ஆண், பெண் என இருவரும் ஒற்றுமையாக வாழும் மனநிலை இல்லாத இந்த சமுதாயத்தில், தேச ஒருமைப்பாட்டை பற்றி நினைப்பது மிகவும் கடினமாகவே இருக்கிறது. இந்த சமூக பிழையை பழுதுபார்க்க யாருக்கும் மனமில்லையா அல்லது இயலவில்லையா என்பது தான் நம் முன் நிற்கும் கேள்வி.தனிமை, தனிக் குடித்தனம், தனி மாநிலம், தனி நாடு எல்லாமே ஒரே தன்மையுள்ள குரல்கள் தான்.அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு புறம் இணையமானது உலகத்தை சுட்டு விரலுக்குள் ஒன்றிணைத்தாலும், இன்னொரு பக்கம் ஆரோக்கியமற்ற மனிதர்களால், ஒவ்வொரு மனிதனையும் அது தனிமை சிறையில் வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். முகநுால் பக்கத்தில் நண்பருக்கு உள்ளார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லும் ஒருவன், அடுத்த ஒரு மணி நேரத்தில், அந்த நண்பரை நேரில் காணும் போது கண்டுகொள்வதில்லை.
ஒற்றுமை உணர்வு
அந்த அளவிற்கு இணைய மாயையில் முடங்கிப் போயிருக்கிறான் மனிதன். இணையம் மனிதர்களை ஒருங்கிணைக்கவும் செய்கிறது. இன்னொரு பக்கம் மனிதர்களை தனித்தனியாய் பிரித்தும் போடுகிறது. வார்த்தைகளே ஆயுதங்களாய், இணையத்தில் 24 மணி நேரமும் ஒரு உலகப் போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பொய் செய்திகள், பொழுதுபோக்கு வார்த்தைகளால் அந்த ஆரோக்கியமற்ற இணைய யுத்தம், நிஜ யுத்தமாக காலத்தின் போக்கில் ஒரு நாள் மாறி போகலாம்.
எல்லாவற்றிற்கும் காரணம், ஒற்றுமை உணர்வு இல்லாதது தான். ஒருமைப்பாடு என்ற ஒரு சித்தாந்தம் இருப்பதையே மறந்தது தான். சுயநலமானதாக மாறி விட்டது உலகம். நகரத்தின் குடியிருப்பு வீடுகளில் தண்ணீரை பகிர்ந்து கொள்ளுதல், வாகனத்தை நிறுத்துதல் என, ஒவ்வொருவருக்கும் இடையே ஏராளமான பிரச்னைகள். யாருக்கும் பொறுமை இல்லை. எல்லாரும் சுயநலத்தில் சுருங்கி போயிருக்கின்றனர். இந்த மனநிலையில் இருந்தால் இவர்களுக்கு எங்கே தேசியப் பற்று, ஒருமைப்பாடு உணர்வு வரும்?
சுயநலத்திற்காக தன் கருத்திற்கு ஆதரவாளர்களை வலுவேற்றும் வகையில், ஜாதியையும், மதத்தையும், மொழியையும் பயன்படுத்திக் கொண்டு தான் இருப்பர்.இப்படியே போனால், ஒரு தருணத்தில் பல இளைஞர்களும் தம் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் மனதின் சமநிலையை இழந்து, மனத் தளர்ச்சிக்கு உள்ளாவர். இன்றைய காலக் கட்டத்தில் மொழியுணர்வு, மத உணர்வு, இன உணர்வு என்பன போன்ற நோய்க் கிருமிகளை, இளைஞர்களின் மனதில் உள்ளேற்றி விட்டு, தன்னை பேராளுமைகளாக நிமிர்த்திக் கொள்ளும் தலைவர்கள் பலர்.
இணையத்தில் உலவும் பிரிவினை சார்ந்த கருத்துகளின் மோதல்களை பார்க்கும் போது, வரும் தலைமுறையின் எதிர்காலம் குறித்த அச்சம் பலருக்கும் ஏற்படுகிறது.'இன்றைய குழந்தைகளுக்கு மரியாதையே தெரிவதில்லை' என, பலரும் குறைபட்டுக் கொள்வதை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி கேட்க இயல்கிறது.அதற்கு குழந்தைகளை குறை சொல்லி எந்தப் பயனுமில்லை. அவர்கள் மரியாதையின் உருவத்தை அறியாதவர்கள்; அனுபவிக்காதவர்கள். ஒரு அலைபேசிக்குள்ளேயே தம்மை அமுக்கிக் கொண்டு, தனியே சிரித்தும், அழுதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.அவர்கள் மற்ற குழந்தைகளோடு விளையாடி, நேரம் கழித்தவர்கள் அல்ல. விளையாட்டு அரங்கத்திற்கு சென்று விளையாடிய முந்தைய தலைமுறையைப் போன்றவர்கள் அல்ல.
குடியிருப்பு சண்டைகளையும், உரிமைக் குரல்களையும் கேட்டு வளர்பவர்கள். மரியாதை என்பதை அவர்கள் பார்த்து உணராத வரை, மரியாதை அவர்களுக்கு எங்கே வரும்?போன தலைமுறை குழந்தைகள் விடுமுறை நாட்களில் விளையாட்டு மைதானத்திலேயே சதா விளையாடியும், அளவளாவியும் இருப்பர்.
உரையாடல்
மற்ற மாநிலத்து குழந்தைகள் கூட, அங்கே விளையாட வந்திருப்பர். அங்கே ஒரு விரிந்த மனதிற்கான விசாலமான இடம் உண்டு. அந்த இடங்களைப் போல குழந்தைகளின் மனமும் விசாலப்படும்.மற்ற மாணவர்களிடமிருந்து நல்ல அன்பையும், நல்ல விழுமியங்களையும் கற்றுக் கொள்வர். பலவிதமான கருத்துகளை உள்வாங்கி, தங்களை செம்மைப்படுத்தி இருப்பர். 20 - 30 ஆண்டுகளுக்கு முன் வரை கலைத் துறையை எடுத்துக் கொண்டால் கூட, தேசியத்தைப் பற்றி உணர்வுப்பூர்வமான உன்னதமான உரையாடல்கள் இருக்கும்.நல்ல நாடகங்கள் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தின. இப்போதெல்லாம் ஆரோக்கியமில்லாத சுயநலம் சார்ந்த உரிமைக் குரல்கள் தான் இணையத்திலும், கட்டுரைகளிலும் உரக்க ஒலித்துக் கொண்டுஇருக்கின்றன.வெறுப்பையும், வன்மத்தையும் வளர்க்கும் தொலைக்காட்சி தொடர்கள் தான் அதிகம்.
அன்றைய காலக்கட்டத்தில் நம் வாழ்க்கையோடு ஒருமைப்பாட்டின் அம்சங்கள் பிணைந்திருந்தன.இசை என்பதே மனதை இசைக்க வைக்கும் மாபெரும் உயிர்ப்புள்ள சக்தியாகும். இலக்கணம் தவறாது, இசையை மீட்டும் அதிநுட்பம் சார்ந்த உன்னத கலை அது. அந்த இசையைக் கூட ஜாதியப் பார்வையில் விருப்பு, வெறுப்பை அதன் உள்ளேற்றுவதும், புறக்கணிப்பதும் மிகவும் துரதிர்ஷ்டமானது. நம்மை சுற்றி இருக்கும் சூழலின் எல்லாவற்றின் நல்லவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும்.
அன்றைய காலக்கட்டத்தில் வானொலியில், 'சேர்ந்திசை' என்ற ஒரு வடிவத்தை எல்லாரும் அறிவர். அதை உருவாக்கிய பெருமை பிரபல இசைக் கலைஞர், எம்.பி.சீனிவாசனையே சாரும். ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். அவர், சென்னையில் இளைஞர்களைக் கொண்டு சேர்ந்திசைக் குழுவை உருவாக்கி, எல்லா இசை வடிவங்களையும் அதில் ஒன்றாக்கி ஒரு வடிவத்தை உருவாக்கினார்.கர்நாடக, இந்துஸ்தானி, மேற்கத்திய, நாட்டுப்புற இசை வடிவங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒருமைப்பாட்டை உணர்த்தும் உயிரோட்டமான வார்த்தைகளை, அதன் மேல் ஓடவிட்டு உன்னதமான சேர்ந்திசை வடிவத்தை உலகிற்கு தந்தார்.
அப்போது, சென்னை வானொலியில் ஒலிக்கும் சேர்ந்திசைப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட எல்லா மொழிப் பாடல்களும், அவரது இசை அமைப்பில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு செறிவூட்டின.அந்த பாடல்களைக் கேட்டால் மனதில் இந்திய தேசத்தில் நாம் பிறந்த பலனை நன்கு உணர்வோம்.
கருத்து சுதந்திரம் ஆரோக்கியமானது. ஆனால் கருத்து வன்மம் ஆபத்தானது. தனக்கு சாதகமில்லாத ஒரு விஷயத்திற்காகவே, பல ஆளுமைகளை வெறுப்போடு பார்க்கிறோம். அவர்கள் சொல்லும் பயனுள்ள காரியங்களையும் வெறுப்போடு பகைமை உணர்வுடன் எதிர்க்கிறோம். அவர்களின் தன்னலமற்ற சேவைகளை உதாசீனம் செய்கிறோம். அவர்களின் நல்ல செயல்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறோம்.அவர்களின் மேல் பொய்யான பரப்புரைகள் செய்து, சமூக வேறுபாடு களை வளர்க்கிறோம்.
இதே மனநிலை தான் மதமென்ற போர்வைக்குள் மதம் பிடித்து அலைகிறது. அவரவர் மதங்களிலுள்ள நல்ல விஷயங்களை உள்வாங்கி நம்மை வளர்த்து கொள்வது தான் நாட்டிற்கு ஆரோக்கியமானதாக இருக்கும். இன்னொருவரின் மனதை புண்படுத்துவதற்கோ, தன் மத நம்பிக்கைகளை இன்னொருவர் மீது திணிப்பதோ, மத மாற்றங்களோ, யாவையுமே கடவுளுக்கு எதிரானவை தான். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு யாருடைய மனதையும் புண்படுத்தாமல், நம் பாரம்பரியமான பாரத கலாசாரத்தை போற்றி பாதுகாப்பதே, இந்த உலகிற்கு நம் நாட்டின் மூலம் செய்யும் சீரிய சேவையாகும்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் பூகோள அமைப்பு, மக்கள், மொழி, உணவு, உடை, கலை, கலாசாரம், விளையாட்டு, இசையென எல்லாவற்றிலும் தனித்துவ அழகும், உன்னதமும் இருக்கின்றன.மனதில் எந்த வேறுபாடு உணர்வுகளுமின்றி அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு நல்லவற்றை மற்றவர்களோடு பகிர்ந்தும், பரிமாறிக் கொண்டும், ஆழ்ந்து அனுபவித்தல் தான் உண்மையில் ஒருமைப்பாடு.
ஊர் கோவில்களில் திருவிழாக் காலங்களில் கூட்டாஞ்சோறு வைப்பர். அதில் எல்லா காய்கறிகளும் கலந்திருக்கும். கூடும் மனிதர்களால் மனதிற்கு ஆரோக்கியமும், கூட்டாஞ்சோற்றின் கூடிய சத்துக்களால் உடலுக்கு ஆரோக்கியமும் கிட்டும்.ஆனால், இன்னொருவர் சுவாசித்த காற்றை நான் சுவாசிக்க மாட்டேன் என, இந்த உலகில் ஒருவராவது உயிரோடு வாழ இயலுமா... அன்போடு சார்ந்து வாழும் பண்பே, ஆரோக்கியமான அமைதியை அளிக்கும்.
இந்தியா பன்முகம் கொண்ட நாடு. பல கலை, மொழி, ஜாதி, இனமென்று பன்முகம் கொண்டாலும் ஒரு கலாசார பிணைப்பால் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு.இந்தியாவில் பல ஏற்றத் தாழ்வுகள் இருப்பினும், அமைதியின் அரவணைப்பில் உறுதியுடன் உலகில் உயர்ந்து நிற்கும் நாடு.பன்முகங்களால் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் உலகில் ஜொலிக்கும் நாடு இது. எல்லாருக்கும் பொதுவானது இந்த பூமி. மண்ணின் ஈரத்தில் மலர்கள் பூக்கும். மனதின் ஈரத்தில் தான் மண் வளம் பெறும்; மக்களும் வளம் பெறுவர்.
பாடுபட வேண்டும்நமக்கு இருக்க வேண்டிய முக்கிய நோக்கங்கள், ஏழைகளின் வாழ்நிலையை உயர்த்த வேண்டும். எல்லாருக்கும் கல்வியும், உயர் மனநிலையும், அமைதியும் வேண்டும். ஊழலற்ற நிர்வாகத்திற்காக நாம் அரசோடு, ஒருமைப்பாட்டு உணர்வுடன் உழைக்க வேண்டும்.கலை வடிவங்களுடனான நம் கோவில்களை பேணி பாதுகாக்க வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். பிடித்த ஒரு நடிகரின் உடலசைவு, நடை, உடையென எல்லாவற்றையும் தன்னுள் நகல்களாக்கிக் கொள்ளும் இளைஞர்கள், காந்தியின் எளிமையையும், நேர்மையையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
விவேகானந்தரின் தன்னம்பிக்கை, நேதாஜியின் வீரம், படேலின் உறுதி, கொடி காத்த குமரனின் தன்னலமற்ற தேசப் பற்று, பாரதியின் பரந்த கவி மனது, கலாமின் எளிமை என, நம் நாட்டின் உயர் தலைவர்களின் உன்னத திறன்களை உள்வாங்கி, வரும் தலைமுறைக்கு உணர்வூக்கம் தரும் ஆளுமைகளாக தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் பழுதில்லா ஒருமைப்பாடு!
குமரி எஸ். நீலகண்டன்
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
மொபைல்: 94446 28536
இ-மெயில்: punarthan@gmail.com
மிகவும் அறிவுடைமையான கருதஂதுகளைப் பதிவு செய்துள்ளீர்கள் ஐயா. தாங்கள் ஒரு உலகளாவிய பார்வையிலிக் கட்டுரையை எழுதியுள்ளீர்கள். தமிழ் கூறு நல்லுலகிற்கு இது போன்ற கட்டுரைகள் மிக இன்றியமையாதவை.