dinamalar telegram
Advertisement

உயர் நீதிமன்ற தீர்ப்பால் உருவாக வேண்டும் மாற்றம்

Share

'தமிழகம் முழுதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும். தலைவர்களின் சிலைகளை வைப்பதற்கு என, தனியே பூங்காக்கள் அமைக்க வேண்டும். 'பொதுமக்களுக்கு இடையூறாக இனி, பொது இடங்கள், சாலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில், தலைவர்களின் சிலைகளை வைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. சிலைகளை நிறுவுவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசு உருவாக்கி வெளியிட வேண்டும். 'தலைவர்களின் சிலைகளுக்காக பூங்காக்கள் அமைக்கும் போது, அங்கு சிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். இதற்கான செலவு தொகையை, சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். பணம் தரவில்லை என்றால், சட்ட விதிகளை பின்பற்றி வசூலிக்க வேண்டும்' என, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம், ௨௦௧௩ல் வழங்கிய தீர்ப்பை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது.

நாட்டிற்காக, குறிப்பிட்ட சமூக மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களுக்கு சிலை வைத்து மரியாதை செலுத்துவது சிறந்தது தான் என்றாலும், அதுவே சமீப ஆண்டுகளாக சர்ச்சையாகி வருகிறது. மேலும், பொது இடங்களில் சிலைகள் வைக்கப்படும் போது, அந்த தலைவரை ஒரு பிரிவினர் புகழ்வதும், மற்றொரு பிரிவினர் விமர்சிப்பதும், அதனால் சிலைகளை அவமதிப்பதும், பிரச்னைகள் உருவாவதும், கலவரங்கள் நிகழ்வதும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம், இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பலாம்.

தமிழகத்தில் ஓட்டு அரசியலுக்காக, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர்களின் பெயரை சூட்டி, அதனால் பெரும் கலவரங்கள் நிகழ்ந்து, அதன்பின், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதோடு, சில மாவட்டங்களுக்கு சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டதை யாரும் மறக்க முடியாது.

நாட்டுக்காக, சமூகத்திற்காக பாடுபட்ட நல்ல தலைவர்களுக்கு, சில சுயநல அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதிச் சாயம் பூசுவதும், அந்த தலைவர்களை குறுகிய வட்டத்திற்குள் மாற்ற முற்படுவதுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம். தலைவர்களையும், அவர்களின் சிறப்பான செயல்பாடுகளையும் தொடர்ந்து நாம் பேசி வருவதற்கும், அவர்களை பாராட்டி வருவதற்கும் முக்கிய காரணம், அடுத்து வரும் தலைமுறையினர், அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி முன்னேற வேண்டும் மற்றும் சமூக மேம்பாட்டில் அக்கறை காட்ட வேண்டும் என்பது தான்.

அதை விடுத்து, அந்த தலைவர்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதும், அவர்களின் சிலைகள் அடிப்படையில் ஜாதி அரசியல் நடத்தி, அதன் வாயிலாக தங்களின் செல்வாக்கை காட்டி, அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி, தேர்தல்களில் போட்டியிட 'சீட்' பெற முற்படுவதே நடந்து வருகிறது. அது, தவிர்க்கப்பட வேண்டும்.

நாட்டிலுள்ள மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், சிலைகள் அமைப்பது தொடர்பாக கடுமையாக விதிகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.இதற்காக, அரசியல்வாதிகள் இல்லாத, சமூக ஆர்வலர்கள் மற்றும் தேச நலனில் அக்கறை கொண்ட முக்கிய பிரமுகர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் இடம் பெற்ற குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரைகளை பெற்று, அதற்கேற்ற வகையில் சிலைகள் அமைப்பது தொடர்பாக, புதிய சட்ட விதிகளை உருவாக்க வேண்டும். அனுமதியின்றி சிலைகளை நிறுவுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

மேலும், தலைவர்களின் சிலைகளை அமைப்போர், அந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மட்டும் மாலை அணிவித்து, பின், கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, அந்த சிலைகளை அரசு தரப்பினரே முறையாக பராமரிக்கும் வகையில், கணிசமான தொகையை சிலை அமைக்கும் பிரிவினர் டிபாசிட் செய்யும்படி உத்தர விட வேண்டும். அந்தத் தொகையை வங்கிகளில் டிபாசிட் செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் வருமானம் வாயிலாக, சிலைகளை முறையாக பராமரிக்கலாம். இதன் வாயிலாக, தலைவர்களின் பெயரில் கோலோச்சி வரும் 'லெட்டர் பேடு' கட்சிகளின் ஆதிக்கத்தையும் குறைக்க முடியும்.

மேலும், தனியே பூங்காக்கள் அமைத்து, அங்கே சிலைகளை நிறுவும் போது, தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில், குறிப்பிட்ட அமைப்புகளின், அரசியல் கட்சிகளின் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதும் தவிர்க்கப்படும். சிலைகள் வைக்க தனியே பூங்காக்கள் அமைக்கும் போது, முடிந்தால் அவற்றை பராமரிக்க தனி அமைப்பையும் ஏற்படுத்தலாம். இதையெல்லாம் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement