நீண்ட நாட்களாக போகவேண்டும் என்று எண்ணியிருந்த இடம் ஒன்றுக்கு இன்றுதான் போவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது
வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பசிப்பிணி அகற்றுவதையே தனது பிறவியின் நோக்கமென கருதி வாழ்ந்து ஜோதியாக மறைந்திட்ட அருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த சென்னை வீடுதான் அது.சென்னை தங்கசாலை வீராசாமி தெருவில்தான் அவர் வாழ்ந்த வீடு உள்ளது.அவரது 198 வது பிறந்த நாளான இன்று நானும் மழையும் சேர்ந்தே போனோம்.
வாசலில் பெரிய பாத்திரம் வைத்து அதில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் சாம்பார் சாதத்தை வாரி வழங்கி அன்னதானம் செய்து கொண்டிருந்தனர்.
வீடு மிகப்பழையதாகவும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்தும் நிலையிலும் இருந்தது.இந்த வீட்டிற்கு போவதற்கு முன்பாக வள்ளலார் பற்றி தெரிந்து கொள்வதற்காக இரவு வள்ளலார் படத்தை யுட்யூப் துணையோடு பார்த்தேன்
படத்தில் வள்ளலார் வாழ்ந்ததாக காட்டிய வீட்டிற்கும் நேரில் பார்த்ததற்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை மிகச் சின்ன வீடுஇந்த வீட்டின் மாடியில் வள்ளலார் விரும்பி தங்கி ஆறாயிரம் பக்கங்களுக்கு மேல் திருவருட்பா உள்ளீட்ட பல புத்தகங்கள் எழுதிய அறை மட்டுமே தற்போது உயிரோட்டமாக இருக்கிறது.மற்ற இடங்கள் எல்லாம் பழமைக்கு சாட்சியங்களாக காணப்படுகிறது.
வள்ளலார் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது படத்திற்கு மேல் தீபம் ஒன்று எரிந்தது உருவ வழிபாட்டை விட்டு ஜோதி வழிபாட்டை வள்ளலார் வலியுறுத்தியதால் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.வீட்டை நிர்வாகித்து வருவதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீபதி வருபவர்களக்கு வள்ளலார் படமும் விபூதியும் வழங்கிக் கொண்டு இருந்தார்.
பக்தர்கள் அந்த சிறிய ஹாலில் உட்கார்ந்து திருவருட்பா பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தனர்.
மீசையுடன் கூடிய பழைய வள்ளலார் படம் ஒன்றைப் பார்த்து இது அவருடைய பழைய படமாக என்று கேட்டேன் இல்லை வள்ளலார் குறித்து எந்த படமும் கிடையாது இருப்பவை எல்லாமே ஒவியம்தான்.தனது படமோ தனது குடும்பத்தவர் படமோ எங்கும் இருக்கக்கூடாது என்பதில் வள்ளலார் உறுதியாக இருந்தார் தனது அடையாளம் என்பது தனது எண்ணமும் எழுத்தும்தான் என்பது அவரது கொள்கை.ஆகவே அவருடன் பழகியவர்கள் சொல்லியதை வைத்து ஒவியர்கள் வரைந்த ஒவியங்கள்தான் இன்று நாம் காணும் வள்ளலார் ஒவியங்களாகும் அவரை ஒவியமாக வரைந்ததும் வணங்குவதும் கூட தவறுதான் வள்ளலாருக்கு சுத்தமாக பிடிக்காது ஆனால் அவரை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அவரது உருவ ஒவியங்கள் தேவையாக இருக்கிறது என்றார்.
வெளியில் அண்ணதான சேவையில் ஈடுபட்டிருந்த பாலகிருஷ்ணன் என்பவர் வள்ளலார் பற்றி உற்சாகமாக பேசினார் ரயில்வேயில் வேலை பார்ப்பதாகவும் வள்ளலார் பக்தன் என்பதில் பெரும் பெருமை என்றவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
முதலில் சாப்பாடு பிறகே வழிபாடு என்பதே வள்ளலாரின் கொள்கை ,அந்தக் காலத்தில் சாதி மத சம்பிரதாயங்களுக்கு எதிராக செயல்பட்ட சீர்திருத்தவாதி வடலுாரில் உள்ள அவரது தர்மசாலைக்கு வேண்டா வெறுப்பாகத்தான் போனேன் ஆனால் போன பின் வள்ளலாரின் தீவிர பக்தர்களில் ஒருவனாகிவிட்டேன் அவர் என்னை என் குடும்பத்தை படிப்படியாக ஆட்கொண்டுவிட்டார் அவரது ஆறாம் திருமுறையை ஒரு முறை படியுங்கள் உங்களையும் ஆட்கொண்டுவிடுவார் என்றார்.
எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.எதிலும் பொது நோக்கம் வேண்டும். பசித்தவர்களுக்கு உணவளித்தல் வேண்டும். எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே என்பதே அவரது போதனைகளாகும் இன்றைக்கு இந்த போதனைகள் அதிகமாகவே மக்களுக்கு தேவைப்படுகிறது
வீட்டில் இருந்து வெளியே வந்த போது வெளியே மழை நின்றிருந்தது ஆனால் மனதிற்குள் அருள் மழை பொழிந்து கொண்டு இருந்தது.
-எல்.முருகராஜ்.
வா என்றழைத்தது வள்ளலார் வீடு
வாசகர் கருத்து (3)
-
-
மிக தெளிவாக எழுதிய இவர் வடலூர் சென்ரு மேலும் எழுதலாமே. தினமலர்க்கு வாழ்த்துக்கள். இதைப்போல் எழுதுபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக. நன்றி.
-
அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை.
1. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. 2. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.எதிலும் பொது நோக்கம் வேண்டும். 3. பசித்தவர்களுக்கு உணவளித்தல் வேண்டும். 4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது. 5. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. 6. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. 7. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. 8. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. 9. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே என்பதே அவரது போதனைகளாகும் இன்றைக்கு இந்த போதனைகள் அதிகமாகவே மக்களுக்கு தேவைப்படுகிறது எனவே இந்த அறிவுரைகளை தனித் தனி கல்வெட்டுகளாக்கி நகரின் மைய பகுதிகளை யாவர் கண்களிலும் படும்படியாக சிலை வைப்பதுபோல நிறுவலாம்