dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

அ.தி.மு.க., முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்: அ.தி.மு.க., 'பீனிக்ஸ்' பறவை போல், மீண்டும் எழுச்சியோடு எழுந்து நிற்கும். அ.தி.மு.க., 50 ஆண்டுகளில், 30 ஆண்டுகள் ஆளும் கட்சியாகவும், 20 ஆண்டுகள் எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளது. அ.தி.மு.க., இன்றைக்கும் அதிக ஓட்டு வங்கியைக் கொண்ட இயக்கமாக உள்ளது.


'டவுட்' தனபாலு: பீனிக்ஸ் பறவை எரிந்து சாம்பலான பிறகு, அந்த சாம்பலில் இருந்தும் உயிர்த்து எழக் கூடியது. எனினும், அந்தப் பறவை ஒரு கற்பனையே; உலகில் எங்கும் கிடையாது. நீங்கள் சொல்வது படி பார்த்தால், அ.தி.மு.க., முற்றிலும் அழிந்து, அதன் பின் தான் எழுமோ என்ற, 'டவுட்' வருகிறதே!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
சிங்கள வீரர்களுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இது, இலங்கைத் தமிழர் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும். இந்தியா வழங்கும் ராணுவ உதவிகள், இலங்கை தமிழர்களுக்கு எதிராகத் தான் பயன்படுத்தப்படும். இந்த முடிவை இந்திய அரசு கைவிட வேண்டும்.


'டவுட்' தனபாலு: இந்திய ராணுவம் பயிற்சி கொடுக்க மறுத்தால், சீனா பயிற்சி கொடுக்கும்; பாகிஸ்தான் பயிற்சி கொடுக்கும். அதுவும், நம் எல்லைக்கு அருகில் இருந்தபடி. அதை ஏற்றுக் கொள்வீர்களா... எனவே, இலங்கை விவகாரத்தை விட்டு, நம் நாட்டு மக்கள் நலனை எப்போது தான் கருதுவீர்களோ என்பதே, உங்கள் கட்சியினரின், 'டவுட்' ஆக உள்ளது!


தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்
: வரும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், பட்டாசு வெடிப்பதில் இருந்து மக்கள் மனம் திரும்ப வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்பதற்காக, அனல் மின் திட்டங்களை தடை செய்யவில்லை. வானில் விமானங்களையும், கடலில் கப்பல்களையும், சாலைகளில் வாகனங்களையும் இயக்காமல் இல்லை. பட்டாசு தொழிலை நம்பி பல லட்சம் பேர் நம் மாநிலத்தில் உள்ளனர். அவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள். உங்கள் முதல்வர் சரியானபடி யோசிக்கிறார். நீங்கள் அதை மறுத்து பேசுகிறீர்களே... முதல்வர் சரியாக உங்களை, 'டிரைனிங்' பண்ணவில்லையோ என்ற, 'டவுட்' வருகிறது!ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு
: கோவில் வருவாயில் வழங்கும் சம்பளம், ஹிந்துக்களுக்காகத் தான் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் இயங்கும் கல்லுாரிகளில், ஹிந்துக்கள் மட்டுமே பணிக்கு நியமிக்கப்படுகின்றனர்.'டவுட்' தனபாலு: கோவில் வருமானத்தை, ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி, பல தரப்பினருக்கும் மடை மாற்றி விடுவதாக புகார் இருந்தது. இப்போது தான், இதுபோன்ற திடமான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துள்ளது. நல்லது. இப்படி எல்லாம் செய்தால் தான், தமிழகத்தில், பா.ஜ.,வை தலைதுாக்க விடாமல் செய்ய முடியும் என திட்டமிட்டு செயலாற்றுகிறீர்களோ என்ற, 'டவுட்' பக்தர்களுக்கு வந்துள்ளது!


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் பல போராட்டங்களை நடத்தி, எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எனினும், அந்த எதிர்ப்பை கடுகளவு கூட பொருட்படுத்தாமல், மத்திய அரசு, தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது.


'டவுட்' தனபாலு: போராட்டங்களால் எந்த பிரச்னையையும் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று, இப்போவாவது புரிந்து கொண்டீர்களா... எனவே, அப்பாவி மக்களை இன்னமும் ஏமாற்றாமல், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்விலிருந்து அவர்களை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். குறிப்பாக, மரபு சாரா எரிசக்தி விஷயங்களை கூறுங்கள். அப்படி எல்லாம் செய்தால், கட்சியில் கட்டம் கட்டி விடுவர் என யோசிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: 'தீபாவளியின் போது, இந்திய மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆகவே, பட்டாசுகளை தடை செய்ய வேண்டாம்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின், நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை வரவேற்கிறோம். அதுபோல, பட்டாசு வெடிக்க தமிழகத்தில் நேர கட்டுப்பாடுகளையும் அகற்ற வேண்டும்.


'டவுட்' தனபாலு: ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த ஹிந்து மத எதிர்ப்பு, ஹிந்து பண்டிகைகள் புறக்கணிப்பு போன்றவை, முதல்வரிடம் இருந்து மறைந்துள்ளதை சமீப காலமாக காண முடிகிறது. பா.ஜ., மற்றும் ஹிந்துக்களின் கோரிக்கையை ஏற்று, கோவில்களை, அனைத்து நாட்களிலும் திறந்துள்ள முதல்வர், உங்களின் இந்த கோரிக்கையையும் ஏற்பார் என்பதில், 'டவுட்டே' இல்லை!

Share
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, கிரிக்கெட்டில் சதம் என்று பட்டாசு வெடித்தால் சுற்றுச் சூழல் பாதிக்காது தீபாவளிக்கு வெடித்தால்தான் பாதிப்பு வரும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement