Load Image
dinamalar telegram
Advertisement

அகிலம் ஈர்க்கும் அதிரம்பாக்கம்!

பேராசிரியர் சாந்தி பாப்பு, சென்னை பாரம்பரியக் கல்வி மையத்தில் புதைபொருள் ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர். வெளிநாட்டு ஆய்வாளர்கள் சிலருடன், அவர் தலைமையிலான குழு, ஒரு கண்டுபிடிப்பை 2011 - பிப்ரவரி 2; 2018 பிப்ரவரி 1 - வெளியுலகுக்கு தெரிவித்திருந்தது.

உலக ஆய்வாளர்களை அது பெரிதும் ஈர்த்திருக்கிறது; மேலும், தமிழகத்தில் சில யூகங்களுக்கும் அது உரமிட்டிருக்கிறது. பூமியில் மனிதன் தோன்றிய காலம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆகும். முதன்முதல் இனத்திலிருந்து, பல படிநிலைகளைக் கடந்து, இன்றைய மனித இனம் தழைத்திருக்கிறது. ஒவ்வொரு படிநிலையிலும், இனங்கள் பயன்படுத்திய கருவிகள் தான், அவை வாழ்ந்திருந்த கால எல்லைகளைக் கண்டறிய உதவும் பொருட்களாகும்.

தம் கருவிகளை மேம்படுத்தி, தேவைகளை எளிமையாக்கி கொண்ட பண்பிலேயே, இனங்கள் படிநிலையில் உயர்கின்றன. மனித இனம் முதன்முதலாகப் பயன்படுத்தியது, பெரும்பாலும் கல்லால் உருவாக்கிய கருவிகள் தான். அவை பயனில் இருந்த காலநீட்சி 25 லட்சத்தில் இருந்து கி.மு., 3,000 ஆண்டுகள் வரை என, தோராயமாக வரையறை செய்திருக்கின்றனர்.செம்புக் காலம், இரும்புக் காலம் என்றெல்லாம் தொடர்ந்து, இன்று மின்னியல் காலம் வரை, மனித இனத்தின் அறிவாற்றல் முன்னேற்றம் கண்டிருக்கிறது.

கற்கருவிகள் காலத்தால் பெரிதாக அழிவதில்லை; அவை மழுங்கியோ, உடைந்தோ, பயனற்றுப் போகும்போது புறக்கணிக்கப்பட்டு, பின், ஒரு காலத்தில் நிலச்சரிவு போன்ற நிகழ்வு களால் புதை-பொருட்களாகி விடுகின்றன. அவை இப்போதைய அறிவியல்- தொழில்நுட்ப யுகத்தில், ஆய்வு உள்ளீடு களாக மாறி, மனிதத் தோற்றம், அவர்களின் புலப்பெயர்ச்சி, பண்பாடு பற்றிய பல அரிய உண்மைகள் வெளிவர உதவிக் கொண்டிருக்கின்றன.

கருவிகளின் தன்மையை வைத்து, மனிதனின் அறிவாற்றல் வளர்ச்சியையும், பண்பாட்டையும் அறிய முடிகிறது.உலகின் பல பகுதிகளில், இப்படி புதை பொருட்களாக கிடைக்கும் கற்கருவிகளின் அளவு, கூர்மை, முகங்கள் போன்ற பண்புகளை வைத்து, புதை பொருள் ஆய்வாளர்கள் பழங்கால மனித இனங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உலகப் புதை பொருள்ஆய்வுகள்:சமீப காலம் வரையிலான உலக புதை-கற்பொருள் ஆய்வுகளில் கிடைத்த குறிப்பிடத்தக்க ஒரு கண்டுபிடிப்பு, இன்றைய மனித இனம், ஆப்ரிக்க கண்டத்தில் 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்து, பின் இரு காலகட்டங்களில், 14 லட்சம் மற்றும் 8 லட்சம் ஆண்டுகள் முன்பு மேற்காசியக் கிழக்கு, 'மெடிட்டெரேனியன்' நிலப்பரப்பான, 'லெவன்ட்' பகுதியில் உள்ள இஸ்ரேலுக்கும், பின் ஐரோப்பாவுக்கும், தெற்காசியாவில் இந்தியாவுக்கும், 5 - -6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும் பரவியுள்ளது.

சீனாவில், ஏறக்குறைய இஸ்ரேலுக்கு இரண்டாம் கட்டமாகப் பரவிய காலகட்டத்தில் 8 லட்சம் ஆண்டு களுக்கு முன்பு, அதே இனம் காணப்பட்டது; ஆனால், ஆப்ரிக்காவில்இருந்து அது வந்ததற்கான சான்றுகள் இல்லை.

அதிரம்பாக்கம் ஆய்வுகள்இந்நிலையில், மிக சமீப காலத்தில் சாந்தி பாப்பு குழு வெளியிட்டிருக்கும் கண்டுபிடிப்பு: 'மனித இனம் ஆப்ரிக்காவிலிருந்து நேராக வந்து சேர்ந்தோ அல்லது இஸ்ரேலில் முதற்கட்டமாகப் பரவியதும், அங்கிருந்து வந்தோ இந்தியாவில் குடியேறியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பாவில் பரவியதற்கு ஏறக்குறைய 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியப் பரப்பில் வாழ்ந்திருக்கிறது. பின், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பரவியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், பூண்டி அருகே அமைந்துள்ள அதிரம்பாக்கம் எனப்படும் ஆற்றம்பாக்கத்தில், இந்தக் குழுவினர் ஆழ்குழிகள் தோண்டிச் சேகரித்த, இருமுகக் கல்- - கைக் கோடலிகள், கூரான கல்- செதில்கள் இதுபோன்ற கருவிகளை உருவாக்கியபோது உதிர்ந்த துகள்கள், உடைந்த செதில்கள் உள்ளிட்ட 3,500 கற்கருவிகள், தோராயமாக 15.1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்- கடைக் கற்காலப் பகுதியில் -உருவாக்கப்பட்டு புதைபொருட்களாகி இருப்பதற்கான காரணங்களை, தம் கட்டுரைகளில் பதிவு செய்திருக்கின்றனர்.

தமிழருக்கு மகிழ்ச்சியையும், உலகுக்கு ஈர்ப்பையும் கொடுக்கும் ஒரு செய்தி இதுதான்: இதுகாறும், ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மனித இனம் பரவிய காலம் மிகப் பிற்பட்ட 5-6 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று நம்பியிருந்தோம்; இல்லை, இல்லை... உண்மையில், பரவல் நிகழ்ந்த காலம் அதற்கும் 15.1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியதாகும்.

நினைவில் கொள்வோம்... கிழக்கு ஆப்பிரிக்கா - 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு; இஸ்ரேல் -1 - -14 ல.ஆ.மு., இஸ்ரேல் -2 - 8 ல.ஆ.மு., ஐரோப்பா, இந்தியா - 5-6 ல.ஆ.மு., அதிரம்பாக்கம் - 15.1 ல.ஆ.மு., மற்றும் சீனா - 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு.'தமிழர் பரம்பரை அதாவது இந்திய பரம்பரை, ஆப்ரிக்க பரம்பரைக்கு அடுத்து, இஸ்ரேல் பரம்பரை போல, மிகப் பழமையான ஒன்று...' என உரக்கச் சொன்ன, பேராசிரியர் சாந்தி பாப்புவுக்கு நன்றி கூறுவோம்.

யூகமா, உண்மையா?நம்மை இப்போது துரத்தும் ஓர் யூகம் தான், சிந்தனைக்குத் தீனியாகியுள்ளது. 'அதிரம்பாக்கத்தில் தான் முதல்- மனிதன் தோன்றினான்; ஆகவே, தமிழன் தான் பூமியில் தோன்றிய முதல்- மனிதன்' என்பது தான் அது! இந்த யூகம் மேடைகளிலும், ஊடகங்களிலும் பலமுறை வெளிச்சம் காட்டியிருக்கிறது. சாந்தி பாப்பு குழுவினர் இந்த யூகத்தைக் கிளப்பவில்லை. அவர்கள் தெரிவிப்பது, 'இந்தியப் பரம்பரை ஆப்ரிக்க பரம்பரைக்கு ஏறக்குறைய 90 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிந்தைய ஒன்று.

இஸ்ரேல் பரம்பரைக்கு ஒத்தது. மேலும், இம்முடிவுகள் புதை- கற்கருவிகளின் கால அளவுகளில் இருந்து மட்டும் பெறப்பட்டுள்ளது. எலும்பு, பற்கள் போன்றவற்றின் மரபணுக்களின் ஆய்வுகள் வழியாக கிடைத்தவை இல்லை என்றும் தான்! நம்மில் சில ஆர்வலர்கள் தான், இந்த நற்பெருமைச் செய்தியைக் கிளப்பி, புளகாங்கிதம் கொண்டுள்ளனர்.

இப்போது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை இரண்டு...முதலாவது, இந்த உயரிய வகை புதை பொருளாய்வு, அதிரம்பாக்கத்தில் மட்டுமே நடந்துள்ளது. இந்தியாவில் வேறு பகுதிகளில் நடந்திருக்கும் ஆய்வுகள், இவ்வளவுக்குத் துல்லியமானவை இல்லை.இரண்டாவது மிக முக்கியமானது, 'பூமியின் மற்ற பகுதிகளை விட, ஆப்பிரிக்காவில் ஓர் ஏதுவான, நீண்டு நிலைத்திருந்த பருவநிலை, ஒரு காலகட்டத்தில் இருந்தது தான் அங்கு மனிதன் தோன்றக் காரணம்...' என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருப்பது!

முதிய ஆப்ரிக்கத் தாய்'கடந்த 50 லட்சம் ஆண்டுகாலத்தில் 32 கால- அளவுகளில், பருவநிலை மாற்றங்கள் அதிகமாக இருந்தன; அவற்றுள் எட்டுக் கால- அளவுகள் மிகக் கூடுதலான மாறுபாடுகளோடும், மிக நீண்டும் இருந்திருந்தன. 'நான்காவது-, ஐந்தாவது கால- அளவுகளில் மனிதனின் முதல் இனம் தோன்றியது.'பின், பல படிநிலைகளைத் தாண்டி, 200- - 300 ஆயிரம் ஆண்டுகளில், முழுவளர்ச்சி கண்டு, இன்று வரை தொடர்வது, இப்போதைய மனித இனம்...' என்று புவி ஆய்வாளர்கள் பாட்ஸ் என்பவரும், பெய்த் என்பவரும் தெரிவிக்கின்றனர்.

மனித இனம் பிறப்பதற்கு ஏதுவான சூழ்நிலை இருந்த காலம், மேற்குறிப்பிட்ட 23 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளின் போதாகும். இதற்கு அருகான ஒரு காலக்கட்டத்தில் தான், ஆப்ரிக்காவில் வாழ்ந்திருந்த மனித முன்னோடிகளுக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.சறுக்கும் சான்றுகள் அதிரம்பாக்கப் பரப்பில் அல்லது முழு இந்தியப் பரப்பில் - இத்தகைய புவியியல், பருவ நிலை மாற்றங்களும், பிறகு, ஒரு நிலைப்புத் தன்மையும் ஏற்பட்டுள்ளனவா என்பது தெரிய வேண்டியுள்ளது.

இந்தியாவிலிருந்து 9,000 கி.மீ., தொலைவில் இருக்கும் இந்தோனேஷியாவில் 74 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அப்படியொரு பெரும் எரிமலை- வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. அவ்வெடிப்பில் இருந்து கிளம்பிய சாம்பல் துகள்கள் வடமாநிலத்தில் தபா பகுதி வரை விழுந்து இருக்கின்றன; இந்த வெடிப்பு, அங்கு வாழ்ந்த மக்களைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

தபா மக்கள் அப்போது பயன்படுத்திய கற்கருவிகள், அப்பகுதியைச் சார்ந்தவை. அக்கருவிகளை இந்தச் சாம்பல் படிவுக்கு முந்தியன, பிந்தியன என்று வகைப்படுத்தி, காலக்கணிப்புச் செய்கின்றனர். அக்கருவிகளின் தொழில்நுட்பத்தை வைத்து, அவற்றை ஆப்ரிக்க, இந்தோனேஷியா கருவிகளோடு ஒப்பீடு செய்கின்றனர்.

மனித இனத்தின் முதல் முன்னோடிகள் ஆப்ரிக்காவில் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, 17- - 18 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்து, சில படிநிலை வளர்ச்சிகளைத் தாண்டி, 'ஹோமோ எரெக்டஸ்' வடிவை அடைந்திருக்கின்றனர். இந்த வடிவில், பின் அவர்கள் பூமியின் வேறு பகுதிகளுக்கு பரவியிருக்கின்றனர்.

இந்த இனத்திலிருந்து தான், மூன்று லட்சம் ஆண்டுகளுக்குப் பின், இன்றைய மனித இனம் படிநிலையில் வளர்ச்சி பெற்று உயர்ந்து, இரண்டு லட்சம் ஆண்டுகளில் முழு மூளை வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இப்போது இந்தோனேஷியா, தபா, அதிரம்பாக்கம் பகுதிகளில் கிடைத்திருப்பது, 'ஹோமோ எரெக்டஸ்' இன வகையின் அடையாளங்கள்!

அதிரம்பாக்கம் புதை-கற்கருவிகள் வழியிலான ஆய்வுகளால், இன்றைய மனித இனம் அங்கு வாழ்ந்திருக்கும் என யூகிக்க முடியாது; பாப்பு குழுவினர் அந்த யூகம் கொள்ளவில்லை.

இந்தப் பதிவுகளிலிருந்து, ஆப்ரிக்க மக்களின் பரம்பரை, ஒரு லட்சம் ஆண்டுகளாவது மற்ற நாடுகளின் மக்களையும் விட முந்தியது என்பதை, இப்போதைக்கு ஏற்பதில் தவறு இருக்க முடியாது.ஆம்... நம் இன்றைய பரம்பரையை, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் தள்ளி உறுதி செய்து விட்டன, அதிரம்பாக்க ஆய்வுகள்! .ஆனால், இன்னும் நம் மொழியின் தோற்றம், இசையின் தோற்றம் பற்றி, இந்த ஆய்வுகள் எதுவும் குறிப்பாகத் தெரிவிக்கவில்லை.
'மொழி, மொழிக் குடும்பங்கள் பற்றிய ஆய்வுகள், 'ஹோமோ சேப்பியன்' இனம் தழைத்த, இன்றைக்கு முன் 50 ஆயிரம் ஆண்டுகளில் இருந்தே துவங்க வேண்டும்...' என்ற கருத்தையோ, 'நியாண்டர்தல்' இன வாழ்வுக் காலத்தில் 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில்- கிடைத்தவை தான் முதல் புதை- இசைக்கருவிகள்' என்ற கருத்தையோ மாற்றிக்கொள்ளும் அளவுக்கு, அதிரம்பாக்கம் ஆய்வுகள் எந்த ஐயத்தையும் எழுப்பவில்லை.

இசையும் மொழியும் மூளைச் செயல்:தமிழராகிய நமக்கு, மூத்த செழுமிய, இலக்கிய,- இலக்கண- இசைச் சொத்துக்கள் இருக்கின்றன. அவற்றை வைத்து மட்டும் நம் மொழியின், இசையின் முதல் தோற்றத்தை அறிய வாய்ப்பு இல்லை. உலகில் இதுவரை ஆய்வுகளுக்கு கிடைத்த புதை பொருட்கள், கற்கருவிகள், எலும்பு, தந்தம் போன்ற சிதையா வகைப் பொருட்களாலான இசைக்கருவிகள் மட்டுமே! இசையும், மொழியும் மனித மூளையின் அறிவாற்றல் மற்றும் மோட்டார் செயல்பாடுகளால் உருவானவை, விரிவானவை.

ஓமோ எரெக்டஸ் இனத்தின் மூளை புதை-பொருளாய்ப் படியவில்லை. சதைப்பாகங்கள் சிதைந்து, மண்டையெலும்புக் கூடுகள் மட்டுமே ஆங்காங்கு கிடைத்திருக்கின்றன. இந்தியப் புதைபொருள் ஆய்வுகள் இதுவரை ஒரேயொரு மண்டையோட்டை, அதுவும் தாடையெலும்புகள் இல்லாத, மேல் பாகத்தை மட்டுமே நர்மதா பள்ளத்தாக்கில், ஒரு கிராமத்தில் கண்டுபிடித்துள்ளன; அதுவும் ஹோமோ எரெக்டஸ் இன வகையையே சுட்டுகிறது.

யூகங்கள் உண்மைகள் ஆகட்டும்:மனிதனின் இன்றைய மூளையின் கட்டமைப்பை, எந்த அளவுக்கு இசையையும், மொழியையும் பின்னோக்கி அறிய முடியும் என்ற குறிக்கோளில், தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பன்னாட்டு இசைகள், மொழிகளின் படிநிலை வளர்ச்சிகளைத் தான், இப்போது பெரும்பாலும் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனால், அனைத்துக்கும் முதன்முதலான இசைத்துளி, மொழித்துகள் பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும்; காத்திருப்போம்!

தமிழர் சிலரின் யூகங்கள் உண்மைகளானால் மகிழ்ச்சியே!

குறிப்பு: கட்டுரையில் காணும் ஆண்டுகள் அனைத்தும் தோராயமானவை.

தொடர்புக்கு:

பேரா.ப.க.பொன்னுசாமி
முன்னாள் துணைவேந்தர்சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.இ - மெயில்: ponnu.pk@gmail.con95002 89552

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (5)

  • Yesappa - Bangalore,இந்தியா

    இல்லை .. இல்லவே இல்லை - எங்கள் ஆண்டவர் தான் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு உலகை படைத்தார் .. எல்லாம் பொய்யா கோபால்?

  • அன்பு - தஞ்சை,கனடா

    அதிர வைக்கும் அதிராம்பாக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அதிராம்பக்கத்தில் ரெண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாள் மனிதன் உருவாக்கிய கற்கால ஆயுதங்களை பற்றி அமெரிக்கா அறிவியல் பதிப்பில் படித்து வியந்தேன். இப்போது அது பதினைந்து லட்ச ஆண்டுகளுக்கு முன்பு என்று அறியப்படுகிறது.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement