Load Image
dinamalar telegram
Advertisement

அந்த ‛ஆனந்தமே' தனி

சென்னையில் இயங்கிவரும் ‛ஆனந்தம்' அமைப்பானது கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை கடந்த எட்டு ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது.நல்ல மதிப்பெண் எடுத்து மேற்கொண்டு படிக்க முடியாமல் இருக்கும் மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்கள் விரும்பும் படிப்பை விரும்பும் கல்லுாரியில் படிக்கவைத்து அவர்களுக்கான விடுதி செலவு உள்ளீட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கெகாள்கிறது.கடந்த எட்டு ஆண்டுகளில் 610 மாணவ மாணவியர் உதவி பெற்றுள்ளனர்.


இந்த அமைப்பின் உதவி பெற்று படித்தவர்கள் தற்போது மருத்துவராகவும்,பெரிய நிறுவனங்களில் ஐ.டி.,ஊழியராகவும், விவசாயத்துறை அதிகாரியாகவும், தொழில் முனைவோராகவும் இன்னும் பல துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கின்றனர்.


இந்த முன்னாள் மாணவர்கள் பலர் ஒன்றினைந்து இந்த வருடம் உயர்கல்வி படிக்க இருக்கும் 112 மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். அவர்களது பணியை பாராட்டும் வகையில் சென்னையில் எம்ஜிஆர் ஜானகி கல்லுாரியில் விழா நடைபெற்றது.விழாவினை ஆனந்தம் அமைப்பின் நிறுவனர் ஆனந்தம் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


நமக்கு எப்படி இப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டதோ அதே போல நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று எண்ணத்தோடு செயல்படுவர் என்று எண்ணி இந்த 86 முன்னாள் மாணவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் நேரம் காலம் பார்க்காமல் எதிர்பார்ப்பிர்க்கும் மேலாக தங்கள் பணியை செய்து கொடுத்துள்ளனர். அவர்களது அந்தப் பணியை பாராட்டுவதற்கான எளிய விழாதான் இது என்று செல்வகுமார் முன்னோட்டத்தில் குறிப்பிட்டார்.


இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் உயரதிகாரி சரவணன்,மற்றும் அமைப்பிற்கு நன்கொடை வழங்கிவரும் தொழிலதிபர்கள் குமாரவேல், செந்தில்நாதன், வெங்கடேஷ், சத்யமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இவர்களில் சத்யமூர்த்தி ஒவ்வொரு வருடமும் அதிகம் பணம் கட்ட தேவைப்படும் பத்து மாணவர்களுக்கான தொகையை வழங்கிவருகிறார். யாருக்கு கொடுக்கிறோம்; அவர்கள் பெயர் என்ன என்பதைக்கூட கேட்டுக் கொள்ளமாட்டார். ஆனந்தம் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்பதில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர்.


அவரது பேச்சு பலரையும் கவர்ந்தது அவர் பேசியதாவது :இங்கேயுள்ள பல மாணவர்கள் பேசும்போது குடிசை வீட்டில் மின்சாரம் கூட இல்லாத சூழ்நிலையில் நன்கு படித்துள்ளதாக தெரிவித்தனர். அது எவ்வளவு சிரமம் என்பது எனக்கும் தெரியம். காரணம் நானும் குடிசை வீட்டில் இருந்து வந்தவன்தான். எனது நிலையை மாற்றியது கல்வி மட்டுமே.எனது கல்வியையும் அனுபவத்தையும் கொண்டு திறமைகளை வளர்த்துக் கொண்டேன். அந்த திறமை என்னை இன்றைக்கு நல்ல இடத்தில் உட்கார வைத்துள்ளது.


என்னை மாற்றிய கல்வி எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று எண்ணினேன். உயர்கல்வி படிக்கப் போகும் போதுதான் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பொருளாதார சிக்கல் வருகிறது. அவர்களை அடையாளம் கண்டு படிக்கவைக்க வேண்டும் என்று எண்ணினேன். மாணவர்களை அடையாளம் காணும் பணியை ஆனந்தம் சரியாகச் செய்வதால் அவர்கள் சொல்லும் ‛டாப் டென்', அதவாது அதிகம் பணம் தேவைப்படும் பத்து மாணவர்களின் நான்கு வருட முழு கல்விச் செலவையும் வருடாவருடம் ஏற்று வருகிறேன்.


என்னால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை சாதாரணமாக வாங்கமுடியும். ஆனால் அந்தப் பணம் இருந்தால் இன்னும் பத்து பேரை படிக்கவைக்கலாமே என்ற எண்ணம்தான் எப்போதும் தோன்றும். கடைசியில் அந்த எண்ணம்தான் ஜெயிக்கவும் செய்யும்.

நம்மால் நாலு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று நினைத்தால் கூட அது அகந்தையாகிவிடும், நமக்கு நாலு பேரை படிக்கவைக்கக்கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது என்றுதான் எப்போதும் எண்ணுவேன். அதனால்தான் நான் என்னால் உதவி பெறும் மாணவர்கள் யார் என்பதைக்கூட தெரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.


இருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் எனது கைபேசியில் விடாமல் ஓரு எண் அழைத்தது சரி யாராக இருக்கும் என்று அந்த போன் எண்ணில் பேசினேன். எதிர் முனையில் இருந்த இளைஞர் மிக உற்சாகமாகவும், சந்தோஷமான பதட்டத்துடனும் பேசினார். நான்தான் சத்தியமூர்த்தி என்று தெரிந்ததும், அவரது வார்த்தைகளில் மகிழ்ச்சி கரை புரண்டு ஒடியது.

சார் நான் சதிஷ்குமார் ,கிராமத்து மாணவனான என்னை மருத்துவபடிப்பு படிக்க வைத்தது தாங்கள்தான் என்பதை அறிந்து எப்படியும் பேச வேண்டும் என்று விடாமுயற்சி செய்து பேசுகிறேன். பேசுவதற்கு காரணம் எனது முதல் மாத சம்பளமான 98 ஆயிரம் ரூபாய்க்கான செக்கை இப்போதுதான் கையில் வாங்கினேன். வாங்கிய உடனேயே உங்களிடம் நன்றி சொல்ல நினைத்தேன் சார் என்றார் அந்த இந்நாள் டாக்டரும் முன்னாள் மாணவருமான சதிஷ்குமார்.


முதல் மாத ஊதியமே இவ்வளவா? என்று கேட்ட போது, நான் பணியாற்றும் மருத்துவ மனையில் உள்ள மருத்துவர்கள் பலரும் கோவிட் வார்டில் பணியாற்ற தயங்கிய போது நான் கோவிட் வார்டே கொடுங்கள் என்று கேட்டு பெற்றேன். அதற்கான சிறப்பு ஊதியம் எல்லாம் சேர்த்துதான் இந்த சம்பளம் என்றார்.


அதிக சம்பளத்திற்காகவா கோவிட் வார்டை தேர்ந்து எடுத்தீர்கள் என்று கேட்ட போது, அப்படி இல்லவே இல்லை. எனக்கு வெறும் கல்வியை மட்டும் ஆனந்தம் தரவில்லை. நல்ல சமுதாய சிந்தனையையும் தந்துள்ளது. அந்த சிந்தனையின் விளைவுதான் நான் கோவிட் வார்டை தேர்ந்து எடுக்க காரணம். என்ற அவரது பதிலில் மெய்சிலிர்த்தேன்.


அதன்பிறகு அந்த மாணவருடன் ஒரு மணி நேரம் பேசினேன். அந்த ஆனந்தமே தனி,இதை விட நமக்கு வேறு என்ன பிறவிப்பயன் இருந்துவிடப் போகிறது. ஆகவே எப்பாடு பட்டவாது நன்றாக படித்துவிடுங்கள். உங்களை உயர்த்திவிட என்னைப் போல எத்தனையோ பேர் இருக்கின்றனர் என்றார்.


அவர் பேசி முடித்த போது அரங்கில் எழுந்த கைதட்டல் அடங்க வெகுநேரமானது.


-எல்.முருகராஜ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    மிகவும் நல்ல காரியம் .படிப்பே ஒருவரை உயர்த்தும் ,ஆனால் நம் நாட்டில் நன்கு படித்தவர்கள் தாங்கள் விரும்பும் படிப்பை தொடர முடியாமல் உள்ளார்கள். அதற்கேற்ப வேலையும் கிடைக்காமல் கிடைத்த வேளையில் செட்டில் ஆகிறார்கள். ஜாதி அடிப்படையில் நன்கு படித்தவர்களுக்கு இடம் கிடைப்பது இல்லாமல் அவர்களின் வாழ்வும் கேள்விக்குரியதாகிறது .வேறு முறைகளில் அவ்வாறு துயருறும் மாணவர்களின் வாழ்வுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும் .அவர்களின் திறனும் நாட்டுக்கு பயன் படுத்தப்பட வேண்டும் .

  • raja - Cotonou,பெனின்

    உயர்ந்த சிந்தனை... மிக உயர்ந்த உச்சத்தை தொடும் என்பதில் சந்தேகமே இல்லை.... உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்... தீர்க்கதரிசி வள்ளுவர் ....

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement