dinamalar telegram
Advertisement

100 கோடி தடுப்பூசி சாதனை காத்திருக்கும் சவால்கள்

Share

சீனாவின் வூஹான் நகரில் 22 மாதங்களுக்கு முன் உருவான கொரோனா வைரஸ், இன்னும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலால், இந்தியா உட்பட பல நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் ஏராளம். அவற்றை சரிசெய்ய ஒவ்வொரு நாடும் போராடி வருகின்றன.


இந்தக் கொடிய வைரசை ஒழிக்க, புனே நகரில் இயங்கும் 'சீரம்' நிறுவனமும், ஐதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனமும் தயாரித்த, 'கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்' தடுப்பூசிகளை செலுத்தும் பணி, இந்த ஆண்டு ஜனவரி ௧௬ல் துவங்கியது. அதன்பின் ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. ஸ்புட்னிக் - வி தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்படுகிறது.


தேசிய அளவிலான தடுப்பூசி திட்டம், மத்திய அரசால், 37 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், இதுவரை 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது, திட்டம் துவக்கப்பட்ட 279 நாட்களில் இந்த சாதனை படைக்கப்பட்டிருப்பது, உலக நாடுகளின் பாராட்டை பெற்றுள்ளது.இந்த விஷயத்தில், 200 கோடி தடுப்பூசி செலுத்தி முதலிடத்தில் உள்ள சீனாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.


வளர்ந்த நாடுகள் சிலவற்றை ஒப்பிடுகையில், இந்தியாவின் சாதனை பெரியது.நம் நாட்டில் தடுப்பூசி போட தகுதியான பொதுமக்களில், 75 சதவீதத்தினர் தற்போது இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றை போட்டுள்ளனர். எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களில், 100சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். நாட்டு மக்களில், 50 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி போட, 203 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த 76 நாட்களில் மற்றொரு, 50 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.


தற்போதைய நிலவரப்படி, நம் நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்கள், 93 கோடி பேர். அவர்களில் முதல் தவணையை, 71 கோடி பேரும், இரண்டு தவணைகளை, 29 கோடி பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதேநேரத்தில், ஒவ்வொரு நான்கு இந்தியர்களில் ஒருவர், இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். மேலும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர், இரண்டாவது தவணையில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர் என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுப்பதுடன், பிரசாரமும் மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசிக்கு தகுதியான, 93 கோடி பேரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்ற நிலையை எட்ட பல நாட்களாகும் என்றாலும், அதற்கேற்ற வகையில் தடுப்பூசி உற்பத்தியையும் பெருமளவில் அதிகரிக்க வேண்டும்.


தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரண்டு விதமான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இதுவரை செலுத்தப்பட்டுள்ள 100 கோடி தடுப்பூசிகளில், கோவாக்சின் பங்கு, 11 சதவீதம் என்ற குறைந்த அளவில் தான் உள்ளது. அத்துடன் இந்த தடுப்பூசிக்கு இன்னும் சர்வதேச அமைப்பின் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.அதனால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் விஷயத்திலும், கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் விஷயத்திலும், மத்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும்.


கொரோனா இரண்டாவது அலை பரவல் விஸ்வரூபம் எடுத்த போது, ஏராளமான உயிர் பலிகள் நிகழ்ந்தன. அப்போது, விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படாத கவலை பலருக்கும் மேலோங்கி இருந்தது. கொரோனா பரவலின் வேகம் குறைந்த பின், அந்தக் கவலை இல்லை என்றாலும், மூன்றாவது அலை பரவல் உருவாகாமல் இருக்க, தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்வது அவசியம்.


கொரோனா தடுப்பூசி விஷயத்தில், அடுத்தடுத்து பல சாதனைகள் படைக்க, மத்திய அரசு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த சவால்களை முறியடிக்க, மத்திய அரசுக்கு, மாநில அரசுகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போது தான் கொரோனா முற்றிலும் ஒழியும்; மக்களும் நிம்மதி பெறலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement