Load Image
dinamalar telegram
Advertisement

ஆபீசருக்கு பட்டாசுக்கடைகள் வைத்த வேட்டு... : ஆளுங்கட்சியில மூணு பேருல ஒருத்தருக்கு சீட்டு!

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில், மருதமலை செல்வதற்காக பிரைவேட் டவுன்பஸ்சில் ஏறி சித்ராவும், மித்ராவும் உட்கார்ந்திருந்தனர். வண்டிக்குள் குத்துப்பாட்டு காது ஜவ்வைக் கிழிப்பது போல, 100 டெசிபலுக்கு மேலே அலறிக்கொண்டிருந்தது.கண்டக்டரிடம் கொஞ்சம் சத்தத்தைக் குறைக்கச் சொல்லி, சைகை காண்பித்தாள் மித்ரா. அவர் கண்டு கொள்வது போல் தெரியவில்லை. இருவரும் இறங்கி, பின்னால் நின்ற அரசு சொகுசு டவுன்பஸ்சில் ஏறினர்.


மெல்லிய சப்தத்தில், 'என்ன சத்தம் இந்த நேரம்?' என்று எஸ்.பி.பி.,யின் குரல் இதமாக செவிகளில் இழையோடியது.''டிக்கெட் ரேட் ஜாஸ்திதான்...ஆனா காது பத்திரமா இருக்கும்ல!'' என்று சிரித்தாள் சித்ரா.


''ஆமாக்கா! நம்ம சிட்டிக்குள்ள ஒரு சில பிரைவேட் பஸ்காரங்க போற ஸ்பீடு, ஏத்துற கூட்டம் எதையும் எந்த ஆபீசருமே கண்டுக்கிறதில்லை,''என்று குமுறினாள் மித்ரா.


''என்ன மித்து பேசுற...நம்ம ஊரு ஆபீசர்கள்ல பஸ்சுல போறது யாரு...எல்லாமே மாமூல்தான்?'' என்றாள் சித்ரா.


''அதெல்லாம் கண்டுக்காம இருக்குறதுக்கு காசு வாங்குறது வேற டிபார்ட்மென்ட்...பக்கத்துல இருக்குற சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல, பிரைவேட் பஸ்களுக்கு கூட்டம் சேர்க்குறதுலயே டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்காரங்க செம்ம காசு பாக்குறாங்களாம்,'' என்று மித்ரா சொல்லும்போதே,


''அதுல எப்பிடி மித்து காசு கிடைக்கும்?'' என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் சித்ரா...


''அங்கதான்க்கா இருக்கு ட்விஸ்ட்டே...கோயம்புத்துார்ல இருந்து சத்திக்கு பிரைவேட் பஸ்கள்லதான் கூட்டம் இருக்கும். ஏன்னா, அந்த ரூட்ல ஓடுற நாலு அரசு பஸ்களுக்கு, டிரைவர் இல்லை, கண்டக்டர் இல்லைன்னு திடீர் திடீர்னு பஸ்சையே நிறுத்திர்றாங்களாம். அந்தக் கூட்டம் அத்தனையும் பிரைவேட் பஸ்சுக்குதான் போகுது. இதுலதான் டிஎன்எஸ்டிசி அதிகாரிகள் சில பேருக்கு மாசாமாசம் மாமூல் கொட்டுதாம்''''யூனியன்காரங்க இதெல்லாம் கேக்க மாட்டாங்களா?''


''கேப்பாங்க...ஆனா அவுங்க என்ன கேப்பாங்கன்னு சொல்ல மாட்டேன்,''சித்ராவின் குறும்பை ரசித்த மித்ரா, மருதமலைக்கு இரண்டு டிக்கெட் எடுத்து விட்டு, வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். பஸ் நகருக்குள் நகர ஆரம்பித்தது.பஸ்சை ஓட்ட முடியாத அளவுக்கு, ரோட்டின் இரண்டு புறமும் தள்ளுவண்டிக் கடைகள் ஆக்கிரமித்திருந்தன. அதைப் பார்த்ததும் அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள் மித்ரா...


''வழக்கமா பண்டிகைக் காலம் வந்தா, இந்த தள்ளுவண்டிக் கடைகள் அதிகமாகுறது சகஜம்தான். ஆனா இந்த வருஷம் ரொம்ம்ம்ம்ப... ஓவர்க்கா,''


''நீ சொல்றது உண்மைதான்...சிங்காநல்லுார் ஏரியாவுல வேற மாதிரி நடக்குது. அங்க, ராத்திரி 10 மணியானா தள்ளுவண்டிக் கடைகளை, போலீஸ் விரட்டி விரட்டி மூட வச்சிர்றாங்க. ஆனா சிங்காநல்லுார்ல இருந்து அய்யர் ஆஸ்பத்திரி ஏரியா வரைக்கும் பார்த்தா, நைட் 12 மணி வரைக்கும் பல ஓட்டல்களை நடத்த விடுறாங்களாம்...இதுலதான் போலீஸ்காரங்க செம்ம துட்டு வருதாம்!'' என்றாள் சித்ரா.


சத்தமெழுப்பிக் கொண்டு கடந்த தீயணைப்பு வண்டியைப் பார்த்ததும், ஏதோ நினைவுக்கு வந்தவளாய் ஆரம்பித்தாள் மித்ரா...


''அக்கா, நம்ம ஊர்ல அத்தி பூத்தாப்புல இருந்த ஒரு நேர்மையான ஆபீசரைத் துாக்கி விட்டுட்டாங்க தெரியுமா?''


''நீ சொல்றது அந்த பயர் ஆபீசர்தான...அவர் உண்மையிலேயே பயர் ஆன ஆபீசர்னு கேள்விப்பட்டேனே''


''உண்மைதான்க்கா...ஐகோர்ட்டோட ஸ்டேண்டிங் ஆர்டர்படி, கல்யாண மண்டபம், கம்யூனிட்டி ஹால்கள்லயும், பக்கத்துலயும் பட்டாசுக் கடைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது. நம்ம மாவட்டத்துல மத்த ஏரியாவுல எல்லாம் இதை ரொம்ப கரெக்டா 'பாலோ அப்' பண்றாங்க. ஆனா சிட்டியில எப்பவுமே இதெல்லாம் நடைமுறைப்படுத்த முடியுறதில்லை''


''இது எல்லா ஆட்சியிலயும் நடக்குறதுதான...!''


''ஆமா...இந்த வருஷமும் தற்காலிக பட்டாசுக் கடைகளை கல்யாண மண்டபங்கள்ல அமைக்கிறதுக்கு, நிறைய்யப்பேரு அப்ளை பண்ணிருக்காங்க. போலீஸ்காரங்க அனுமதியை வாரி வழங்கிட்டாங்க. ஆனா இந்த டி.எப்.ஓ., அந்த மாதிரி அனுமதி கொடுக்க முடியாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருக்காரு. அதுக்கு அப்புறம்தான், தற்காலிகக் கடை போடுற ஆளுங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து, பல லட்ச ரூபாயை கலெக் ஷன் பண்ணி, நம்ம ஊரு 'போஸ்டர் மாஸ்டர்'ட்ட கொடுத்திருக்காங்க. அவரோட ஏற்பாட்டுலதான், அந்த டி.எப்.ஓ.,வை இங்க இருந்து துாக்கியடிச்சிருக்காங்க''''நீ டி.எப்.ஓ.,ன்னு சொன்னதும் எனக்கு பாரஸ்ட் ஆபீசர் ஞாபகம் வந்துச்சு. இப்போ வந்திருக்குற மாவட்ட அதிகாரி, களத்துக்கே போறதில்லையாம். அதனால, கீழ இருக்கிறவுங்களும் காட்டுக்குள்ள போறது மாதிரியே தெரியலை. போளுவாம்பட்டி ரேஞ்ச்சுல, ரெண்டு மாசத்துல அங்க இருந்த ரெண்டு கேமரா மாயமாயிருக்கு. யானை இறந்து பல நாளாகி அழுகுன பிறகுதான் கண்டுபிடிச்சிருக்காங்க. இதெல்லாம் பார்த்தா, உள்ளுக்குள்ள ஏதாவது வேட்டைக்காரங்க புகுந்துட்டாங்களோன்னு சந்தேகமா இருக்கு''என்றாள் சித்ரா.


பஸ்சை உரசிக்கொண்டு சென்ற ஆம்புலன்சைப் பார்த்த மித்ரா, டிராக் மாறினாள்...''அக்கா! நம்ம ஜி.எச்.சுல முன்ன எப்பவும் இல்லாத அளவுக்கு, போஸ்ட் மார்ட்டம் பண்றதுக்கு ரொம்ப அநியாயமா காசு வாங்க ஆரம்பிச்சிருக்காங்களாம்...ஏகப்பட்ட கம்பிளைன்ட் குவியுது. அங்க வேலை பாக்குறவுங்க மூவாயிரம், போலீஸ் மூவாயிரம்னு காசு பறிக்கிறாங்களாம். அதுலயும் நம்மூரு வி.ஐ.பி., 'மாஜி'யோட ஊர்ல இருக்குற, போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், இந்த மாமூலை வாங்குறதுக்கு தயங்குற போலீஸ்காரங்களைப் பாத்து, 'நீயெல்லாம் எதுக்குய்யா போலீஸ் வேலைக்கு வந்த'ன்னு கேக்குறாராம்''''மித்து! இதுவும் ஜி.எச்.மேட்டர்தான்...ஒரு லேடிகிட்ட ஒன்றரை கோடி ரூபா மோசடி பண்ணுன கேஸ்ல, எக்ஸ் எம்.எல்.ஏ.,வோட மருமகன் அரெஸ்ட் ஆனாரே...அவரோட ஜாமின் மனு கோர்ட்ல டிஸ்மிஸ் ஆயிருச்சு தெரியும்ல...ஆனா அதுக்கு முன்னாடியே உடம்பு சரியில்லைன்னு ஜி.எச்.ல அவரை அட்மிட் பண்ணிருக்காங்க. ஜெயிலுக்குப் போகாம, அங்கயே இருக்கிறதுக்காக, ஜி.எச்.,நிர்வாகத்தை அவுங்க மாமனாரு வலுவா கவனிச்சிட்டாராம். இப்போ மருமகனுக்கு அங்க ஏக கவனிப்பாம்'' என்றாள் சித்ரா.


தி.மு.க. கொடி கட்டிய வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. சித்ராவே மீண்டும் தொடர்ந்தாள்...''மித்து! நம்ம போன வாரம்தான் பேசுனோம்...கோவை தி.மு.க.,ரொம்பவே கலகலத்துப் போயிருக்குன்னு... அடுத்த ரெண்டு நாள்லயே நம்ம மாவட்டத்துக்கு, செந்தில் பாலாஜியை பொறுப்பாளராப் போட்டுட்டாங்க. உண்மையிலேயே உடன்பிறப்புகள் எல்லாம் செம்ம உற்சாகத்துல இருக்காங்களாமே''


''அப்பிடித்தான்க்கா நானும் கேள்விப்பட்டேன்...அ.தி.மு.க.,வுல வேலை கத்துக்கிட்ட ஆளு...பாம்பின் கால் பாம்பறியும்கிறது மாதிரி, அ.தி.மு.க.,காரங்க எப்பிடி வேலை செய்வாங்கன்னு அவருக்குதான் தெரிஞ்சிருக்கு''


''கோவைக்குப் பொறுப்பாளராப் போட்ட மூணாவது நாளே இங்க வந்துட்டாரு. கலெக்டர் ஆபீஸ்ல முக்கியமான ஆபீசர்களை மட்டும் வச்சு, ஒரு மீட்டிங் நடத்திட்டு அன்னிக்கு சாயங்காலமே வடகோவையில இருக்குற தி.மு.க., ஆபீசுக்குப் போயிருக்காரு''


''கலெக்டர் ஆபீஸ் மீட்டிங் பத்திப் பார்த்தேன். கட்சி ஆபீஸ் மீட்டிங்க்ல என்ன நடந்துச்சாமாம்?''


''அதை ஏன் கேக்குற...மீட்டிங்கே தெறிச்சுச்சாம்...கட்சி நிர்வாகிகள் எல்லாரையும் பேசச்சொல்லிருக்காரு. அவுங்க எல்லாம் வழக்கம்போல, 'வெற்றிக்கனியைப் பறிச்சு, தளபதியின் காலில் சமர்ப்பிப்போம்'னு நீட்டி முழக்கிருக்காங்க. ஆனா பொள்ளாச்சி எம்.பி.,சண்முகசுந்தரம் பேசுறப்போ, எல்லாத்தையும் உடைச்சு, கிழிச்சு, துவைச்சு தொங்கப் போட்டுட்டாராம்''


''என்ன மித்து சொல்ற...அப்பிடி என்ன பேசுனாராம்?''


''இவுங்க எல்லாரும் பொய்தான் பேசுறாங்க சார். உண்மை என்னன்னா...சி.டி.தண்டபாணி, கோவை ராமநாதன், பொங்கலுார் பழனிச்சாமி காலத்தோட, கோவையில தி.மு.க.,முடிஞ்சிருச்சு. இப்போ பொறுப்புல இருக்கிறவுங்க கட்சியை வளர்க்குறதை விட, கட்சியில இருக்குற மத்தவனை அழிக்கிறதுலதான் குறியா இருக்காங்க.எம்.எல்.ஏ.,எலக்சன்ல நின்னவுங்க அத்தனை பேரும், நம்ம எம்.எல்.ஏ.,வுக்கு நிக்கிறோம்னு நினைக்காம, அமைச்சராகப் போறோம்னுதான் தெனாவட்டா இருந்தாங்க. அவுங்க ஜெயிக்கணும்னு நினைச்சு வேலை பார்த்ததைவிட, மாவட்டத்துல நம்ம கட்சியில நிக்கிற மத்தவன் அத்தனை பேரும் தோக்கணும்னுதான் வேலை பார்த்தாங்க. அப்பதான் அவுங்க அமைச்சராக முடியும்னு, உள்ளடி வேலை பார்த்தாங்க. அதுக்குக் கிடைச்ச தண்டனைதான் இந்தத் தோல்வின்னு பிரிச்சு மேஞ்சிருக்காரு. அதை விட பியூட்டி என்னன்னா, அடுத்துப் பேசுன பொங்கலுார் பழனிச்சாமி 'எம்.பி., பேசுனதை நான் வழிமொழியுறேன்'னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டாராம்''


''அதுக்கு செந்தில்பாலாஜி என்ன சொன்னாராம்?''


''இதுவரைக்கும் எப்பிடியோ...இனிமே அப்பிடி இருக்கக்கூடாது. வாரத்துல மூணு நாள் ரெஸ்ட் இருந்தா, ஒருநாள் கரூர், ரெண்டுநாள் கோயம்புத்துார்னு நான் இருப்பேன். அந்த ரெண்டு நாளும், அத்தனை வார்டுலயும் மக்களைச் சந்திச்சு குறைகளைக் கேப்போம். ஒரு வீதிக்கு 10 பேர் வீதம் ஏதாவது ஒரு வகையில் நாம உதவி செஞ்சா, கண்டிப்பா கோயம்புத்துார்லயும் கட்சியை வலுவா கட்டமைச்சிரலாம்னு சொல்லிருக்காரு. ஆனா அவரு பேச்சுல கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு வருத்தமாயிருச்சாம்''


''ஏன் என்னாச்சு?''


''அவர் பேசி முடிக்கிறப்போ, கவுன்சிலர் கேண்டீடேட்டுக்கு வார்டுக்கு மூணு பேரை செலக்ட் பண்ணி பட்டியல் அனுப்புங்கன்னு பொறுப்பாளர்கள்ட்ட சொன்னாராம். தேர்தலுக்கு முன்னால பொறுப்பாளர்களை மாத்துவாங்கன்னு எல்லாரும் நினைச்சிருக்காங்க. ஆனா இவர் இப்பிடிச் சொன்னதுல கட்சி நிர்வாகிகள் அத்தனை பேரும் கடுப்பாயிட்டாங்க'' என்றாள் மித்ரா.


''மித்து! முன்னால கவர்னர் ரோசய்யா நம்ம ஊருக்கு அடிக்கடி வந்து போயிட்டு இருந்தப்போ, அவரை நம்ம ஊரோட 101வது வார்டு கவுன்சிலர்னு சொல்லுவாங்களே. அது மாதிரி நம்ம ஊருக்கு அடிக்கடி வந்து போற கட்சித் தலைவரை 101வது வார்டு கவுன்சிலர்னு கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. அந்தளவுக்கு அவரு அடிக்கடி வந்து போறதுல, கட்சிக்காரங்களே ரொம்ப 'டயர்டு' ஆயிட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.


மருதமலையில் பஸ்சில் இருந்து இறங்கும் நேரத்தில் பண்பலையில், ரஜினி பால்காரராக நடித்த படத்தில் இருந்து, சித்ராவின் குரல் சிலிர்ப்போடு ஒலித்தது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement