dinamalar telegram
Advertisement

சுகாதார அட்டை திட்டம் மாற்றத்திற்கான துவக்கம்

Share

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் உடல் நலன் குறித்த விபரங்கள் அடங்கிய கையடக்க ஆவணமான, சுகாதார அட்டை வழங்கும், 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' என்ற திட்டத்தை, பிரதமர்நரேந்திர மோடி சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்த சுகாதார அட்டையில், ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட உடல் நலன் குறித்த விபரங்கள் இருப்பதுடன், நாடு முழுதும் உள்ள பதிவு செய்த டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை வசதிகளும் இடம் பெற்றிருக்கும்.


ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதில், இந்த 'டிஜிட்டல் மிஷன்' மிகுந்த முக்கியத்துவம் பெறும். இதனால், நோயாளியின் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து விபரங்களையும், அவர்களின் அனுமதியுடன் டிஜிட்டல் முறையில் டாக்டர்கள் பார்த்து, அவர்களுக்கு விரைவாக, சிறப்பான சிகிச்சையை அளிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பான விஷயங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த திட்டமும் ஒன்று. நாட்டின் எந்த மூலையில் உள்ள டாக்டரும், 'மொபைல் ஆப்' வழியாகவே ஒருவரின் உடல் நலன் குறித்த விபரங்களை, அவர்களுக்கென கொடுக்கப்படும் பிரத்யேக அடையாள எண்ணை பதிவு செய்வதன் வாயிலாக அறிந்து, சிகிச்சை அளிக்க முடியும் என்பது சிறப்பம்சம்.


கடந்த ஆண்டு முதல், தற்போது வரை கொரோனா தொற்று பரவலும், அதனால் உருவான பிரச்னைகளும், நாட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ளன. குறிப்பாக, கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் விஸ்வ ரூபம் எடுத்து, ஏராளமான உயிர்களை பலி வாங்கிய நேரத்தில், நாடு முழுதும் சுகாதாரத் துறையில் உட்கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தின.


ஏனெனில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கும் அபாயம் உருவானதையும், மருத்துவ
மனைகளின் வாயில்களில், ஆம்புலன்ஸ்கள் பல மணி நேரம் நோயாளிகளுடன் காத்திருந்ததையும் யாரும் மறக்க முடியாது.கடந்த சில ஆண்டுகளாக, பிரபலமான டாக்டர்களை, 'டெலிமெடிசன்' முறையில் தொடர்பு கொண்டு, விபரங்களை கேட்டு, அதன் வாயிலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பின்பற்றப்பட்டாலும், அது குறிப்பிட்ட அளவுக்கே பலன் தருவதாக உள்ளது.


நோயாளிகளை டாக்டர்கள் நேரடியாக பார்த்து, அவர்கள் சந்திக்கும் உடல் நல பிரச்னைகளை தெளிவாகக் கேட்டு, அதன் வாயிலாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைக்கு உள்ள பலன் தனித்துவம் வாய்ந்தது தான். அதற்கு, தற்போது அறிமுகமாகும் புதிய முறை உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.அதே நேரத்தில், இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையானது, பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் இல்லை. எனவே, அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என, உலக சுகாதார அமைப்பு உட்பட பல அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. அவற்றையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு, வரும் காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, டாக்டர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குறிப்பாக, கிராமப்புறங்களில் டாக்டர்களின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும். இதனால், சிகிச்சைக்காக பெருநகரங்களை நோக்கி மக்கள் வருவது தவிர்க்கப்படும். நாடு முழுதும், மாவட்டத்திற்கு ஒரு பெரிய மருத்துவமனையும், மருத்துவ கல்லுாரியும், அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் நடத்த தேவையான வசதிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் என, ௧௩ மருத்துவ பட்டதாரிகள் மட்டுமே உருவாவதாகவும், அதே நேரத்தில், வளர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை ௫௫ பேராக இருப்பதாகவும் சில ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டு, அதிதீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். மேலும், மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். டாக்டர்கள் மற்றும் மருத்துவ துறையில் உள்ள முன்கள பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளை அதிகரிக்க வேண்டும். இதன் வாயிலாக, அவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்வது தவிர்க்கப்பட்டு, இங்கேயே பணியாற்றி, சிறப்பான சிகிச்சை தருவர்.


நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரமும், மருத்துவசிகிச்சைக்கு பெயர் பெற்றதாக மாற வேண்டும். இதெல்லாம், மாயாஜாலம் போல கண நேரத்தில் நடந்து விட வாய்ப்புகள் இல்லை. அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். எனவே, பிரதமர் அறிமுகம் செய்துள்ள சுகாதார அட்டை திட்டம், மருத்துவ துறையில் அடுத்தடுத்து பெரிய மாற்றங்கள் வருவதற்கான துவக்கமாக இருக்கும் என நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement