தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தங்களது கட்சிக்கு மக்கள் தந்த படுதோல்வியை மறைத்துள்ளனர்; தேர்தல் ஆணையத்தை கொச்சைப்படுத்தி உள்ளனர்.
'டவுட்' தனபாலு: இப்படித் தானே, கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பல தேர்தல்களில் வெற்றி பெற்ற போது, தி.மு.க.,வும் கருத்து தெரிவித்தது... 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தையே மாற்றி விட்டனர்' என்று கூட சொன்னதே. எனவே, முன் ஏர் செல்லும் வழியில் தான் பின் ஏரான அ.தி.மு.க.,வும் வரும் என்பதில், தமிழக மக்களுக்கு, 'டவுட்டே' இல்லை!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்: உள்ளாட்சியில் தன்னாட்சி என்ற லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி, தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை பாராட்டுகிறேன். ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி. எங்களின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்.
'டவுட்' தனபாலு: உண்மையிலேயே உங்கள் கட்சி வேட்பாளர்களை பாராட்டத் தான் வேண்டும். நீண்ட கால பாரம்பரியம் மிக்க கட்சிகள் போட்டி போடுகையில், அவர்களும் போட்டியிட்டு, கட்சி இருப்பை காட்டியுள்ளனர். எனினும், தொடர்ந்து பல தேர்தல்களில் படுதோல்வியே பரிசாக கிடைப்பதால், இனிமேல் இப்படி இருப்பரா என்பது, 'டவுட்' தான்!
பத்திரிகை செய்தி: வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறந்து, பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் வகையில், ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இரவு 11:00 மணி வரை கடைகள் செயல்படவும், மழலையர், நர்சரி பள்ளிகளை திறக்கவும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதேநேரத்தில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு மட்டும் தடை நீடிக்கிறது.
'டவுட்' தனபாலு: 'கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், கோவில்களை மூன்று நாட்கள் திறந்தால் மேலும் பரவும்' என கூறி, பல மாதங்களாக தமிழக அரசு மூடி வைத்திருந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கவர்னரை முதல்வர் சந்தித்து பேசினார். அப்போது, 'கோவில்களை திறக்கலாமே...' என, கவர்னர் அறிவுரை வழங்கிஇருப்பாரோ என்ற, 'டவுட்' தமிழக மக்களுக்கு வருகிறது!
'டவுட்' தனபாலு
வாசகர் கருத்து (1)
சட்டமன்றத் தேர்தலில் கொஞ்சம் மிஞ்சியிருந்த மரியாதையும் உள்ளாட்சி தேர்தல் முடிவில் சுத்தமாக துடைத்துக்கொண்டு போய்விட்டது