Load Image
dinamalar telegram
Advertisement

ஹரேகலா ஹாஜப்பா

மழைச் செய்திகளில் சில நல்ல செய்திகளுக்கான முக்கியத்துவம் காணாமல் போய்விட்டது.
அதில் ஓன்றுதான் தெருக்களில் ஆரஞ்சு பழம் விற்கும் ஹரேகலா ஹாஜப்பா என்பவர் பத்மஸ்ரீ விருது பெற்றது.

கடந்த வாரம் டில்லியில் நடந்த பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் ஏத்திக்கட்டிய வேட்டி சாதாரண சட்டையுடன் செருப்பணியாத கால்களுடன் ஒருவர் மேடைக்கு வந்து ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.அவர் கையில் இருந்த மருத்துவ கட்டைப் பார்த்துவிட்டு, பார்வையாளர் வரிசையில் இருந்த பிரதமர் மோடி அவரை அருகில் அழைத்து விசாரித்தார்.
இது எல்லாம் அவருக்கு கனவு போல இருந்தாலும் நனவாகவே நடந்தது.
யார் இந்த ஹரேகலா ஹாஜப்பா
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் உள்ள சிறிய கிராமம்தான் ஹரேகலா.இங்குள்ள ஏழை முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவரான இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆரம்பகல்வியைக்கூட தொடரமுடியாமல் தெருக்களிலும், மங்களூரு பஸ் நிலையத்திலும் ஆரஞ்சு பழங்களை ஒடி ஒடி விற்பனை செய்யும் சிறு வியாபாரியாக மாறினார்.ஒரு நாள் இவரிடம் பழம் வாங்க விரும்பிய வெளிநாட்டுப் பயணி, ஆங்கிலத்தில் பழத்தின் விலை கேட்க, ஹாஜப்பா மொழி தெரியாமல் விழிபிதுங்கினார்
அன்று ஒரு முடிவு எடுத்தார் தன்னைப் போல தன் கிராமத்து குழந்தைகள் யாரும் படிக்காமல் இப்படி சிரமப்படக்கூடாது அதற்கு ஒரே வழி பள்ளிக்கூடம் கட்டி அதில் ஏழைக்குழந்தைகளை எந்தவிதமான கட்டணமும் இன்றி படிக்கவைக்க வேண்டும் என்பதுதான்.
தனது கிராமத்தில் பள்ளி வருவதற்கு என்ன செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டார் அதற்கு முதலில் நிலம் வேண்டும் என்று சொன்னார்கள்.இதற்காக அன்று முதல் கூடுதலாக ஒடி ஒடி வியாபாரம் செய்து நுாறில் இருந்து நுாற்றைம்பது ரூபாய் வரை ஒவ்வொரு நாளும் சேமிக்க ஆரம்பித்தார்.சேமித்த பணத்தில் கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்
ஹாஜப்பா உனக்கு கல்யாணமாகி மணைவி மூன்று பிள்ளைகள் உள்ளனர், நீயோ சின்ன வாடகை வீட்டில் இருக்கிறாய், வாங்கிய நிலத்தில் சொந்த வீடு கட்டலாமே அதை ஏன் அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறாய், உனக்கு என்ன பைத்தியமா? என்று கூட கேட்டனர்ஆமாம் ஏழைக்குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் என்ற பைத்தியம்தான் என்று அவர்களுக்கு பதில் தந்தார்இவரது இந்த முயற்சியைப் பார்த்துவிட்டு தொண்டு நிறுவனங்கள் நிலத்தில் கட்டிடம் கட்டி தருவது உள்ளீட்ட உதவிகளை செய்தது
1999 ம் வருடம் ஜூன் மாதம் 6 ந்தேதி 28 குழந்தைகளுடன் அங்கு அரசு ஆரம்பபள்ளி ஆரம்பிக்கப்பட்டது,பின் படிப்படியாக வளர்ந்து இன்று 175 மாணவர்களுடன் 1புள்ளி 33 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.
பிள்ளைகள் எல்லாம் மெட்ரிகுலேசன் பள்ளிப் பிள்ளைகள் போல யூனிபார்ம், கால்களில் ஷூ அணிந்து வருகின்றனர் காலை மதியம் நல்ல உணவு அருமையான வகுப்பு என்று எல்லாமே பிரமாதமாக அமைந்துள்ளது.பத்தாம் வகுப்பு போர்டு தேர்வில் நன்கு மதிப்பெண் பெற்று தேறியுள்ளனர் அப்படி தேறியவர்களில் ஹாஜப்பாவின் பேத்தியும் ஒருவர்.
பள்ளியைப் பொறுத்தவரை அரசாங்க பள்ளியாக இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரை அது ஹாஜப்பா பள்ளிதான்.ஹாஜப்பா பள்ளிக்கு செல்லவில்லையே தவிர அவரைப்பற்றி பள்ளி கல்லுாரி பாடபுத்தகங்களில் பாடமே இருக்கிறது என்பது தனித்தகவல்.
ஆரஞ்சு வியாபாரத்திற்கு போய்விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளியின் உள்ளே உள்ள கல் தி்ண்ணையில் உட்கார்ந்து மாணவர்களிடம் எப்படி படிக்கிறீங்க நோட்டு புத்தகம் எல்லாம் இருக்கா என்று விசாரிப்பதோடு சரி மற்றபடி பள்ளியில் ஹாஜப்பா எந்த உரிமையும் எடுத்துக் கொள்வதில்லை.
பள்ளிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் பெயர் நன்கொடை விவரத்தை கல்வெட்டாக பதித்து வைத்துள்ளார் அந்த நீண்ட பட்டியலில் ஹாஜப்பா பெயர் இல்லை ஏன் என்று கேட்ட போது நான் முயற்சி மட்டுமே செய்தேன் பணமெல்லாம் மக்கள் கொடுத்தது ஆகவே எதற்கு என் பெயர் என்கிறார்.
ஆனால் அவரது பெயர் பத்மஸ்ரீ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டு அது ஏற்கவும்பட்டு விமானத்தில் மங்களூரில் இருந்து டில்லிக்கு பறந்து சென்று பத்மஸ்ரீ விருது வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
விருது பெறும் முன்பாக அவரை கொரோனா பரிசோதனை செய்ய வீட்டிற்கு வந்த அதிகாரிகளுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தார் அப்போது அருவாள் பட்டு கையில் காயம் ஏற்பட்டுவிட்டது அந்தக் காயத்திற்கு போட்ட கட்டைத்தான் பிரதமர் அன்புடன் விசாரித்துள்ளார்.
ஹாஜப்பாவை பொறுத்தவரை பிரதமர் மற்றும் ஜனாதிபதியை மிக அருகில் நேரில் பார்த்ததையே விருதைவிட பெரிதாக மதிக்கிறார் அவ்வளவு பெரிய மனிதர்கள் மத்தியில் தெருவில் ஆரஞ்சு பழம் விற்கும் தான் செருப்பு போட்டு போவது மரியாதையாக இருக்காது என்று கருதியே செருப்பு அணியாமல் சென்று விருது பெற்றதாக குறிப்பிட்டார்.அவரது எண்ணம் எல்லாம் தனக்கு கிடைக்கும் பணம் பரிசு பாராட்டு என்று எல்லாவற்றையும் எப்படி பள்ளியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்பதில்தான் இருக்கிறது.
மங்களூர் திரும்பிய ஹாஜப்பாவை கலெக்டர் முதல் அமைச்சர் வரை பாராட்டியுள்ளனர்,தங்கள் மண்ணிற்கு பெருமை தேடித்தந்ததாக மக்கள் மாலை அணிவித்து மகிழ்கின்றனர் வீட்டின் மூலையில் அம்பாரமாக மாலைகள் குவிந்துள்ளது ஆனால் ஹாஜப்பாவின் கவனம் எல்லாம் வீட்டின் மேல் வைத்துள்ள ஆரஞ்சு பழக்கூடையின் மீதுதான் இருக்கிறது சீக்கிரம் அதை எடுத்துக் கொண்டு வியாபாரத்திற்கு போக வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறார் காரணம் பள்ளிக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்கிறார்.
-எல்.முருகராஜ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (5)

 • DINAGARAN S - new delhi,இந்தியா

  நல்ல இதயம் படைத்த அவருக்கு எமது அன்பான வாழ்த்துக்கள்

 • JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்

  தன்னலம் கருதாத மஹான்.பல்லாண்டு வாழ வாழ்த்தி வணங்குகிறேன்.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  வாழ்த்துக்கள்

 • Nagaraj - Doha,கத்தார்

  தன்னலம், தற்பெருமை இல்லாத மகா பெரியவர் ஹாஜப்பாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement