Load Image
dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க.,வுக்கு அமைச்சர் வைக்கும் வேட்டு... : ஆளும்கட்சியினரை அலறவைக்க துண்டுச்சீட்டு!

தோழியின் வீட்டுக்கு சித்ராவும் மித்ராவும் ஸ்கூட்டரில் கிளம்பினர். பின்சீட்டில் அமர்ந்தபடி அலைபேசியில் வந்த ஒரு மெசேஜை பார்த்து விட்டு, பேச ஆரம்பித்தாள் சித்ரா...

''மித்து...நம்ம கலெக்டர் பாக்ஸிங் கத்துக்கிறாராம் தெரியுமா?''

''நானும் அந்த வீடியோ பார்த்தேன்க்கா...பிஸிக் நல்லாத்தான் மெயின்டெயின் பண்றாரு. அதே ஆக்டிவோட, அதிகாரிகளையும் வேலை வாங்குனா நல்லாருக்கும்''

''நீ சொல்றதைப் பார்த்தா, அவர் சொல்றதை யாரும் கேக்குறதில்லைங்கிற மாதிரி ஒரு தொனி வருதே''

''அப்பிடித்தான் தெரியுது. நம்ம சிட்டியில மட்டுமில்லாம, மாவட்டம் முழுக்க முக்கியமான ரோட்டுல எல்லாம் மெகா மெகா சைஸ்ல 'ஹோர்டிங்ஸ்' வச்சிருக்காங்க...எதுக்குமே பர்மிஷன் கிடையாது. இந்த மாதிரி போர்டு, டிஜிட்டல் போர்டு, பேனர் எல்லாத்தையும் அக்., 20க்குள்ள எடுக்கணும்னு போன மாசம் மூணாம் தேதியே ரோடு சேப்டி மீட்டிங்ல உத்தரவு போட்டாரு''

''நல்லா ஞாபகம் இருக்கே...அவர் பேருல ஒரு அறிக்கை கூட கொடுத்தாங்களே!''

''கொடுத்தாங்க...ஆனா ஒரு போர்டு கூட எடுக்கலை...கார்ப்பரேஷன் ஆபீசர்கள் மட்டுமில்லை. சாதாரண பஞ்சாயத்து செகரட்டரிகள் கூட, கலெக்டர் உத்தரவை மதிச்சதாத் தெரியலை. ஒரே ஒரு அதிகாரி மேல ஸ்ட்ராங்கா ஒரு நடவடிக்கை எடுத்தா, மத்தவங்க பயப்படுவாங்க...ஆனா இவர் எதையுமே 'பாலோ அப்' பண்றதாவே தெரியலை''

''கார்ப்பரேஷன் கமிஷனரும் ரொம்ப ஆக்டிவாத்தான் தெரியுறாரு. ஆனா ஊர் முழுக்க குப்பை குவிஞ்சு கிடக்கு, ரோடெல்லாம் கந்தலா இருக்கு. ஆனா ஆளும்கட்சிக்காரங்க 'கோவைய முன்னேற்றுவதே எங்க லட்சியம்'னு கொஞ்சமும் கூச்சமே இல்லாம பேட்டி கொடுத்து, பெருசு பெருசா போஸ்டர் ஒட்டிக்கிறாங்க''

''இந்த போஸ்டர் கலாசாரம் ரொம்பவே மோசமா வளர்ந்துட்டு இருக்குக்கா...ஒன்றரை லட்ச ரூபா கொடுத்தா, பத்திரிகைப் பேருல ஊரெல்லாம் போஸ்டர் ஒட்றாங்க. இந்த போஸ்டர் பத்திரிகைகளுக்கு ஆளும்கட்சிகள்தான் பூஸ்டர். பேட்டி கொடுத்தாலும் போஸ்டர், ஸ்கூட்டி விக்கிறதுக்கும் போஸ்டர்'' என்று கொந்தளித்தாள் மித்ரா.

''அதைத்தான் மித்து...நானும் கேக்குறேன். இப்பிடி கவர்மென்ட் சுவத்தை வருஷமெல்லாம் நாறடிக்கிற நாலு பேரு மேலயாவது, கேஸ் போட்டு உள்ள தள்ளுனா மத்தவுங்க ஒட்டுவாங்களா...இந்த கமிஷனர், கலெக்டர் எல்லாரும் எதுக்குதான் பயப்படுறாங்க?'' என்று மேலும் சூடானாள் சித்ரா.

ரோட்டோரச் சுவரில் அமைச்சர் செந்தில் பாலாஜி படத்தைப் பார்த்த மித்ரா, அரசியலை ஆரம்பித்தாள்...

''அக்கா! வேலுமணி, செந்தில் பாலாஜி யுத்தம் பெருசாயிட்டே இருக்கு..ரெண்டு பேருக்கும் இடையில பழைய பகைங்கிறாங்க. அ.ம.மு.க.,வுல பிரச்னையாகி, அ.தி.மு.க.,வுக்குப் போறதுக்கு அவர் முயற்சி பண்ணுனப்போ, தங்கமணிக்காக இவர்தான் அதைத் தடுத்துட்டார்னு ஒரு தகவல் ஓடுது. அந்த பகையிலதான், வேலுமணியைக் காலி பண்ணனும்னு கோயம்புத்துார்ல இறங்கி வேலை பாக்குறாராம். மூணு நாள்ல 30 வார்டுல 15 ஆயிரம் பெட்டிஷன்களை வாங்கிருக்காரு''

''வேலுமணி ஸ்டைல்லதான் இவரும் வேலை பாக்குறாரு. ஆனா முகம் பாக்குறதேயில்லை... 99வது வார்டுல, அவர் மனு வாங்கப் போனப்போ, ரொம்பவே கொஞ்சமாத்தான் மக்கள் இருந்திருக்காங்க. அங்க அவர் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, கட்சிக்காரங்க அவர்ட்ட துண்டுச்சீட்டுல பேரு எழுதிக்கொடுத்திருக்காங்க. அதை வாங்குனவரு, 'நீங்க கூட்டுன 10 பேருக்கு, உங்க 10 பேரை நான் சொல்லணுமா'ன்னு எகிறீட்டாராம்''

''அவரோட ஸ்பீடுக்கு, இந்த ஊரு தி.மு.க.,காரங்க 'செட்'ஆவாங்களான்னு தெரியலை. ஏன்னா, நோகாம நோன்பி கும்பிடணும்னு நினைக்கிறவங்கதான் நம்ம ஊரு தி.மு.க.,காரங்க...அதனாலதான், அ.தி.மு.க.,வுல இருந்து நிறைய்யப்பேரைத் துாக்கணும்னு ரொம்பவே மெனக்கெடுறாருன்னு கேள்விப்பட்டேன்'' என்றாள் மித்ரா.

''அதைத்தான் ஆரம்பிச்சிட்டாரே...தீபாவளிக்கு மறுநாள் அவர் வச்ச வெடியில, கோவை அ.தி.மு.க.,காரங்க கொஞ்சம் ஆடித்தான் போயிட்டாங்க'' என்று சித்ரா சொல்லும்போதே, குறுக்கு விசாரணை செய்தாள் மித்ரா...

''சூலுார் யூனியன் கவுன்சிலர்கள் நாலு பேரு, அ.தி.மு.க.,வுல இருந்து தி.மு.க.,வுக்கு போனதை சொல்றியா?''

''அதேதான்...அ.தி.மு.க.,வுலயும் அவுங்களுக்கு மரியாதையே இல்லாமத்தான் இருந்துச்சாம். அந்த நேரம் பாத்து, இவுங்க துாண்டில் போட்ருக்காங்க. ஆளுக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்ன்னு பேசி, முதல் தவணையா 11 ஸ்வீட் பாக்ஸ் கொடுத்துத் துாக்கீட்டாங்களாம். அடுத்ததா, ஒரு பெரிய மீனுக்கு துாண்டில் போட்ருக்கிறதா தகவல்''

''ரியல் எஸ்டேட் பண்ற எம்.எல்.ஏ.,வுக்கு வலை விரிச்சதைத்தானே சொல்ற...அந்தத் தகவல் வெளியில கசிஞ்சு, அவரை சமாதானப்படுத்துறதுக்காக ஏதோ மாநிலப்பதவி கொடுக்குறதா சொல்லி இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்''

''நீ சொல்றது எனக்குத் தெரியலை...ஆனா இன்னமும் அவரோட மண்டையக் கழுவுற வேலை தீவிரமா நடக்குதுன்னு கேள்விப்பட்டேன்'' என்றாள் சித்ரா.

''ஆளும்கட்சியோட மூணு மாவட்டங்களும் அவுங்க பதவியைக் காப்பாத்துறதுக்காக ஒண்ணு கூடிப் பேசிட்டாங்கன்னு தகவல் வந்துச்சு. இனிமே டாஸ்மாக் பார் எல்லாம் கரெக்டா பிரிச்சுக்கலாம்னு பேசியிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.

''ஆனா அதுக்கும் அமைச்சர் ஆப்பு வச்சிருவாரு போலிருக்கு...இதுக்கு முன்னால அ.தி.மு.க., ஆட்சியில, 'அம்மன்' அருள் பெற்றவரோட வாரிசுதான், பார் கலெக்சனை மொத்தமா பண்ணி, கட்சி நிர்வாகிகளுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டு இருந்தாரு. ஆட்சி மாறுன பிறகு, இதை வசூல் பண்ற பொறுப்புக்கு வந்த ஆளும்கட்சிக்காரங்க, கட்சிக்காரங்களை ஏமாத்தி மொத்தமா அமுக்கிர்றாங்களாம்''

''அதெப்பிடிக்கா ஆளும்கட்சிக்காரங்க விடுவாங்க...அமைச்சர்ட்ட போட்டுக் கொடுத்திருப்பாங்களே''

''ஆமா...கரெக்டா ஆதாரத்தோட போட்டுக்கொடுத்துட்டாங்க. அதுக்கு அவரு, 'விடுங்க, உங்களுக்கு வர வேண்டியது கரெக்டா வந்து சேரும்'னு கியாரண்டி கொடுத்திருக்காராம். குஷியா இருக்காங்க உடன் பிறப்புகள். இதனால 'மாவட்டங்கள்தான்' ஆடிப்போயிருக்காங்க'' என்றாள் சித்ரா.

போலீஸ் ஜீப் ஒன்று கப்பல் போல ஆடி ஆடி ரோட்டைக் கடந்து சென்றதைப் பார்த்த மித்ரா, ''அக்கா! அந்த போலீஸ் வீடியோவை நீ பார்த்தியா?'' என்று கேட்டாள்...

''காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டுலயும், நுாறடி ரோட்டுலயும் தீபாவளிக்கு முன்னால, சில போலீஸ்காரங்க கடை கடையா யூனிபார்ம்லயே வசூல் பண்ணுனதை யாரோ வீடியோ எடுத்திருந்தாங்களே...அதுதான... அதைத்தான் பேஸ்புக்லயே போட்ருந்தாங்களே. ஆனா அதைப் போட்டவரே சில மணி நேரத்துல அதை எடுத்துட்டாரு. போலீஸ் அவரைக் கண்டுபிடிச்சு மெரட்டி எடுக்க வச்சிருக்காங்க'' என்றாள் சித்ரா.

''அடுத்த மேட்டரை ஆரம்பிப்பதற்குள் தோழியின் வீடு வந்து விட்டது. ஓடிவந்து இவர்களைக் கட்டியணைத்து வரவேற்ற தோழி, இருவரின் அரட்டைக்கும் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement