dinamalar telegram
Advertisement

அனுமதியில்லாம நடத்துறாங்க 26 குவாரி... ஆபிசர்களுக்கு மாமூலை தர்றாங்க வாரி வாரி!

Share

வண்டியுடன் வாசலில் நின்ற மித்ராவிடம், ''மித்து! திடீர் திடீர்னு மழை வருது. கால்டாக்சியிலேயே போயிருவோம். டாக்ஸி வர்ற வரைக்கும் உள்ள வா...!'' என்று வீட்டிற்குள் அழைத்தாள் சித்ரா.''ஆமாக்கா...சிட்டியில சின்னதா மழை பேஞ்சாலும் வெள்ளக்காடா ஆயிருது.


வண்டி ஓட்டுறதே பெரும்பாடா இருக்கு...கார்ல போனாலும் டிராபிக்ல மாட்டணும். ஆனா இப்போதைக்கு கால்டாக்சியில போறதைத் தவிர வேற வழியில்லை,'' என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் வந்து 'டிவி'யைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.ஏதோ ஒரு சேனலில் 'கோ' படக்காட்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த மித்ரா, ''அக்கா! நம்ம இந்திய ஊடகங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டுனதைப் போல, ஒரு காலத்துல நம்ம ஊர் பத்திரிக்கையாளர்களைப் பத்தி, பல தலைவர்கள் பாராட்டும் தெரிவிச்சிருக்காங்க. சண்டையும் போட்டுப் போயிருக்காங்க. கருணாநிதி முதல்வரா இருந்தப்போ, இது ரெண்டுமே நடந்துச்சு. ஆனா இப்போ இங்க இருக்குற டுபாக்கூர் நிருபர்களால, தலைநகரம் வரைக்கும் பேரு கெட்டுப்போயிருக்கு!'' என்றாள்.

''பேஸ்புக்ல பிரஸ் ஐ.டி.,யை கூவிக்கூவி விக்கிறதைப் பத்திச் சொல்றியா...அதை விட கொடுமையெல்லாம் நடக்குது மித்து...எங்கேயாவது இல்லீகல் வேலை நடந்தா அதை போலீஸ் தட்டிக் கேப்பாங்க. ஆனா நம்ம ஊர்ல சட்டவிரோதச் செயல்களைத் தடுத்த போலீசை, ரிப்போர்ட்டர்ஸ்ங்கிற பேருல சிலர் மெரட்டி இருக்காங்க...அதுல ஒரு லேடியும் இருந்தாங்கங்கிறதுதான் ஹைலைட்,'' என்றாள் சித்ரா.''என்னக்கா சொல்றீங்க...?''''சரவணம்பட்டி போலீஸ் லிமிட்ல சூதாட்ட கிளப் நடத்துன சிலர் மேல போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்காங்க.


உடனே ஒரு லேடி உட்பட சில பேரு, போலீஸ் ஸ்டேஷனுக்கே போய், 'நாங்க எல்லாம் ரிப்போர்ட்டர்ஸ்...எதுக்கு அவுங்க மேல நடவடிக்கை எடுத்திருக்கீங்க...வேணும்னா மாசாமாசம் மாமூல் வாங்கிட்டுப் போங்க. இல்லேன்னா ஸ்டேஷனைப் பத்தி, எங்களுக்குத் தெரிஞ்ச நிருபர்களை வச்சு, கிழிகிழின்னு கிழிச்சிருவோம்னு மெரட்டியிருக்காங்க!''''அன்னுார்ல வீடியோ எடுத்த சம்பவத்துலயும் இந்த மாதிரி ஆளுங்கதான், தவறான தகவலைப் பரப்பி, தேவையில்லாத பதட்டத்தை உண்டு பண்ணாங்க....வரவர இந்த டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ் தொல்லை அதிகமாயிருச்சு.


இப்போ தற்காலிகப் பட்டாசுக் கடைக்கு லைசென்ஸ் கொடுக்கச் சொல்லி, தீயணைப்புத்துறை ஆபீசர்கள்ட்ட ரிப்போர்ட்டர்ஸ்ங்கிற பேருல டார்ச்சர் பண்றாங்களாம்!''''ஒரு சில அரசியல்வாதிங்களும் இந்த மாதிரி டுபாக்கூர் ரிப்போர்ட்டர்களை வளர்த்து விடுறாங்க... சூலுார்ல கிழக்குப் பகுதிக்குப் பொறுப்பா இருக்குற ஆளும்கட்சி நிர்வாகி ஒருத்தரு இப்பிடித்தான், ரெண்டு ரிப்போர்ட்டர்களை அல்லக்கைகளா வச்சுக்கிட்டு, ஆபீசர்களை மெரட்டி, பல வேலைகளைச் செஞ்சிட்டு இருக்காராம்.


அவுங்க கட்சிக்காரங்களே தலைமைக்குப் புகாரா அனுப்பிருக்காங்க!'' என்றாள் சித்ரா.''அதை விட ஒரு கொடுமை....ஊழலுக்குத் துணை போன கான்ட்ராக்டர்களை பிளாக் லிஸ்ட் பண்ணுங்க, இன்ஜினியர்களை சஸ்பெண்ட் பண்ணுங்கன்னு கார்ப்பரேஷன் கமிஷனர்ட்ட பெட்டிஷன் கொடுக்குறதுக்கு, அறப்போர் இயக்கம் ஜெயராமன் போன மாசம் நம்ம ஊருக்கு வந்தாரே ஞாபகமிருக்கா...''''ஓ...நல்லா ஞாபகமிருக்கே''''அன்னிக்கு அவர் கொடுத்த பெட்டிஷனைப் பத்தி, ஒரு ஓட்டல்ல பிரஸ்மீட் கொடுத்திருக்காரு. பிரஸ்மீட் முடிச்சதும் 50 சதவீத நிருபர்கள் கிளம்பீட்டாங்களாம்.


மீதியிருந்தவங்க, அவர்ட்ட 'என்ன எதுவும் கவனிப்பு இல்லையா'ன்னு கேட்டிருக்காங்க. அவர் அப்படியே அதிர்ந்து போயிட்டாராம்!''''அப்புறம்...?''''ஒரு நிமிஷம் 'ஸ்டன்' ஆகி, 'ஊழலுக்கு எதிரா உசுரை வெறுத்துப் போராடிட்டு இருக்கோம்... எங்ககிட்டயே லஞ்சம் கேக்குறீங்களே'ன்னு நொந்து போயிட்டாராம். இதைப்பத்தி, 'மற்ற 50 சதவீத நிருபர்கள் குறித்து மகிழ்ச்சி'ன்னு பேஸ்புக்லயே பதிவு போட்ருக்காரு!'' என்றாள் மித்ரா.''அறப்போர் இயக்கம் மாதிரி பல அமைப்புகள் போராடிட்டுதான் இருக்கு...ஆனா லஞ்சம், ஊழல் அதிகமாயிட்டுதான் இருக்கு. கோயம்புத்துார்ல இருக்குற சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்கள்ல லஞ்ச ரேட்டை தாறுமாறா ஏத்திட்டாங்களாம். கேட்டா, புதுசா வந்திருக்குற ஆபீசர்கள் எல்லாரும் பெரிய பெரிய தொகையைக் கொடுத்து வந்திருக்காங்கன்னு சொல்றாங்களாம்!'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா...நானும் கேள்விப்பட்டேன்...சாதாரணமா ஆன்லைன்ல எடுக்குற வில்லங்க சர்ட்டிபிகேட்டை, சர்வர் பிரச்னை அது இதுன்னு இழுத்தடிச்சு, 800 ரூபாயில இருந்து 1000 ரூபா வரைக்கும் வசூல் பண்ணித்தான் கொடுக்குறாங்களாம். சொத்துக்கள் பதிவுக்கு அதோட மதிப்பை வச்சு, எஸ்.ஆர்., டி.ஆர்.,கள் லஞ்சம் பிக்ஸ் பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.''சென்ட்ரல் ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல இருக்குற ரெண்டு பிரேக் இன்ஸ்பெக்டர்களைப் பத்தி ஏகப்பட்ட கம்பிளைன்ட் வருது. மத்த ஆபீஸ்களை விட இந்த ஆபீஸ்ல லஞ்சம் அதிகமா இருக்குறதுக்குக் காரணமே இவுங்க ரெண்டு பேர்தானாம்.


அதுலயும் பேன்ஸி நம்பர் வாங்கணும்னா இஷ்டம் போல காசு கேக்குறாங்களாம்'' என்று சித்ரா சொல்லும்போதே குறுக்கிட்டாள் மித்ரா...''அதுக்குதான் கவர்மென்ட்லயே ஒரு ரேட் பிக்ஸ் பண்ணிருக்காங்களே?''''அது வலி...வேற டிபார்ட்மென்ட்டுங்கிறது மாதிரி...கவர்மென்ட்டுக்கு ரெண்டாயிரம் ரூபா கட்டணும்னா இவுங்களுக்கு 500 ரூபா தண்டம் அழணுமாம். அரசுக்கு 16 ஆயிரம்னா இவுங்களுக்கு ரெண்டாயிரம், 40 ஆயிரம்னா அஞ்சாயிரம், ஒரு லட்சம்னா பத்தாயிரம்னு பிக்ஸ் பண்ணிருக்காங்க. அதுக்குக் குறைச்சலாக் கொடுத்தா, அந்த நம்பரைத் தட்டி விட்டுர்றாங்களாம்!''''ஜேடிசி ஆபீஸ் பக்கத்துலயேதானே இருக்கு...எதுவும் பார்க்க மாட்டாரா அவரு?''''யாரும் கண்டுக்கிறதில்லை போலிருக்கு...

அவுங்க ரெண்டு பேருமே, முந்துன கவர்மென்ட்ல கோவை வி.ஐ.பி., ரெக்கமண்டேஷன்ல இங்க வந்தவங்களாம். ஆளுக்கு நாற்பது லட்ச ரூபா கொடுத்து வந்திருக்கோம்னு சொல்லிதான் ரேட்டை ஏத்திருக்காங்க!'' என்றாள் சித்ரா.வாசலில் கால்டாக்சி வந்து நின்றதும், இருவரும் ஏறிக்கொண்டு, வண்டியை ஈச்சனாரிக்கு விடச்சொன்னார்கள். போகும் வழியில் கோனியம்மன் கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்ட மித்ராவிடம் கேட்டாள் சித்ரா...''ஏன் மித்து...இப்பதான் கோவில் சொத்துக்களை எல்லாம் வேகமா மீட்டுட்டு இருக்காங்களே... கோனியம்மன் கோவிலோட தெப்பக்குளத்தை மீட்குறதுக்கு குழு அமைச்சு போராடுனது என்னாச்சு?'' ''ஸ்டேட் முழுக்க பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்களை தனியார்ட்ட இருந்து மீட்ருக்காங்க.


ஆனா இந்த கோவிலோட தெப்பக்குளத்தை கார்ப்பரேஷன்ட்ட இருந்தே மீட்க முடியலை. பார்க்கிங்கா மாத்தியிருக்குற அந்த இடத்தை மீட்குறதுக்கு ஆவணங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் தயார் பண்ணிட்டு இருக்காங்களாம். பக்தர்களும் அதுக்காக பிரார்த்தனை பண்றாங்க!'' என்றாள் மித்ரா.உக்கடம் பெரியகுளத்தைத் தாண்டும்போது கேட்டாள் சித்ரா...''நொய்யல் ஆறு சீரமைப்புத் திட்டத்துல 230 கோடி ரூபாய்க்கு வேலை செஞ்சதுல பெரிய அளவுல ஊழல் நடந்திருக்குறதா தி.மு.க., சுற்றுச்சூழல் அணியே புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லையே!''''ஆமாக்கா...75 பர்சன்டேஜ் வேலை முடிஞ்சிட்டதா பிடபிள்யுடி இன்ஜினியர்கள் சொல்றாங்க...ஆனா பல வேலைகள் அரைகுறையாவும், தரமில்லாமலும்தான் நடந்திருக்கு.


தினமலர்ல போட்டோவோட ஆதாரப்பூர்வமா நியூஸ் போட்ட பிறகுதான் மேலயிருந்து ஏதோ உத்தரவு வந்திருக்கு போலிருக்கு''''ஏதாவது நல்லது நடந்துச்சா?''''தலைமைப் பொறியாளர் அசோகன், சித்திரைச்சாவடியில இருந்து வெள்ளலூர் அணைக்கட்டு வரைக்கும் நேராகவே போய்ப் பார்த்ததுல, பல இடங்கள்ல ஆக்கிரமிப்புகளை எடுக்காமலே வேலை நடக்குறதைப் பார்த்து கொந்தளிச்சு போயிட்டாராம்.சர்வே டிபார்ட்மென்ட்காரங்க வர மாட்டேங்கிறாங்கன்னு சமாளிச்சிருக்காங்க. ஆனா அவர் விடலையாம்...பைல்களை டேபிளுக்கு கொண்டு வாங்கன்னு சொல்லிருக்காரு. அதுக்கப்புறம்தான் அவசர அவசரமா டி.ஆர்.ஓ., வுக்கு லெட்டர் வச்சிருக்காங்க.

அவரும் உடனடியா சர்வே டீம் அனுப்ப ஆர்டர் போட்டிருக்காரு...இனிமேலாவது எல்லா ஆக்கிரமிப்பையும் எடுக்குறாங்களான்னு பார்க்கணும்'' என்றாள் மித்ரா.எங்கிருந்தோ பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும், ''தீபாவளி நெருங்குது. இனிமே வசூல் வேலைகள் வேகமா நடக்கும். இந்த வருஷமாவது விஜிலென்ஸ்ல ஏதாவது பண்றாங்களான்னு பார்ப்போம்'' என்றாள் சித்ரா.''அக்கா...வெடிச்சத்தம் கேட்டதும் எனக்கு குவாரிகள் ஞாபகம் வந்துச்சு. நம்ம மாவட்டத்துல 26 கல்குவாரிகளுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே லைசென்ஸ் காலாவதியாயிருச்சு. ரினிவல் பண்ணாமலே குவாரி நடத்துறாங்க. தடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கு மாமூலை வாரி வாரிக் கொடுக்குறாங்க. அரசாங்கத்துக்கு ஏகப்பட்ட நஷ்டமாகுது; இவுங்களுக்கு வெடிமருந்துதான் எப்படிக் கிடைக்குதுன்னு தெரியலைன்னு டிபார்ட்மென்ட்லயே புலம்பல் கேக்குது'' என்றாள் மித்ரா.

''ஆமா மித்து...மைன்ஸ் டிபார்ட்மென்ட்டுல தோண்டத்தோண்ட ஒரே ஊழலா இருக்குன்னு நல்ல ஆபீசர்ஸ் குமுறுறாங்க. கேரளாவுக்கு தினமும் கல்லும் மண்ணும் போயிட்டே இருக்கு. கண்காணிப்பு கேமரா வைக்கணும், கலெக்டர் ஆபீஸ்ல கன்ட்ரோல் ரூம் போடணும்னு அரசு உத்தரவு போட்டாலும் நம்ம மாவட்டத்துல மட்டும் தனி சட்டம்; தனி ராஜ்யம்தான் நடக்கும் போலிருக்கு'' என்றாள் சித்ரா.''கேரளான்னதும் இன்னொரு கடத்தலும் ஞாபகம் வந்துச்சு...நம்ம ஊருல இப்போ ரேஷன் கடைகள்ல தர்ற புழுங்கல் அரிசி சூப்பரா இருக்கா...இதை ஏழு ரூபாய்க்கு வாங்கி, பாலிஷ் பண்ணி, கிலோ 14 ரூபாய்க்கு கேரளாவுக்கு விக்கிறாங்க. அங்க 25 ரூபா, 30 ரூபான்னு விக்கிறாங்களாம். சமீபமா கடத்தல் ரொம்ப அதிகமாயிட்டதாச் சொல்றாங்க!'' என்றாள் மித்ரா.''நீ சொல்றது உண்மைதான்...
கோயம்புத்துார்ல இருந்து கேரளாவுக்கு மட்டுமில்லை; வெளிநாட்டுக்கே அரிசி கடத்துற மாபியா இருக்கு. சிக்கந்தர்னு ஒருத்தன்தான் இதுக்குத் தலைவர்னு சொல்றாங்க. இந்த மாபியாவோட லோக்கல் போலீசுக்கு 'செம்ம டை அப்' இருக்காம். அதனால புட்செல் போலீஸ், இந்த மாபியாவை மடக்கப் பார்த்தா, அவுங்க காப்பாத்திர்றாங்களாம். புட்செல்லயும் அவரோட ஆள் நிறையா இருக்காங்களாம்.தனக்கு ஒத்துவராத புட்செல் அதிகாரிகளையே மாத்துற அளவுக்கு, இந்த கவர்மென்ட்ல ரொம்ப 'பவர்புல்'லா அவர் இருக்காராம். பின்னணிதான் யாருன்னு தெரியலை'' என்றாள் சித்ரா.மழை வலுக்கத் துவங்கியதும் இருவரும் பேச்சை நிறுத்தி வேடிக்கை பார்க்கத் துவங்கினார்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement