Load Image
dinamalar telegram
Advertisement

ஒலைக்குடிசையில் ஏழைகள் வழங்கும் உன்னத சாப்பாடு

திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது கிலோமீட்டரில் ரோட்டை ஒட்டி அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு பள்ளத்தில் ஒடுங்கிக் கிடக்கிறது செவன் ஹில்ஸ் சைவ உணவு விடுதி.
செவன் ஹில்ஸ் என்று எழுதப்பட்ட நைந்து கிழிந்து போன ஒரு பழைய பேனர் மட்டும் அங்கு இல்லை என்றால் அந்த உணவு விடுதியை கண்டுபிடித்தே இருக்க முடியாது.

‛இங்கே மதிய சாப்பாடு சாப்பிட்டு பாருங்கள் வித்தியாசமாக உணர்வீர்கள்' என்று நண்பர் ஒருவர் சொன்னதன் போில், உணவு விடுதியை தேடிக்கண்டுபிடித்து வாகனத்தை கொண்டு போய் அங்கே நிறுத்தியதும், ஒலைக்குடிசைக்குள் இருந்து வயதான ஒரு தம்பதியினர் ஆர்வத்தோடு எழுந்து வந்து, ‛சாப்பிட வந்திருக்கீங்களா? வாங்க..வாங்க'.என்று கூப்பிட்டனர்.மொத்தம் மூன்று குடிசைகள் உள்ளன இரண்டு குடிசைகளில் கல்லிலான சாப்பாடு மேஜை போடப்பட்டுள்ளது மூன்றாவது குடிசை தம்பதிகளின் சமையல் அறையாகவும் ஒய்வறையாகவும் விளங்குகிறது.இது தவிர மரத்திற்கு கிழ் திறந்த வெளியில் ஒரு கல் மேஜை உள்ளது, இதமான காற்று வீசியதால் திறந்த வெளி மேஜையில் உட்கார்ந்து சாப்பிடுவது என்று முடிவு செய்தோம்.
கொஞ்சம் பொறுத்துக்குங்க என்றவர் சமையல் கூடத்திற்குள் சென்றார் சிறிது நேரம் கழித்து அவரும் அவரது மனைவியுமாக சேர்ந்து அருமையான சாப்பாட்டைக் கொண்டு வந்து பரிமாறினர்.
முழு வாழை இலையில் சுடச்சுட சோறும் அதில் போட்டுக் கொள்ள முருங்கைக்கீரை பொடி நெய் கொடுத்தனர்,அதைச் சாப்பிடுவதற்குள் ஐந்து வகையான காய்கறி கூட்டுடன் கீரை வடை அப்பளம் வாழைப்பூ பொரியல் சாம்பார், சுண்டைக்காய் குழம்பு,ரசம் தயிர் கடைசியில் பாயசம் என்று அணிவகுத்து வந்தது எல்லாமே ‛அன்லிமிடெட் 'வடை வேண்டுமானாலும் கூடுதலாக கேட்டு வாங்கி சாப்பிடலாம்
வீட்டு சாப்பாட்டின் சுவையை ஒவ்வொரு பருக்கையும் சொல்லியது எதுவுமே திகட்டவில்லை சாப்பிட்டு முடிந்ததும் மனதும் வயிறும் ஒரு சேர நிறைவடைய அவர்களை மனதார வாழ்த்தினோம் மற்றவர்களை சாப்பாட்டின் மூலம் சந்தோஷப்படுத்தும் இவர்களுக்குள் ஒரு சோக கதை உள்ளது
அந்தக் கதையை நீங்களும்தான் கேளுங்களேன்..
பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கேதான், எம்ஜிஆர் முதல்வரா இருந்தப்ப சொந்த தொழில் துவங்கும் இளைஞர்களுக்கு மானியம் கொடுத்து உதவினார் அந்த உதவியின் காரணமாக ஒட்டல் தொழிலை இளஞைனாக இருக்கும் போதே துவங்கிவிட்டேன்.
தொழில் ரொம்ப சிறப்பா இருந்துச்சு என் மனைவி நிர்மலா நல்லா சமையல் செய்வாங்க அவுங்க மேற்பார்வையில் டிபன்,சாப்பாடு,இரவு உணவு எல்லாம் கொடுத்தோம்.இந்த இடத்தில் 27 சென்ட் இடம் எனக்கு சொந்தமாக இருந்தது.திருப்பதி போகும் பஸ்கள் கார்களில் பயணிக்கும் பயணிகள் எல்லாம் இங்கே சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வர்.
எப்போதும் ஜே..ஜே..ன்னு கூட்டம் இருக்கும் இருபது பேர் வேலை பார்த்தனர் .எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் என்னிடம் இருந்து பெரும்பாலான இடத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டது, அதன் பிறகு எங்கள் இடமும் வாழ்க்கையும் சுருங்கிப் போனது.வாகன நிறுத்தம் இல்லாததால் கூட்டம் ரொம்பவே குறைந்து போனது இப்போது யாராவது பழைய வாடிக்கையாளர்கள் தேடி வந்து சாப்பிட்டால்தான் உண்டு.
ஆகவே யாரையும் நம்பி சமைக்க முடியாது, காலை இரவு உணவு என்பது யாராவது எப்போதாவது வந்தால்தான் உண்டு, மதியம் மட்டும் ஒரு நாளைக்கு ஐந்தில் இருந்து பத்து பேர் வரை சாப்பிடவருவர்.இந்த ஐந்து, பத்து பேர் சாப்பிட்டு கொடுக்கும் பணத்தில்தான் எங்கள் வாழ்க்கை ஒடுகிறது இல்லையில்லை மெதுவாக நகர்கிறது.
இப்ப எனக்கு 62 வயது மனைவி நிர்மலாவிற்கு 57 வயது சம்பளம் கொடுக்கும் அளவிற்கு வருமானம் கிடையாது என்பதால் வேலைக்கு ஆட்கள் யாரும் கிடையாது காய்கறி நறுக்குவது முதல் சமைத்து பரிமாறுவது வரை நாங்களேதான் பார்த்துக் கொள்கிறோம்.
எங்க சாப்பாடை சாப்பிட்டவங்க திரும்ப எங்ககிட்டதான் வருவாங்க ஆனால் எங்களாலதான் இன்னும் எத்தனை நாளைக்கு ஒட முடியும்னு தெரியலை மனசு ஒத்துழைக்கிற அளவிற்கு உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது.எங்களுக்கு ஒரே மகன் நிகழ்காலமும் எதிர்காலமும் இல்லாத இந்த தொழில் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு வேலை தேடி வெளியூர் சென்றிருக்கிறான்.
என்னோட இடத்தை அரசாங்கம் எடுக்கும் போது உரிய இழப்பீடு தரப்படும்னு சொன்னாங்க ஆனால் அது இன்னும் முழுமையா வரலை அதோட எம் பிள்ளைக்கு அரசாங்க வேலை தர்ரேன்னாங்க அவனும் வளர்ந்து படிச்சுட்டு தயராயிருக்கான் எங்களுக்கு உரிய இழப்பீடும் மகனுக்கு ஒரு வேலை வாய்ப்பும் தந்தால் போதும் நாங்க கொஞ்ச நாள் நிம்மதியா வர்ரவங்களுக்கு சமைச்சு போட்டுட்டு இருப்போம்
இது குறித்து கொடுக்காத மனுக்கள் இல்லை பார்க்காத அதிகாரி கிடையாது ஆனாலும் விடமால் முயற்சிக்கிறோம் என்கிறார் யாராவது ஒரு அதிகாரி எங்கள் வாழ்க்கையில் விளக்கேற்றாமலா போவார் என்கிறார் நம்பிக்கையோடு.
அவருக்கான நிம்மதியையும் சந்தோஷத்தையும் அரசு தருமா?
அடுத்த முறை திருத்தணிக்கோ அல்லது திருத்தணி தாண்டி திருப்பதிக்கோ போகக்கூடியவர்கள் கோவிந்தசாமியின் ஒட்டலில் சாப்பிட்டுவிட்டு போங்கள் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டால்தான் அவர்கள் சாப்பிடவேண்டும் அவரது போன் எண்:93808 25285.
-எல்.முருகராஜ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    முகமலர்ந்து உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போரே

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement