., கூட்டணில எல்லா கட்சிகளுக்கும் இருக்கும்போல. யாரோட கனவு பலிக்கும்னு பாக்கத்தானே போறோம்'' என, கட்சி ரகசியங்களை 'உடைத்தாள்' மித்ரா.

''ஒவ்வொரு தாலுகாவுல இருக்கிற கிராமங்களுக்கும் கலெக்டரு அப்பப்போ 'விசிட்' போறாரு. பல இடங்கள்ல, நுாறு நாள் வேலையில, ஆட்கள் குறைவா இருக்கிறதை பார்த்து, நிறைய பேரை திட்டத்துக்குள்ள கொண்டு வாங்கன்னு சொல்லியிருக்காரு. ஆனா, சம்பளே இல்லாம நாங்க எப்படி வேல பாக்குறது; தீபாவளி பண்டிகை சமயத்துல கூட எங்களுக்கு வரவேண்டிய சம்பளம் வரலைன்னு, தொழிலாளர்கள் சொல்ல, கூடுதல் சலுகைவாங்கித்தர்றதா சொல்லி, பி.டி.ஓ.,க்களே களமிறங்கி, நுாறு நாள் திட்டத்துக்கு ஆள் சேர்த்துட்டு இருக்காங்களாம்'' என்று சித்ரா புதிய தகவலை சொன்னாள்.

சித்ராவின் வீடு வந்தது. 'சரி வரட்டுமாக்கா' என்று பரபரத்த மித்ராவிடம், 'ஸ்ட்ராங்கா ஒருகப் காபி குடிச்சுட்டு போ' என அழைத்தாள் சித்ரா. சித்ராவும், மித்ராவும் காபியை ருசிக்க தயாராயினர்.

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement