dinamalar telegram
Advertisement

'ஏர்போர்ட்' விரிவாக்கம் பெயரில் வசூல் வேட்டை!

Share

'ஏர்போர்ட்' விரிவாக்கம் பெயரில் வசூல் வேட்டை!
''சென்னையில கோரிக்கை மாநாடு நடத்தப் போறாவ வே...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சுகாதார துறையில தமிழகம் முழுக்க ஆஷா பணியாளர்கள் 2,700 பேர், தமிழக மலை கிராமங்கள்ல வேலை பார்க்காவ... கர்ப்பிணியரை கண்காணித்து, பிரசவ காலம் துவங்கி குழந்தைக்கு, 3 வயசு வரைக்கும் தடுப்பூசி போடுறது, தாய் -சேய் நலத்தை கண்காணிக்கிறதுன்னு வேலை செய்யிதாவ வே...

''போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு கூட, நடந்தே போய் வேலை பார்க்காவ... இவங்களுக்கு, மாசம் 2,200 ரூபாய் ஊக்கத்தொகை மட்டும் தான் தர்றாவ... நர்ஸ்களுக்கு இணையா வேலை பார்க்கிற தங்களை நிரந்தரப்படுத்தி, மாசம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரணும்னு, 15 வருஷமா பலகட்ட போராட்டங்களை நடத்தி பார்த்துட்டாவ வே...

''இப்ப, '25 ஆயிரம் ரூபாய் கொரோனா கால நிவாரணமா வழங்கணும்... அடையாள அட்டை, அரசு பஸ்கள்ல இலவச பாஸ் தரணும்'னு வலியுறுத்தி, வர்ற 16ம் தேதி சென்னையில கோரிக்கை மாநாடு நடத்த திட்டமிட்டிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
உடனே, ''நியமன பதவிகளை பறிக்க வேண்டாம்னு வாய்மொழி உத்தரவு போட்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''அ.தி.மு.க., ஆட்சியில, ஹிந்து கோவில்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி, ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவி உள்ளிட்ட ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு, அ.தி.மு.க.,வினரையும், நடுநிலையான முக்கிய பிரமுகர்களையும் நியமிச்சா ஓய்...

''இவாளுக்கு, பதவிக்காலம் முடிய மூணு வருஷம், ஒன்றரை வருஷம்னு அவகாசம் இருக்கு... ஆட்சி மாறிட்டதால, இவாளை ராஜினாமா செய்யச் சொல்லி, 'பிரஷர்' தந்துண்டு இருக்கா ஓய்...

''அ.தி.மு.க., சிறுபான்மையினர் பிரிவு மாநில நிர்வாகி லியாகத் அலிகான் வகிக்கற ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா இருங்கன்னு வாய்மொழி உத்தரவு வர, அவரும் சரின்னு சொல்லிட்டாராம் ஓய்...

''இந்தச் சூழல்ல, 'இந்த மாதிரி பதவிகள்ல இருக்கறவாளை தொந்தரவு செய்ய வேணாம்... அவா, 'பிரீயட்' முடியற வரை இருந்துட்டு போகட்டும்'னு, ஆளுங்கட்சி மேலிடம் சொல்லிட்டதால, இவா பதவியில நீடிக்க வாய்ப்பிருக்காம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஏர்போர்ட் விரிவாக்கத்தை வச்சு, வசூல் வேட்டை நடக்குது பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.


''கோவை ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்றதுக்கு, 1,132 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருக்குது... இதனால, கொங்கு மண்டலத்துல தொழில் அமைப்பினர் எல்லாரும் மகிழ்ச்சியில இருக்காங்க பா...

''தேர்தல்ல எங்களுக்கு தோல்வி தந்தாலும், கோவையை நாங்க புறக்கணிக்கலை பாருங்கன்னு, ஆளுங்கட்சியினர் சொல்றாங்க... அதே நேரம், இதை காரணம் காட்டி, தொழில் அமைப்பினரிடம், 'கட்சி நிதி'ன்னு வசூல் வேட்டையை, பக்கத்து மாவட்ட முக்கிய புள்ளி தரப்பு ஆரம்பிச்சிருக்குது பா...

''அதையும் நேரடியா கேட்காம, முக்கிய அதிகாரிகளை வச்சே கேட்கிறாங்க... இதுல, நேர்மையா இருக்க நினைக்கிற மாவட்டத்தின் முக்கிய அதிகாரிக்கும் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''அட ராமச்சந்திரா...'' என, அலுத்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement