உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு இதமான குளிர் நோக்கி டில்லி மெள்ள நகர்கிற இந்த வேளையில் ராம்லீலா மைதானம் களைகட்டி வருகிறது.
வழக்கமாக அரசியல் காரணங்களுக்காக நிரம்பி வழியும் மைதானம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறும் ராம்லீலா பண்டிகைக்காக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.ராம்லீலா பண்டிகையை முன்னிட்டு இங்கு நடைபெறும் ஸ்ரீராம் நாட்டிய நாடகம் மிகவும் பிரசித்தம் காரணம் கடந்த 63 வருடங்களாக நடந்து வருகிறது என்பதால்.
இந்த நாட்டிய நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் வசனங்களும் டில்லி மக்களுக்கு அத்துப்படி ஆனாலும் அன்றுதான் புதிதாக பார்ப்பது போல பார்த்து ரசிக்கின்றனர்.
நீ இப்ப எப்படி சின்னக்குழந்தையா இருக்கியோ? நானும் அப்படி குழந்தையா இருந்தப்பா இந்த நாடகம் பார்க்க வந்திருக்கிறேன்! என்று தாத்தாக்கள் பலர் தன் பேரக்குழந்தைகளிடம் தான் முதன் முதலாக இந்த நாடகம் பார்த்த கதையைச் சொல்லியபடி அழைத்து வருகின்றனர்.
கதையும் காட்சியும் வசனமும் மட்டும் மாறாமல் இருக்கிறது மற்றபடி ராமர்,சீதை,ராவணன் ஆகியோர் மாறியுள்ளனர் இப்போது ராமர் வேடமிடும் ராஜ்குமார் சர்மா டில்லி மக்களின் விருப்ப நாயகன்,நீண்ட காலமாக மேடையில் தோன்றிடும் இவர் புராண வேடத்திற்கான ‛விக்' எதுவும் வைத்துக் கொள்வது இல்லை அதற்கேற்ப நிஜமாகவே தனது தலைமுடயை வளர்த்துள்ளார்
நாடகத்தின் நிறைவில் தன்னை ராமராகவே எண்ணி காலில் சிலர் விழும்போது வருத்தமாக இருக்கும் அவர்களுக்குள் அந்த பாத்திரத்தை கம்பீரமாக நேர்மையாக உலாவ விட்டுள்ளேன் என்று ஒரு பக்கம் பெருமையாகவும் இருக்கும் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அவரிடம் சரி உங்கள் வயதென்ன என்று கேட்டால் அதை மட்டும் கேட்காதீர்கள் என்று காதருகே வந்து கிசுகிசுக்கிறார்.
இது மற்ற ராமாயண நாடகம் போல கிடையாது அந்த நாடகங்களில் கதாபாத்திரங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மேடையில் வந்து வசனத்தை மட்டும் சரியாகச் சொன்னால் போதும் ஆனால் எங்களுடையது நாட்டிய நாடகம் என்பதால் மேடையில் நாங்கள் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் உடல் மொழியால் சொல்ல வேண்டும் என்பதால் பம்பரமாக சுழல்வோம் அதுதான் எங்கள் நாட்டிய நாடகத்தின் சிறப்பு.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மேடை, லைட்டிங், பேக்டிராப் போன்ற விஷயங்களில் நவீனத்தை கொண்டு வந்துள்ளோம் மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லாமல் நல்லபடியாக போய்க்கொண்டு இருக்கிறது
பத்தஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடனக்கலைஞரான சுமித்ரா இசை,நடனத்தை சொல்லித் தருவதற்காக 1952 ல் துவக்கியதுதான் பாரதிய கலா கேந்திரா நாட்டியப்பள்ளி.இந்தப் பள்ளியின் சார்பில் 1957 ம் ஆண்டு போடப்பட்டதுதான் ஸ்ரீராம் நாட்டிய நாடகம்.
ராமாயணத்தையே தனது வாழ்க்கையாக்கிக் கொண்ட அந்நாளைய பிரபல எழுத்தாளர் ராம்சிங் வசனத்தில் இந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது பல பக்கங்களிலும் இருந்தும் பாராட்டுகள் குவிந்தது.பிரதமராக இருந்த நேரு முதல் இந்திராகாந்தி வரை இந்த நாடகத்தை பார்த்து பாராட்டாத தலைவர்களே கிடையாது.
அது முதல் ஒவ்வொரு தசரா பண்டிகையின் போது ராம்லீலா மைதானத்தில் பத்து நாட்கள் ஸ்ரீராம் நாட்டிய நாடகம் நடக்கும் என்பது எல்லோர் மனதிலும் எழுதப்பட்ட இனிய நிகழ்வாகிவிட்டது.இதோ 64 வருடமாக நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த நாடகத்தில் ஒருவரே பல வேடங்களை போடவும் செய்வோம் சிறிய வேடம் என்றாலும் அதை சிரத்தையுடன் செய்வோம் காரணம் எங்களை இயக்கிய இயக்குனர் சுமித்ராவின் பாடம் அப்படி.
ஒரு முறை ஜடாயு வேடத்தில் இருந்தவர் சிரித்துக் கொண்டே இருந்தார் இதைப் பார்த்த சுமித்ரா ஒரு ‛சேப்டி' பின் எடுத்து குத்தினார், உடனே ஜடாயு வேடத்தில் இருந்தவர் சிரிப்பை நிறுத்திவிட்டு வேதனைக்கு உள்ளானார். அப்போது சுமித்ரா, ஒரு ‛சேப்டி' பின்னால் குத்தியதற்கே இவ்வளவு வேதனையை காட்டுகிறாயே இறகுகள் வெட்டப்பட்ட அந்த ஜடாயு எவ்வளவு வேதனைப்பட்டு இருக்கும் என்று நினைத்துப் பார்! இப்போது நீ ஜடாயு அந்த வேதனையில் பாதியாவது உன் கண்ணில், உடம்பில், உணர்வில், இருக்க வேண்டாமா? என்று கேட்டார் அப்புறம் அவர் ஜடாயுவாக நடித்ததைப் பார்த்து பார்வையாளர்கள் மட்டுமின்றி நாங்களே அழுதுவிட்டோம்.
இப்படி எல்லோரையும் திறம்பட நடிக்க வைத்த சுமித்ரா இப்போது உயிருடன் இல்லை அவரது மகள் ேஷாபாதான் இப்போது எங்களை இயக்குகிறார் நாம் பாரதத்தின் பண்பாட்டை சொல்லும் நாடகம் போடுகிறோம் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள் என்று தாயார் சொன்னதை மனதில் வைத்து செயல்படுகிறார்.
எங்களில் பலர் சின்னத்தரை பெரிய திரை உள்ளீட்ட பல்வேறு இடங்களில் நுழைந்துவிட்டாலும் இது தாய்மடி போல எங்கு இருந்தாலும் வந்துவிடுவோம்.
ராமர் சீதையுடன் காட்டில் வசிப்பது,சீதையை தேடி கடல் வழி பயணம் செய்வது, ராவணனின் ஆக்ரோசம், போர்க்களம் போன்ற காட்சிகள் புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்து நாட்டிய நாடகத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றது, ராமர் பட்டாபிேஷகத்தின் போது தேவாதி தேவர்களுடன் பார்வையாளர்களும் சேர்ந்து எழுந்து நின்று மனநிறைவோடு வாழ்த்துகின்றனர்.
-எல்.முருகராஜ்
64 வருடங்களாக டில்லியில் நடக்கும் ராமாயணம் நாடகம்
வாசகர் கருத்து (1)
மிக நல்ல விஷயம். ஆனால், டாஸ்மாக் தமிழ் நாட்டில் இப்படிபட்ட சுயமரியாதை விஷயங்கள் நடவாது. ஆங்கிலேயர் மற்றும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் திணித்து சென்ற அடிமை விஷயங்கள் தான் நடக்கும்