dinamalar telegram
Advertisement

'டெண்டர்' விஷயத்தில் மஞ்சள் குளித்த அதிகாரிகள்!

Share

'டெண்டர்' விஷயத்தில் மஞ்சள் குளித்த அதிகாரிகள்!
''எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...'' என பாடியவாறே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''என்னன்னு விளக்கமா சொல்லுங்க...'' என்றார்
அந்தோணிசாமி.

''செங்கல்பட்டு மாவட்டம், மேலமையூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு, அ.ம.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருத்தர் போட்டியிட்டார்... அவர் தரப்புல இருந்து, வாக்காளர்களுக்கு தங்க நாணயம்னு ஒண்ணை கொடுத்துருக்காங்க பா...


''இதனால அவரு தான் ஜெயிக்கிற மாதிரி சூழ்நிலை இருந்துச்சாம்... அந்த பகுதி வாக்காளர் ஒருத்தர், அடகு கடையில, அந்த நாணயத்தை விற்க
போயிருக்காரு பா...

''கடைக்காரர் உரசி பார்த்ததுல அது தங்கமல்ல; தங்க முலாம் பூசப்பட்ட நாணயம்னு தெரிய வந்துருக்கு... இந்த விஷயம், தேர்தல் அன்னைக்கு காட்டு தீயா பரவியிருக்கு...


''அப்புறம் என்ன... ஓட்டு எண்ணிக்கையில அந்த வேட்பாளர் மூணாவது இடத்துக்கு போயிட்டாரு பா...'' என முடித்தார்,
அன்வர்பாய்.

''தேர்தல் அன்னைக்கு திடீர்னு மூச்சு பேச்சு இல்லாம மயங்கி விழுந்த பாபு, இப்ப எப்படி இருக்காருங்க...'' என, கடைக்கு வந்த நபரிடம் விசாரித்தார், அந்தோணிசாமி.

''இதையும் தடுக்கணும் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.


''எதை, யாரு வே தடுக்கணும்...'' என கேட்டார், அண்ணாச்சி.

''தமிழக மின் வாரியம் உபகரணங்கள் வாங்கறது, கட்டுமான பணி ஆகியவற்றை ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலா செய்யறது... இதுக்காக, வருஷத்துக்கு பல கோடி ரூபாய் செலவு பண்றா ஓய்...

''வாரியத்துல, தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் போன்ற முக்கிய பதவிகள்ல இருந்து 'ரிடையர்' ஆகி போறவா, உடனே ஏதாவது ஒரு ஒப்பந்த நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்துடறா ஓய்...

''அவா எல்லாம் அங்கிருந்து, மின் வாரியத்துல தனக்கு கீழே பணிபுரிந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, 'டெண்டர்' ரகசியத்தை கேக்கறது, பணம் வழங்க முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தறதுன்னு, புரோக்கராகவே செயல்படறா ஓய்...

''அரசு துறைகள்ல ரிடையர் ஆறவா, ரெண்டு வருஷம் கழிச்சு தான், வேற நிறுவனத்துல வேலை பார்க்கணும்னு விதியே இருக்காம்...அதை, மின் வாரியத்திலும் செயல் படுத்தணும் ஓய்...'' என விளக்கினார் குப்பண்ணா.

''மக்கள் வரிப்பணத்தை அநியாயமா வீணடிக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''வட சென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை கையாள சமீபத்துல, 'டெண்டர்' விட்டாவ... ஒரே, 'குரூப்'பைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் மட்டும் பங்கேற்குற வகையில, டெண்டர் விதிகளை மாத்தியிருக்காவ வே...

''சாம்பல் கையாளும் இந்த பணியின் மொத்த மதிப்பை விட, ரெண்டு நிறுவனங்களும் அதிக தொகைக்கு டெண்டர் போட்டிருக்கு... அதுல, குறைஞ்ச டெண்டர் என்ற முறையில ஒரு நிறுவனத்தை தேர்வு செஞ்சிருக்காவ வே...

''ஆனா, அந்த தொகையை விட, ரொம்ப குறைஞ்ச தொகைக்கு டெண்டர் சமர்ப்பிக்க பல நிறுவனங்கள் தயாராக இருந்துச்சாம்... ஆனா, அந்த நிறுவனங்கள் எல்லாம் பங்கேற்க கூடாதுன்னு, டெண்டர் விதிமுறையில மாற்றம் செஞ்சிருக்காவ வே...

''இரு மடங்கு அதிக தொகைக்கு டெண்டர் விட்டதுல, அதிகாரிகள் பலர், லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சத்துல மஞ்சள் குளிச்சிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

'மேல் ஒப்பம்' பெற்று கோடிகள் குவித்த அதிகாரிகள்!சாவகாசமாக பெஞ்சில் அமர்ந்த அண்ணாச்சி, ''தலைமைச் செயலக பி.ஆர்.ஓ., தனி அறை இல்லாம அல்லாடிட்டு இருக்கார்னு பேசினோமுல்லா... அதை பார்த்ததும், அவருக்கு தனி அறை ஒதுக்கி குடுத்துட்டாவ வே...'' என்றார்.
''நல்லது நடந்தா சரிதான்...'' என்ற அன்வர்பாய், ''அடுத்த கவுன்சிலர் நான் தான்னு அலம்பல் பண்ணிட்டு இருக்காரு பா...'' என்றார்.

''யாருங்க அந்த ஆளுங்கட்சி புள்ளி...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை டி.பி., சத்திரம் பகுதியில இருக்கிற ஆளுங்கட்சி நிர்வாகி மேல, அப்பகுதி மக்கள் கடும் கொதிப்புல இருக்காங்க... பெட்டிக் கடை துவங்கி பெரிய கடை வியாபாரிகள் வரை, தன்னை அடிக்கடி கவனிக்கணும்னு சொல்றாராம் பா...

''கவனிக்கலைன்னா, 'டார்ச்சர்' கொடுத்து கவனிக்க வச்சிடுறாரு... 'என்னை யாரும் பகைச்சுக்காதீங்க... அடுத்த கவுன்சிலர் நான் தான்'னு, சொல்லியே வியாபாரிகளை மிரட்டிட்டு இருக்காரு பா...

''கட்சியில பெரிய தலைகளே அடக்கி வாசிக்கிறப்ப, இந்த மாதிரி சின்ன சின்ன நிர்வாகிகளால தான், ஆட்சிக்கே கெட்ட பெயர்னு, தி.மு.க.,வினர் புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''வாங்க பாபு...'' என, நண்பரை வரவேற்ற குப்பண்ணாவே, ''நோட்டீஸ் தராம இழுத்தடிக்கறா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்.

''யாருக்கு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு உத்தரவால, ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்ல வாடகை பாக்கி வெச்ச கடைகளுக்கு நோட்டீஸ் குடுத்தாளோல்லியோ... அரண்டு போன வியாபாரிகள், பல வருஷ பாக்கியை, அலறி அடிச்சுண்டு கட்டினா... இதுலயே, 13 கோடி ரூபாய் வசூலானது ஓய்...

''இதே பாணியில, குன்னுார் மார்க்கெட்லயும் வாடகை நிலுவையை வசூலிக்க முடிவு செய்தா... அதுக்குள்ள மார்க்கெட் வியாபாரிகள் பலர், தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் ராமச்சந்திரனை பார்த்து, உதவி கேட்டிருக்கா...

''அவரோ, 'இது மேலிடத்து உத்தரவு... என்னால தலையிட முடியாது'ன்னு சொல்லி அனுப்பிட்டாராம்... ஆனாலும், ஊட்டி மாதிரி இல்லாம, குன்னுார் நகராட்சியில இருந்து, இன்னும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்காம 'லேட்' பண்ணிண்டே இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''மேல் ஒப்பத்துல பல கோடி ரூபாயை சுருட்டியிருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

''புரியற மாதிரி சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''பேரூராட்சிகள்ல குடிநீர் வினியோகம், தெரு விளக்கு, பொது சுகாதாரம் சார்ந்த பணிகளுக்கு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புல உதிரிபாகம், தளவாட பொருட்கள் வாங்குவாங்க... இதுக்காக, பேரூராட்சிகளின் செயல் இயக்குனர்கள் திட்ட மதிப்பீடு தயாரிச்சு, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்களிடம் மேல் ஒப்பம் வாங்கி, கான்ட்ராக்டர்களுக்கு தொகையை விடுவிப்பாங்க...

''கடந்த ஆட்சியில இப்படி, மேல் ஒப்பம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்ட தொகையில, பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடக்கவே இல்லை... அந்த தொகையை உதவி இயக்குனர்கள், செயல் அலுவலர்கள் பங்கு போட்டிருக்காங்க...

''இந்த மேல் ஒப்பம் முறைகேடு, கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி மாவட்டங்கள்ல தான் அதிகமா நடந்திருக்குன்னும் சொல்றாங்க... இதுல நடந்த பணிகளை ஆய்வு செய்தா, பல திமிங்கலங்கள் சிக்குமுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
பேச்சு முடியவே, பெரியவர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    போன ஆட்சியில் கொங்கு மண்டலம் எல்லா வித ஊழல்களிலும் பொங்கி வழிந்தது என்றால் மண்டல அமைச்சர்களின் செல்வாக்கு, முதல்வரின் மாவட்டம், மணிகளின் ஆட்ட பாட்டம் எல்லாம் கொடுத்த தைரியம்தான் வால் ஆடியதில் கிடைப்பது தலைக்கும்தானே போயிருக்கும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement