Load Image
Advertisement

உள்ளாட்சி நியாயங்கள் காயப்படக் கூடாது!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.மேலும், 28 மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்து, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களும் பதவியேற்றுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கிய பணிகள், கிராமத்தின் வரவு - செலவு, கிராம மக்களின் சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு, பாலங்கள், சாக்கடை, பொது கழிப்பறைகள் பராமரிப்பு,கண்மாய் சீரமைப்பு, கிராம பாதைகள் பராமரிப்பு போன்றவையே. கிராம பஞ்சாயத்து துவங்கி, மாவட்ட பஞ்சாயத்துகள் வரை, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பெரும்பாலும் இது போலத் தான் இருக்கும்.

தாராளம்



கிராம பஞ்சாயத்துகளில் செலவிடும் பணம் குறைவாகவும், மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெரிய அளவிலும் இருக்கும்.எனினும், பணி ஒன்று தான். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது ஒன்றே தான், ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் பணி.

அந்த பொறுப்புக்கு வரத்தான், இத்தனை போட்டி, தேர்தல். புதிதாக பொறுப்பேற்று உள்ள பஞ்சாயத்துத் தலைவர்கள் துவங்கி, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள் வரை, எப்படி இருந்தால் மக்களுக்குரிய சேவைகள் கிடைக்கும் என்பதற்கான ஆலோசனை தான் இந்த கட்டுரை.

கிராம நிர்வாகத்தில் உள்ள சாலைகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 'டெண்டர்' விட்டு பராமரிக்கப்படுகின்றன அல்லது பழுது பார்க்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் மேம்பாடு செய்யப்படுகின்றன. நல்லது தான்.ஆனால் முன் போட்டிருக்கும் சாலையை, அது மண் சாலை, சிமென்ட் சாலை, தார்ச் சாலை, இல்லை, 'பேவர் பிளாக்' கல் பதித்த சாலை என எதுவாக இருந்தாலும், பழைய சாலையை முழுவதுமாக அப்புறப்படுத்தி, அதன்பின் சாலை அமைத்தால் நல்லது.

கல் பதித்த சாலைகளில் பெரும்பாலும், 10 - 12 மாதங்களில் கற்கள் பெயர்ந்து விட அல்லது காணாமல் போய் விட, சாலைகள் பல்லாங்குழி ஆகிவிடுவதைப் பார்க்க முடிகிறது.பழைய சாலையில் உள்ள தார், சிமென்ட் போன்றவற்றை அப்புறப்படுத்தாமல், அதன் மேலேயே புதிய சாலைகளை அமைக்கின்றனர்.பழையதை அப்புறப்படுத்தியதாக செலவு கணக்கு இருக்குமா... தெரியாது, அல்லது புதிய சாலை இவ்வளவு உயரம் என, செலவு எழுதி எடுத்துக் கொள்வரா என்பதும் தெரியாது.

ஆனால், பழைய சாலையின் மேல், புதிய சாலை அமைக்கும் போது, சாலையின் தளம் உயர்ந்து விடுகிறது. சாலையை ஒட்டி அமைந்த வீடுகளின் காம்பவுண்டு கதவுகளை திறக்க முடியாத நிலை உருவாகிறது.விளைவு... வீட்டுக்காரர் தன் செலவில் காம்பவுண்டுக்கு ஏற்ப, தன் வீட்டு கதவை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார். சில இடங்களில், அதை விட்டு காம்பவுண்டு தளமே உயர்த்த நேரிடுகிறது.வீடுகளை விட சாலை உயர்ந்தால், பெருமழையின் போது நீர், சாலையின் பக்கத்தில் உள்ள வீடுகளுக்குள் தாராளமாகவே புகுந்து விடுகிறது.

வருமுன் காக்கும் புத்திசாலியான சிலர் வீட்டை, சாலையை விட 6 அடி உயர்த்திக் கட்டுகின்றனர். இதற்கு, செட்டி நாட்டு வீடுகளே சாட்சி.போகட்டும்... சாக்கடை கால்வாய் கட்டுகிறோம் என, நெடுஞ்சாலைகளில் ஆழமாகத் தோண்டி இருக்கும் சாக்கடை கால்வாய் சுவர்களை உயர்த்திக் கட்டுகின்றனர். அப்படி கட்டும் போது அந்த அளவுக்கு சாலையையும் உயர்த்தி விடுகின்றனர்.

'கிரஷர்'



டெண்டர் எடுத்தவர்களுக்கு சந்தோஷம். அந்த கால்வாய்களுக்கு பக்கத்தில் வீடு கட்டி இருப்பவர்கள், அதிலும் கார் வைத்திருப்பவர்களாக இருந்தால், பாதாளத்திற்கு காரை இறக்க வேண்டிய கட்டாயம்.

அதற்காக, ஒவ்வொரு வீட்டிற்கும் மணலை கொட்டி, சரிவு பாதை அமைக்க வேண்டி வருகிறது. இந்த பணியை சாமானியர்களால் செய்ய முடியாது. கார் வைத்திருப்பவர்கள் சரிவு பாதை அமைத்து, உள்ளே இறங்க வழி வைத்தால், அதற்கான செலவு என்ன... அது தரும் சிரமங்கள் என்ன... சாலை உயர்ந்து, வீடு 6 அடி பள்ளத்தில் அமைந்தால், வீதிக்கு நடந்து வர எத்தனை சிரமங்கள்...எனவே சாலை, சாக்கடை டெண்டர்கள் விடுவதற்கு முன் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

அதுபோல, பூங்காவைச் சுற்றி, குளத்தைச் சுற்றி, பேவர் பிளாக் நடைபாதை கற்கள் பதிக்கின்றனர்; வரவேற்புக்கு உரியது தான்; காலை, மாலை நடைபயிற்சிக்கு உதவுகிறது. ஆனால், நடைபாதை கற்கள் திருடு போவதற்கு என்ன காரணம்?சரியாக பதிக்காததா... கற்களுக்கு இடையில் 'கிரஷர்' மண்ணைத் துாவினால், சிமென்ட் வைத்து பூச வேண்டாமா...

கவனம் தேவை



குறைகளை அடுக்குவதாக நினைக்க வேண்டாம். டெண்டர் எடுத்தவர்களுக்கும் லாபம் வேண்டும்; கொடுத்தவர்களுக்கும் வேண்டும். 30 சதவீதம் மாமூல் என, எல்லா வகை செலவுகளுக்கும் நிர்ணயித்தால் உள்ளாட்சிகள் உருப்படுமா?இதை, புதிதாக அமையும் கிராம நிர்வாகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதுமை காலத்தில் பிள்ளைகள் தம்மை பராமரிக்க இரண்டே காரணங்கள் தான் இருப்பதாக சொல்வர். ஒன்று, வளர்த்த முறை; இன்னொன்று சேர்த்து வைத்திருக்கும் சொத்து.இது, ஊராட்சி தலைமைக்கும் பொருந்தும். மக்களின் ஆதரிப்புக்கு காரணம், கிராம வளர்ச்சியில் காட்டும் கருணை அல்லது கொடுத்த காசு.நியாயங்கள் காயப்படுத்தக் கூடாது என்பதில், புதிதாக உள்ளாட்சி பொறுப்பு ஏற்போர், கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்கள் ஆதரவில் வந்தவர்களாக இருந்தாலும் சரி, மனதில் உறுதி எடுத்துக் கொண்டால் உள்ளாட்சிகள் செழிப்படையும்.

'கிராமங்களில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது' என்று சொன்ன காந்தியடிகளின் வாக்கு பொய்க்காமல் இருக்க, புதிதாக வருவோர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சாக்கடைகளில் கழிவு நீர் சீராக போகிறதா என்பதை, துாய்மை பணியாளர்களை வைத்து புகைப்படம் எடுத்து சரிபார்க்கும் மேற்பார்வையாளர்கள், கொஞ்சம் கவனம் செலுத்தி பார்க்க வேண்டிய ஒன்று.

குப்பை வண்டிக்காரர்கள் வரவில்லை எனில், வீட்டு குப்பையை சாக்கடையில் கொட்டுவது எவ்வளவு பெரிய அநியாயம்... கொசு உற்பத்தியாகும் இடங்கள், தேங்கிக் கிடக்கும் சாக்கடைகள் தான் என்பது பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரர்களுக்கு தெரியும். தெரிந்து என்ன பயன்; குப்பை வரி செலுத்துவதை தவிர!

