dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: அண்ணா பல்கலையில் கடந்த ஆண்டு, 'பயோடெக்னாலஜி' படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், பொருளாதார அடிப்படையில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மத்திய அரசு உதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழகத்தில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தான் மாணவர்கள் சேர்க்கப்படுவர். தமிழகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான இட ஒதுக்கீடுக்கு வாய்ப்பில்லை.


'டவுட்' தனபாலு: இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ள சதவீதத்தில் யாரும் தலையிட முடியாது. அப்படி தலையிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கப்படும். இதை அறிந்தும், யாரை திருப்திபடுத்தவோ அல்லது மாணவர்களை திசைதிருப்பவோ இப்படி கூறுகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டு நிமிடம் கூட சந்திக்கவில்லை. 'பிரபாகரனுடன் சேர்ந்து ஆமைக்கறி சாப்பிட்டேன்; உடும்புக்கறி சாப்பிட்டேன்' என பொய் சொல்கிறார். விடுதலை புலிகள், சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.


'டவுட்' தனபாலு: நீங்களும் தான் இந்த தகவலை, பல ஆண்டுகளாக சொல்லி வருகிறீர்கள். ஆனாலும், அவர் இன்னமும் அந்த பொய்யை திரும்ப திரும்ப கூறி வருகிறார்; ஆதரவாளர்களையும் பெருக்கி வருகிறார். இதைத் தான், எந்த பொய்யை திரும்ப திரும்ப சொன்னாலும் உண்மையாகி விடும் என்கின்றனரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
: சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த போது, ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லவில்லை. இப்போது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக செல்ல உள்ளார். அவர் பொதுமக்களாலும், தொண்டர்களாலும் புறக்கணிக்கப்பட்டவர். அவர் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். அவர் பக்கம் யாரும் போக மாட்டார்கள்.


'டவுட்' தனபாலு: கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது எளிது என நினைத்து, காத்திருந்து களத்தில் இறங்கி உள்ளாரோ என்ற, 'டவுட்' அ.தி.மு.க., தொண்டர்களுக்கு வந்திருக்கும். மேலும், இவரை நம்பி இறங்கினால் வீண் என்பதும் அறிந்திருப்பர். ஏனெனில், அடுத்து எந்த வழக்கில் உள்ளே செல்வார் என்பது யாரும் அறிந்திராதது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement