dinamalar telegram
Advertisement

சிறார்களுக்கான தடுப்பூசி : விரைவில் வருவது அவசியம்

Share

கொடிய தொற்று நோயான கொரோனாவுக்கு, நாடு முழுதும் நேற்று முன்தினம் வரை, ௩ கோடியே ௪௦ லட்சத்து 67 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 லட்சத்து ௫2 ஆயிரத்து 124 பேர் இறந்துள்ளனர்.


இந்த கொடிய வைரசை ஒழிக்க, தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலை உருவாகி உள்ளதால் தடுப்பூசி போடும் பணி நாடு முழுதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'கோவிஷீல்டு, கோவாக்சின்' என்ற இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கிட்டத்தட்ட ௧௦௦ கோடி பேர் அவற்றை செலுத்திக் கொண்டனர் என்ற நிலையை, அடுத்த சில நாட்களில் எட்ட உள்ளோம். கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நேரத்தில், 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும் என்ற நிலைமை இருந்தது. பின் அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்தது.


கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், அதனால் இறப்போர் எண்ணிக்கையும்
தற்போது பெருமளவு குறைந்திருந்தாலும், மூன்றாவது அலை தொடர்பாக நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், 2 - ௧௮ வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.
இந்த அனுமதி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெனரல் அலுவலகம் விரைவில் தன் இறுதி ஒப்புதலை வழங்கும் என தெரிகிறது.


கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் வழங்காத நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மொத்தமுள்ள மூன்று கட்ட பரிசோதனைகளில், இரண்டு கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்துள்ளது.முன்னதாக, சைடஸ் கடிலா நிறுவனம் சிறார்களுக்காக 'சைகோவ் - டி' என்ற ஊசியில்லா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. அதுவும் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.


இது தவிர, கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் என்ற இரு தடுப்பூசிகளும் பரிசோதனை நிலையில் உள்ளன. பண்டிகை காலங்கள் முடிந்தவுடன், கொரோனா மூன்றாவது அலை பரவல் மிகப்பெரிய அளவில் தாக்கலாம்; அதில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவ துறையினர் எச்சரித்து வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில், விரைவில் சிறு குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.


அதனால், பெற்றோரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதற்கு ஒரு முன்னோட்டமாகவே, கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த அனுமதி தரப்பட்டு உள்ளது. அது, நல்ல முன்னேற்றம் என்றே நம்பலாம்.


கோவாக்சின் தடுப்பூசியை 2 - ௧௮ வயதிற்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த முழுமையான அனுமதி கொடுத்து விட்டால், பல கோடிக்கும் மேற்பட்டோர் பயன் பெறுவர். அதே நேரத்தில், சிறுவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் போது, அதனால் பக்க விளைவுகள் ஏற்படாது; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; அது பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம். அப்போது தான், பெற்றோர் தயக்கமின்றி தங்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவர். மேலும், சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பி, அதன் வாயிலாக ஆதாயம் தேட முற்படுவோரின் வாயையும் அடைக்க முடியும்.


இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரமும் கிடைத்து விட்டால், தடுப்பூசி திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகள் கொண்டு செல்ல பெரும் உதவியாக இருக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள, ௧௮ வயதிற்கு மேற்பட்டோருக்கு போடப்படும் தடுப்பூசிகள், கொரோனா பரவலை தடுக்கவில்லை என்பது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. மாறாக, கொரோனாவால் பாதிக்கப்படுவோர் அபாய கட்டத்திற்கு செல்வதும், உயிர் பலிகள் நிகழ்வதும் குறைந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. அத்துடன் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதும் ஆய்வுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
அதனால், ௧௮ வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது போல,
சிறார்களுக்கான தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டால், குழந்தைகள் குறித்த
பெற்றோரின் கவலைகள் தீர்ந்து விடும். கொரோனா பீதியும் ஒழியும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement