dinamalar telegram
Advertisement

சிறை வார்டன்கள் காட்டில் 'அடை மழை!'

Share

''இப்படி இருந்தா எப்படிங்க உண்மை வெளிவரும்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

''என்ன விஷயமுன்னு சொல்லுங்க பா...'' என கேட்டார் அன்வர்பாய்.'

'சட்டசபை தேர்தல்ல தி.மு.க., அறிவிச்ச வாக்குறுதிபடி, 'நிபந்தனைக்கு உட்பட்டு, கூட்டுறவு வங்கியில 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்'ன்னு முதல்வர் ஸ்டாலின் அறிவிச்சாருங்க...

''இதையடுத்து பயனாளிகள கண்டறியும் பணியில, கூட்டுறவு அதிகாரிகள் ஈடுபட்டாங்க... அப்போ தான், ஒரே நபர் பல வங்கிகள்ல கடன் வாங்கினது, போலி நகையை வைச்சு கடன் வாங்கினது போன்ற முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததுங்க...

''இதனால ஒரு மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள், வேறு மாவட்டத்துக்கு போய் கூட்டுறவு வங்கியில ஆய்வு நடத்தணுமுன்னு தமிழக அரசு உத்தரவு போட்டுச்சுங்க...

''அப்படி ஆய்வுக்கு போறவங்கள்ல சில அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகிகளிடம், 'எங்களுக்கு கார் அனுப்புங்க... மத்தியானம் நல்ல விருந்து ஏற்பாடு பண்ணுங்க'ன்னு உத்தரவு போடுறாங்களாமுங்க...

''இப்படி ஆய்வுக்கு போனா முறைகேடு எப்படிங்க வெளியே வரும்...'' என வினவினார், அந்தோணிசாமி.

''இது தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்துற லட்சணமா வே...'' என்ற அண்ணாச்சி தொடர்ந்தார்...

''வெளி மாநிலத்தை சேர்ந்தவங்க, நீலகிரி மாவட்டத்துக்குள்ள வர்றதுக்கு, இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டதுக்கான ஆதாரத்தை, சோதனைச்சாவடியில காட்டி அனுமதி வாங்கணுமுன்னு, மாவட்ட நிர்வாகம் உத்தரவு போட்டுருக்கு வே...

''போன வாரத்துல ஒரு நாள் ராத்திரி 8:00 மணிக்கு, கர்நாடக மாநிலத்துல இருந்து ஒரு பஸ்சில் மருத்துவ கல்லுாரியை சேர்ந்த 100 பேர் நீலகிரிக்கு வந்தாவ வே...

''அதுல 50 பேர் மட்டும் தான் தடுப்பூசி போட்டுருந்தாவ... அதனால மத்தவங்களை உள்ளே விடுறதுக்கு, போலீசார் மறுத்துட்டாவ வே...

''அப்போ, வேலுார் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ஒருத்தர், மாவட்ட உயர் அதிகாரியிடம் பேசி, கர்நாடகாவுல இருந்து வந்த எல்லாரையும் ஊட்டிக்கு போக அனுமதி கொடுக்க வச்சாராம் வே...

''தடுப்பூசி போடாதவங்களும் ஊட்டிக்கு போயிட்டு வந்துருக்காவ... அதிகாரத்துக்கு கொரோனாவும் பயப்படுமா வே...'' என கேட்டு முடித்தார், அண்ணாச்சி.


அப்போது ஒலித்த மொபைல்போனை எடுத்த குப்பண்ணா, ''திருப்பதிக்கு போறேளா... திருச்சானுார் பத்மாவதி தாயாரை தரிசனம் செஞ்சுட்டு தான், ஏழுமலையானை தரிசிக்கணும் ஓய்...'' என கூறினார்.

''ஜெயில் வார்டன்கள் காட்டுல அடை மழை பெய்யுது பா...'' என அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''

ம்... விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பாலியல் பலாத்கார வழக்குல கைதாகி, சைதாப்பேட்டை கிளை ஜெயில்ல அடைக்கப்பட்டாரு பா...

''அங்கே அவருக்கு, 'சோபா, பெட்'ன்னு சொகுசு வாழ்க்கைக்கு ஏற்பாடு செஞ்சு கொடுக்கறதுக்காக, வார்டன்களுக்கு பல லட்சம் ரூபாய் கைமாறி இருக்குன்னு புகார் எழுந்துச்சு...

இதையடுத்து மணிகண்டனை, புழல் சிறைக்கு மாத்திட்டாங்க பா...''இப்போ ஊழல் வழக்குல தண்டனை பெற்ற, முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் கணவர் பாபுவும், சைதாப்பேட்டைகிளை சிறையில தான் இருக்காரு பா...

''இவருக்கும், வரி ஏய்ப்பு வழக்குல கைதான தொழில் அதிபருக்கும், சொகுசு வாழ்க்கைக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்து, வார்டன்கள் பண மழையில நனையிறாங்களாம் பா...'' என முடித்தார் அன்வர்பாய்.நாயரிடம், ''மணியும், குருநாதனும் கடைக்கு வந்தா, என் வீட்டுக்கு வர சொல்லுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி நடையை கட்ட, நண்பர்களும் இடத்தை காலி செய்தனர்.

தி.மு.க., - எம்.எல்.ஏ., உத்தரவை மதிக்காத அதிகாரிகள்!நாயர் தந்த ஏலக்காய் டீயை ருசித்தபடியே, ''ஒன்றிய தலைவர் பதவிக்கு குறி வச்சுட்டாங்க பா...'' என, அரட்டைக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''அ.தி.மு.க., ஆட்சியில நடந்த உள்ளாட்சி தேர்தல்ல, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றிய தலைவர் பதவிக்கு, தி.மு.க., சார்புல போட்டியிட்டவங்க இந்திரா திருமலை...

''இவங்களுக்கு அப்ப, தி.மு.க., மாவட்டச் செயலரா இருந்த கும்மிடிப்பூண்டி வேணு ஆதரவு அளிக்காம, மறைமுகமா அ.தி.மு.க., வுக்கு ஆதரவு தந்ததால, கவுன்சிலர்கள் எண்ணிக்கை சம பலத்துல வந்துடுச்சு பா...

''இதனால, குலுக்கல் முறையில அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிவகுமார் ஒன்றிய தலைவரா தேர்வாகிட்டாரு... இப்ப, தி.மு.க., ஆளுங்கட்சியாகிட்டதால, சிவகுமார் பதவியை காலி பண்ண முடிவு பண்ணிட்டாங்க பா...

''இப்ப ஒன்பது மாவட்டங்கள்ல ஒன்றிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறப்ப, சிவகுமார் மேல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, கும்மிடிப்பூண்டி ஒன்றிய தலைவர் பதவிக்கும் சேர்த்து தேர்தல் நடத்தி, இந்திரா திருமலையை தேர்வு செய்ய முடிவு பண்ணியிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.'

'மறுபடியும் வசூல் வேட்டையை துவங்கிட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுல கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் தருவாங்க... இதுக்கான பிரிவுல, ரொம்ப நாளா இருந்த அதிகாரிகள் வசூல் மழையில நனைஞ்சிட்டு இருந்தாங்க...''ஆட்சி மாறியதும், புதுசா வந்த உறுப்பினர் செயலர், அவங்களை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்தாரு...

வேற சிலரை, அந்த இடங்கள்ல நியமிச்சாருங்க...''ஆனா, அந்த இடத்துக்கு வந்திருக்கிறவங்களும் 'லே அவுட் அப்ரூவல்' நில வகைப்பாடு மாற்ற விவகாரங்கள்ல வசூல் வேட்டையை ஆரம்பிச்சிட்டாங்க... அதுவும் இல்லாம, 'உறுப்பினர் செயலர் எங்க பாக்கெட்டுல இருக்கார்...

எங்களை மீறி எதுவும் இங்க நடக்காது'ன்னு தெனாவட்டாகவும் நடந்துக்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பேச்சு அம்பலத்துல ஏறலை வே...'' என்றார் அண்ணாச்சி.

''அந்த அப்பாவி எம்.எல்.ஏ., யாரு ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''நாமக்கல் பக்கத்துல ரெட்டிபட்டி பஞ்சாயத்துல, கரட்டு புறம்போக்கு நிலத்துல, பாறைகள் நிறைந்த மலைப் பகுதி இருக்கு...ஒரு மாசத்துக்கு முன்னாடி, ஒரு தனியார் நிறுவனத்தினர், எந்த அனுமதியும் இல்லாம, மலையில ரோடு போடுறோம்னு சொல்லி, பாறைகளை வெட்டி எடுத்தாவ வே...

''இது, சேந்தமங்கலம் தி.மு.க.,-- எம்.எல்.ஏ., பொன்னுசாமிக்கு தெரியவர, 'எனக்கு தெரியாம, எப்படி மலையில ரோடு போடலாம்'னு கேட்டு, உடனே பணிகளை நிறுத்தும்படி, அதிகாரிகளிடம் சொால்லியிருக்காரு வே...

''ஆனா, வருவாய்த் துறை அதிகாரிகள், அதை காதுலயே போட்டுக்காம, மலையில இருந்த பாறைகளை, 99 சதவீதம் வெட்டி எடுக்கும் வரை கையை கட்டிட்டு இருந்திருக்காவ... இதனால, நொந்து போன எம்.எல்.ஏ., கலெக்டர், டி.ஆர்.ஓ., தாசில்தாருக்கு வாட்ஸ் ஆப்ல புகார் அனுப்ப, சுதாரிச்ச வருவாய் துறையினர், 'கொஞ்ச காலம் பணிகளை நிறுத்தி வைங்க'ன்னு தனியார் நிறுவனத்துக்கு தடை போட்டிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.அரட்டை முடிய, பெஞ்ச் காலியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கர்நாடகா ரூபா போல இங்கு எந்த டி ஜி பியும் இல்லை போலிருக்கிறது வார்டன் காட்டில் மழை என்ன, வற்றாத குற்ரால அருவி கூடப் பாயுமே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement