dinamalar telegram
Advertisement

'பைபர் கேபிள்' பதிப்பில் பல ஆயிரம் கோடி ஊழல்?

Share

'பைபர் கேபிள்' பதிப்பில் பல ஆயிரம் கோடி ஊழல்?
''திங்குற சோத்தை, யாராவது குப்பை வண்டியில எடுத்துட்டு போவாங்களா வே...'' எனக் கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அந்த முட்டாள்...'' என, அதிர்ச்சியுடன் கேட்டார் அந்தோணிசாமி.

''சமீபத்துல ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலை, ரெண்டு கட்டமா நடத்தி முடிச்சாங்கல்லா... தேர்தல் பணியில ஈடுபட்ட அலுவலர்கள், போலீசாருக்கு சாப்பாடு
வசதிகள் சரியா செய்து தரலை வே...


''காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம் கொளப்பாக்கம் பகுதியில நடந்த ரெண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு அன்னைக்கு, மதிய உணவை குப்பை அள்ளுற வண்டியில எடுத்துட்டு வந்து, 'சப்ளை' செஞ்சிருக்காவ...

''இதைப் பார்த்து அதிர்ச்சியான பலரும், அந்த சாப்பாட்டை சாப்பிடாம, பட்டினி கிடந்து தேர்தல் வேலைகளை பார்த்திருக்காவ வே...

''பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள்ல, மறுநாள் அதிகாலை வந்து தான் ஓட்டுப்பெட்டிகளை எடுத்திருக்காவ... இதனால, 'சுகர் பேஷன்ட்'கள் எல்லாம் ரொம்பவே சிரமப்பட்டு போயிட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''சத்தம் காட்டாம ஒதுங்கிட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''பிரதமரின், 'பி.எம்., கேர்' நிதியில நாடு முழுக்க அரசு மருத்துவமனைகள்ல, ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைச்சு, சமீபத்துல திறந்து வச்சாங்கல்ல...

''திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில 3 கோடி ரூபாய் செலவுல அமைக்கப்பட்ட மையத்தை, மாவட்ட அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தாங்க பா...

''ஆனா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலா, பிரதமர் மோடியும் நிகழ்ச்சியில பங்கேற்கிறார்னு தகவல் கிடைச்சதால, கடைசி நேரத்துல, விழாவுல பங்கேற்கிறதை அமைச்சர்கள் தவிர்த்துட்டாங்க... அதே மாதிரி, உள்ளூர் எம்.எல்.ஏ.,க்களும் நழுவிட்டாங்க... அப்புறமா, கலெக்டர் வினீத் வந்து ரிப்பன் வெட்டி திறந்து வச்சாரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''பூமிக்கு அடியிலயும் புகுந்து விளையாடியிருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.

''புரியற மாதிரி சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''போன ஆட்சியில, உள்ளாட்சி துறையில பல ஊழல்கள் நடந்ததா, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திட்டு இருக்காங்களே... அப்ப, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 'இன்டர்நெட்' சேவைக்காக தமிழகம் முழுக்க 55 ஆயிரம் கி.மீ.,க்கு பைபர் கேபிள்களை பதிச்சிருக்குதுங்க...

''இதுக்கு நகர பகுதிகள்ல சாலைகளை தோண்டி கேபிள் பதிக்க, கி.மீ.,க்கு தனி கட்டணம், வருஷ வாடகையா தனி கட்டணத்தை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தணும்...

''ஆனா, பூமிக்குள்ள பதிக்கப் போற கேபிள்களை யார் அளந்து பார்க்க போறாங்கன்னு நினைச்சு, அரையும் குறையுமா கணக்கு போட்டு, உள்ளாட்சிகளுக்கு போக வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை, துறையின் முக்கிய புள்ளிகள் 'ஆட்டை'யை போட்டிருக்காங்க...

''இது பற்றியும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிச்சா, நிறைய பூதங்கள் கிளம்புமுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.டீயை குடித்து முடித்து நண்பர்கள் கிளம்ப, கடையில் ஆயுதபூஜை போடுவதற்கான ஏற்பாடுகளில் நாயரும், டீ கடைஊழியர்களும் இறங்கினர்
*************

ரோடு கோடு போட்டதில் ரூ.1,000 கோடி 'ஆட்டை!'''இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்குற வரைக்கும், 'குட்கா' விற்பனையை தடுக்கவே முடியாது வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.

''விஷயத்தை சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூருல, ராஜஸ்தானைச் சேர்ந்த சேட்டன் சிங் என்ற இளைஞரிடம் இருந்து, 83 கிலோ பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்களை, போலீசார் பறிமுதல் செஞ்சாவ வே...

''அவனிடம் விசாரிச்சப்போ, பெருமாநல்லுாரில் உள்ள ஒரு மொத்த வியாபாரியிடம் இருந்து, அந்த போதைப் பொருட்களை வாங்கி வந்தது தெரிய வந்துருக்கு வே...

''இந்த தகவலை, சேவூர் போலீசார், பெருமாநல்லுார் போலீசார்கிட்ட சொல்லியிருக்காவ... ஆனால், அந்த மொத்த வியாபாரி மீது, பெருமாநல்லுார் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கலை வே...


''பெருமாநல்லுாரில் மளிகைக்கடை நடத்திட்டு வர்றவர், வெளிமாநிலங்கள்ல இருந்து, பான் மசாலா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, தமிழகத்துல சில்லரை வியாபாரம் செய்யுறாராம் வே...

''அந்த வியாபாரியிடம் இருந்து மாதந்தோறும் மாமூல் சரியா வர்றதால தான், போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டேங்காவன்னு, உள்ளூர்ல பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.அன்வர்பாயிடம், ''அப்பாவுடன் ஏற்பட்ட சின்ன பிரச்னையில கோபமான ராம், இன்னும் பேசுறதே இல்லைங்க... ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணுமுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''மரம் கடத்தறது அதிகரிச்சுருக்காம் ஓய்...'' என்ற குப்பண்ணாவே அடுத்த தகவலை கூற துவங்கினார்...

''நீலகிரி மாவட்டம் பிதர்காடு வனச்சரகத்துல வனச்சரகர் பணியிட மாற்றத்தை அடுத்து, ஒட்டுமொத்த பொறுப்பையும் வனவர் ஒருத்தரிடம் ஒப்படைச்சிருக்கா ஓய்...

''இவர், ஏற்கனவே சிங்காரா வனச்சரகத்துல சுற்றுலா பயணியரிடம் பணத்தை வசூலிச்சுண்டு, பாதுகாக்கப்பட்ட வனத்துல வாகனம் போறதுக்கு அனுமதி கொடுத்தவர் ஓய்...

''அவர் பொறுப்புக்கு வந்தப்புறம், பிதர்காடு வனச்சரகத்துல மரம் கடத்தல் ஜோரா நடந்துண்டு இருக்கு... 'மாண்புமிகு' அந்த வனச்சரகர், மரங்களை வெட்டி கடத்தும் கும்பல்கிட்ட இருந்து, நன்னா கல்லா கட்டறார் ஓய்...

''இது பத்தி, தலைமை, முதன்மை வனப் பாதுகாவலர், வன அலுவலர் வரை புகார் கொடுத்துருக்கா... இன்னும் நடவடிக்கை இல்லையாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''ரோட்டுக்கு கோடு போட்டே பல ஆயிரம் கோடி ரூபாய் அடிச்சுருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

''என்னங்க சொல்லுதீரு...'' என அதிர்ச்சியுடன் கேட்டார் அண்ணாச்சி.

''கடந்த அ.தி.மு.க., ஆட்சியில சாலையின் நடுவே கோடு போடுறது மற்றும் ஒளிரும் விளக்குகள் அமைக்குற டெண்டரை, புதுக்கோட்டையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு கொடுத்தாங்க...

''அந்த நிறுவனம் 2,000 கோடி ரூபாய்க்கு பணிகள் எடுத்த நிலையில, தரமற்ற முறையில வேலை செஞ்சு 1,000 கோடி ரூபாயை அமுக்கிட்டாங்களாம்... இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை துவக்கியிருக்காங்க...

''இந்நிலையில, அதே நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, ரோட்டுக்கு கோடு போடும் ஒப்பந்தத்தை மீண்டும் பெற, தி.மு.க., அமைச்சர்களின் அலுவலகங்கள்ல முகாமிட்டிருக்காங்களாம்...'' என முடித்தார், அந்தோணிசாமி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அவங்களுக்கு கொடுத்தாச்சு, இவர்களுக்கும் வேண்டியதை கொடுத்து வேலையை முடிக்க வேண்டியதுதானே ரெண்டுமே விலை போகும் காட்சிகள்தான், மக்கள் கதி என்ன ஆனால் என்ன ?

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    அங்க கொடுத்த அதே துட்டை இங்கேயும் கொடுத்தால் ஆயிற்று. மந்திரிகள்தான் மாறியிருக்கிறார்கள், அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் மாற வில்லையே.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement