dinamalar telegram
Advertisement

'செயல்' வீரர்களின் வசூல் வேட்டை... அதிகாரிகள் காட்டில் 'மாமூல்' மழை!

Share

கொரோனா பாதிப்பு குறைஞ்சிட்டு வர்றதால, பல அரசு துறை அதிகாரிங்க, தங்களோட 'மாமூல்' வாழ்க்கைக்கு திரும்பிட்டாங்க,'' என, சற்றே அழுத்தமாக சொன்னாள் சித்ரா.''என்னக்கா…ஏதோ, அர்த்தத்தோட பேசுறீங்க போல,'' என சிரித்தபடியே, வீட்டின் கதவை திறந்தாள் மித்ரா.''அம்மா, எங்க மித்து,''''பல்லடம் வரைக்கும் போயிருக்காங்க,'' என்ற மித்ரா, ''உட்காருங்க்கா, டீ போட் எடுத்து வர்றேன்,'' சொல்லியவாறே சமையலறைக்குள் நுழைந்தாள்.''ஆமா மித்து. பல்லடத்தில, வில்லங்க சர்டிபிகேட் ரெண்டு நாள்ல குடுத்துடுவாங்களாம். ஆனா, இப்ப ஒரு வாரம் ஆகுது.


அதுவும், அதிகாரிகளை 'கவனிச்சா' உடனே, 'சர்டிபிகேட்' வந்திடுதாம். அங்க இருக்கிற ஒரு ஆபீசர், இந்த வேலையை கண்ணும், கருத்துமா செஞ்சு கொடுக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.''என் சொந்தக்காரர் 'சதீஷ்' அண்ணா கூட, என்கிட்ட சொல்லியிருக்கார்,'' என்றாள் மித்ரா.கழுதை தேய்ந்துகட்டெறும்பானது''கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதை மாதிரி ஆகிடுச்சாம், பல்லடம் போலீஸ்காரங்க நிலமை,'' என அடுத்து மேட்டருக்கு தாவிய சித்ரா, ''ரூரல் ஆபீசர் வந்த புதுசுல, பான்பராக், கஞ்சா விக்கிறவங்கள வளைச்சு வளைச்சு கேஸ் போட்டாங்க; நிறைய பேரு சிக்கினாங்க. ஆனா, இப்ப, 'மாமூல்' வாங்கிட்டு, கேஸ் போடறதே இல்லையாம்.


இதனால, வீதி, வீதிக்கு குட்கா சேல்ஸ் சக்கைபோடு போடுதாம்,'' என்றாள்.''அங்கமட்டுமில்லீங்க்கா. சிட்டிக்குள்ளேயும் தான். 'மசாஜ் சென்டர்' பேர்ல விபசாரம், குட்கா விற்பனைன்னு எந்த விதமான சட்ட விரோத செயல்களும் நடக்க கூடாதுன்னு, 'சிட்டி' ஆபீசர், கடுமையான உத்தரவு போட்டிருக்காங்க,''''அதனால, சும்மா 'கணக்கு' காண்பிக்க, ரெண்டு நாளைக்கு மட்டும் ரெய்டு நடத்திட்டு, 'சைலன்ட் மோடு'க்கு போயிட்டாங்க. '......பாளையத்தில' இன்னும் 'மசாஜ் சென்டர்' பேர்ல, தப்புதண்டா நடந்துட்டுத்தான் இருக்காம்,''''காந்தி ஜெயந்தி நாளில், பல இடங்களில், சரக்கு விற்பனை ஜோரா நடந்துச்சாம். பெரிய ஆபீசர் கிட்ட நல்ல பேரு வாங்கோணும்னு, 'கடமை'க்கு சில பாட்டில் மட்டும் பறிமுதல் பண்ணி 'கேஸ்' போட்டிருக்காங்க.


அந்தன்னைக்கு, போலீஸ் காட்டில் 'மாமூல்' மழை,'' என்றாள் சித்ரா.''அதிகாரிங்க 'மாமூல்' வாழ்க்கைக்கு திரும்பிட்டாங்கன்னு, இதைத்தான் சொன்னீங்களா?,'' என சிரித்த மித்ரா, ''ரொம்ப நாளைக்கு அப்புறம், மதுவிலக்கு பிரிவுக்கு 'அப்பாயின்மென்ட்' பண்ணிருக்காங்க போல. இனி மேலாவது, 'சரக்கு' சம்பந்தப்பட்ட புகார் குறையுதான்னு பார்க்கலாம்,'' என, மதுவிலக்கு மேட்டர் பேசினாள்.''கரெக்ட்தான்டி, 'சிட்டி' மதுவிலக்கு பிரிவில, 20 பேர் வரைக்கும் 'போஸ்டிங்' இருக்காம். ஆனா, நாலு வருஷமா, நாலு பேர் மட்டும் தான், தனி ராஜாங்கமே நடத்திட்டாங்க. இப்ப புதுசா வந்தவர்களில் ஒருத்தர் 'கல்லா' கட்டறது கில்லாடியாம்,''அப்போது. மித்ராவின் மொபைல் போன் சிணுங்க, மறுமுனையில் ''யாரு மகாலிங்கமா' என கேட்க, 'ராங் நம்பர்' எனக்கூறி இணைப்பை துண்டித்தாள்.''அங்க மட்டுமில்ல மித்து.


லிங்கேஸ்வரர் ஊர்ல இருக்க போலீஸ் ஸ்டேஷன்ல, விபத்து சம்பந்தமான வழக்குல சிக்குறவங்களை கைது பண்ணி, ஸ்டேஷன் ஜாமின்ல விடறாங்க. இதுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை ஸ்டேஷன் ஆபீசர் பேரைச் சொல்லி வசூல் ஜோரா நடக்குதாம்,''''நெருப்பில்லாம புகையாதுங்க அக்கா,'' சொன்ன மித்ரா, ''அதே ஊருக்கு புதுசா வந்திருக்கிற ஆபீசரை, 'மரியாதை' நிமித்தமா சந்திக்க, தாபா ஓட்டல்காரங்க போயிருக்காங்க.


அவங்க நோக்கத்தை புரிஞ்சுகிட்ட அந்த ஆபீசர், 'இல்லீகல் சரக்கு விற்பனை, அது, இதுன்னு எதுவும் நடக்கக்கூடாது; ஓட்டலுக்கு உள்ள மட்டுமில்ல, வெளியே கூட அந்த மாதிரி எது நடந்தாலும், அதுக்கும் நீங்கதான் பொறுப்புன்னு, கறாரா சொல்லிட்டாராம்,'' என்றாள்.கிணறு வெட்டபூதம் கிளம்பிடுச்சு''புது ஆபீசர் பரவாயில்லயே...'' என பாராட்டிய சித்ரா, ''கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா, ரெவின்யூ ஆபீசர்ஸ் முழிச்சுட்டு இருக்காங்களாம்,'' என, ரெவின்யூ மேட்டர் பேசினாள்.''அப்படி என்னக்கா நடந்துச்சு?'' ஆர்வமாக கேட்டாள் மித்ரா.''திருப்பூர் சவுத் தாலுகா லிமிட்டுக்குள்ள மாவட்ட முன்னோடி வங்கிக்கு அலுவலகம் கட்ட, நல்லுார் பக்கத்துல இருக்க இடத்தை 'சர்வே' பண்ண, வருவாய்த்துறை அதிகாரிங்க போயிருக்காங்க. அங்க போனதுக்கு அப்புறம் தான், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 99 சென்ட் தனியாரோட ஆக்கிரமிப்பில் இருக்கிற விஷயம் தெரிஞ்சிருக்கு.


இதுகூட தெரியாம, ஆபீசர் இருக்கிறாங்கன்னா பாத்துக்கோ,''''கலெக்டர் பின் வாசல் வழியா கண்டுக்காம போனதால, ஊராட்சி செயலாளர்கள் 'அப்செட்' ஆகிட் டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''ஓ... அந்த மேட்டரா,'' என்றாள் சித்ரா.''யார் மேலல்லாம் கம்ப்ளைன்ட் வருதோ, அவங்கள 'டிரான்ஸ்பர்' பண்ணிடுங்கன்னு, கலெக்டர் உத்தரவு போட்டிருக்காரு. அப்படி தான், ஊத்துக்குளியில ஒரு செயலாளர டிரான்ஸ்பர் செஞ்சாங்க. அவரு, ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலும் இருக்காராம்,''''அவரை 'டிரான்ஸ்பர்' செஞ்ச பி.டி.ஓ., ஊரக வளர்ச்சி அலுவலர் ஒன்றியத்துல இருக்காராம்.


இந்த ரெண்டு சங்கத்துக்கும் ஏழாம் பொருத்தம். அதனால தான், பி.டி.ஓ., பழி வாங்கும் நடவடிக்கையா டிரான்ஸ்பர் பண்ணிட்டார்ன்னு, ஒரு பேச்சு அடிபடுது,''''இத கண்டிச்சு, கலெக்டர் ஆபீசு முன்னாடி, செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. கண்டுக்காத கலெக்டரு, பின் வாசல் வழியா போயிட்டார். இதனால, ஊராட்சி செயலாளருங்க ரொம்ப 'அப்செட்' ஆகிட்டாங்க. ரகசியம் காக்கப்பட வேண்டிய 'டிரான்ஸ்பர்' தொடர்பான கடிதங்களை, அந்த ஊராட்சி செயலாளர் தரப்பு, 'வாட்ஸ் ஆப்' குழுக்களிலும் பரப்பி விட்டுருக்காங்க. கலெக்டரின் கோபத்துக்கு, இதுகூட காரணம்ன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

அட்டைக்கத்தி வீச்சுஅதிகாரிகள் 'அப்செட்'''வாட்ஸ் ஆப் குழுன்னு சொன்னதும் தான் ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. லிங்கேஸ்வரர் ஊர்ல, நடந்து முடிஞ்ச கிராம சபா கூட்டத்துல, பல ஊழல், முறைகேடுகளை வெளியே கொண்டு வரப்போறோம். ஊர் மக்கள் எல்லோரும் திரண்டு வருவாங்க, அப்படி, இப்படின்னு ஏகத்துக்கும் 'பில்ட் அப்' கொடுத்து, பலரும் பதிவு போட்டிருக்காங்க,''''இத படிச்ச, ஊராட்சி செயலாளர்கள் பயந்து போய், போலீஸ் பாதுகாப்பையும் கேட்டிருக்காங்க. ஆனா, எந்த பிரச்னையும், சலசலப்பும் இல்லாம சுமூகமாக நடந்து முடிஞ்சுடுச்சாம். 'வாட்ஸ் ஆப்' குழுவுல, பொங்கியெழுந்தவங்களே கிராம சபாவுக்கு வரலையாம். போலீஸ்காரங்களும் ரொம்ப 'டென்ஷன்' ஆகிட்டாங்களாம்.


சமூக வலைதளங்கல்ல இப்படி 'அட்டைக்கத்தி' வீசறவங்களை, 'லிஸ்ட்' எடுக்கவும் ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.சிறப்பு முகாமில்சிறப்பு இல்லை''சிறப்பு முகாம்ங்கற பேர்ல அலைய விட்ட கதைய சொல்றேன் கேளு,'' என்றபடி அடுத்த மேட்டருக்கு தாவிய மித்ரா, ''கார்ப்ரேஷன் சார்பில் நடந்த மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்குற சிறப்பு முகாம்ல நிறைய பேரு ஆர்வமா கலந்துக்கிட்டாங்க,''''வங்கி மூலம் தான் கட்டணம் செலுத்தோணும். ஆனா, அரையாண்டு கணக்கு முடிக்க வேண்டியிருக்குன்னு சொல்லி, வங்கி பணியாளருங்க யாரும் முகாமுக்கு வரலையாம்.


இதனால, மக்கள் ஏமாந்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.'செய்வன திருந்த செய்ன்னு, பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க'' என சங்கடப்பட்ட சித்ரா,''கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் எதுவும் தெரிஞ்சுதா மித்து'' என்றாள்.''ஒவ்வொரு கடனுக்கும், 75 விதமான கேள்விகளை சரிபார்க்கோணும்னு உத்தரவாம். இதனால, கடன் தள்ளுபடி விவகாரத்தை கவனிக்கிற அலுவலர் குழு, குழம்பிப்போய் இருக்காம். நகைக்கடன் விவகாரத்துல, ஏகப்பட்ட குழப்பமாம். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பும், போராட்டமும் நடத்துற அலுவலர் சங்கங்கள், இந்த சமாச்சாரத்துல 'கம்'முன்னு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

ஒரு வேட்பாளர்இரண்டு சின்னம்''இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. உள்ளாட்சி தேர் தல் நடக்கற மாதிரியே தெரி யலையே...'' என்றாள் சித்ரா.''உண்மைதாங்க்கா, கருவலுார் ஊராட்சி தலைவரு பதவிக்கு இடைத்தேர்தல் நடக்குதுல்ல. கட்சி சின்னம் இல்லாட்டியும், ஆளுங்கட்சி ஆதரவு வேட்பாள ருக்கு ஆதரவா, கட்சி சார்பில அச்சடிச்சிருக்க 'ஸ்டிக்கர்'ல சி.எம்., படம், கூட்டணி கட்சிக்காரங்க படம் வைச்ச, சூரியன் சின்னத்தை போட்டு, ஓட்டு கேட்டிருக்காங்களாம். அதே சமயம், அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்க சுயேட்சை சின்னத்தோடும், நோட்டீஸ் குடுத்து ஓட்டு கேக்கறாங்களாம்...'' என்றாள் மித்ரா.''இப்படி பண்ணா, எந்த சின்னத்துக்கு ஓட்டுப்போடோணும்னு கிராம மக்கள் குழம்பிட மாட்டாங்களா…? எல்லாம், அந்த அவிநாசியப்பருக்கே வெளிச்சம்'' என 'உச்' கொட்டிய சித்ரா, ''மித்து, இன்னொரு டீ கொண்டு வா...'' என்றாள்.

அதற்குள் 'வாட்ஸ் அப்' பார்த்த, மெகா தடுப்பூசி கேம்ப் போட்டோக்களை 'ஸ்வைப்'பண்ணியவாறே, ''ஏன்டி மித்து, மெகா கேம்ப் எப்படி நடந்தது?'' என்றாள்.''அக்கா... தடுப்பூசி கணக்கிடுவதில் மாவட்ட நிர்வாகம் - சுகாதாரத்துறை மத்தியில ஏகப்பட்ட முரண்பாடு. இருவரும் கொடுக்கும் புள்ளி விவரம் மாறிமாறி இருக்குது. அடுத்த தடவையாவது சரி பண்ணா பரவாயில்ல...''என்ற மித்ரா டீ கொடுத்தாள்.''அவிநாசிக்கு 'நடுவில்' உள்ள ஒரு ஊராட்சியில், நுாறு நாள் வேலை திட்டத்தில், முறைகேடு நடக்குதாம். தினமும், 10 கார்டை எடுத்து வைத்து, சம்பளத்தை 'லவட்டி' கொள்கின்றனராம். அதே கிராமத்தில், 'மணி'யான 'செயல்'வீரரின் மனைவியும், ஊராட்சி ஆபீசில் 'நாட்டாமை' செய்கிறாராம்,'' என்ற சித்ரா, டிவியை 'ஆன்' செய்தாள். அதில், கோலமாவு கோகிலா படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement