கடவுள் மீது நம்பிக்கை கொண்ட பிராமணர் அல்லாத ஜாதியை சார்ந்த ஹிந்து நான். கடவுள் நம்பிக்கை இருப்பதால், 'கேப்பையில் நெய் ஒழுகுகிறது' என்பதை நம்பும் மூடநம்பிக்கை உள்ளவனும் அல்ல.
அதே நேரத்தில், பகுத்தறிவு என்ற பெயரில், ஊரை அடித்து தன் வீட்டு உலையில் போடும் பகுத்தறிவாளனும் அல்ல.ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்து மதக் கடவுள்களையும், 3,000 ஆண்டுகளுக்கு மேலாக புத்த மதக்கடவுள்களையும், 2,000 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்துவ மதக் கடவுள்களையும், 1,400 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாம் மார்க்க கடவுள்களையும், தொன்று தொட்டு வணங்கி வரும், 700 கோடி பேருக்கு தோன்றாத பகுத்தறிவு- நாத்திக ஞானயோதயம், 18-ம் நுாற்றாண்டில் தோன்றிய அந்த தமிழக மனிதருக்கு மட்டும்தோன்றியது ஆச்சர்யம் தான்.
அவரை பின்பற்றி சில கும்பல் பிழைப்புக்கு வழி தேடி, தமிழக மக்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல், தமிழக முன்னேற்றத்தின் கல்வி, மருத்துவம், தொழில், பொருளாதார வளர்ச்சி அத்தனையிலும் குறுக்கீடு செய்து குழப்பம் விளைவித்து வருகிறது.'கடவுள் இருக்கிறார் அது உன் கண்ணுக்கு தெரிகிறதா; காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்கு தெரிகிறதா?' என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்பட பாடலில் சொல்லியுள்ளார்.
நாத்திக கும்பல்
காற்றை கண்களால் காண முடியாது. உடலால்- உள்ளத்தால் உணர்ச்சியோடு உணர முடியும். அதுபோல, கடவுளை கண்களால் காண முடியாவிட்டாலும், உள்ளத்தால் உள்ளன்போடு உணர்ந்து, நாம் நலம் பெற்றிடலாம்.அம்மிக்கல் கொத்துபவர், சிலை செதுக்கும் சிற்பி ஆக முடியாது. தாடி வைத்தவரெல்லாம் சாக்ரடீசோ, காரல் மார்க்சோ ஆக முடியாது. கடவுள் மறுப்பு கொள்கை கடைபிடிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்காக கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் எல்லாருமே, சமூக நீதி காத்திடும் பகுத்தறிவாளர்கள் என்ற மாய பிம்பத்தை, ஒரு நாத்திக கும்பல் உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, ஹிந்து கடவுளையும், பிராமணர்களையும் கேவலமாக விமர்சித்து, நாட்டு மக்கள் மனதில் தங்கள் விலாசத்தை பதிவு செய்து, தங்கள் வயிற்று பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறது.சூரியனை மையமாக வைத்து ஒன்பது கிரகங்கள், பல கோடி ஆண்டுகளாக ஒரு நொடி கூட தாமதமாகவோ, ஒரு நொடி கூட விரைவாகவோ சுற்றி வருகிறது. பூமியில் பருவங்களை உருவாக்கி, பூமியிலிருக்கும் ஜீவராசிகளுக்கு காற்று, நீர், இயற்கை வளங்கள் வாயிலாக வாழ்வை தருவது இயற்கை.அந்த இயற்கை இறைவன் படைப்பு தான். பூமி ஒரு நொடி சுற்றுவது நின்று போனால், பூமியிலுள்ள அத்தனையும் அண்ட வெளியில் துாக்கி எறியப்படும் அபாயத்திலிருந்து நம்மை காப்பது கடவுள் தான்.
மனித விஞ்ஞானத்தால் பூமி முழுவதற்கும் மழையை வாரி வழங்க முடியுமா; பெருங்கடல்களை உருவாக்க முடியுமா?தெய்வ நம்பிக்கை என்பது மனிதருக்கு ஓர் வலிமையான கவசம் போன்றது. இறை நம்பிக்கை, இயன்ற அளவு தொல்லை துயரங்களிலிருந்து நம்மை காத்திடும் என்ற எண்ணமே, மன அழுத்தத்தை குறைத்து, மன வேதனையிலிருந்து காத்திடும்.
மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவுகளிலிருந்து கிடைக்காத தெளிவான நிம்மதி, ஆண்டவன் சந்நிதியில் நிச்சயம் நமக்கு கிடைக்கும். வலிக்கும் மனசுக்கு தீர்வு தான் ஆண்டவன் கோவில். சக மனிதர்களிடம் சொல்லி தீராத மன பாரத்தை நாம் இறக்கி வைப்பதற்காக,
இறைத்தலங்களை நோக்கி பயணிக்கிறோம்.ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு குடும்பத்தாரோடு, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முழு மனதோடு தங்கத்தேர் இழுத்தார். முதல்வரின் மனைவி உள்ளன்போடு பல கோவில்களில் விசேஷ பூஜைகள் செய்து வந்திருக்கிறார்.
தற்போது, ம.தி.மு.க., தலைமை கழக செயலராக நியமிக்கப்பட்டுள்ள, தீவிர பகுத்தறிவாளியான வைகோவின் மகன் துரை வைகோ, 'நான் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவன்' என்று வெளிப்படையாக கூறி உள்ளார்.பகுத்தறிவு பாசறையில் உள்ளோர், பாதை மாறி, பிராமணரை ஏன்
துவேஷிக்க வேண்டும்? தமிழக வளர்ச்சிக்கு எந்த வகையில் பிராமணர் இடையூராக, இடைஞ்சலாக இருந்து, சட்டம்- - ஒழுங்கு பாதிப்புக்கு காரணமாக நடந்து கொள்கின்றனரா?தங்கள் சுய லாபத்திற்காக, தேவை இல்லாத போராட்டங்கள், சாலை மறியல் போன்றவற்றை நடத்தி பொது மக்களுக்கு இன்னல்கள் தருபவர்கள் பிராமணரா?பிரிட்டீஷ் ஏகாத்தியபத்திய ஆங்கில அரசுக்கு, மறைமுகமாக ஆதரவாக, 'ஜால்ரா' தட்டியவர்களின் கூடாரம் தான் நீதிக்கட்சி. இந்த நீதிக்கட்சி வழித்தோன்றல் தான் இந்த பகுத்தறிவாளர்கள்.
மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே உலகில் அவதரித்த உத்தம புருஷர்கள் போல் பகல் வேஷம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.வீட்டில் புதையல் கிடைக்கும் என்ற மோசடி பூசாரியின் பேச்சை கேட்டு, பெற்ற பிள்ளையை பலி கொடுப்பதும், வீட்டிலுள்ள நகைகளை வைத்து பூஜை செய்து நகைகளை பறிகொடுப்பதும் இன்றும் நடக்கிறது.
சாஸ்திர சம்பிரதாயம்
பகுத்தறிவாளர்கள் நிறைந்தநம் நாட்டில் இந்நிலை இன்னும் மாறவில்லையே. இதற்கு காரணம், பகுத்தறிவாளர்களின் பேச்சு, தமிழகத்தில் எடுபடாதது தானா...ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஸ்ரீராமானுஜர் என்ற ஹிந்து மத இறைத் தோன்றல், ஹரிஜனங்களை கோவிலுக்குள் சென்று வழிபட பெரு முயற்சி எடுத்து, எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து வெற்றி கொடி நாட்டிய சமுதாய சீர்திருத்தவாதி.பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே ராஜாராம் மோகன்ராய் என்ற மாமனிதர், கணவரை இழந்த விதவைகள் தீக்குழியில் விழுந்து உயிர் விடும் கொடுமையான, 'சதி' என்ற சாஸ்திர சம்பிரதாயத்தை மாற்றி அமைத்தார்.
சமுதாயத்தில் விதவைகள் மறுமணம் புரிந்து சீரோடும், சிறப்போடும் வாழ வழி வகுத்த, சுயநலம் ஏதுமின்றி தொண்டாற்றிய உண்மையான பகுத்தறிவு சமூக நீதியாளர் அவர். தமிழகத்தில் நடைபெறும் ஜாதி கலவரங்களுக்கு, பிராமணரா காரணம்... தண்ணீர் கிணறு, சுடுகாடு, கோயில் திருவிழாக்கள் இவைகளில் குதர்க்கம் செய்து கலவரங்களை துாண்டுபவர்கள் எந்த ஜாதியினர்? தாழ்த்தப்பட்டவர்களுக்கான பாப்பாபட்டி, கீரிபட்டி பஞ்சாயத்து பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இனத்தவர் அமர முடியாமல் தடுத்து, தகராறு செய்பவர்கள் பிராமணரா?
அப்படியே பதவியில் அமர்ந்தாலும், கொலு பொம்மை போல நிர்வாகம் எதுவும் செய்ய விடாமல், வேற்று ஜாதிக்காரர், 'பினாமி'யாக நிர்வாகம் செய்வது பிராமணரா? தலித் சமுதாயத்தின் நலத்திற்காக அவதாரம் எடுத்ததை போல் நடித்து கொண்டிருக்கும், தலித் தலைவர்கள் இந்த விஷயத்தை வீரியமாக ஏன்
மக்கள் மத்தியிலும், அரசிடம் எடுத்து கொண்டு செல்வதில்லை? தமிழகத்தின் பெரிய, நடுத்தர, சிறிய கோயில்களிலும், பல்லாயிரக்கணக்கான முச்சந்தி விநாயகர் கோவில்களிலும் அர்ச்சனை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்திலும், பக்தர்கள் செலுத்தும் சிறு காணிக்கைகளிலும், தங்கள் வாழ்வாதாரத்தை
ஓட்டி வருகின்றனர் ஒரு பகுதி பிராமணர்.
மற்றொரு பகுதியினரோ, கல்வித் தகுதியால் யாருடைய பின் பலமுமின்றி, நல்ல பதவிகளில் பணியாற்றி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று யாருக்கும் பிரச்னை தராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.மூடப்பழக்கங்களை ஒழிக்கும் போர்வையில், குறிப்பாக ஹிந்து கடவுளையும், பிராமணரையும்
குறி வைப்பது ஏன்? ஜாதி மாறியுள்ள காதலர்களை, கூலிப்படை வைத்து ஆணவக் கொலை செய்வது பிராமணரா?பகுத்தறிவு என பிரசாரம் செய்து, கூட்டத்தை சேர்த்து, அறக்கட்டளை அமைத்து, கோடிகளை குவித்து, அசையா சொத்துக்களை ஒரு பத்து பேர் ஆண்டு அனுபவிப்பது தான், பகுத்தறிவு நாத்திக சமூக நீதியா?
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும், விளிம்பு நிலையிலுள்ள மக்களை பட்டியல் இனத்தில் அமர வைத்து கொண்டு, அடுத்த வேலை சோற்றுக்கு அவர்களை அல்லாட வைப்பது தான் சமூக நீதி பகுத்தறிவா? ஒரு கிராம் தங்கம் கூட இல்லாத நிலையில் வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு, கல்வியறிவு இன்றி இருக்கும் இருளர், குறவர் போன்ற சமுதாயத்தினர் தமிழர்கள் தானே... அவர்கள்
முன்னேற்றத்திற்கு பகுத்தறிவாளர்கள் இது வரை என்ன செய்துள்ளனர்?
இந்தியாவிலேயே கடவுள் மறுப்பு கொள்கை உள்ள நாத்திக பகுத்தறிவாளர்களை, தமிழகத்தை தவிர வேறு எங்கும் காண முடியாது. கிறிஸ்துவ மதத்திலோ, புத்த மதத்திலோ, சீக்கிய மதத்திலோ, இஸ்லாம் மார்கத்திலோ கடவுள் மறுப்பாளர்களை காண முடியாது!முண்டாசு கவிஞன் பாரதி, சுதந்திர உணர்வையும், தமிழ் மொழியின் பெருமையையும், -தமிழ் நாட்டின் அருமைகளையும் கவிதை வரிகளில் உயிர் ஜீவனோடு நீர்வீழ்ச்சியாய் கொட்டித் தீர்த்தார். அவருக்கு, காங்கிரஸ் தகுதியான மரியாதை கொடுக்கவில்லை. அவர் மறைவுக்கு பிறகு உருவான திராவிட கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.
காரணம் அவன் ஓர் ஏழை பிராமணர்.
வெட்கக்கேடு
தமிழக காங்கிரசார் பாரதி இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளாதது வெட்கக்கேடு. வெறும் 18 பேர் மட்டும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக தகவல் கூறுகிறது. ஒரு ரவுடி, கேடிக்குகூட நுாற்றுக்கணக்கில் கூடி மக்கள் கவனத்தை ஈர்க்கின்றனர்.பாரதி ஒரு ஏழை பிராமணன் என்ற கேடு கெட்ட எண்ணத்தால் தான், 'நீராடும் கடலுடுத்த...' என்ற, மனோன்மணியத்தில் வரும் பேராசிரியர்
சுந்தரம் பிள்ளையின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக, பகுத்தறிவு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
பிற கட்சிகளும் எதிர்க்க துணிவில்லாமல் மவுனம் காத்தது கேவலம்.விண்ணுயர வள்ளுவருக்கு சிலை எழுப்பியவர்களுக்கு, 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலக' என்ற, திருக்குறளின் முதல் பாடலை புரிந்து கொள்ளாமல்,
கடவுள் மறுப்பு கொள்கையை வெறுமனே பேசி திரிவது ஏன்?பாயில் படுத்து நோயில் விழுந்தால், பகுத்தறிவு -நாத்திகம் எல்லாமே பறந்து போய்விடும் என்பது வரலாறு கற்பித்த பாடம். எனவே, இனிமேலும் நாத்திகம் பேசாமல், நாட்டில் அமைதி நிலவவும், வளர்ச்சி ஏற்படவும் இந்த, 'பகுத்தறிவாளர்கள்' தங்கள் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்! மா.மனோகரன் ,சமூக ஆர்வலர்
தொடர்புக்கு: இ-மெயில்: mankalimanoharan @gmail.com
சரியான சம்பட்டி அடி. ஒரு தகவல மேற்கோள் காட்ட தவறிவிட்டீர்கள். சுப்ரமண்ய சுவாமி என்ற பஜக மூத்த தலைவர், ராஜ்யசபா எம்பி.. அவரை பார்த்தாலே திராவிட அரசியல் வியாதிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். அவருடைய ஒரு மருமகன் இஸ்லாமியர், ஆனால் இவரோ பிராமணர். இங்கு இருக்கும் பகுத்தறிவு வியாதிகளில் ஒருவர் தன் மகனோ, மகளோ ஒரு சிறுபான்மை வகுப்பிலிருந்தோ, பட்டியல் இனத்திலிருந்தோ திருமணம் செய்து கொள்ள அனுமதித்திருப்பார்களா.. வாய் சவடால் வியாதிகள்