யோசிப்பு



சுடுகாடுகள், இடுகாடுகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன... 'முன் பின் செத்திருந்தால் தானே சுடுகாடு தெரியும்' என்பர். அதாவது, நமக்கு முன்னவர்கள் இறந்தபோது, இறப்புக்கு போக வேண்டிய கட்டாயம் நேரும் போது தான், சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகளில் முறையான தண்ணீர் வசதி இல்லை என்பது தெரிகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள கிராம, நகர்ப்புற நிர்வாகத்திற்கு இது சவால் அல்ல. சரியாக அமைத்துக் கொடுத்து விட்டால், உங்கள் பெயர் கிராம சரித்திரத்தில் இடம் பெறும். சரித்திரம் வேண்டாம், சில்லரை தான் வேண்டும் என நினைப்போர் பெருகி விட்டனரோ...

என்ன செய்வது?



பத்து கிராம ஊராட்சிகள் சேர்ந்து, பொது மின் தகன மேடை அமைப்பது சாத்தியம் தான்... ஒற்றுமையுடன் யோசிக்கப்பட வேண்டிய ஒன்று.பிறப்பு, இறப்பு பதிவை கிராம நிர்வாக அலுவலகத்தில் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் இது ஒரு கட்டாய சேவை. இங்கு பதிவு செய்த தகவல், வட்டார அலுவலகத்திற்கு அனுப்பப்படும். பேரூராட்சி என்றால், அவர்களே சான்று தந்து விடுவர். நல்லது.

வெளிச்சக் கீற்று



ஆனால், வெளிநாட்டில் இறந்து விட்டால், அங்கே இறப்பு சான்றை மிக எளிதாக மருத்துவ மனை, நகர அலுவலகத்தில் பெற முடியும். ஆனால், வாரிசு சான்று இங்கு வாங்குவதற்குள் செத்தவர்கள் அதிகம்.வாரிசு சான்றுக்காக தாலுகா அலுவலகங்களில் முட்டி மோதி, பின் அதற்கான வழிகாட்டிகளை கண்டுபிடித்து பார்த்தாலும், வெளிநாட்டு இறப்பு என்றால், வாரிசு சான்று பெறுவது, குதிரைக்கு அல்லது கழுதைக்கு கொம்பு முளைத்த கதை தான். நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்றம் என்றால் எத்தனை வாய்தா... எப்படியும் இரண்டு ஆண்டுகளாவது ஆகி விடும். ஆனால், வாங்கி விட முடியும் என்பது ஒரு வெளிச்சக் கீற்று.

இதற்கு பதிலாக, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவருக்கே அதிகாரம் கொடுத்து, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்களை வழங்க செய்யலாமே... உள்ளூர்க்காரர்கள் என்பதால் உண்மை தெளிவுபடுமே!இவை எல்லாம் யோசனைகள் தான். தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்ற ஆசை இல்லை. நியாயங்கள் காயப்படக் கூடாது என்ற ஆதங்கம் தான்!

சீத்தலை சாத்தன்

சமூக ஆர்வலர்

தொடர்புக்கு98424 90447, 93858 86315



வாசகர் கருத்து (1)

  • Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் . அது என்ன சென்னை புறநகர் அடுக்கு மாடி குடி இருப்புகளில் ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் நான்கு பெரும் நான்கு வாக்கு சாவடியில் வாக்கு அளிக்க நிர்ப்பந்தம் உள்ளது . அதே மாதிரி வாக்கு சாவடி உள்ள வாக்காளர் பெயர்கள் எதற்காக வரிசைப்படுத்த பட வில்லை ? என்ன சாணக்கியம் . உள்ளூரில் ஆயிரம் பேர் இருந்தால் அடுக்கு மாடி குடியில் ஆறாயிரம் ஏழாயிரம் என உள்ளார்கள் .அடுக்குமாடியில் வசிப்பவர்கள் உள்ளூர் காரர்கள் அல்ல . ஜன நாயகம் இடிக்கிறதே .தேர்தல் நடத்துபவர்கள் காசிலேயே குறியாக உள்ளார்களா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement