Load Image
dinamalar telegram
Advertisement

'கறை' படாமல் 'வசூல்'; போலீஸ் புது 'ரூட்'

ஏதோ சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள் மித்ரா. ''தீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்க 'மாஸ்டர் பிளான்' போடுற போல'' என்று, மித்ராவின் யோசனையை கலைத்தாள், சித்ரா.


''அதெல்லாம் இல்ல... தீபாவளிக்கு சாதா புடவையே போதும்க்கா... 'மாஸ்டர் பிளான்'னு சொல்லவும் தான் ஞாபகம் வருது.''மாவட்டத்துக்கான, 'மாஸ்டர் பிளான்' தயாரிப்பு தொடர்பா ஆலோசனைக்கூட்டம், இப்ப நடந்துச்சு.


''நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர், இயக்குனர் வந்திருந்தாங்க. அவங்க தங்கறதுக்கு விருந்தினர் மாளிகையை தயார் பண்ணுங்கன்னு, நகர ஊரமைப்புத்துறையினர் சொல்லியிருக்காங்க... 'விருந்தினர் மாளிகை'யில திரைசேலை எல்லாம் பழசாயிடுச்சு... புதுப்பிக்கணும்'னு, வருவாய்த்துறை அதிகாரிங்க சொல்லியிருக்காங்க.


''உடனடியா, நகர ஊரமைப்புத்துறை அதிகாரிங்க, சில ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மூலமா, விருந்தினர் மாளிகையை 'பளிச்' ஆக்கிட்டாங்க. ஆய்வுக் கூட்டத்துக்கான செலவையும், அவங்களே ஏத்துக்கிட்டாங்களாம்.''காத்துள்ளபோதே துாத்திக்கிட்டா தானே நல்லது'' என கலகலத்தாள் மித்ரா.''மித்து... பல்லடத்துல போன வாரம் நடந்த அனுமதியற்ற வீட்டு மனைக்கு அங்கீகாரம் தர்ற முகாம்ல கூட, அதிகாரிங்களால சரியான முறையில் ஏற்பாடுகளை செய்ய முடியலையாம். ரியல் எஸ்டேட் தொழில்ல இருக்கறவங்களுக்கு தான் அந்த முகாம் ரொம்ப பலன் கொடுத்துச்சாம்'' என்று மித்ராவின் கருத்துக்கு, வலுசேர்த்தாள் சித்ரா.

'சீட்' வாங்க பரிசு மழை''தெற்கு தொகுதிக்குள்ள, மாவட்ட செயலாளர் தலைமையில, அ.தி.மு.க., பொன்விழா நிகழ்ச்சி நடந்துருக்கு. அவர் போனதுக்கு அப்புறம், பல்லடம் வி.ஐ.பி., மறுபடியும் கொடியேத்தி, விழாவை 'ஆனந்த'மா நடத்தியிருக்காரு.


''போன தேர்தல்ல, ஆதி திராவிடர் மக்கள் அதிகம் இருக்க காலனிகள்ல தான் அ.தி.மு.க., ஓட்டு குறைஞ்சுப்போச்சாம். இந்த முறை விட்ற கூடாதுன்னு, மேலிட உத்தரவாம். கவுன்சிலர் 'சீட்' வாங்க தயாரா இருக்கிறவுங்க, ஏ.டி., காலனி மக்களுக்கு பரிசு, பணம்னு கொடுத்து அசத்த தயாராகிட் டாங்க'' என்று கூறிய மித்ராவிடம் உற்சாகம் பளிச்சிடுகிறது.


''ஆனா, வடக்கு தொகுதி நிலவரம் வேற மாதிரி இருக்கு.அந்த தொகுதியில நடக்கிற பொது நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கும் அழைப்பு விடுக்கிறாங்களாம். ஆளும் கட்சிங்கற முறைல, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கும் அழைப்பு விடுக்கிறாங்களாம்.


''ரெண்டு பேரும் பக்கத்து, பக் கத்துல உட்கார்ந்து நிகழ்ச்சியில பங்கெடுக்கிறாங்களாம். அரசியல்ல ஆரோக்கியமான விஷயமா இது இருக்கு...ஆனா, இதை அ.தி.மு.க., - தி.மு.க.,னு இருதரப்பில இருந்தும் விமர்சிக்கிறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க'' என்று சித்ரா, தகவலைப் பகிர்ந்தாள்.

வசூல் வேட்டை''போலீஸ்காரங்க வசூல் பாணி மாறிடுச்சு... 'சிட்டி' டிராபிக் போலீஸ்காரங்க, பிரதான ரோட்டுல இருக்கிற குறுக்கு வீதியில நின்னுகிட்டு, வாகன தணிக்கைங்கற பெயர்ல வசூல் அள்றாங்களாம். நேரடியா கையில காசு வாங்காம, பக்கத்துல இருக்கிற கடைக்காரங்களோட 'கூகுள் பே' அக்கவுண்ட்ல போட சொல்லி, அப்புறமா கடைக்காரங்ககிட்ட இருந்து வசூல் பண்ணிக்கிறாங்களாம்,வசூலுக்கான தடயமே இல்லாம பண்ற இந்த ஐடியாவால, வசூல் வேட்டையை தீவிரப்படுத்திட்டாங்க... ஆனா பெரிய அதிகாரிங்க இதை எப்படி கண்டுக்காம இருக்காங்கனுதான் ஆச்சர்யமா இருக்கு... பணம் பத்தும் செய்யும்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க'' என்று சித்ரா சலித்துக்கொண்டாள்.


''பல்லடம் பக்கத்துல இருக்கிற அருள்புரத்துல, மின் இணைப்பு வாங்குன ஒருத்தரு. புதுசா மின்கம்பம் பொருத்தணும்னு மின்வாரிய அதிகாரிக்கு மனு கொடுத்திருக்காரு. 36 ஆயிரம் ரூபா கட்டினீங்கனா மின்கம்பத்தை மாத்திடலாம்ன்னு அதிகாரி சொல்ல, அவரும் அந்த தொகையை கட்டியிருக்காரு. கடைசியில பார்த்தா, எங்கேயோ இருந்து ஒரு 'டேமேஜ்' ஆன பழைய கம்பத்தை கொண்டு வந்து நட்டு வச்சிருக்காங்க. பணம் கட்டினவரு, அப்படியே 'ஷாக்' ஆகிட்டாராம்'' என்று மித்ரா கூறியதும், சித்ராவின் முகம் பிரகாசம் இழந்தது.''சேதி சொல்ற அதிகாரிகளே தொடர்பு எல்லைக்கு வெளியே போனா மக்களுக்கு எப்படி விவரம் தெரியும்?கலெக்டர் நிறைய ஆய்வுக்கூட்டம் நடத்துறாரு. ஆனா, அந்த விஷயம் மக்களை போய் சேர தாமதமாகுதாம்'' என்று பேச்சை மாற்றினாள் சித்ரா.


''சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இருக்கிற ஊர்லயே இப்படி இருந்தா எப்படி?'' என, ஆதங்கப்பட்ட மித்ரா, ''சிட்டி போலீஸ் அதிகாரிகளை சந்திக்க பத்திரிகைக்காரங்க போறப்ப, அவங்களோட மொபைல் போனை, 'ரிசப்ஷன்'லயே வாங்கி வச்சுட்டு தான், உள்ளே அனுப்பறாங்களாம். இந்த மாதிரி, இதுவரைக்கும் நடந்தது இல்லையாம். சமூகவலை தளங்கள் வந்த பிறகு, அதிகாரிங்க ரொம்ப உஷாராகிட்டாங்க'' என்றாள்.

'தோழர்'கள் எந்தப் பக்கம்?''தெற்கு உழவர் சந்தையில, நடைபாதை வியாபாரிகளால, சந்தைக்குள்ள கடை வச்சிருக்கிற விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுது; நடைபாதைக் கடைகளை அகற்றணும்னு ஒரு தரப்பு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிங்ககிட்ட கோரிக்கை வச்சிருக்காங்க...ஆனா, இன்னொரு தரப்போ நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தினா, அவங்க வாழ்வாதாரம் பாதிக்கும்ன்னு, மனு கொடுத்திருக்காங்க. இதுல, என்ன ஆச்சர்யம்னா ரெண்டு தரப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் குரல் கொடுக்கிறது, 'தோழர்'கள் தானாம்'' என்று சித்ரா ஆச்சர்யப்பட்டாள்.''அவிநாசியில, குறிப்பிட்ட சில வார்டுகள்ல, தண்ணீர் குழாய் இணைப்பு கொடுக்கணும். அங்க கட்டப்பட்டிருக்கிற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் நாங்க சொல்றவங்களுக்கு தான் வீடு ஒதுக்கணும்னு, ஆளும் கட்சியை சேர்ந்த சில உள்ளூர் நிர்வாகிங்க, பேரூராட்சி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துட்டு வர்றாங்களாம்.''ஏற்கனவே, தண்ணி கஷ்டம்; இதுல, புதுசா இணைப்பு கொடுக்க முடியாது. அதுவும், தேர்தல் சமயத்துல வாய்ப்பே இல்ல. புதிய கூட்டு குடிநீர் திட்டம் முடிஞ்சதுக்கு அப்புறம், இணைப்பு கொடுத்துடலாம்ன்னு, அதிகாரிங்க சொல்லியிருக்காங்க. ஆனா, ஆளும்கட்சி தரப்பு, தொடர்ந்து தொல்லை பண்றாங்களாம். அரசாங்கத்துக்கு, கெட்டபேரு வாங்கித்தரணும்னே இப்படி சில பேரு அதிகாரிகளை 'டார்ச்சர்' பண்றாங்கன்னு, ஆளும்கட்சிக்காரங்களே கிளப்பிவிட, இது, எதிர்க்கட்சிக்காரங்களுக்கு, அல்வா சாப்பிடற மாதிரி ஆகிடுச்சாம்,'' என்று மித்ரா 'ரகசியத்தை' உடைத்தாள்.

குளத்தில் கஞ்சா, போதை ஊசி''அவிநாசி பக்கத்துல ஒரு கிராமத்துல இருக்கிற குளக்கரை பக்கம், போன வாரம், ஒரு மூதாட்டியோட காதை கிழிச்சு, ஒருத்தன் கம்மலை பறிச்சுட்டு போயிட்டான். இதனால கொதிச்சுபோன ஊர் மக்கள், அவங்க ஊர் பக்கத்துல இருக்கிற குளத்துக்குள்ள, கல்லுாரி மாணவர்கள் கூட கஞ்சா, போதை ஊசி போட்டுக்கிட்டு உட்கார்ந்திருப்பாங்க; அவிநாசி முழுக்க கஞ்சாவும், போதை ஊசியும் தாராளமா கிடைக்குதுன்னு, மனு கொடுத்தாங்க. இதை படிச்ச போலீஸ் அதிகாரிங்க, ரொம்ப 'அப்செட்' ஆகிட்டாங்களாம்.


''பசங்க, குளத்துக்குள்ள உட்கார்ந்து கஞ்சா, போதை ஊசி பயன்படுத்துறதை ஊர் ஜனங்க பார்த்தப்பவே எங்களுக்கு தகவல் சொல்லியிருந்தா, உடனே நடவடிக்கை எடுத்திருப்போமே. ஒரு அசம்பாவிதம் நடந்ததுக்கு அப்புறமா சொல்றாங்களேன்னு, ஆதங்கப்பட்டாங்களாம். குற்றவாளியை பிடிக்க, மாவட்டத்தோட பெரிய அதிகாரி, போலீஸ்காரங்களுக்கு சில 'ஐடியா' கொடுத்துட்டு போனதோட, தீபாவளி சமயம், வசூல், அது, இதுன்னு, கெட்ட பேரு வாங்கிக்காதீங்கன்னு, 'அட்வைஸ்' பண்ணிட்டும் போயிருக்காரு'' என்று வெளிப்படையாகப் பேசினாள் சித்ரா.

மின்னுவதெல்லாம் பொன் அல்ல...''போன வாரம், குன்னத்துார்ல ஒரு விவசாயிக்கு பெண் பார்த்து கொடுத்த பெண் இடைத்தரகர், 1.30 லட்சம் ரூபாயை கமிஷனா வாங்கிட்டு, ஏற்கனவே கல்யாணமா ஒரு பெண்ணுக்கு திருமணம் செஞ்சு வச்சாங்கள்ல. அந்த விவகாரத்துல, ஏமாந்து போன அந்த விவசாயி, அந்த பெண்ணுக்கு சில தங்க நகைகளையும் வாங்கி கொடுத்திருக்கார்; அந்த பெண்ணை கைது பண்ணி விசாரிச்சப்பதான், அதுல சில நகைகள் 'கவரிங்'ன்னு தெரிய வந்துருக்கு,'' என்று மித்ரா தகவலைப்பகிர்ந்தாள்.


''மின்னுவதெல்லாம் பொன் அல்லன்னு பெரியவங்க சொல்வாங்க... நாம தான் கவர்ச்சியை நம்பி ஏமாந்திடுறோம்...சரி... மித்து... சூடா இஞ்சி டீ போட்டுட்டு வருவேன்னு காத் திட்டு இருக்கேன்... ஏமாத்திருவ போல இருக்கே'' என்று சித்ரா கலகலப்பாக கூற, ''அக்கா, ஒரே நிமிஷம் பொறுங்க... சூடா எடுத்துட்டு வர்றேன்'' என்று சமையலறைக்குள்நுழைந்தாள் மித்ரா.

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement